1.
உட்பக்கம் தாழிடப்பட்ட அந்த அறையில் ஏ சி யின் சன்னமான உறுமலும் மின் விசிறியின் சுழற்சியால் ஏற்பட்ட சத்தமும் ஒருங்கிணைந்து எனது தூக்கத்தைப் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. எல்லா வீட்டு வேலைகளையும் தனியாளாக முடித்துவிட்டு அயர்ந்துறங்கும் மனைவியைப் பார்த்தால் உண்மையிலேயே பரிதாபப்படும் அளவுக்கு மூச்சு வாங்க சிரமப்பட்டுக்கொண்டு குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறாள். கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டுப் பெய்த மழையால் உருவான தற்காலிக சிறியகுளம் போன்று காட்சியளித்த பக்கத்து காலி மனைகளிலிருந்து தவளைகள் கத்தி சத்தம் போட்டுக்கொண்டிருக்கின்றன. அண்மைக் காலமாக எனது பெரு மூளையின் பகுதியிலிருந்து அடிக்கடி வெளிப்படும் இந்தச் சிந்தனை பெரிதும் அச்சமூட்டுவதாக உள்ளது. ஏழு வருடங்களுக்கு முன்னர் உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இலட்சக் கணக்கானோர் நொடிப்பொழுதில் நுரையீரல் பாதிக்கப்பட்டு மற்றும் பல் உறுப்பு தோல்வி பாதிப்பினால் மரணித்தபோதும், எனது குடும்ப உறவில் நெருங்கிய உறவினராய் இருந்தவர்கள் இறந்து போன போதும் ஏற்படாத அச்சம் இப்போது ஏன் ஏற்படுகிறது எனக் குழம்பி நிற்கிறேன். சில நாட்களுக்கு முன்தான் துபாயில் பெருநிறுவனமொன்றில் வேதிப் பொறியியலாளராக வேலை பார்த்து வரும் நண்பன் ராஜமாணிக்கம் தனது பக்கத்துக் கேபினில் கனிணி முன் அமர்ந்து வேலை பார்த்து வந்த வேறு ஒரு ஊழியர் அவன் கண் முன்னரே தட்டச்சுப் பலகையில் தலை சாய்த்துச் சட்டென இறந்து போனாரென்று சொன்ன போதும் இவ்வகையான பதற்றம் தொற்றிக்கொள்ளவில்லை. மேலும் பிரபல நடிகர் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் இறந்துபோனார் என்ற செய்தியைச் செய்தித்தாள்களில் வாசித்தபோது கூட இது போன்ற மரணபயம் எனக்கு ஏற்படவில்லை. பிறகு எந்தச் சூழலில் எனக்கு மரணம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பும் பெரும்பயமும் ஏன் வந்தது. எந்தச் சூழலிலும் யாருக்கும் மரணம் நிகழலாம் என்பது சாத்வீகம். நிலையாமை ஒன்றே நிலையானது என்ற யதார்த்தவாத சிந்தனை ஒரு புறம் ஓடினாலும் மறுபுறம் அந்த யதார்த்தத்தின் குரூர முகம் அச்சுறுத்துவதாகவே இருக்கிறது. எனக்கு மரணம் குறித்த இந்தத் தேவையான தேவையற்ற அச்சமும் பயமும் எப்போது வந்திருந்தாலென்ன? இதிலிருந்து நான் என்ன தெரிந்து கொள்ள முடியும். ஒன்று இப்பயத்தோடே வாழ்வைத் தொடர வேண்டும் இன்னொன்று இதுலிருந்து விடுபட்டு வெளியேற வேண்டும்.
