பவித்ரனுக்கு அந்த அறையைப் பிடிக்காமல் போனது. எப்போது கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாலும் வெறுப்பாக இருந்தது. ‘ஏன்தான் அறைக்கு வருகிறோமோ?’ என்ற அலுப்பும் சலிப்பும் கடல் நுரையாக மனதில் திரண்டது. இத்தனைக்கும் அவன் ரொம்பவும் நேசித்த அறை அது. ‘ஒருவேளை, நாம் மிகவும் நேசிப்பது; அது, மனிதர்களாக இருந்தாலும் பொருளாக இருந்தாலும் வளர்ப்புப் பிராணிகளாக இருந்தாலும் தங்கும் அறையாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் பிடிக்காமல் போய்விடுமோ? நேசிப்பவர்களை, நேசிப்பவற்றை அறுத்துவிட்டு ஓடிவிடத் தோன்றுமோ?’
சில நாள்களாக இப்படியான மனநிலையில்தான் இருக்கிறான். இந்தச்சூழல் அவனுக்கு நிம்மதி குலைச்சலாக இருந்தது. மனநமைச்சலைத் தருவதாக இருந்தது. நடக்க இருக்கும் தீஞ்செயலைக் குறித்த முன் உணர்த்துதலாகவும் இருக்குமோ என்ற சிற்றச்சமும் அவனுக்கு இருந்தது. ஊரிலிருந்து கெட்டச் செய்தி எப்போது வேண்டுமானாலும் வரலாமோ? முறைகேடான சம்பாதித்தியத்தில் முதலிடத்தில் இருக்கும் அலுவலகப் பொச்சரிப்பாளர்களின் சதி வலையில் சிக்குண்டு மரியாதைக்குலைச்சலுக்கு ஆளாக நேரிடுமோ என்ற தீங்குறிகளின் முன்னறிவிப்பாகவும் அவனுக்கு இருந்தது.
இந்த மனநெருக்கடி கடந்த நான்கு நாள்களாக இருக்கிறது. அதுவே கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் போல இருந்தது. இந்த மனநிலையைத் தொடரவிடக்கூடாது என்பதை, முன் ஏற்பட்ட அனுபவங்கள் அவனுக்கு கற்றுத் தந்திருக்கிறது. அதனால், எந்தப் பிரயோஜனமும் இல்லை. உண்மையில், எந்த மனிதனும் அனுபவங்கள் வழியாக எதையும் கற்றுக்கொள்வதில்லை. தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் தண்ணீர் நிரப்பப்படாத வெற்றுக் கற்சாடிகளாக ஒவ்வொரு மனிதனும் தோளில் சுமந்தலைகிறான். ஏற்றுக் கொள்வதற்கு முடியாமல் மனம் கடினப்பட்டாலும் இதுதான் ஒப்புக் கொள்ளப்படாத உண்மையாக மனித வரலாற்றின் நெடுகிலும் இருக்கிறது.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை, வானம் மஞ்சள் வெயிலைப் பூசிக் குளித்த மாலையில், அந்த அறையைப் பார்ப்பதற்கு வந்தான். அதன் விசாலமும் நீளமும் அவனை ஈர்த்தது. அந்த அறை ஒரு பொக்கே போல் அவனுக்காகவே காத்திருப்பது போல் இருந்தது. தனது மூச்சுக்காற்றை ஒரு மணமாக அவன் மீது அந்த அறை படரவிட்டது. அதில் பாரிஜாதத்தின் வாசனை இருப்பதாக உணர்ந்தான். அந்த மணம் பவித்ரனின் ஆன்மாவின் அடியாழம்வரை நுண் துளைத்து அதிகாலையின் பரிசுத்த பனியைப் போலவோ, அந்திமாலையின் களைத்த வெயிலைப் போலவோ பரவியது.
