“மேல ஏறிப் போலாம் வாடி” கையைப் பிடித்து இழுத்தாள் வெள்ளிக்கொடி.
“கீழயே போலாங்க்கா…” பாஞ்சாலை கால்களைப் புழுதி மண்ணில் அழுத்திக்கொண்டாள். அடுப்பெரிக்க விறகுக்குப் புளியங்கிளையை இழுக்கிற மாதிரி பலத்தைச் சேர்த்து இழுத்துக் கொண்டார்கள். வெள்ளிக்கொடி கையை விட்டுவிட்டாள். கை உடைந்து வந்தாலும், பாஞ்சாலை வரமாட்டாள் என்பதை அறிந்து கொண்டாள். பாஞ்சாலைக்குச் சுரங்க வழிக்குள் போவதைவிட மேலே போவதுதான் பிடிக்கும். மைசூர் மார்க்கத்தில் இருந்து வரும் புகைவண்டி ஓர் இருப்புப் பாதையிலும், சேலம் மார்க்கத்தில் இருந்து வரும் புகைவண்டி இன்னோர் இருப்புப் பாதையிலும் ஒரே நேரத்தில் புகையைக் கக்கிக்கொண்டு பறக்கும். இரண்டு புகைவண்டிகளுக்கும் இடையே நின்றுகொண்டு, ‘கூ… கூ…’ என்று குழந்தையாக மாறிக் கத்துவது பாஞ்சாலைக்கு ரொம்பவே பிடிக்கும். அதுவும் அந்தக் கரும்புகை இரண்டு பக்கமிருந்தும் பூதங்கள் மாதிரி வெளியே வந்து, மேகங்கள் மாதிரி விரிந்து வானத்தில் பறக்கும். வானத்தில் பறக்கும் நீளமான புகை விமானமாகச் சீறும், சீறிக்கொண்டே பனி பொழிந்த மாதிரி கறுப்பு தூளைத் தெளித்துவிட்டுப் போகும். நிற்பவர்களின் தலையிலும், உடலிலும் கறுப்பு பூசினாலும், தூறலில் நனைந்தது போன்ற ஒரு விதமான சந்தோசம் கொடுக்கும். பாஞ்சாலை இன்று அந்தச் சந்தோசத்தை உதறினாள். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே அவளுக்கு இப்போது முக்கியமானதாக இருந்தது. ஒரு பசித்த புலி ஒரு மானைக் கொல்வதற்குப் பெயர் வேட்டையல்ல, ஒரு மான் வெறிகொண்டு துரத்தும் புலியிடமிருந்து பிழைத்து விடுகிறதே அதற்குப் பெயர்தான் வேட்டை. பாஞ்சாலைக்கு பயம் இருந்தது. வெள்ளிக்கொடி அவளுக்கே விளங்காத ஆத்திரத்தில் வெந்துகொண்டிருக்கிறாள் என்பதை அதிகமாகவே புரிந்து கொண்டு இருக்கிறாள். வெள்ளிக்கொடி சிரித்துக்கொண்டே எதுவும் செய்வாள், கொலையும் கூட. புகைவண்டி சக்கரத்தில் தள்ளி விட்டாலும் விடுவாள் என்று அஞ்சினாள்.