பதினொன்றாம் வயதில் மகாதேவன் மருத்துவமனையில் முகத்தில் வந்த பெரிய கொழுப்புக்கட்டியை நீக்குவது தொடர்பான அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது கூட நான் பயப்படவில்லை. மாறாக அறுவை அரங்கத்திற்கு வெளியே இருந்த எனது அம்மாதான் மயங்கி விழுந்ததாகத் தகவல். மேலும் பதின் மூன்றாம் வயதில் மாமன் மகனோடு இளந்துறை கிராமத்தில் தென்பண்ணை நதியின் அணைக்கட்டிலிருந்து பிரிந்து வரக்கூடிய பெரிய கால்வாயின் கரையில் மாடு ஓட்டிக்கொண்டிருந்த போது அது விரைவாகப் போக வேண்டுமென வாலைப் பிடித்து முறுக்கியபோது மாடு சடாரென்று திரும்பி அதன் கூரிய கொம்புகளால் என் வயிற்றில் முட்டித் தூக்கிக் கால்வாயில் எறிந்த போது வயிற்றுக்கு வெளியே சரிந்த குடலைப் பார்த்துக் கூட எனக்கு மரண பயம் வந்ததில்லை. திருக்கோவிலூர் பெரிய ஏரியில் நண்டு பிடிப்பதற்காக வளைக்குள் கை நுழைத்து வெளியே எடுக்கும் போது கையில் நண்டுக்குப் பதிலாக பாம்பொன்று வந்தபோது அதைப்பார்த்த சக நண்பர்கள் பயந்து பதறி ஓடிய போது, கோடை விடுமுறைக்கு மாமா வீட்டுக்குச் சென்றிருந்தபோது இரவு மாமன் மகன் ராஜாவுடன் கோரைப்புல் பாயில் படுத்துக் கொண்டு பேசியபடி இருந்தபோது தேள் கடித்து விஷமேறிய நிலையில் நாட்டு வைத்தியரிடம் சென்ற போது “பயமா இருக்கா? என்று வைத்தியர் கேட்டபோது, வளர்ந்த பிறகு வாகன விபத்துகளில் பலமுறை அடிபட்டபோது, ஒரு முறை விரலொன்று துண்டான போது அதற்கான அறுவை சிகிச்சையின் போது, இப்படியான எல்லாத் தருணங்களின் போதும் மரணத்துக்குப் பக்கத்தில் சென்று வந்தும் மரணம் குறித்த பயம் எனக்கு வந்ததில்லை. ஆனால் இந்த இரவில் இப்படியாக என் கண்கள் மூடிக்கொண்டிருப்பினும் மூளை விழித்துக்கொண்டிருக்கிறது. நாளை காலை விடியும்போது நான் விழித்திருப்பேனா என்ற ஐயம் இருக்கிறது.
நடு இரவு. உலகில் நான் வாழும் பூமியின் வட அரைக்கோளத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் உறங்கும் நேரத்திற்கான அமைதியை உள்ளடக்கியது. இந்த நடு இரவின் அமைதியைக் குலைக்கும் வகையில் என் அறைக்கு வெளியே எந்த சப்தம் கேட்டாலும் தெளிவாகக் கேட்கும். ஏதோ ஒரு நாய்க் குரைப்புச்சத்தம் தெருவிலுள்ள எல்லா நாய்களையும் உசுப்பி விடுகிறது. ஏன் இவ்விரவில் இவ்வளவு குரூரமாக எல்லா நாய்களும் விடாது குரைக்கின்றன. எனது கண்கள் மூடிக்கொண்டிருப்பினும் எனது கட்டிலைச் சுற்றி எல்லா நாய்களும் எனது உடலைப் பார்த்தே குரைத்துக் கொண்டிருக்கின்றன. கட்டிலுக்கு வெளியே சுற்றியிருக்கும் நாய்களுக்கு வெளியே குரைக்கும் நாய்களைச் சுற்றியிருக்கும் அறை சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் இப்போது காணாமலாகித் தெருவின் நடுவில் கட்டிலில் நான் கண்கள் மூடிப் படுத்துக்கொண்டிருக்க நாய்கள் இப்போது குரைப்பதற்குப் பதிலாக ஊளையிடுகின்றன, நாய்கள் இரவில் ஊளையிட்டால் தீநிமித்தமெனக் கன்னியம்மா பாட்டி சொல்லியிருக்கிறாள். ஊளையிடும் நாய்கள் தற்போது கட்டிலைச் சுற்றியுள்ள தெருவின் கான்கிரீட் தளத்தைத் தம் கால்களால் குழி பறிக்கின்றன. (நாய்கள் குழிபறிப்பது அவற்றின் ஓய்வெடுத்தலுக்கான வசதியான