“பிரகாஷ் ஒன்னோட செருப்பு எங்கடா?”
“செருப்பு இல்ல எச்சமம்மா.”
“ஸ்கூல்ல கொடுத்தது எங்கடா?”
“அது என்னோட காலுக்கு பத்தாம சின்னதா இருந்திச்சிதும்மா. கஷ்டப்பட்டு மாட்டி கயட்டுனதுல ரெண்டே நாளுல பிஞ்சி போச்சிம்மா.”
வரிசையில் உட்கார்ந்திருந்த மாணவர்களைப் பார்த்து கேட்டாள் எச்எம் ரேவதி.
“வேற யாராவது காலுக்கு செருப்பு போடாம வந்திருக்கீங்களா?” ஆங்காங்கே வரிசையில் உட்கார்ந்திருந்த பிள்ளைகள் சிலரின் தலைகள் சற்று உள்வாங்கியது. அவர்களது கண்கள் சுற்றுமுற்றும் சுழன்று பார்த்தது. நமக்கு துணையாக யாரேனும் இருப்பார்களா என்னும் தேடல் அது.
“சொல்லுங்க எல்லாரும் செருப்பு போட்டுருக்கீங்களா?” செருப்பில்லாதவங்க எல்லாம் கையத்தூக்குங்க” என்றாள் இன்னும் சற்று உரத்த குரலில். செருப்பு போடவில்லை என்றால் டூருக்கு கூட்டிச் செல்லாமல் விட்டுவிட்டுப் போய்விடுவார்களோ என்ற பயம் அவர்களுக்கு. ஒருவரையொருவர் பார்த்தபடி தயக்கத்தோடு மெதுவாக ஒவ்வொருவராக கையை உயர்த்தினார்கள்.
“இவ்வள பேரும் செருப்பில்லாம வந்திருக்கீங்களாடா? சொல்லித்தானடா அனுப்புனோம்?” அலுத்துக்கொண்டார்கள் மற்ற டீச்சர்களும். பெற்றோர்கள் பக்கம் திரும்பிய டீச்சர்கள் அவர்களிடம் வருத்தப்பட்டு பேசத் துவங்கினர்.
“ஒரு செருப்பு கூட ஒங்களால போட்டு அனுப்ப முடியாதா?”
“வாங்கி கொடுத்தா மட்டும் என்ன? பத்தரமா வச்சிக்கிட்டாத்தான டீச்சர். ஒரு நாளுகொட காலுல போட்டு நம்ம பாக்க முடியாது. தொலைச்சி கரையேத்திட்டுதான் வூட்ட வருங்க. ஒண்ணும் ஆவாது டீச்சர். வெறுங்காலோட சுத்துனாத்தான் இந்த வூர் மக்களுக்கு புத்திவரும்” என்றாள் அங்கு நின்ற தாயொருத்தி. அவளது வார்த்தைகளை ஆமோதிப்பது போலவே அங்கு நின்ற எல்லோரும் தலையாட்டி ஆமாம் சாமி போட்டது போலிருந்தது.
“சரி பரவால்ல விடுங்க”
“எல்லாரும் மாத்து துணி எடுத்து வந்துருக்கீங்களா?”
“யெஸ்ம்மா” என்றார்கள் கோரஸ்சாக.
“பிஸ்கட், கல்லமிட்டாய், சோளப்பொறி, அவிச்ச சோளம், வறுத்த மல்லாட்ட, அவிச்ச மல்லாட்ட, பழம் இதத்தவிற வேற ஏதாவுது பேக்ல வச்சிருந்தா எடுத்து ஒங்க அம்மா அப்பாகிட்ட கொடுத்திட்டு வந்திருங்க.”
“வேற எதுவும் இல்லம்மா” என்றார்கள் மறுபடியும் சேர்ந்தார்போல.
“வெரிகுட். நல்ல பிள்ளைகள். இன்னும் பத்து நிமிசத்துல நம்ம பஸ் வந்திரும். முட்டிமோதிக்கிட்டு ஏறாம வரிசையா போயி ஒங்க டீச்சர் சொல்ற சீட்டுல ஒக்காரனும். ஒவ்வொரு டீச்சருக்கும் இத்தன பிள்ளைகள்ன்னு கவனிக்கச்சொல்லி பிரிச்சி விட்டாச்சி. நீங்க எதுன்னாலும் அவங்ககிட்டதான் சொல்லணும். வாந்தி வந்தாலும் தாகமெடுத்தாலும் அவங்ககிட்டதான் கேக்கணும். புரிஞ்சிதா?”