கட்டேரி சுரங்கப் பாலத்திற்குள் நுழைந்து போவதற்கு எல்லோரும் தயங்குவார்கள். அதிலும் இப்போது கொடுங்கோடைக்காலம்! வெக்கைக்கு ஈரமான இடம் தேடி, பற்களிலும் நாவிலும் கொடுக்குகளிலும் விசம் வைத்திருக்கும் சிற்றுயிர்கள் குகை ஓரங்களில் தங்கியிருக்கும். மாடுகள் கூட குகைப் பாதைக்குள் நுழையாமல் முரண்டு பிடித்து நிற்கும். கொம்புகள் இடிக்குமென்ற அச்சம். மேய்வதற்கென்றால் தலையை வளைக்கும் மாடுகள், புதரென்றால் வளைந்து குனிந்து நுழைந்துவிடும் மாடுகள், சுரங்கப் பாதைக்குள் நுழையாமல், கால்களை மண்ணில் கெடப்பாரையைப் போல் ஊன்றிக் கொண்டு எதிர்த்து நிற்கும். என்ன இழுத்தாலும் வராது, கழனியில் ஏர் ஓட்டும்போது வாங்கும் அடியைவிட அதிகமாகச் சுரங்கத்தில் நடப்பதற்கு வாங்கும். ஆடுகளால் நுழைய முடியும் என்றாலும் நுழைவதற்குப் பயந்து பின்வாங்கும். மேட்டில் ஏறிப் போவதற்குத்தான் தாவும். ஆடுகளை மேய்ப்பவர்கள் கட்டேரி ரயில்வே யார்டில் மட்டும் எச்சரிக்கையாக இருப்பார்கள். என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் ஆடோ மாடோ மாட்டாமல் இருக்காது. ஜோலார்பேட்டை புகைவண்டி நிலையத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் நிலைய நடைமேடைகளைக் காட்டிலும் அதிகமான இருப்புப் பாதைகள் கொண்டிருக்கும் பகுதி இது. சில வேக வண்டிகள் ஜோலார்பேட்டை புகைவண்டி நிலையத்தில் வேண்டுமானாலும் நிற்காமல் போகும், கட்டேரி யார்டில் நிற்காமல் போகாது. சரக்குப் பெட்டிகளை இடம் மாற்றம் செய்யும் பகுதி என்பதால் இஞ்சின் இல்லாத சரக்குப் பெட்டிகள் ஓடிக்கொண்டே இருக்கும். தபால் அலுவலகத்தில் ஊர் ஊருக்குத் தபால்களைப் பிரிக்கிற மாதிரி, இங்கே சரக்குப் பெட்டிகளைப் பிரித்துப் பிரித்து விடுவார்கள். மதராஸ் லைன், மைசூர் லைன், சேலம் லைன், ரேணிகுண்டா லைன் தனித்தனியே இருக்கும். ஒவ்வொரு லைனும் மலைப் பாதையைப் போன்று மேட்டில் இருந்து பள்ளத்திற்கு இறங்கிப் போகும். எல்லாமே இஞ்சின் இல்லாத வெறும் பெட்டிகள். எந்த வரிசையில் போய் முட்டிக் கொண்டு நிற்குமோ அதுவரை போய்க்கொண்டே இருக்கும். பொன்னாத்தா, மண்ணாத்தா மட்டுமில்லை, காளியாத்தா, மாரியாத்தா குறுக்கே வந்தாலும் நறுக்கிவிட்டுப் போகும். தண்டவாளத்தில் அரிசி, பருப்பு தானியங்கள் இரைந்து கிடக்கும். பட்டினியில் செத்தாலும் தண்டவாளத்தில் கூளங்கூளமாகச் சிதறிச் சாகக் கூடாதென்று, ஏழைப்பிழைப்பாளிகள் அரிசி பொறுக்கப் போக மாட்டார்கள். புகைவண்டிப் பணியாளர்களே அவ்வபோது மாட்டிச் சாவது உண்டு. ஊழியர்கள் செத்தால் பணம் கிடைக்கும். மற்றவர்களுக்குப் பணமும் கிடைக்காது பிணமும் கிடைக்காது. தார்ச்சாலையில் நாய்கள் செத்த மாதிரிதான் தண்டவாளங்களில் மனிதர்கள் செத்துப்போவது. பாஞ்சாலையைத் தள்ளிவிட்டால், உடனே யாராவது பார்த்தால்தான் அடையாளம் தெரியும். இரண்டு நாள்கள் பார்க்காவிட்டால் நாய்களும் நரிகளும் கழுகுகளும் பசியாறிவிடும். பசியாறும்போது, நாய்களும் இரும்புச் சக்கரங்களில் மாட்டிக் கொண்டு பல துண்டுகளாவதுண்டு. தண்டவாளத்தில் கொலை செய்து போட்டாலும் அது கொலையாகாது. விபத்து அல்லது தற்கொலை. சாலையில் விபத்து உண்டாக்கும் வாகனங்களைக் கொண்டுபோய்க் காவல் நிலையத்தில் நிறுத்துகிற மாதிரி புகைவண்டியைக் கொண்டுபோய் நிறுத்திக்கொள்ள முடியாது. காவலர்களே யாரையாவது அடித்துக் கொன்றால், கொண்டு வந்து தண்டவாளத்தில்தான் வீசுகிறார்கள்.