அறை சுவாசிக்குமா? அதற்கென்று சுவாசம் இருக்குமா? அந்த மூச்சுக்கென்று தனித்துவ மணம் இருக்குமா? இப்படியான கேள்விகள் எதுவும் பவித்ரனுக்குள் எழாது. மனிதர்களைப் போலவே அறைகளுக்கு உயிர் இருக்கிறது என்று நம்புகிறவன். அவற்றோடு நாம் பேசினால் பேசும்; அழுதால் அழும்; சிரித்தால் சிரிக்கும்; ஆறுதல் சொல்லும்; அரவணைக்கும். அறைகள் என்பது வெறும் செங்கல், மணல், சிமெண்ட், கம்பிகளைக் கொண்டு எழுப்பப்பட்ட கட்டடக்கூடு அல்ல. அது, மனிதனின் தனிமையைத் துரத்தும் தோழன் – தோழி. காணப்படாத இறைவன் – இறைவி. அறைகளுக்கு மனிதர்களை ரொம்பவும் பிடிக்கும். அவர்களோடு நட்புறவு கொள்வதற்கு விரும்பும். மனிதர்களுடைய அந்தரங்கத்தை ரகசியம் போல் பாதுகாக்கும். அறை ஒவ்வொரு மனிதனுக்குமான கர்ப்பப்பை. அதில் சுருண்டு கொள்ளும்போது தாயின் கருப்பையிலிருந்த கதகதப்பை உணரமுடியும். பவித்ரன் அந்த அனுபவத்துக்குள்ளான அனுபவஸ்தன்.
எவனொருவன் அறையோடு நெருக்கமாகப் பழகுகிறானோ, அவனுக்கு மன அழுத்தம் வருவதில்லை. இன்றைக்கு அந்த அறையே பவித்ரனின் மன அழுத்தத்திற்கு காரணமாகிவிட்டது.
அறையைப் பார்க்க வந்த சில நிமிடங்களிலேயே, மண்டப மானேஜரிடம் இரண்டு மாத முன் பணத்தைக் கொடுத்துவிட்டான். அதிகமில்லை. ஐயாயிரம்தான். வாடகை இரண்டாயிரத்தைநூறு. மூன்று வருடங்களில் மெல்ல மெல்ல உயர்ந்து ஐயாயிரத்தில் வந்து நிற்கிறது. இந்த அறைக்கு அந்தத் தொகை அதிகம்தான். ஒருவேளை, அறை மீது பவித்ரனுக்கு வெறுப்பு வருவதற்கு அதுதான் காரணமா? நிச்சயமாக இல்லை. அறைக்காக அவன் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வான். ஒரே விசயம். அறை அவனுக்குப் பிடிக்கவேண்டும்.
அறையில் தனி மின் கணக்கீட்டுக் கருவி இருந்தது. பயன்படுத்தும் மின் அளவுக்கு ஏற்ப வரும் கட்டணத்தை வாடகையோடு சேர்த்து கொடுத்துவிட வேண்டும். யூனிட்டுக்கு பதினைந்து ரூபாய். எப்படியும் மாதத்துக்கு ஐம்பது யூனிட் வரும். துண்டாக 750 ரூபாய் எடுத்து வைக்கவேண்டும். சமயத்தில் ஆயிரம் கூட வரும். ஆக, மொத்தமாக ஆறாயிரம். இந்தத் தொகையில் இந்த நகரத்தில் தனி வீடே கிடைக்கும்.
பிரச்சினை என்னவென்றால், வீடு அவனுக்குப் பிடிக்காது. ஹால், டபுள் பெட்ரூம், கிச்சன், பாத்ரூம் என்று அதன் வசதிகள் பவித்ரனுக்கு ஒவ்வாமையைத் தருவதாக இருக்கும். பெட்ரூமில் படுத்துக் கிடந்தால், வீட்டின் மற்ற பகுதிகளெல்லாம் துருத்திக்கொண்டு இருப்பதுபோல் அவனுக்குத் தோன்றும். வாடகையே வேண்டாம். சும்மாவே தங்கிக்கோ என்று யாராவது வீட்டைத் தருவதென்றாலும் போகமாட்டான். அறையைப் போல வீடு அத்துணை தோழமைக் கிடையாது என்பது அவனது அனுபவக் குறிப்புகளில் ஒன்று.
“என்னிக்கு சார் வர்றீங்க?” பவித்ரன் கொடுத்த முன்பணத்தை மேற்சட்டை பாக்கெட்டில் வைத்தபடி மானேஜர் கேட்டார்.
“ஒண்ணாந்தேதிலேருந்துதானே வரணும்?”
“ஆமாம் சார்.”
“அன்னிலேருந்தே வரேன்.”
“இன்னும் நாலு நாள் இருக்கே. நீங்க நாளைக்கே கூட வரலாம் சார்.”
“அந்த நாலு நாளைக்கு தனியா வாடகைக் குடுக்கணுமா?”