“புரிஞ்சிதும்மா.”
“வாந்தி எடுக்காம இருக்க ஒங்க எல்லாருக்குமே இப்ப வெறும் வயத்துல போடுற மாத்திர கொடுப்பம். எல்லாரும் விழுங்கிடணும் சரியா?”
“ஓகேம்மா”
“ஒங்களுக்கு ஏதாவுது தலவலி, மயக்கம் , வயத்துவலின்னு வந்தாகூட பாத்துக்க நம்ம கூட ஒரு டாக்டரும் வாராங்க. “
“ஐய்… ஐய்..ஐய் சக்க ஐய்…அக்கா வாராங்க..அக்கா வாராங்க…சுண்டலக்கா வாராங்க..” பிள்ளைகள் உற்சாகமாய் கூச்சலிட்டார்கள்.
“போதும் போதும் சத்தம் போடாதீங்க. அமைதியா இருங்க.”
“டீச்சர் பிரகாஷ மட்டும் யார்கிட்டயாவது ஒப்படச்சிருங்க டீச்சர். இவன வச்சிக்கிட்டு என்னால நிம்மதியாவே வரமுடியாது டீச்சர் ” என்றாள் மாலா டீச்சர்.
“உண்மயாத்தான் சொல்றீங்களா டீச்சர்?”
“சத்தியமாவே சொல்லறன் டீச்சர். இவன விட்டுட்டு கூட போயிடலாம் டீச்சர். இவன கூட்டிட்டு போறது நம்ம தலையில நாமளே எதையோ அள்ளிக் கொட்டிக்கிற மாதிரிதான் டீச்சர்”
“ஆசையா கிளம்பி வந்தவன, நீ வரவேண்டாம் வீட்டுலயே இருன்னு சொல்லறது சரியில்ல டீச்சர்.”
“அப்படின்னா அவன வேற யாரு பொறுப்புலயாவது விடுங்க. என்னால பாத்துக்க முடியாது டீச்சர்” என்றாள் மாலா டீச்சர் உறுதியாக.
“சரி, நீங்க கவலய விடுங்க. மத்த பிள்ளைகள பாத்துக்குங்க. இவன நானே பாத்துக்கிறேன்” என்றாள் எச்எம் ரேவதி. மாலா டீச்சரின் முகத்தில் இப்போதுதான் மகிழ்ச்சியின் ரேகை படர்ந்தது. வகுப்பறையில் இவன் எந்த அளவுக்கு பிரச்சனைகளைக் கொடுத்திருந்தால் மாலா டீச்சர் இந்த அளவுக்கு பயப்படுவார் என்ற ஒரு எண்ணம் மனதிற்குள் ஓடியது ரேவதிக்கு.
‘என்னதான் செய்கிறானென்று பார்ப்போமே’ என நினைத்தவள்
“டேய், பிரகாஷ் நீ யாங்கூடவேத்தான் இருக்கனும். புரிஞ்சிதா?” என்றாள்
தன்னை விட்டுவிட்டு போய்விடுவார்களோ என்று பயந்திருந்தவனுக்கு இந்த வார்த்தைகள் மிகுந்த உற்சாகத்தை அளிக்கக் கூடியதாக இருந்தது.
“சரிங்க எச்சமம்மா” என்றான் தலையாட்டியபடி.
அப்போதுதான் தலைமையாசிரியர் ரேவதியின் மகள் சுடர் அங்கு வந்து சேர்ந்தாள். சுடரைப் பார்த்தவுடன் பிள்ளைகள் “அக்கா அக்கா சுண்டலக்கா” என்று ஆரவாரக் கூச்சலிட்டனர்.
“சத்தம் போடாதீங்க. அமைதியா இருங்க. அக்கா நம்மகூட வரணும்ன்னா நீங்க சத்தம் போடக்கூடாது.”