ஓர் இடத்துக்காத்தான் என்றாலும் அதுவும் துர் சகுணத்தின் அறிகுறி எனதான் எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது). எனது கட்டிலுடன் நான் அதல பாதாளத்துள் பயணிக்கிறேன். நாய்கள் ஊளையிடுதலை நிறுத்திப பெருங்கேவலெடுத்து அழுகின்றன. நான் கைகளையும் கால்களையும் உதறிப் கட்டில் படுக்கையிலிருந்து பதறி எழுந்து நின்றேன். தலை முழுதும் வியர்வை. இடது மார்பின் துடிப்பு நிமிடத்திற்கு நூற்றி முப்பத்து இரண்டாக இருக்குமளவுக்குத் துடித்துக்கொண்டிருந்து. தண்ணீர்க் குடித்தால் தேவலாம் என்றிருந்தது. ஜீரோ வாட்ஸ் லைட் இள நீல நிறத்தில் எரிந்து கொண்டிருந்தது. வெளிச்சம் போதவில்லை. எனவே ஸ்விட்ச்சைப் போட முயன்ற போது ஷாக் அடித்துவிட்டால் என்ன செய்வது என எனது பாத்ரூம் செருப்பைத் தேடி மாட்டிக்கொண்டேன். ஸ்விட்ச்சைப் போட்டேன். நல்ல வேளையாக ஷாக் அடிக்கவில்லை. ஆனால் ஷாக் அடித்ததுபோல் உறங்கிக் கொண்டிருந்த மனைவி திடீரென விழித்தெழுந்தாள். ’என்னங்க தூங்கலையா?,என்ன இது கோட்டான் மாதிரி தூங்காம திரிஞ்சுகிட்டு இருக்கீங்க? லைட்ட ஆஃப் பண்ணுங்க‘. இதுக்கு எலக்ட்ரிக் ஷாக்கே அடிச்சிருக்கலாம் என நினைத்துக்கொண்டு லைட்டை ஆஃப் செய்துவிட்டுக் கட்டிலில் படுத்துக்கொண்டேன். படுத்த பிறகுதான் தெரிந்தது தண்ணீர்க் குடிக்காதது. மீண்டும் எழுந்தால் மனைவி எழுந்து விடுவாள். எதற்கு வம்பென தாகத்தை எச்சிலை விழுங்கி தணித்துக் கொண்டேன். வெளியே இருந்த நாய்க்குரைப்பு எப்போது அடங்கிற்று எனத் தெரியவில்லை. எப்போது உறங்கினேன் என்றும் தெரியவில்லை .
2.
வெகு நாள் கழித்து எனது பைக்கை இயக்க ஆரம்பித்திருக்கிறேன். தனிமையின் விகாசம் சூழும் காலங்களில் பைக்கை எடுத்துக்கொண்டு மனம் போன போக்கில் எங்கேனும் கொஞ்ச நேரம் செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்படியான மனநிலையில் இப்போது செல்கையில் முன்பு போல பாதுகாப்புணர்வுடன் வண்டியை ஓட்ட இயலாமல் தவிக்கிறேன். எதிரே ஒரு வட மாநில லாரி வருகிறது. அதன் முகப்பு முழுக்க பல்வேறு மொழிகளில் என்னென்னவோ வாசகங்கள். அடர் பச்சையும் சிவப்பும் வெளிர் மஞ்சளும் கலந்து பெயிண்ட் அடிக்கப்பட்ட லாரியின் முகப்பில் நாலாபுறமும் துணிகள் கட்டிவிடப்பட்டுள்ளன. அவை காற்றினால் பறப்பது அலங்கோலமான இராட்சசி ஒருத்தி தலைவிரிகோலமாக என்னை நோக்கி வருவது போன்று உள்ளதால் வண்டியை இடப்பக்கமாக நகர்த்தி ஒரு ஓரமாக நிறுத்தினேன். பயத்தில் சிறுநீர் முட்டிக்கொண்டு நின்றது. நெடுஞ்சாலையோரம் யாரும் நடமாட்டமில்லாத பகுதி. வாகனங்கள் மட்டும் எதிரும் புதிருமாக வந்து போய்க்கொண்டிருந்தன. சாலையின் இடப்புறமாக சாலைக்கு இணையாகப் பல கிலோமீட்டர் தூரத்திற்குப் பள்ளம் தோண்டியிருந்தார்கள். பள்ளத்தின் மண்ணை அருகிலேயே வழி நெடுக குவித்து வைத்திருந்ததனர். அதனருகே ஓர் ஆள் நிற்குமளவு விட்டம் கொண்ட இராட்சச சிமெண்ட் குழாய்கள் நீள நீளமாக இருந்தன. சிறுநீர் கழிக்கலாமென ஒரு குழாயின் பின்புறமாக ஒதுங்கி நின்று கொண்டு சிறுநீர் கழித்து முடித்தபிறகு திரும்பும்போது அந்தக் குழாயைப் பார்த்தேன். ஒரு பெரிய அரக்கன் ஆ..வென வாயைப் பிளந்து என்னை வா..