“அதெல்லாம் வேணாம் சார். எதுக்கு நாலு நாள் வெயிட் பண்ணிக்கிட்டு.” மானேஜர் தந்த வாடகையில்லாத இந்த நாலு நாள் காம்போ ஆஃபர், அவரின் மீதான அணுக்கத்தை அவனுக்கு ஏற்படுத்தியது.
“உங்களுக்குப் பிரச்சினை இல்லன்னா, நாளைக்கே வந்துடுறேன்” என்றபடி, மறுபடியும் ஒரு தடவை அந்த அறையை அங்குலம் அங்குலமாகப் பார்த்தான். பார்த்த உடனேயே பிடித்த அந்த அறை இப்போது பார்க்கப் பார்க்கக் கூடுதலாகப் பிடித்திருந்தது. கதவைத் திறந்து பால்கனியில் வந்து நின்றான். சாலையைப் பார்த்தான். எதிர் வீட்டின் முகப்பில் இருந்த நெல்லி மரம், இவன் நின்றிருந்தக் கட்டடத்தின் தோளுரசி நின்றது. காகங்கள் இரண்டு இவனைப் பார்த்துக் கரைந்தது. ஜோடி அணில்கள் நெல்லி மரத்தின் கிளைகளில் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்ததும் பவித்ரன் குஷியாகி விட்டான். அணில்களை நட்பாக்கிக் கொள்ளுவதில் அவன் சமர்த்தன். அணில்களின் மொழி அவனுக்குத் தெரியும். உதடுகளைக் குவித்து அணிலைப் போல ஒலி எழுப்பினான். விளையாடிக் கொண்டிருந்த இரண்டும் சட்டென நின்று குரல் வந்த திசையைப் பார்த்தன. மறுபடியும் ஒலி எழுப்பினான். இந்த முறை ஜோடிகள் கூர்ந்து கவனித்தன. சந்தேகத்திற்குரிய குரலை ஆண் அணில் எழுப்பியது. பெண் அணில் அமைதி காத்தது.
ஆண் அணிலுக்குப் பதிலளிக்கும் விதமாக, வேறொரு தொனியில் ஒலி வழியாகப் பேசினான். ஆண் அணில் தனது இணையிடம் பார்வையால், ‘ஆபத்தில்லாதவனு சொல்றாம்பா. அவங்கிட்டே போகட்டுமா?’ என்பதுபோல் ஒலி எழுப்பியது. பெண் அணில், ‘உன்னிஷ்டம். பின்னாடி மானேஜர் நிக்கிறான். சூதானமா இருந்துக்க’ என்கிற விதமாய் மெலிதான குரலில் கீச் கீச்சென்றது. ஆண் அணில் திரும்பி மானேஜரை பார்த்தது. “ஆமா புள்ள. வெரட்டுவானே விசப்பய. நா போலடி” என விநோத ஒலி எழுப்பியது. பவித்ரன், அவை சந்தேகமும் அச்சமுமாகப் பேசுவதைப் புரிந்துகொண்டு, நம்பிக்கை தரும் விதமாக ஒலி எழுப்பினான். இணைகள் பயம் களைந்து, நம்பிக்கை முளைத்து அவனை நோக்கி வாலாட்டியபடியும் குரல் எழுப்பியபடியும் வந்தன. அதைக் கவனித்த மானேஜர், “அட, அணிலுங்க ரெண்டும் வருது” என்றபடியே அவனைத் தாண்டி வந்து நின்றார். மானேஜரை பார்த்த அணில்கள் மிரண்டு ஓடிவிட்டன. “என்னைப் பார்த்து பயந்துருச்சுங்க போல” சொல்லிவிட்டு ஏமாற்றமாக அவனைப் பார்த்தார். அணில்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டான். ஏதோ தீங்கிழைத்திருக்கிறார் என்பதையும் அனுமானித்தான். சிற்றுயிர்களுக்குத் தீங்கிழைப்பவர்களை அவனுக்குப் பிடிப்பதில்லை. மானேஜரை பிடிக்காமல் போகுமா என்பது, அணில்களுக்கு அவர் என்ன தீங்கு செய்தார் என்பதைப் பொறுத்தது. இப்போதைக்கு அவனுக்குப் பிடித்த அறையைத் தந்திருக்கிறார்.
