நேற்றிரவும் மழை பெய்திருந்தது. ஆனால் நான் பார்க்கத் தவறவிட்ட மழை அது. அதற்கு முந்தின நாள் நள்ளிரவு மழையை முழுக்கப் பார்க்க வாய்த்தது. என்னைக் கேட்பதற்கு ஆள் இல்லை என அடித்துப் பெய்த மழை அது. மழைக்கு ஏற்றாற்போல் காற்றும் சேர்ந்துகொண்டு இரண்டு மணி நேரம் ஆட்டம் போட்டன. ஒரு நிலத்தின் மத்தியில் கட்டிய வீட்டின் தாழ்வாரத்தில் உட்கார்ந்து, அறுபது வயதில் மழையைப் பார்ப்பது எனக்கு வாய்த்திருந்தது.
எனக்கு அறுபது நிறைந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனாலும் அறுபதைத் தாண்ட மனம் ஒப்புக்கொடுக்க மறுக்கிறது. முதுமையை நோக்கி நகர மறுக்கின்றன கால்கள். எதனாலாவது இங்கேயே காலம் நிறுத்திவிடாதா என என் மனம் ஏங்குகிறது.
அறுபது வயதில்தான் மனிதன் தன்னைப் பின்னோக்கித் திரும்பிப் பார்க்கிறான். தன் பால்யம், வாழ்வு, தன் இளமை, காதல், திருமணம், குழந்தைகள், வீடு வாசல், பொருளாதாரம், அதை அடைய எத்தனிப்புகள், பெற்ற துரோகங்கள், உழைப்பு, வீழ்ச்சி, திரும்ப எழுதுதல் என எல்லாமே அவனுள் முட்டி மோதுகின்றன.
ஆனால் இது சராசரியான குடும்ப வாழ்விற்கு தன்னை ஒப்புக்கொடுத்த மனிதனின் வாழ்வு. கலைஞர்களின் வாழ்வு இதற்கு அப்பாற்பட்டது. அவனுடைய மனதில் இன்னமும் பட்டயம் நிறைந்திருக்கும். படைப்பூக்கம் மங்கிவிடாமலிருக்க அவன் தன் லௌஹீக மூடலால் தன்னை கரைத்து, அதற்குத் தன்னை பலிகொடுக்கிறான்.
இன்னும் எதையாவது விட்டு வைத்திருக்கிறோமா? ஆடிய தன் கால்களின் சலங்கைகளைக் கழட்டி வைக்க மனமின்றி, மிச்சம் வைத்திருக்கும் கலையைத் தேட இன்னமும் கனவு காண்கிறோம்.
புகழ்பெற்ற மலையாள நடிகர், ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர்தான் கதாநாயகன். தன் காலம் முடிவடைந்துவிட்டதை அவர் உணர்கிறார். ஆனாலும் நம்ப மறுக்கிறார். தினமும் அதிகாலையில் எழுந்து மேக்கப் போட்டு தன் ஒப்பனை மேசைக்கு எதிரில் அமர்ந்து தொலைபேசியை உற்று நோக்கி அமர்ந்திருக்கிறார். ஒரு தொலைபேசி அழைப்பு அவரை மீண்டும் கேமரா முன்பு நிறுத்தும் என ஒவ்வொரு நாளும் நம்புகிறார்.
ஆனால் அது நிகழப்போவதில்லை. அந்த உண்மையை உள்ளூர வெறுக்கிறார். அவர் எப்படியாவது அது நிகழ வேண்டும் என விரும்புகிறாரா? அது நிகழ வேண்டும் என. இதுதான் கலைஞனின் கடைசி நாட்கள். இன்னும் இருக்கிறது, இன்னும் இறுக்குகிறது நம்பும் அவன் உள்மனம், சொல்லிச் சொல்லி அவனை உந்தித் தள்ளுகிறது. அப்போதுதான் தான் முதுமை அடையவில்லை என அவன் உள்ளூர நம்புகிறான்.
புகழ்பெற்ற பாப்பம்பாடி ஜமாவின் அணித்தலைவன் முனுசாமி, ஒரு காலத்தில் காலில் மணிகள் கட்டி, பெரிய மேளத்தைத் தோளில் ஏற்றி வட்டமடித்து வட்டமடித்து அவர் ஆடும் ஆட்டம், சுற்றி நின்று பார்ப்பவர்களைச் சற்று தள்ளி நிக்க வைக்கும். உள் மனம் நடுங்கும், உடல் உதறும்.