பிள்ளைகள் சட்டென்று அமைதியாகி விட்டார்கள். பேருந்து வரும் சத்தம் கேட்டது. பிள்ளைகள் மறுபடியும் ஆரவார ஒலி எழுப்பினர்.
“அமைதியா இருங்க. சத்தம் போடுறவங்கள இங்கயே விட்டுட்டு போயிருவம்” என்றார் பிரேமா டீச்சர்.
பேருந்தை பார்த்ததும் பிள்ளைகளின் உற்சாகம் பலமடங்கானது. பேருந்து திருப்பி கொண்டுவரப்பட்டு பிள்ளைகள் ஏறுவதற்கு வசதியான இடத்தில் நிறுத்தப்பட்டது. டீச்சர்கள் ஒவ்வொருவராய் தம் பொறுப்பில் உள்ள பிள்ளைகளின் பெயர்களைப் படித்து வாந்தி மாத்திரையை வாயில் போட்டு விழுங்க வைத்தார்கள். பின்பு பேருந்தில் வரிசையாய் ஏற்றி அமர வைத்தார்கள்.
சுடர், இந்தாம்மா இந்த பையன ஒன்னோடயே ஒக்கார வச்சிக்க. எங்கயும் விட்டுறாத. தேவையானது எல்லாத்தையும் எடுத்து வைக்கிறாங்களான்னு பாத்துட்டு வாறன். அதுவரைக்கும் இவன் கைய விட்டுறாத” சொல்லிவிட்டு சென்றார் எச்எம் ரேவதி.
தண்ணீர் கேன்கள், டிபன் மற்றும் மதிய சாப்பாட்டு கேன்கள் பாக்குமடல் தட்டுகள், ஸ்நாக்ஸ் பொட்டலங்கள் நிரம்பிய பைகள், ஜமுக்காள விரிப்புகள் போன்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் பேருந்தில் ஏற்றிக் கொண்டார்கள் ஆயாக்கள். இவையனைத்தும் இந்த இரண்டு ஆயாம்மாக்களின் பொறுப்பில் இருக்க வேண்டியவை.
மீண்டும் ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டார் தலைமையாசிரியர்.
“ஆண்டாள் டீச்சர், ஒங்க பிள்ளைகள் பேர படிங்க. பிள்ளைகள் சத்தமா சொல்லுங்க”
ஒவ்வொரு டீச்சரும் பிள்ளைகள் பெயர்படித்து சரிபார்த்துக் கொண்ட பிறகு பேருந்துக்கு முன் சூடம் ஏற்றி சிதறுதேங்காய் உடைத்து வழியனுப்பி வைத்தார்கள் பெற்றோர். வண்ண விளக்குகள் ஒளிர பிள்ளைகளின் ஆரவாரக் கூச்சல் மற்றும் அவர்களின் உற்சாக ஆட்டத்துடன் கிளம்பியது பேருந்து.
அந்த சொகுசுப் பேருந்து கம்மாபுரம் வழியாக சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. முன்பக்க படியோரம் இருந்த ஒத்தை சீட்டில் அமர்ந்திருந்தார் தலைமையாசிரியர் ரேவதி. மாணவர்கள் கிளினர் பையனிடம் “அண்ணா அந்த பாட்டு போடுங்க. இந்த பாட்டு போடுங்க” என்று புதுப்புதுப் பாடல்களை போடச்சொல்லி டான்ஸ் ஆடிக்கொண்டு வந்தார்கள். மாணவர்களை உற்சாகப் படுத்த வேண்டி அவர்களுடன் சேர்ந்து டீச்சர்களும் அவ்வப்போது ஆடினார்கள். பத்து பாடல்கள் போல ஆடிவிட்டார்கள் என்பதை உணர்ந்த தலைமையாசிரியர் ரேவதி
“போதும் போதும். ஆடுனது போதும் எல்லாரும் சீட்டுல ஒக்காருங்க. இப்பயே ஆடி களைச்சி போச்சிதுன்னா பெறகு இன்னைக்கு முச்சூடும் எனர்ஜி வேணுமில்லயா?”