வெள்ளிக்கொடி, பாதி முதுகு வரை வளைந்து சீங்கை புதருக்குள் நுழைகிற மாதிரி, இல்லை குகைக்குள் நுழைகிற மாதிரி, இல்லை குடிசையின் வாசற்படி இருநூறு கஜ நீளத்திற்கு இருந்தால் குனிந்து கொண்டே போகிற மாதிரி, இல்லை ஒரு பைசாவோ இரண்டு பைசாவோ விழுந்துவிட்டால் தேடி நடக்கிற மாதிரி வளைந்துகொண்டே நடந்து வந்தாள். அவளுடன் வந்த பாஞ்சாலை தலையைக்கூட வளைக்காமல் நிமிர்ந்தே வந்தாள். பாஞ்சாலைக்கு இப்போதைக்கு உயிர்த் தப்பிவிட்ட நிம்மதி. குள்ளமாகப் பிறந்ததற்கும் இதுபோன்ற வளைய வேண்டிய இடங்களில் நிமிர்ந்து நடப்பதில், ஒருவித வீறாப்பு முளை விடுகிறது.
“உனக்கு என்னாடி நோவுது? எல்லாத்தயும் நிமித்தினு போறவ, எனக்குத்தான இடுப்பு ஒடஞ்சி வுழுது, மேல வர மாட்டாளாம்… எம்முட்டு பூரிப்புடி!”
“எக்கா! கூளயாப் பொறப்பெடுத்த முண்டைக்கு எங்கனா ஒண்ணு இப்பிடியும் பூரிப்பு கெடைக்குதே…”
“பீத்திக்கடி, பீத்திக்க. எங்க மாமியா ஒரு பழமொழி சொல்வாடி…”
வெள்ளிக்கொடி சொல்லி முடிப்பதற்குள், பாஞ்சாலை சொன்னாள் “குள்ளமா பொறந்தவங்கள நம்பக் கூடாதுன்னுதான?” என்று கேட்டாள். கேட்டுவிட்டுச் சிரித்தாள். “கட்டேரியம்மா என்னவிட குள்ளந்தான? காளிம்மா, மாரிம்மா சாமிங்களும் குள்ளந்தான். சாமிங்கள்ளாம் கெட்டவங்களா?”
“வாயில புழுத்துப் போறடி. அவங்கள்லாம் செலைங்கடி.”
“அம்மா என்னயும் செல மாரி இக்கறேன்னு சொல்லுவா.”
வெள்ளிக்கொடிக்குக் கோபம் வந்தது. அங்கேயே பாஞ்சாலையின் கழுத்தைப் பிடித்துத் திருகிவிட வேண்டும் போலிருந்தது. தலையில் கொட்டிக்கொண்டு கோபத்தைக் கட்டுப்படுத்தினாள்.
குகைப் பாதை இரவைப் போலவே இருந்தது.
கொஞ்ச தூரம்தான் போயிருப்பார்கள். இரண்டு எருமைகள் படுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, இருவருமே பயத்தில் கத்தினார்கள். எருமைகள் தலையைத் தூக்கிப் பார்த்தன. ரெண்டு எருமைகளும் ஒதுங்கிப் போகட்டும் என்று படுத்திருந்த எருமைகள் வாலை மட்டுமே அசைத்தன. சுவரோடு உரசிக்கொண்டு எருமைகளைத் தாண்டினார்கள். அக்காவை முன்னதாக நடக்க வைத்து இடைவெளி விட்டுப் பின்னால் நடந்தாள் பாஞ்சாலை. முன்னால் நடந்தால் பின்புறமாக கழுத்தைப் பிடித்து விடுவாளோ என்ற பயம் இருந்தது.
பாம்பின் வயிற்றுக்குள்ளே, பாம்புகளைப் போல் ஊர்ந்து போகிற மாதிரி இருந்தது. பாதி தூரம் போனபிறகு வட்டமாகக் கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது.
“பாருடி, கோபம் இக்கிற எடத்தலதான் கொணம் இக்கும். மேலுக்கு முள்ளுமரமா தெரிவண்டி. ஆனாக்கா குளிச்சியா நெழல் தருவன். மாமன ஒனக்குப் புடிக்கும்னா எங்கிட்ட சொல்லு, நா ஒதுங்கிர்றன்” சொல்லிவிட்டு, காதில் விழுந்ததா என்று திரும்பிப் பார்த்தாள்.