கடந்த வாரம், பதஹைய்த்தில் ஆயிரத்தில் ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். பாப்பம்பாடி ஜமா முனுசாமியின் பேரன் கழுத்தில் பெரிய மேளம் ஏறியிருந்தது, காலம் தன் தாத்தனின் கழுத்திலிருந்து மேளத்தைக் கழட்டி மகனுக்கு மாட்டி, இப்போது பேரனுக்கு மாற்றி, தன் ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்கிறது.
நீ மட்டும் எப்படி இத்தனை நெடிய ஆண்டுகள் எப்படி ஆடுவாய்? என அவனைத் திமிரத் திமிர, அவனிடமிருந்து விடுவிக்க நினைக்கிறது. அப்பேய் ஆட்டத்தின் நடுவே நான் முனுசாமியை உற்றுக் கவனித்தேன். தன் ஒரே மகனை மரணத்திற்குத் தின்னக் கொடுத்து இன்னும் ஒரு மாதம் கூட முடியாத முனுசாமி, கையில் தாளத்தோடு நான் ரசித்த சிரிப்போடு ஆட்ட காலத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார்.
முனுசாமியின் கால்களில் ஆடிக்கொண்டிருக்கும் கால்களில் என் கண்கள் பாதிக்கின்றன. அக்கால் மணிகளற்ற வேற்றுக் கால்கள். அதனால் என்ன? அவை இன்னும் உயிர்ப்போடுதான் அசைகின்றன. அதன் உச்சத்தை அவன் அடையும் வரை முனுசாமி உயிரோடு இருப்பான். அதுதான் கலைஞனின் உச்சம் தொடல். அதுதான் கலைஞனின் முழு ஜீவிதம்.
மகன் இறந்த மறுநாள், எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு, தொழில் நாட்பட்ட பெரிய மேளத்தோடு ஏதோ ஒரு சாவு வீட்டுக்கு முனுசாமியை நடக்க வைக்கிறது, ஒரு மரணத்திற்கு ஒடுங்கி அதிலேயே கிடந்தது, திண்ணையில் படுத்து, ஒரு நாள் செத்துப்போகும் சராசரிகளின் பட்டியலில் முனுசாமிக்கு இடம் இல்லை. அவன் கலைஞன், அந்தக் கேரளாவின் புகழ்பெற்ற நடிகனுக்கும் இதேதான்.
தெரிந்தோ தெரியாமலோ நான் என் பதினைந்தாவது வயதில் இவர்கள் பக்கம் போய்விட்டவன். சக மாணவர்கள் எப்போதும் பாடப் புத்தகங்களில் மூழ்கிக் கிடந்தபோது, நான் ஜெயகாந்தனின் ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் படித்துக் கொண்டிருந்தேன்.
பத்தாம் வகுப்பு பரீட்சை முடிந்ததும், கோடைகளின் மத்தியானத்தில், நான் என் முதல் நாவலை எழுதத் துவங்கியிருந்தேன். அந்த உந்துதல், படைப்பூக்கம் என்னிலிருந்து அணைந்துவிடக்கூடாது என்று மட்டும் அல்ல, மங்கி விடக்கூடாது என ஒவ்வொரு நிகழ் கணத்திலும் மௌனிக்கிறேன்.
எழுதிக் கொண்டிருப்பவர்களில் ஜெயமோகனுக்கும் எஸ். ராமகிருஷ்ணனுக்கும் நிகரான வாழ் அனுபவங்கள் எனக்கும் உண்டு. ராமகிருஷ்ணன் இந்தியா முழுக்கச் சுற்றி அலைந்து தன் அனுபவங்களைச் சேகரமாக்கினார். அதை படைப்புகளாக நமக்கு அளித்தார். ஜெயமோகனுக்கு இயல்பாகவே அது வாய்த்தது. தற்கொலையில் ஒரே நேரத்தில் அப்பாவையும் அம்மாவையும் பறிகொடுத்து நிற்கையில், வாழ்க்கை அவரை தன் சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றியது.
இந்தியா முழுக்கப் பல மடங்கள், சாமியார்கள், மலைப்பாதைகள், குகைகள் என அவர் பயணித்த வழியெங்கும் மனிதர்களும் இருந்தார்கள். திருவண்ணாமலை கோயிலுக்கு எதிரில் கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கையில், தன் எதிரில் இன்னொரு பிச்சைப் பாத்திரத்தோடு யோகி ராம்சுரத்குமார் நின்றதை அவர் வலியோடு நினைவுகூருகிறார்.
முதுமையில் ஒரு சராசரிக்கு இது நினைவு மட்டுமே, அல்லது அனுபவமும் கூட.