எல்லோரும் சீட்டில் உட்கார்ந்து கொண்டார்கள். பேருந்துக்குள் அமர்ந்திருக்கும் மாணவர்களை ஒருமுறை திரும்பி நின்று பார்த்த ரேவதிக்கு அப்போதுதான் பிரகாஷின் ஞாபகம் வந்தது. பேருந்தின் மையப்பகுதில் இருவர் உட்காரும் சீட்டில் சுடருடன் பிரகாஷும் சந்துருவும் உட்கார்ந்திருந்தார்கள். ‘அடடா இவன மறந்தே போயிட்டோமே ‘ என நினைத்தவர் அவனைப் பார்த்தார். அவன் சுடரிடம் ஏதோ சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.
“சுடர், அவன இங்க அனுப்பி விடுறியா?”
“வேண்டாம்மா. அவன் இங்கயே இருக்கட்டும். நான் பாத்துக்கிறேன். ” என்பது போல கையால் சைகை செய்தாள்.
இது ஒருவகையில் ரேவதிக்கு நிம்மதியாக இருந்தது. சுடர் பத்திரமாக அவனை பார்த்துக் கொள்வாள். நல்ல விஷயங்களை கற்றுக் கொடுப்பாள். அவளுடனேயே அவன் உட்கார்ந்து வரட்டும் என நினைத்தாள். சுடர் எம்பிபிஸ் முடித்திருக்கிறாள். மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வை எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறாள். தன் அம்மாவோடு எப்போதாவது பள்ளிக்கு வருவாள். முதல் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருத்தி சுடரக்கா என அழைக்கத் தெரியாமல் சுண்டலக்கா என அழைத்தாள். எல்லோரும் அதை ரசித்துக் சிரித்தார்கள். பிறகு எல்லா பிள்ளைகளுமே சுண்டலக்கா என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். சுடர் மீது எல்லா பிள்ளைகளும் பிரியமாய் இருப்பார்கள். அவள் பள்ளிக்கு வரும்போதெல்லாம் புதிது புதிதாக பலவற்றையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பாள். அவளைக் கண்டாலே பிள்ளைகள் மொய்த்துக் கொள்வார்கள். இன்று எல்லோரும் ஆசைப்பட்டாலும் சுடரக்காவோடு உட்கார்ந்து பயணம் செய்யும் வாய்ப்பு பிரகாஷுக்கும் சந்துருவுக்கும் தான் கிடைத்திருக்கிறது. அதில் அவர்களிருவருக்கும் அப்படியொரு பெருமிதம் ஏற்பட்டிருந்தது. அதுவும் வாஞ்சையோடு அவள் அவர்களது கைகளை பிடித்துக் கொள்வதும் அவ்வப்போது முதுகில் தட்டிக்கொடுப்பதும் கன்னம் வழிப்பதும் யாருக்கும் கிடைக்காத கௌரவம் அவர்களுக்கு மட்டும் கிடைத்தது போல மகிழ்ந்திருந்தார்கள்.
பிரகாஷ் கிளம்புவதற்கு முன் ஏரிக்குப் போனேன் என்று பொய் தான் சொல்லியிருந்தான். அப்போது அவன் கால்களில் துளிகூட ஈரமில்லை. செருப்பில்லாது ஓடிவந்த கால்களில் ஏரிக்குப் போயிருந்தால் ஈரமண்ணாவது ஒட்டியிருக்கும். பனிக்காலமிது. ஓரம் ஒண்டில் ஒதுங்கியிருந்தால்கூட புற்களில் இறங்கியிருக்கும் பனியீரம் கால்களில் பரவியிருக்கும். இதை அப்போதே கவனித்துத்தான் அவன் ஏரிக்கு போகவில்லை என்பதை முடிவு செய்திருந்தார் எச்எம் ரேவதி . எங்கே போனான் என்பதை முடிந்தால் பேருந்தில் வரும்போதே கூட விசாரிக்க வேண்டும் என்றும் எண்ணியிருந்தார். அவன் வேறு இடத்தில் உட்கார்ந்திருப்பதால் அது தற்போது முடியாது. தவிரவும் அவன் இந்த நாளை மகிழ்ச்சியாக கழிக்கட்டும். பள்ளிக்கு வந்த பிறகு விசாரித்துக் கொள்ளலாம் என்று நினைத்தார். மீண்டும் ஒருமுறை அவர்களைப் பார்த்தார். பிரகாஷும் சந்துருவும் சுடரிடம் குதூகலமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். அவரையறியாமலே அவரது உதட்டில் சிறுநகை பூத்தது. அப்படி என்ன பேசிக்கொண்டிருப்பான் என்று பிரகாஷை பற்றிய சிந்தனையே மீண்டும் மீண்டும் மனதிற்குள் எழுந்தது. ஒருவேளை அவன் செய்த திருட்டுத்தனத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருப்பானோ என நினைத்தார். அவர் நினைத்தது சரிதான். பிரகாஷ் சுடரிடம் அதைப்பற்றித்தான் சொல்லிக்கொண்டிருந்தான்.
