தொண்ணூறுகளின் கொந்தளிப்பான கலை, இலக்கியச் சூழலில் அச்சு இதழாகக் களம் கண்ட ‘களம் புதிது’, காலத்தின் தேவைக்கேற்ப இன்றைக்குத் தனது பயணத்தை இணைய வெளியில் புதிய வீச்சோடு தொடங்குகிறது. தொண்ணூறுகளில் அச்சு இதழாக வந்தபோது எது இந்த இதழின் முதன்மை நோக்கமாக இருந்ததோ, இப்போதும் அதுதான். அதிகார மையங்களின் குரல்களுக்கு மாறாக விளிம்புநிலை மனிதர்களின் குரல்களையும், மாற்றுப் பண்பாட்டுச் சிந்தனைகளையும் பதிவு செய்வது. அதே இலட்சிய வேட்கையோடு, மேலும் விரிவடைந்த பன்முகப் பார்வையோடு மீண்டும் உங்களோடு உரையாட வருகிறது களம் புதிது.
தொழில்நுட்பத்தின் வீச்சும் இணையத்தின் எல்லையற்ற பரப்பும் இன்றைய மனித வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளன. உரையாடல்களும் விவாதங்களும் திண்ணைகளில் இருந்தும் தேநீர்க்கடைகளில் இருந்தும் டிஜிடல் திரைகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டன. ஆனாலும், இந்த டிஜிட்டல் பரப்பிலும் ஆதிக்கத் தன்மைகளும், சந்தைப் பொருளாதார வணிகமும், மேல்தட்டுப் பண்பாட்டு முகங்களுமே மேலோங்கி நிற்கின்றன. இந்தச் சூழலில், இணையத்தின் சனநாயகச் சாத்தியங்களைப் பயன்படுத்திக் கொண்டு, ஒடுக்கப்பட்டோரின் குரலாகவும், மாற்றுப் பண்பாட்டுத் தளமாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு ‘களம் புதிது’ இதழுக்கு இருக்கிறது.
கலை, இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்கோ அல்லது அழகியல் நுகர்வோ மட்டும் அன்று. அது சமூகத்தின் ஆழமான அதிகார அமைப்புகளையும், பண்பாட்டு மேலாதிக்கங்களையும் கேள்விக்குட்படுத்தும் ஒரு வலிமையான கருவி. மேலாதிக்கப் பண்பாடு என்பது எப்போதும் தன்னை ஒரே பண்பாடாக, உலகளாவிய உண்மையாகக் காட்டிக்கொள்ள முயல்கிறது. அது எளிய மக்களின், விளிம்புநிலைச் சமூகங்களின், பாலினச் சிறுபான்மையினரின் வாழ்வியலையும் அடையாளங்களையும் புறக்கணிக்கிறது அல்லது திரித்துரைக்கிறது. ‘களம் புதிது’ இதழின் முதன்மை நோக்கமே இத்தகைய ஆதிக்கப் பண்பாட்டிற்கு மாற்றாக, எளிய மக்களின் பண்பாட்டை, அவர்களின் கலை வடிவங்களை, அவர்களின் வாழ்க்கைமுறையை முதன்மைப்படுத்துவதுதான். பண்பாட்டுத் தளத்தில் நிகழும் உரையாடல்கள் அரசியலிலிருந்து தனித்துப் பிரிந்து இயங்க முடியாது. எந்தக் கலை வடிவம் போற்றப்படுகிறது, எந்த மொழி அங்கீகரிக்கப்படுகிறது, யாருடைய கதைகள் சொல்லப்படுகின்றன என்பவை எல்லாமே அரசியல்தன்மை கொண்டவை. எனவே, மாற்றுப் பண்பாட்டைப் பேசுவதென்பது மாற்று அரசியலைப் பேசுவது ஆகும். சாதிய ஒடுக்குமுறைகள், வர்க்க முரண்பாடுகள், பாலினச் சமத்துவமின்மை, சூழலியல் சீரழிவுகள், மற்றும் உலகமயமாக்கலின் பேரழிவுகள் ஆகியவற்றை எதிர்த்து நிற்கும் அனைத்து விடுதலை இயக்கங்களின் சிந்தனைகளுக்கும், விமர்சனங்களுக்கும் ‘களம் புதிது’ ஒரு விவாத மேடையாகச் செயல்படும்.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட சிந்தனைப் புரட்சிகளில் பின்நவீனத்துவத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. ஒற்றை மையவாதத்தை உடைப்பதும், அதிகார அமைப்புகளின் பின்னுள்ள நுண் அரசியலைக் கண்டறிவதும், பேரமைப்புகளைப் (Grand Narratives) பிரதியாய் அவிழ்த்துப் பார்ப்பதும் பின்நவீனத்துவத்தின் முதன்மையான இயல்புகளாகும்.
தமிழ் இலக்கியச் சூழலில் பின்நவீனத்துவம் அறிமுகமான காலத்தில் அது பல விவாதங்களுக்கும், ஐயங்களுக்கும், சில நேரங்களில் தவறான புரிதல்களுக்கும் உள்ளானது. ஆனால், ஒடுக்கப்பட்ட குரல்களும் விளிம்புநிலைச் சமூகங்களும் தங்களின் சொந்த அடையாளங்களை, மொழியை, வரலாற்றை மீட்டெடுப்பதற்குப் பின்நவீனத்துவ தத்துவப் பகுப்பாய்வுகள் பெரும் பக்கபலமாக அமைந்துள்ளன.