ஒரு படைப்பாளிக்கு இது எழுத்து, படைப்பு. நான் இங்கிருந்து அடைந்தேன். அதை எழுதுகிறேன். என் இளமை காலங்களில் காதல், பொருள் ஈட்டல், லௌகீகம் என அலைந்து திரியும் இளைஞர்கள் மத்தியில் லட்சங்களில் ஒருவன் இப்படி பிறப்பான்.
அவன் பிற்காலத்தில் எழுதப் போகிறோம் எனத் தெரியாமலேயே ஒரு கோவில் முன்பு அனாதையாக நிற்பான். நான் முதலில் சொன்ன மனிதர்களிடமிருந்து இந்த உலகத்துக்கு எதுவும் இல்லை. இரண்டாவது சொன்ன ஆள்தான் கலைஞன். அவனிடமிருந்து பெற்றுக்கொள்ள, வாசக மனது ஒவ்வொரு காலத்திலும் ஏங்கி தவிக்கின்றன. இவனுக்குத்தான் வரலாற்றில் ஒரு சிறு இடம் உண்டு.
ஜெயமோகன், ராமகிருஷ்ணன் — இவர்கள் இருவரின் வாழ்விலிருந்து என் வாழ்வு வேறுபட்டது. என் ஆணிவேர் என் நிலத்திலேயே நிலைபெற்றது. என் மனிதர்கள் எதை நோக்கியே வந்து கொண்டிருக்கிறார்கள். என் ஐம்பதாவது வயதில்தான் நான் இந்தியாவின் வடக்கு நோக்கிப் பயணித்தேன்.
அதனால் என்ன?
பால்யத்திலிருந்து இன்றுவரை நான் தினம் தினம் புதிய புதிய மனிதர்களோடு இருக்கிறேன்.
என்னை அடையும் மனிதர்களின் கண்ணீரை என் கைகளில் வடிக்கச் சொல்லுகிறேன். அவர்களின் மகிழ்ச்சியை என் உணவு மேஜையில் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
என் நிலம் மனித அடர்த்திகளால் ஆனது. என் வெவ்வேறு அனுபவங்களை என்னை தினம் தினம் தேடி வரும் மனிதர்களால் அடைகிறேன்.
கடந்த வாரம் கன்னியாகுமரியிலிருந்து பத்து, பதினைந்து ஆப்பிள்களை வாங்கிக்கொண்டு,
ஒரு முன் இரவில் வந்து என்னை எழுப்பிய ஏழுமலைக்கு நாற்பது வயது இருக்கலாம்.
அழுக்கு லுங்கி கட்டி சாயம் போட்ட பனியன் போட்டிருந்தது அவ்விருளிலும் தெரிந்தது.
“உங்க கூட இருக்கணும் அய்யா.”
“எத்தனை நாட்களுக்கு?”
“வாழ்நாள் முழுக்க.”
நான் புன்னகையுடன் அச்சொற்களை எதிர்கொண்டேன். மூன்றாம் நாள் அதிகாலையில் கையில் ஒரு காப்பியோடு எதிர்கொண்டேன்.
இரண்டு நிமிடத் தயக்கத்திற்குப் பின் ஏழுமலை பேச ஆரம்பித்தான்.
“மூன்று வருடங்களுக்கு முன் மதுரையில் இரண்டு வயதான ஒரு பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தியை நீங்கள் கேள்விப்பட்டீங்களா அய்யா?”
“தினம் தினம் கேள்விப்படுகிறோம். படிக்கிறோம். அது வெறும் செய்தியாகி நம்மை விட்டு கடந்து போகிறது. அடுத்த நாள் ஒரு புதிய செய்தி எத்திசையிலிருந்தோ நம்மை வந்தடைகிறது.”
“அந்த இரண்டு வயது குழந்தை என் குழந்தை அய்யா.”
“ஏழுமலை.”
என் கையில் ததும்பிய காபி டம்ளர் கீழே விழுகிறது.
“இப்போது அந்தக் குழந்தை…?”
இப்போது என் மகளுக்கு ஐந்து வயது ஆகிறது. ஒன்றாம் வகுப்பு படிக்கிறது.
“நீ எப்போது என்ன செய்ற ஏழுமலை?”
“தள்ளுவண்டியில், பழங்கள் விக்கிறேன்.”
என் காயம் இன்னும் ஆறவில்லை. அல்லது நான் ஆறவிடவில்லை. அவ்வலியை உடல் முழுக்கச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். இனி என் வாழ்வில் சிறு துளிகளை இச்சொற்களின் மூலம் பகிர்ந்து அளிக்கிறேன்.
தொடரும்…