வென அழைப்பது மாதிரி அந்தக் குழாய் இருந்தது. சற்று தைரியத்தை ஏற்படுத்திக்கொண்டு குழாயின் உட்புறமாக தலையை நுழைத்துக் குழாயின் மறு முனையைப் பார்த்தேன் குழாயின் உட்புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை விசாலமாகச் சென்றுகொண்டே இருக்கிறதே தவிர மறுமுனையின் திறந்த வாய் தெரியவேயில்லை. எதிர்ப்புறம் மூடியிருக்கிறதா எனச் சந்தேகமும் கொண்டேன். இப்படியான குழாயில் வேலை செய்பவர்கள் உள் நுழைந்தவுடன் எவ்வாறாகினும் குழாய்கள் மூடிக்கொண்டால் அல்லது யாரேனும் குழாயை மூடிவிட்டால் உள்ளே மாட்டிக் கொள்பவர்களின் கதி?. மூச்சுத் திணறல் ஏற்படாதா? என்ற கேள்விகளெல்லாம் எழுந்த போது எனக்கு மூச்சுத் திணறியது. என்னை யாரோ குழாய்க்குள் அடைத்து வைத்தது போன்ற உணர்வு வந்தவுடன் தலையை வெளியே இழுத்து குழாயிலிருந்து விடுபட்டு வெளியேறி ஆசுவாசம் கொண்டேன். கோபத்தில் ‘குழாய் பதிக்கறாங்களாம், குழாய்’ எனச் சத்தமாகச் சொல்லிக்கொண்டே காலால் எட்டி உதைத்தேன். அப்படி எட்டி உதைக்கும்போது யாரேனும் பார்த்திருப்பார்களா என்று சுற்றி ஒரு நோட்டம் விட்டேன். வெள்ளை நாயொன்று நாக்கைத் தொங்க விட்டபடி எச்சில் சொட்டு சொட்டாகத் தரையில் விழுந்து கொண்டிருக்க என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. பொதுவாக நாயின் நாக்கில் எச்சில் ஊறி அது சொட்டிக்கொண்டிருந்தால் அதற்கு வெறி பிடித்திருக்கிறது எனச் சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நாய் தனது எல்லைக்குள் தனது அனுமதியின்றி நுழைந்துவிட்ட வேறு நாய்களை முறைத்துக் குரைக்கும் வகையில் குரைக்க காத்திருந்தது. அதன் கண்களில் வெறியின் பளபளப்பு மின்னியது. கோரமாக வாய் பிளந்து அதன் வெட்டுப்பற்களுக்கு இருபுறமும் இருக்கும் நீளமான, கூர்மையான நான்கு கோரை பற்களால் எனது உடலின் எந்த பாகத்தையேனும் பிய்த்துக் கிழிக்க வேண்டுமென்ற உத்வேகத்துடன் எனை நோக்கிப் பாய்ந்த வேளையில் எங்கள் இருவருக்குமிடையில் சுமார் அறுபது கிலோமீட்டர் வேகத்தில் வந்த வடமாநில லாரியொன்றில் அடிபட்டுச் சாலையிலேயே தூக்கியெறியப்பட்டது. கணப்பொழுதில் நிகழ்ந்துவிட்ட விபத்து குறித்து எவ்வித பதற்றமும் கொள்ளாமல் லாரிக்குப் பின்னால் வந்த வாகனங்களால் கூழ் கூழாகச் சிதைக்கப்பட்டது அந்நாயின் உடல். திடீரென நேற்றிரவு வந்த நாய்களும் நினைவில் வந்து போயின.
நானும் ஒரு நாள் அடிபட்டுச் சாவேனோ என்று அக்கணத்தில் தோன்றியது. அப்படிச் செத்தால் என் குடும்பத்தினர் கதி என்னாகும் என்கிற கவலைதான் மரணம் குறித்த பயத்தைவிட அதிகமாக இருக்கிறது. இப்பெருநகரத்தில் எனது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் என்னை விட்டால் வேறு கதி இல்லை. கிராமத்திலிருந்து எங்கள் கல்வி மேம்படவேண்டும் என்கிற காரணத்தினாலும் எங்களை எந்தை நகரப்பகுதிக்குக் குடியமர்த்தி இந்த ஓரளவுக்கு வசதியான நிலைக்குக் கொண்டு வந்ததை மாதிரியாகக் கொண்டு எனது குழந்தைகளைப் பெருநகரத்தில் படிக்க வைக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை என் பணி மாறுதல் நிறைவேற்றியது குறித்த மகிழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் பெரு நகர