****
பிடித்த ஒன்று பிடிக்காமல் போவதற்குக் காரணங்கள் எதுவும் தேவையில்லாமல் இருக்கலாம். அப்படியே இருந்தாலும் அது பழி சுமத்துவதாகவோ, புறங்கூறுதலாகவோ இருக்கும். அது காரணங்கள் அல்ல. ஆனால், பிடிப்பதற்குக் கட்டாயம் காரணங்கள் இருந்தே ஆகவேண்டும். அணில்களுக்கு அவனைப் பிடிப்பதற்கு, தங்களுடைய மொழியில் பேசுகிறான் என்பது காரணமாக இருந்தது. போலவே, அவனுக்கு அந்த அறையைப் பிடிப்பதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. மூன்றுமே முக்கியமான காரணங்கள். அதில் முதலாவது, பால்கனி. அங்கிருந்து ரோட்டில் கடந்து போகும் மனிதர்களைப் பார்க்கலாம். எதிர் வீட்டிலிருந்து சாலை வரைக்கும் தலையை நீட்டிக் கொண்டிருக்கும் நெல்லிக்காய் மரத்திலிருந்து உதிரும் பழுத்தச் சிற்றிலைகளை இரவொளியில் ரசிக்கலாம். அணில்களின் நண்பனாகலாம். பவித்ரனுக்கு பிராணிகளோடு நட்பு கொள்வது அத்துணை சுலபமாக வரும்.
இரண்டாவது காரணம், தனித்த அறையாக இருந்தது. வரிசையாக இருக்கும் அறையில் அவன் இருந்திருக்கிறான். அதில் உள்ள எரிச்சல் மிகுந்த அனுபவங்களைப் பற்றிச் சொல்வதற்கு அவனுக்கு அவ்வளவு விசயங்கள் இருக்கின்றன. பத்து அறைகள் கொண்ட வரிசையில் முதலாவது அறை சபிக்கப்பட்டது. மற்ற ஒன்பது அறை வாசிகளும் போகும்போதும் வரும்போதும் அறையைத் திரும்பிப் பார்த்தபடியே போவார்கள். வருவார்கள். பத்தாவது அறை நீங்கலாக மற்ற அறைகளில் தங்கி இருப்பவர்களுக்கும் அதுதான் நிலைமை என்றாலும் முதலாவது அறையில் இருப்பவருக்கு அது கூடுதலான எரிச்சலைத் தரும். அதேபோல், அறையில் தங்கியிருப்பவர்களை யாராவது தேடி வந்தால், அவர்கள் முதலில் விசாரிப்பது, முதலாவது அறையில் இருப்பவரைத்தான். கதவைப் பூட்டிக்கொண்டு தூங்கும்போதுதான், தட்டி எழுப்பி விசாரிப்பார்கள். இந்தத் தொல்லையே வேண்டாம் என்று பத்தாவது அறைக்குச் சென்றால், அது வேறு ரகமாக இருக்கும். அந்த அறையை ஒட்டித்தான் எல்லோருக்குமான பாத்ரூம் டாய்லெட் இருக்கும். தவிர, மற்ற அறையில் இருப்பவர்கள், புகைப்பதற்குப் பத்தாவது அறை பக்கம்தான் கரை ஒதுங்குவார்கள். பத்தாம் அறையை ஒட்டித்தான் மொட்டைமாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் இருக்கும்.
சனி, ஞாயிறு வந்துவிட்டால், மற்ற அறைவாசிகள் சரக்குகளோடு பேரணி போல கடந்து மொட்டை மாடிக்குச் செல்வார்கள். இதெல்லாம் அனுபவித்து வெறுத்திருந்த பவித்ரனுக்கு இந்தத் தனியறை அத்துணை ஆதுரமாக இருந்தது. ஆத்தும அமைதலைக் கொடுத்திருந்தது.
மூன்றாவது காரணம், மிக மிக முக்கியமானது. அந்த அறை, இரண்டாம் தளத்தில் இருந்தது.
கீழ் தளத்திலிருந்து அந்த அறைக்கு வருவதற்கு மொத்தம் முப்பத்தியோரு படிகள் இருந்தன. அவனைப் பார்க்க வருபவர்கள் இத்துணைப் படிகளை ஏறி வரமாட்டார்கள் என்று நம்பினான். அவனது நம்பிக்கை பொய்க்கவில்லை. அப்படித்தான் நடந்தது. அவனைப் பொறுத்தவரை, ‘நம்பிக்கைதான் வாழ்க்கை’ என்பது, ‘நம்பிக்கைதான் படிகள்’ என்று சொல்லலாம். அவன் எந்த ஊருக்குச் சென்று அறை தேடினாலும் இரண்டாவது மாடியாக இருந்தால் அத்துணை மகிழ்ச்சியடைவான். மூன்றாவது மாடி என்றால் கொண்டாடி விடுவான். தரைதளத்தில் அறை என்றால், மறுபேச்சு இல்லாமல் மறுத்துவிடுவான்.