“எக்கா, ஏடிச்சி ஏடிச்சி கேக்காத. நா அப்படியானவ இல்ல. இதுக்குதான் வரலன்னவள வுடாம கூட்னு வந்தியா?”
“மனசு செரியில்லன்னுதான கோயிலுக்குப் போலான்ட்டு கூட்னு வந்தன்.”
“நானுஞ் செரியா இக்கறன், எம் மனசும் செரியா இக்குது. நீதான் எக்கா நொலக்கற.”
தலைக்கு மேலே இஞ்சின் இல்லாத சரக்குப் பெட்டிகள் ஓடுவது, சிக்காடு பூச்சிகள் பறக்கிற மாதிரி கேட்டது.
“புரிஞ்சுக்கடி கண்ணு, உன் நல்லதுக்கு பேசினு வர்றன். மாமனுக்கு என்னவுட ஒன்னதான் புடிச்சினு இக்குது. ஒரு நாளானா நீ துன்றதுக்கு மூசுண்ட இல்லாம வூட்டுக்கு வராப்ளயா?” இது மென்மையான குரலால் கேட்டதைப் போல் தெரிந்தாலும் வன்மம் மட்டுமே நிறைந்திருப்பதாகவே வெளிப்பட்டது.
“எக்கா! நாலணாக்கு நாலு போண்டா கட்டினு வருது. நா ஒன்னுதான துன்றன்?”
“வாங்கினு வந்து எங்கிட்டயா நொட்றாப்ள? உங்கிட்டதா நொட்றாப்பள. நீ துன்னு வுட்ட மிச்சத்த நா துன்றன்.” போண்டாவைச் சொல்கிற மாதிரியே தெரியவில்லை.
பாஞ்சாலைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
வெளியே வந்த பிறகு ரயில் வரும் சத்தம் கேட்டது, “எக்கா! பொறுக்கா கூக்கு வண்டி பாக்கலாம்.” என்றாள்.
“இதடி, இதடி, தாமசமாச்சிடி. கூக்கு வண்டி பாக்கறாளாம் கூக்கு வண்டி. மூடிக்கினு வா. கோயில சாத்தி வுட்ருவாங்க” என்று நடந்தாள். பாஞ்சாலை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே வெள்ளிக்கொடியைத் தொடர்ந்தாள். புகைவண்டி போகிற வேகத்திற்குக் கரும்புகை பின்னோக்கிப் பறந்தது. மலைச்சூரியன் புகையில் மறைந்து கருமஞ்சளாகத் தெரிந்தது. மேகம் எத்தனை அழகோ அத்தனை அழகாகத் தெரிந்தது புகை.
‘நானென்னமோ சாமி கும்புட கேட்ட மாரி, வரலன்னாலும் வுடாம இசுத்துனு வந்துட்டு மாட்ட ஓட்ற மாறி ஓட்டினு இக்கறா. கட்டேரியாத்தா! இன்னும் எம்முட்டு படணுமோ…’ அண்ணாந்து வானத்தில் கரையும் புகையைப் பார்த்துக்கொண்டே நடந்தாள்.
“என்னாடி? கீலா மாரி பினாத்தினு வர்றவ?” பக்கத்தில் வந்து நின்றாள்.
“அனாதிங்கின்னா அப்பிடித்தான் எக்கா. கேக்கறதுக்கு காது இல்லியேன்னு கம்னு இக்க மாட்டோம். நானே நாலஞ்சி ஆளா இக்கறதா நெனச்சினு பேசினு இப்போம். நாங்க பேசிக்கிறது எங்களுக்கு மாத்தரந்தான் கேக்கும். ஒரக்க சொன்னா பொழைக்க வுடமாட்டாங்க. கம்பயோ கேவுரயோ மென்னு முழங்கற மாரி பேசனதயும் முழுங்கிக்குவன்.” வெள்ளிக்கொடியின் முகத்தை அண்ணாந்து பார்த்துச் சொன்னாள்.
வெள்ளிக்கொடி குனிந்து பார்த்து “மொத்தமா கீலா ஆகலடி அர ஒலக்கு ஆயிருக்க. ஆனாக்கா, நீ ஏழூர கீலாவாக்கிருவ” என்றவள், “நாந்தாடி அனாத. கட்ன ஆம்பளயே துரோகம் பண்றாப்ள. ஆத்தாகிட்ட எச்சிப்பால் குடிச்சி வளந்தவ எல்லா எச்சிக்கும் அலயறா.”