வாழ்க்கைக்குப் பிறகு உறவுகளைச் சந்திப்பதற்கோ அவர்களிடம் தொலைபேசியில் உரையாடுவதற்கோ கூட அவகாசம் இல்லாமல் போனது. அல்லது அப்படியான விஷயங்களுக்கு நானும் என் குடும்பத்தாரும் நேரம் ஒதுக்கவில்லையென்றே சொல்லலாம். நிறைய சுப காரியங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சுப காரியங்கள் மட்டுமல்ல துக்க நிகழ்வுகளுக்குக்கூட செல்ல முடியாத சூழல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்வாறான சூழலில் உறவினரிடையே எங்களைப் பற்றி நாங்கள் அகங்காரமும் ஆணவமும் கொண்டவர்கள், உறவினரை மதிக்க தெரியாதவர்கள் என்றெல்லாம் பெயர் ஏற்படலாயிற்று. ஒரு நிகழ்வுக்கு நாங்கள் நான்கு பேரும் கிளம்புவதற்கே பகீரதப் பிரயத்தனம் கொள்ள வேண்டும். சேர்ந்தாற்போல நான்கு பேருக்கும் ஒரே நேரத்தில் விடுமுறை வந்து சேராது .அப்படியே வந்து சேர்ந்தாலும் யாராவதொருவருக்கு விடுமுறையைத் தொடர்ந்த அடுத்த நாளிலோ விடுமுறை நாள் வரையிலான முந்தைய நாளிலோ ஏதேனுமொரு முக்கிய வேலை வந்து சேர்ந்துவிடும். இப்படியாக உறவுகள் தீவுகளாக்கப்பட்ட சூழலில் இப்பெரு நகரத்தின் அக்கம் பக்கத்து வீட்டினரோடு கூட இயல்பான சம்பாஷணைகள் இல்லாது போனதும் என் துரதிர்ஷடமே. எனவேதான் இப்போது இந்த கணத்தில் எனக்கு ஏதேனும் நேர்ந்தால் எனது குடும்பம் என்ன ஆகும் என்பதைப் பற்றியே சிந்தித்துப் பயம் கொண்டவனாக இருக்கிறேன் .
அப்படி ஒருவேளை நான் பயப்படுவது போலவே நான் இறந்த போனால் என் மனைவி என்ன செய்வாள்?. எல்லாரையும் போல இந்தச் சமூகத்தை எதிர்கொள்வாளா? எனது பிள்ளைகள் எதிர்கொள்வார்களா? நிலையாமை என்னும் பெரும்பேய்ப் பிடித்து ஆட்டுவித்ததால் பெரிய இவனாட்டம் இன்ஷ்யூரன்ஸ் கூட ஏதும் இதுவரை எடுக்கவில்லை. எனது இறப்புக்காகப் பணியின்போது இறந்தால் கிடைக்கும் அரசின் கருணைத்தொகை எவ்வளவு நாளைக்குப் பெறும். ஏற்கனவே வாங்கியிருக்கும் கடனையெல்லாம் அவர்களால் அடைக்க முடியுமா?. எதிர்காலத்தைப்பற்றியெல்லாம் ஏன் கவலை கொள்கிறாய் இப்போதைய இக்கணத்தில் வாழ் என்றொரு மனப்பகுதி என்னைச் சாந்தமடையச் செய்தாலும் மண்ணுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் ஒருவித்திலைத் தாவரம்போல மரணபயம் முட்டிக்கொண்டு நிற்கிறதே.
“ஐயோ” ஏன் இவ்வளவு வேகமாக ஒரு லாரி எனை நோக்கி வருகிறது. இதோ என் பக்கத்தில் வந்துவிட்டது. என் பைக்கை எதுவும் செய்ய முடியவில்லை. ஆஹா என்னே அந்த லாரியின் கருணை .நான் கண்களை மூடிவிட்டேன். லாரி எனக்குள் புகுந்து எனக்குப் பின்புறமுள்ள ரோட்டில் சென்றுகொண்டிருந்தது. இப்பகுதிக்கு நான் வந்த போது ஆள் நடமாட்டமில்லாதிருந்தது. இப்போதோ யார் யாரோ என்னருகே ஓடிவந்தனர் .சிதிலங்களாகப் பிரிந்து சிதறி கிடந்த என்னைச் சேகரித்து அருகிலிருந்த மருத்துவமனைக்குச் கொண்டு சென்றார் ஒரு புண்ணியவான். அவரும் இப்படி ஒரு நாள் இப்படி அடிபட்டுச் சாவார் என்பதை அறியாமல் என்னைச் சுமந்து செல்கிறார் என்று எனக்குப் பட்டது. விபத்தினால் ஏற்பட்ட மரணத்தின் வலியை விட வீட்டில் மனைவியும் பிள்ளைகளும் எப்படி இந்த வலியைத் தாங்கப் போகிறார்கள் என்பது குறித்துத்தான் கவலையாக இருக்கிறது இப்போது.