அவனை அலுவலக ரீதியாகப் பார்க்க வருபவர்கள், முதல் தடவை ஆர்வமிகுதியில் படியேறி வந்துவிடுவார்கள். அடுத்தமுறை வரும்போது, அணுகுமுறையில் மாற்றம் இருக்கும். மண்டப வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு இவனுக்கு போன் செய்வார்கள்.
“சார், வாசல்லதான் நிக்கிறேன். கீழே வர்றீங்களா?”
“ரூமுக்கு வாங்க பாஸ்.”
“கோச்சுக்காம நீங்க இறங்கி வந்துருங்களேன்.”
“வேலையா இருக்கேன் பாஸ். நீங்க மேலேறி வாங்களேன்.”
“அய்யோ, படியேற முடியல சார். மூச்சு வாங்குது.”
“உங்க வெயிட் என்ன பாஸ்?”
“எழுபத்தஞ்சு கேஜி. ஏன் சார் கேக்கறீங்க?”
“நான் என்ன வெயிட் இருப்பேன்னு நினைக்கிறீங்க?”
“தெரியலியே சார்.”
“சும்மா கெஸ் பண்ணுங்க. எப்படியும் தப்பாதான் சொல்லுவீங்க.”
“ஒரு தொண்ணூறு… இல்லையில்லை. தொண்ணூற்றைந்து.”
“எதுனா ஒண்ணு சொல்லுங்க. தொண்ணூறா? தொண்ணூற்றைந்தா?”
“தொண்ணூற்றேழு சார்?”
“மூனுமே தப்பு. நூத்திப்பத்து இருக்கேன்.”
“என்ன சார் சொல்றீங்க? பாத்தா அப்படி தெரியல சார்.”
“இந்த உடம்பை வச்சுகிட்டு தினமும் பத்து தரம் படியேறி இறங்கிட்டு இருக்கேன் சார்.”
அவ்வளவு பெரிய உடம்பை அசைத்தாட்டிக்கொண்டு படியிறங்கிச் செல்வான். உள்ளூர் விஐபிக்கள் அனுப்பி வைத்தவர்களோ, உதவி அலுவலர்களோ அவனுடைய கையெழுத்தைப் பெறுவதற்காகக் காத்திருப்பார்கள்.
மாவட்டப் போக்குவரத்து அலுவலகத்தில் முதன்மை அலுவலராக இருக்கிறான். டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதி சிறுவயதிலேயே வட்டாரப் போக்குவரத்து அலுவலராக நியமனம் ஆனவன். முப்பத்து மூன்று வயதிலேயே மாவட்டப் போக்குவரத்து அலுவலராகிவிட்டான். லைசென்ஸ் கொடுப்பது, வாகன நம்பர் அனுமதி அளிப்பது, புதிப்பிப்பது, ஃபேன்ஸி நம்பர் ஒதுக்குவது என்று அவனிடம் வரும் எல்லாக் கோப்புகளையும் அன்றன்றைக்கு நகர்த்திவிடுவான். எந்தக் கோப்புகளையும் காத்திருப்புப் பட்டியலில் வைப்பதில்லை. அவன் நேர்மையானவனாக இருந்தாலும் அவன் கீழுள்ள அலுவலர்கள் அப்படி இல்லை. அவனைவிட வயதில் மூத்தவர்கள் எல்லாம், ‘இத்துணை சிறுவயதில் டிஆர்ஓ ஆகிவிட்டானே’ என்று வன்மமும் பொறாமையும் கொண்டார்கள். வந்த புதிதில் உருவகேலி செய்திருக்கிறார்கள். ‘குட்டி யானை’ என்ற பெயரும் வைத்துவிட்டார்கள். உடல் எடையைக் குறைப்பதற்காகப் பேலியோ டயட்டில் தொடங்கி, புரோட்டின் டயட் வரை இருந்து பார்த்தவன்தான். ‘வாலட்’ டின் எடைதான் இளைத்ததே தவிர, இவன் அப்படியேதான் இருந்தான்.