பாஞ்சாலையை அந்தச் சொற்கள் அலகில் கொத்துவதைப் போல் கொத்தின. முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
ஆள் உயரத்தில் இருந்த விளக்குக் கல்கம்பத்தின் மேல் ஒற்றைக் காகம் நின்றிருந்தது. அதற்குப் பசி இல்லை. அதனால் கத்தவில்லை. பறவைகள் ரெயில்களில் அடிப் படுவதில்லை. ரெயில் ரோட்டில் சிந்திக் கிடக்கும் தானியங்களைப் பசியாற்றிவிட்டு, கூட்டத்தை விட்டு விலகி வந்து ஒற்றையாக நின்றுகொண்டு இருக்கிறது. காக்காவா, காக்கா பொம்மையா என்கிற மாதிரி அசையாமல் நின்றது, “காக்கா திருட்டுப் பூனயாட்டும் ஒக்காந்துனு இக்குது” என்ற வெள்ளிக்கொடி இல்லாத எச்சிலைத் துப்பினாள்.
“எக்கோவ், எச்சிகிச்சினு வாயில வந்தத துப்பாத. நா எங்கனா, எப்பிடின்னா நாண்டுனு இக்குவன், பாத்துக்கறன்னு சொல்லிபுட்டு பழி போடறவ…?”
“நானாடி பாத்துக்கிறன்னு வந்தன்? நீ எப்போ ஒக்காந்தியோ எப்போ அந்த மனுசன் பச்சவோல நிக்க வெச்சாப்ளயோ அப்பத்துல இந்தே உம்மேல ஒரு கண்ணுடி. புத்தியத்த மடச்சிக்கு வெளங்காம போயிருச்சி.”
பாஞ்சாலைக்குக் கண் கலங்கியது.
இத்தனை நாள்கள் வீட்டில் சட்டிகள் உருளும். ஏதோ கணவன் மனைவி பிரச்சனை என்று இருந்தாள். வெள்ளிக்கொடியே அடுப்பை உடைத்துவிட்டு, ‘குடும்பத்துக்கு கேடுகாலம் சுத்திக்கிச்சி. எத்தினி காவு வாங்கப் போகுதுன்னு தெர்லயே ஆத்தா’ என்று புலம்பிக்கொண்டு இருந்தாள்.
“ஏண்டி வெள்ளி! சுள்ளி வெறக சொருகுற அடுப்புல, திம்ம வெறக சொருகுனா பொளறாம இக்குமா?” என்று சின்னப் பாட்டி கேட்டாள்.
“பத்துச்சினா எல்லாக் கட்டயும் நெருப்புதான். பொங்கற அடுப்பு புட்டுக்கிச்சே, வூடு வெளங்குமான்னு பெரிய மனுசி சொல்லுவன்னு பாத்தா வியாக்கானம் பேசறவ…”
“பொன்னடுப்பா புட்டுக்காம இக்கறதுக்கு? மண்ணடுப்புதான? யாரூட்ல புட்டுக்காத அடுப்பு இக்குது சொல்லு. ஒட்டுக்கா இடிச்சி தள்ளிட்டு வேற அடுப்ப கட்டிக்கோ…” என்று சின்னப் பாட்டி சொன்னதை வெள்ளிக்கொடி வாங்கவில்லை. ஏரி மண் எடுத்து வந்தவள், புது அடுப்பைக் கட்டாமல் பழையை அடுப்பையே சரிக் கட்டினாள். ‘பழசு என்னிக்கும் பழசாவே இக்கட்டும், புதுசு என்னிக்கும் புதுசாவே இக்குதான்னு பாக்கறன்.’ களிமண்ணிடம் சொல்லிக்கொண்டு இருந்தபோதும் கூட பாஞ்சாலைக்கு என்னவோ நெருடல் உண்டானது.
ஏலகிரி மலையின் உச்சியில் சூரியன் சிறியதாகத்தான் தெரிந்தது. பார்ப்பதற்குத் தூரத்தில் யாரோ தீப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிற மாதிரி தெரிந்தது. கண்களை நேராகச் சுடர் குத்தியது. “காத்தால சிசு வெயிலே கொளுத்தி வுடுதே, மத்தியானம் வயசு வெயிலு வறுத்து தின்னப் போது…” வெள்ளிக்கொடி சொல்லிக்கொண்டாள்.