‘களம் புதிது’ பின்நவீனத்துவம் உள்ளிட்ட அனைத்து நவீனத் தத்துவங்களுக்கும், கோட்பாட்டு விவாதங்களுக்கும் உரிய இடத்தை அளிக்கும். உலக அளவில் உருவாகும் புதிய தத்துவச் சிந்தனைகளைத் தமிழுக்குக் கொண்டுவருவதும், அவற்றை நமது உள்ளூர்ச் சூழலோடு பொருத்திப் பார்த்து விமர்சனப்பூர்வமாக உரையாடுவதும் இக்கூட்டுப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். மரபான சிந்தனைச் சட்டகங்களை உடைத்து, புதிய சிந்தனைப் புலங்களை நோக்கிய தேடலுக்கு இவ்விதழ் என்றும் ஊக்கம் தரும்.
இலக்கியம் என்பது நிலையான வடிவங்களுக்குள் அடைபட்டுக்கிடக்கும் ஒன்றல்ல. கால மாற்றத்திற்கு ஏற்ப அதன் வடிவங்களும், வெளிப்பாட்டு முறைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. சிறுகதை, கவிதை, நாவல் போன்ற மரபான வடிவங்களின் எல்லைகளைத் தாண்டி, பரிசோதனை ஆக்கங்கள், மொழிபெயய்ப்புப் பிரதிகள், டிஜிட்டல் இலக்கிய வடிவங்கள், நேர்காணல்கள், பன்முகப் பிரதிகள் (Hypertext) என நவீன இலக்கியம் புதிய பரிமாணங்களை எட்டி வருகிறது. இத்தகைய புதிய இலக்கிய வடிவங்களுக்கும், சோதனைகளுக்கும் ‘களம் புதிது’ கதவுகளைப் பரந்த அளவில் திறந்து வைக்கிறது. அதே வேளையில், வடிவ அழகியலை விடவும், பிரதியின் உள்ளடக்கத்திற்கும் அது உருவாக்கும் அரசியல் விழிப்புணுவிற்கும் நாம் முன்னுரிமை தருகிறோம். குறிப்பாக, ‘விளிம்புநிலை படைப்புகளுக்கு முன்னுரிமை’ என்பது நமது முதன்மைக் கொள்கை.
மைய ஓட்ட இலக்கியங்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட, விளிம்புநிலை இலக்கியங்கள், பெண்ணியப் பார்வையிலான படைப்புகள், நிகர் பாலினத்தவர் (Queer) படைப்புகள், பழங்குடியின மக்களின் வாழ்வியல் பதிவுகள், உழைக்கும் மக்களின் அசல் குரல்கள் ஆகியவை இவ்விதழில் முதன்மை பெறும். அதிகார மையங்கள் தீர்மானிக்கும் ‘செவ்வியல்’ அல்லது ‘அழகியல்’ அளவுகோல்களை உடைத்து, எளிய மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களிலிருந்தும், அவர்களின் இயல்பான மொழியிலிருந்தும் பிறக்கும் அசல் படைப்புகளுக்கு ‘களம் புதிது’ முக்கியத்துவம் அளிக்கும்.
ஒரு மொழியின் இலக்கியமும் சிந்தனையும் தேங்கிவிடாமல் இருக்க வேண்டுமெனில், அது பிற மொழிகளின் சிறந்த சிந்தனைகளோடு தொடர்ந்து உரையாடலில் இருக்க வேண்டும். அந்த உரையாடலின் மிக முக்கியமான பாலம் மொழிபெயர்ப்பு ஆகும்.
உலகளாவிய அளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள், மூன்றாம் உலக நாடுகளின் இலக்கியங்கள், லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மாற்றுப் பண்பாட்டு இயக்கங்கள், மேலைநாடுகளின் நவீன தத்துவப் பிரதிகள் ஆகியவை தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டியது இன்றைய சூழலில் மிகவும் அவசியமானது. அதேபோல், இந்திய அளவில் பிற மாநிலங்களில் நிகழும் தலித்திய, பெண்ணிய, சூழலியல் சார்ந்த படைப்புகளையும் தமிழுக்குக் கொண்டுவர வேண்டிய தேவையும் உள்ளது. ’களம் புதிது’ மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு மிகப் பரந்த பரப்பை ஒதுக்கவுள்ளது.
’களம் புதிது’ என்பது ஒரு சிலரின் கருத்துக்களை மட்டும் சுமந்து வரும் இதழ் அன்று. அது மாற்றுச் சிந்தனை கொண்ட அனைவருக்குமான ஜனநாயக மேடை. சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், இளம் படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் அனைவரையும் இந்த உரையாடலில் பங்கெடுக்க அன்போடு அழைப்பு விடுக்கிறோம்.
நமது நோக்கம் இலக்கியப் பரப்பின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதோ அல்லது புதிய அதிகார மையங்களை உருவாக்குவதோ அல்ல. மாறாக, அதிகாரத்தின் அனைத்து வடிவங்களையும் கேள்விக்குட்படுத்துவதும், பண்பாட்டுத் தளத்தில் ஜனநாயகத்தைப் பேணுவதும், விடுதலைக்கான புதிய பாதைகளைத் திறப்பதுமே ஆகும். அச்சிலிருந்து இணையத்திற்கு மாறியிருக்கும் இந்த மாற்றம் வெறும் தொழில் நுட்ப மாற்றம் மட்டுமல்ல. நமது உரையாடலின் எல்லையை விரிவுபடுத்துவதற்கான ஒரு புதிய வாய்ப்பு. மாற்றுப் பண்பாட்டையும், மாற்று அரசியலையும் நோக்கிய நமது பயணம் இப்புதிய களத்தில் தொடர்கிறது.
வாருங்கள். இணைந்து சிந்திப்போம்; எழுதுவோம். உரையாடுவோம்.
– ஆசிரியர் குழு
களம் புதிது