“இதோ பாருடா பவி. நீ உன்னோட தாத்தா மாதிரி. அவரும் உன்னை மாதிரிதான் இருப்பாரு. இது ஜீன் வெயிட். உடம்பைக் குறைக்கிறேன்னு காசைக் காவு குடுக்காதே” அவனது அம்மா சொன்ன பிறகுதான் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியைக் கைவிட்டான்.
சமீபகாலமாக அலுவலகத்தில் எதிரிகளின் மீறுதல்கள் அதிகமாகிக் கொண்டே போனது. லஞ்சம் வாங்குவதற்கு அவனைப் பழக்கிவிட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையில் மாட்டிவிட்டு ஜோலியை முடித்துவிடுவதற்குக் காத்திருந்தார்கள். பாண்டியன் மூலமாக இந்தத் தகவல் எல்லாம் அவனுக்கு வந்துவிடும். சதா நேரமும் அலர்ட் மோடுலேயே அவன் இருக்க வேண்டியிருந்தது. வேறு மாவட்டத்திற்கு மாறுதல் கேட்டுப் போகலாம் என்றாலும் எல்லா போக்குவரத்து அலுவலகங்களுமே அப்படித்தான் இருந்தன. இப்படியே மூன்று வருடங்கள் ஓடிவிட்டன.
***
பழைய விசயங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்ததில், மனம் இறுக்கம் கொண்டதைப் போல் உணர்ந்தான். நாற்காலியைப் பால்கனியில் போட்டு அமர்ந்தான்.
உதடுகளைக் குவித்து அணிலைப் போல ஓசை எழுப்பினான். இரண்டு அணில்கள் நெல்லி மரத்தின் கிளைகள் வழியாக ஓடி வந்து, மின் கம்பிகளில் தாவி, சரசரவென கடந்து இவனிடம் வந்தன. ஒன்று அவனது உள்ளங்கையில் உட்கார்ந்து கொண்டு அவன் முகத்தைப் பார்த்தது. மற்றொன்று தோளில் அமர்ந்தபடி, அவனது காதின் நுனியை மல்லாட்டைப் பூ மாதிரியான வாயினால் வருடியது. அறைக்கு வந்த முதல் நாளில் மானேஜரை கண்டு மிரண்டு ஓடிய அணில்கள் இல்லை அவை. ஒன்று அவற்றின் வாரிசு. மற்றொன்று அதனுடைய இணை. வயிற்றில் குட்டியைச் சுமந்துகொண்டு இருந்தது. பெட்டைக்கு லூனா என்று பெயர் வைத்திருக்கிறான். அவற்றோடு விளையாடிக் கொண்டிருந்தான். உள்ளே சார்ஜ் ஏறிக்கொண்டு இருந்த போன் அழைத்தது. இவன் எழுந்ததும், ஆண் அணில் முந்திக்கொண்டு அறைக்குள் நுழைந்தது. லூனா அவனுடைய தோளிலேயே உட்கார்ந்து இருந்தது. பகுமானமாக நடந்து சென்று மொபைலை எடுத்தான். பாண்டியன் அழைத்திருந்தான். பவித்ரனின் அலுவலக வாகன ஓட்டுநர். சார்ஜரிலிருந்து உருவி எடுத்தான்.
“சொல்லு பாண்டியா?” பேசியபடியே பால்கனிக்கு வந்தமர்ந்தான்.
“நாளைக்கு லீவு வேணும் சார்?”
“எடுத்துக்க. தாமோதரனுகிட்ட நாளைக்கு என்னை பிக்கப் பண்ண வர சொல்லிரு” தோளிலிருந்து அணில் அசையாமல் அவன் சொல்லுவதைக் கேட்டுக்கொண்டிருந்தது.
“சொல்லிட்றேன் சார்.”
“பாண்டியா, ரூம் இருந்தா பாத்து சொல்லுப்பா.”
“சொல்றேன் சார். யாருக்கு சார்?”
“எனக்குதான்.”
“அந்த ரூம் உங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்குன்னு சொல்லுவீங்களே சார்.”
“என்னவோ தெரியலை. இப்ப பிடிக்கல பாண்டியா?”