கொஞ்ச தூரம் பேசாமல் நடந்தார்கள். ஆகாதவர்கள் கணக்காக முன்னும் பின்னுமாக நடந்தார்கள்.
கட்டேரி ஏரியில் கழுத்தளவு தண்ணீர் இருந்தது. ஒருத்தி துணியை அடித்து அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தாள். அடிக்கிற முறையிலேயே தெரிந்தது, அது என்ன கந்தல் என்று. கரைக்கு மத்தியில் வேல மரத்தின் நிழலில் உட்கார்ந்து மூன்று பேர் தூண்டில் போட்டுவிட்டு பீடி இழுத்துக் கொண்டிருந்தார்கள். செம்மண் வண்ணத்து ஏரி நீர்ச்சீலையில் காலைக் கதிர்கள் சரிகைப் பூக்களை நெய்தன.
“வாடி! சாமி கும்புட போறோம் தலய நெனச்சினு போலாம்” என்றாள் வெள்ளிக்கொடி. பாஞ்சாலை இது இன்னொரு கண்டம் என்று நினைத்தாள். தண்டவாளத்தில் தப்பித்தவளுக்கு, ஏரியில் வலை விரிக்கிறாள் என்று பயந்தாள். பயங்கள் எதுவும் தானாகவே உருவாவதில்லை, ஏற்கெனவே உருவாகி இருந்தவைதான். தினமும் மாட்டைக் கழுவிக்கொண்டிருந்த செல்லப்பன், திடுதிப்பென்று ஒரு நாள் சேற்றில் மாட்டிக்கொண்டு மூச்சை விட்டது, நீச்சல் தெரிந்த கனகா வயிற்றிலிருந்த நாலு மாத சிசுவோடு பிணமாக மிதந்தது, பள்ளி விடுமுறையில் நண்டு வளையை நோண்டிக்கொண்டிருந்த ஆஞ்சியூட்டு பையன்கள் இரண்டு பேருமே மாண்டு சுத்துப்பட்டு அத்தனை ஊரையும் அழ வைத்தது எல்லாம் மொத்தமாக நினைவுக்கு வந்து கொடுப்பதுதான் பயம்!
குடும்பத்தில் ஏதேனும் தீராப் பிரச்சனையோ பெரும்பகையோ இருப்பவர்கள் ஏரியில் இறங்கிக் கிழக்குப் பார்த்து நின்று மூன்று முறை முங்கி எழுந்து, ஈரம் சொட்டச் சொட்ட நடந்து கட்டேரி அம்மனை மூன்று முறை சுற்றி வந்து, அவள் எதிரே நீட்டி விழுந்து மனதில் நிறைந்திருக்கும் வேதனைகளைச் சொல்லி அழுவார்கள். ஆத்தாவிடம் ஆத்திரத்தை இறக்கிவிட்டால் எல்லாப் பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரச்சனைகள் நீங்கும் என்ற நம்பிக்கையை விட, பிரச்சனைகளுக்குக் காரணமானவர்களை அழித்துவிடும் என்பதுதான் பெரிய நம்பிக்கை.
“தலையை நனைக்காம ஆத்தாள கும்புட வருவியாடி?”
“நீதான் கும்புட வந்த. நான் சும்மா வந்தவ. வூட்ல தலைக்கு ஊத்திகினுதான இக்கறன். வூட்டுக்காரனோட இக்கறவ தலைய நனச்சினு வா.”
வெள்ளிக்கொடி எப்போதும் பார்ப்பதைவிட அதிகமான உக்கிரத்தைக் கண்களில் காட்டினாள். சில மாதங்களாக அவளின் முகம் நெருப்புப் பற்றிக்கொண்ட மாதிரிதான் தெரியும், இப்போது நெருப்பாகவே மாறி இருந்தது. “நா வூட்டுக்காரனோட இக்கறனா? வயசுப் பொண்ணு வூட்ல இக்கறான்னு சொல்லிட்டு அந்த மனுசன் கம்பங்கொல்லிக்கு காவக் காக்கப் போறாப்ளயே? பரணவூடு ஒன்னக் கட்டினு இக்கறாப்ள, அத வுட்டு எறங்கனாதான… எப்பிக்கும் ஊற வெச்சினே கெடந்த மனுசன், எத்தினி வெள்ளாமைக்கு ஆற வெக்கிறாப்ளன்னு பாக்கறன்.”