பிரகாஷுக்கு கையும் மனசும் பரபரவென்று இருந்தது. சந்துருவைப் பார்த்தான். அவனுக்கு தூக்கம் கண்களை இழுத்துக் கொண்டு போயிருந்தது. மூன்று மணிக்கு முன்னதாகவே எல்லா பிள்ளைகளும் விழித்துக்கொண்டதால். பேருந்தில் டான்ஸ் ஆடி முடித்து சீட்டில் உட்கார்ந்த சிறிது நேரத்திலேயே முக்கால்வாசி பிள்ளைகள் தூங்கிப்போனார்கள். பிரகாஷ் தனது பெரிய கண்களால் சுடரின் முகத்தை ஆர்வமாய் பார்ப்பதும் பின் தயங்குவதுமாயிருந்தான்.
“என்னடா பிரகாஷ்? ஏதாவது வேணுமா? ஒன்பாத்ரும் வருதா?”
“இல்லக்கா.”
“அப்பறம் எதுக்குடா அப்பப்ப திருதிருன்னு முழிக்கிற? தூக்கம் வந்தா தூங்கேன்டா.”
“எனக்கு தூக்கமெல்லாம் வரலக்கா?”
“அப்பறம்?”
“ஒனக்கு ஒண்ணு தரட்டுமாக்கா?” என்றான் கால் சட்டைப் பையிக்குள் கைவிட்டவாறே.
“தாயேன்டா?” என்று கையை ஏந்தினாள். என்னதான் தரப்போகிறான் என்ற ஆர்வத்தில். அநேகமாக கடலைமிட்டாய் அல்லது சூடமிட்டாய் போன்று ஏதோ ஒரு மிட்டாய் வகையாகத்தான் இருக்குமென்று எண்ணினாள். பிஸ்கட், சோளக்கதிர் போன்ற பெரிய பொருட்களாய் இருக்க வாய்ப்பில்லை.சந்துரு கூட அவித்த சோளக்கதிரை தன் சாப்பாட்டு பையில் வைத்திருப்பதாகத்தான் சொன்னான். பிரகாஷினுடைய கால்சட்டைப் பை அவ்வளவு உப்பலாய் தெரியவில்லை. எனவேதான் மிட்டாயாக இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்திருந்தாள். பிரகாஷ் தன் கால்சட்டைப் பையை விட்டு கையை எடுக்க ரொம்பவே தயங்கினான்.
“டேய் எவ்வள நேரம்டா கையேந்த வைப்ப? கொடுறா.”
“நீ கண்ண மூடிக்கக்கா.”
“யேன்டா இப்ப கண்ண மூடச்சொல்ற? பரவால்ல கொடுறா.”
“நீ கண்ண மூடுனாத்தான் தருவன்.”
“சரி தாடா.” கண்களை மூடிக்கொண்டாள்.
அவளது உள்ளங்கைக்குள் வைத்து அவளது விரல்களை மடக்கி மூடினான்.
அவள் நினைத்தது போல மிட்டாயெல்லாம் கிடையாது. ஒருபகுதி கண்ணாடி வழுவழுப்பும் இன்னொரு பகுதி மெட்டல் தகடுமாய் உள்ளங்கையில் வைத்தபோதே அது ஒரு டார்ச் லைட் பல்பு என்பதை தெரிந்து கொண்டாள். இதை ஏன் இவ்வளவு ரகசியமாக தருகிறான் என்பதைத்தான் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.