அவன் பவித்ரனிடம் வேறெதுவும் கேட்கவில்லை. “ரெண்டு நாள்ல பாத்து சொல்லிடுறேன் சார்.” என்றான். அவன் பேசுவதைப் புரிந்துகொண்ட லூனா, அபாய ஒலியை எழுப்பியபடி அவனது உடம்பு முழுக்க அங்குமிங்குமாக ஓடியது. அதன் குரலைக் கேட்டு அறையில் மேய்ந்து கொண்டிருந்த ஆண் அணில் ஓடி வந்து தாவி அவனது தோளில் அமர்ந்தது. இணையிடம் விசாரித்தது. விசயத்தைச் சொன்னதும் ஆண் அணிலும் சேர்ந்துகொண்டு பவித்ரனுக்கு எதிராகக் கண்டன ஒலி எழுப்பியது. அவற்றின் பரிதவிப்பை பவித்ரன் புரிந்துகொண்டான். இரண்டையும் தனது கரங்களில் ஏந்தினான். குட்டியை வயிற்றில் சுமந்துகொண்டிருக்கும் லூனாவின் தலையை விரல்களால் மென்மையாக வருடினான்.
“லூனா, உன்னையும் உன் புருசனையும் அம்போனு விட்டுட்டுப் போக மாட்டேன். ரெண்டு பேரையும் எங்கூட கூட்டிட்டுதான் போவேன். சரியா?” பெட்டை அணில் பதிலேதும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டது. அவன் மீது கோபமாக இருப்பதன் வெளிப்பாடு.
“அச்சோ. கோச்சுக்காதே டார்லிங். நீங்க ரெண்டு பேரும் இங்கே இருக்குறது ஆபத்து. உன்னோட அப்பா அம்மாக்கு நடந்ததை மறந்துட்டியா?”
அவன் அப்படி சொன்னதும் சட்டென்று அவன் முகத்தைப் பார்த்தது. உள்ளங்கைக்குள் சென்று சுருண்டு படுத்துக்கொண்டது. அதன் குட்டிக் கண்களிலிருந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது. ஆண் அணில் ஓடி வந்து இணையைச் சுற்றிச் சுற்றி வந்து ஆதுரம் காட்டியது. அவனது உள்ளங்கைக்குள் இரண்டு சிற்றுயிர்களும் உணர்வு பிரவாகத்தில் இருந்தன. பவித்ரனுக்கு வியப்பாக இருந்தது. அணில்களின் குட்டியூண்டு மூளைக்குள் நினைவுகள் இருக்குமா? தான் சொன்னதைப் புரிந்துகொண்டு, அதனுடைய அம்மா, அப்பாவின் நினைவுக்குச் சென்றுவிட்டதே என்று சிந்தித்தபடியே இரண்டு அணில்களையும் தடவிக் கொடுத்தான்.
கடந்த வருடம் நடந்த சம்பவம் அது. அலுவலகம் சென்றுவிட்டு அறையைத் திறந்தான். பால்கனி பகுதியிலிருந்து அணிலின் இடைவிடாத குரல் கேட்டது. அந்தக் குரலில் கதறல் இருந்தது. ‘அய்யோ, கத்துறது லூனாவாச்சே… என்னாச்சுன்னு தெரியலியே’ பதறியவனாக, பால்கனி கதவினைத் திறந்தான். பெரிய அணில்கள் இரண்டும் அடிபட்டு இறந்து கிடந்தன. கற்கள் இரண்டு அவற்றுக்குப் பக்கத்தில் கிடந்தன. ‘கல்ட்டாபெல்ட்’டினால் யாரோ அடித்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டான். அந்தத் தாக்குதலுக்கு லூனா எப்படியோ தப்பித்திருக்கிறது. அல்லது தாக்கியவன் குட்டி அணில் என்று அதனை உயிரோடு விட்டிருக்கலாம். இவனைப் பார்த்ததும் லூனா தாவி ஏறிக்கொண்டது. அம்மாவையும் அப்பாவையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்துவிட்ட பரிதவிப்பு அதன் குரலில் தெரிந்தது. அதனை ஆறுதல் படுத்திவிட்டு, அணில்களைத் தூக்கிச் சென்று, வீதியோரத்தில் குழிப்பறித்து புதைத்துவிட்டு வந்தான். லூனாவுக்கு பொரி வைத்தான். தண்ணீர் வைத்தான். கர்ச்சிப் ஒன்றைச் சுருட்டி, அதற்குப் படுக்கை செய்தான். அதில் சுருண்டு படுத்துக் கொண்டது. தூக்கத்திலும் அதன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
மறுநாள் அவன் கூடவே அலுவலகம் வந்தது. விசாரித்த பாண்டியனிடம் விவரத்தைச் சொன்னான்.
“அந்த ஏரியால அணிலு, பூனையை அடிச்சுத் திங்கிற பசங்க இருக்கானுங்க சார். அவனுங்க வேலையாதான் இருக்கும்.”
“செத்த ரெண்டு அணிலும் பால்கனிலதான் கெடந்துச்சு பாண்டியா.”
“அடிபட்ட அணில் வெளி பக்கமா விழும்னு நெனச்சிருப்பானுங்க. பால்கனில விழுந்ததும் எடுக்கத் தோது இல்லாம போயிட்டானுங்க போல.”
லூனா இயல்புக்கு வருவதற்கு ஒரு வாரம் ஆனது. அதன் பாதுகாப்புக்காகப் பால்கனி கதவைத் திறந்து வைத்துவிட்டு அலுவலகம் செல்ல ஆரம்பித்தான். ஒரு வருடம் கடந்த நிலையில், தனக்கான துணையைத் தேடிக்கொண்டது. இப்போது லூனா நிறைமாதமாக இருக்கிறது.
இரண்டு நாள்களில் புதிய அறை பார்த்துவிடுவதாகச் சொன்ன பாண்டியன் பத்து நாள்களாக்கிவிட்டான். “ரூம் ரெடி சார்” என்று அவன் சொன்ன அன்றைக்கே, அலுவலகம் முடிந்து அப்படியே அறையைப் பார்க்கச் சென்றுவிட்டான். நகருக்கு வெளியே புறவழிச்சாலையில் கட்டப்பட்டிருந்த புதிய திருமண மண்டபம் ஒன்றில், அந்த அறை இருந்தது. இரண்டாவது தளத்தில் ரோட்டைப் பார்த்தபடி இருந்தது. லூனாவும் அதன் இணையும் ஓடியாடி விளையாட வெளியும் மரங்களும் இருந்தன. அறையை அவனுக்குப் பிடித்திருந்தது. இரண்டு நாளில் வந்துவிடுவதாகச் சொல்லி, அப்போதே முன்பணம் கொடுத்துவிட்டான்.
மகிழ்ச்சியோடு அறைக்குத் திரும்பினான்.
அவன் வரும் நேரம் லூனா தம்பதியர்களுக்குத் தெரியும். திறந்திருக்கும் பால்கனி கதவின் வழியாக அறைக்குள் நுழைந்து இரண்டும் காத்திருக்கும். கதவின் பூட்டைத் திறக்கும்போதே, இரண்டும் எழுப்பும் உற்சாகக் குரல்கள் கதவைத் துளைத்துக்கொண்டு வரும். இன்று வரவில்லை. பவித்ரன் உடலெங்கும் சட்டென வெப்பம் பரவியது போலொரு உணர்வு எழுந்தது. தீங்குறியின் நிலையை மனம் உணர்ந்தது. அவனது இருதயம் படபடத்தது. ஏதோ கெட்டது நடந்திருக்கிறது என்று புத்தி அலறியது.
சட்டெனக் கதவைத் திறந்தான். அறை முழுவதும் பார்வையால் துழாவினான். அணில்களைக் காணவில்லை. ஒரே எட்டில் பால்கனிக்குள் பாய்ந்தான். அங்கே அவன் பயந்தபடியே அணில்கள் இரண்டும் செத்துக்கிடந்தன. லூனாவின் ஆசனவாயிலிருந்து குட்டியின் தலை இறந்த நிலையில் பிதுங்கியிருந்தது. அவற்றையொட்டி சிறுகற்கள் கிடந்தன.
***
இரண்டு தினங்கள் கழிந்த நிலையில், அறையைக் காலி செய்து பொருள்களையெல்லாம் மினிடோர் வண்டியில் ஏற்றினான். அறையின் சாவியை ஒப்படைப்பதற்காக மானேஜரைப் பார்க்கச் சென்றான். அவர் அலுவலக அறைக்குள் மொபைலில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார். அவரெதிர் இருக்கையில் அமர்ந்தான். சாவியைக் கொடுத்தான். சில நிமிட உரையாடல் இருவருக்குள்ளும் நிகழ்ந்தது. அவரிடம் விடைபெற்றுத் திரும்பும்போதுதான் கவனித்தான்.
பவித்ரன் உட்கார்ந்திருந்த நாற்காலிக்குப் பின்புறச்சுவரில் இருந்த ஆணியில், கல்ட்டாபெல்ட் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.