பாஞ்சாலை ஏரிக்கு அருகில் போகாமல் கரையிலேயே நின்றாள். வெள்ளிக்கொடி இறங்கி தண்ணீரைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுக் கால் வைக்கப் போனவள் திரும்பி வந்தாள், “கண்ணெ! அம்மா மாறி கேக்கறண்டி. மாமனுக்கும் ஒனக்கும் எதனான்னா மனச ஒடைச்சிச் சொல்லுடி, நா ஒனக்கு நல்லதுதா செய்வேன். ஆத்தா அப்பன் இல்லாத பொண்ணு அம்போன்னு வுட்ற மாட்டன். என்ன நம்புடி. கெங்கையில எறங்கறதுக்கு முன்ன பட்டுன்னு ஒப்பிக்கடி. எறங்கன பின்னாடி நீ வேதனப் படுவ.” அது அன்பான கோரிக்கையா மிரட்டலா என்று புரியவில்லை.
“ஏங்க்கா இப்பிடி சாகடிக்கிற?” என்றவள் அதற்கு மேல் சொல்வதற்கு இருந்த வார்த்தைகளைத் தனக்குள்ளே மட்டும் சொல்லிக்கொண்டாள். ‘என்ன வுட்டுட்டு உன் வூட்டுக்காரனக் கூட்டினு கண்ணுக்குப் படாம போயிடு. வெளஞ்சத தின்னுட்டு நிம்மதியா கெடப்பன்’ என்று.
காலராவில் அடுத்தடுத்து போய்ச் சேர்ந்துவிட்ட அப்பா அம்மா இரண்டு பேரையும் நினைத்துக்கொண்டு கண்கள் கலங்கினாள் பாஞ்சாலை. நீர் நில்லாமல் வடிந்தது. வெள்ளிக்கொடி அவள் இடுப்பில் முடித்து வைத்திருந்த கற்பூரத்தையும் தீப்பெட்டியையும் நனையாதிருக்க பாஞ்சாலையின் கையில் கொடுத்தாள்.
பாஞ்சாலைக்குத் தன்னுயிர் பயம் அகன்று, அக்காளுயிர் மீது பயம் வந்தது.
“உங்க மாமன எனக்குப் புடிக்கவே புடிக்காதுடி கண்ணு. சத்தியமாடி, கட்டிக்கமாட்டன்னு அப்பாகிட்ட அழுதன். பாழாப்போன சொத்து, வேற கையில சிக்கிக்க போதுன்னு அப்பாதான் கையப் புடிச்சி கெஞ்சினாப்ள. இப்ப என்னா நெனக்கிறன் தெரிமா?” என்று மெதுவாக சொன்னவள் “சொத்துப் போனாலும் வுட்றவண்டி மாமன வுட மாட்டன்.” சாமி வந்து கத்துவதைப் போல் கத்திவிட்டு இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டுக்கொண்டே ஏரியில் இறங்கினாள். வெள்ளிக்கொடியின் உயர்ந்த குரலைக் கேட்டு துணி துவைத்தவளும் மீன் பிடித்தவர்களும் திரும்பிப் பார்த்தார்கள். கொக்குகள் பறந்து உட்கார்ந்தன. நீர்க்கோழிகள் ஏரிக்குள் மூழ்கின.
பாஞ்சாலைக்கு அச்சம் உண்டானது. ஆனாலும் வெள்ளிக்கொடிக்கு நீச்சல் தெரியும் என்பதும், அப்படியே அவள் நீந்தாமல் மூழ்கினாலும் தன்னால் பாய்ந்து தலைமயிரைப் பிடித்து இழுத்து வர முடியும் என்பதையும் ஒரு நொடி யோசித்தால், கூடவே இன்னொரு பேரச்சமும் உண்டானது. அவளைக் காப்பாற்ற இறங்கும்போது தன்னை நீரில் இழுத்து அமிழ்த்திவிடுவாளோ என்று.
வெள்ளிக்கொடி சன்னதம் கொண்டவள் போல் ஏரியில் இறங்கி மூன்று முறை முங்கி எழுந்தாள். ஒவ்வொரு முறை முங்கும்போதும் தண்ணீருக்குள் வெகுநேரம் இருந்தாள். பாஞ்சாலைக்கு உயிர் போய்ப் போய் வந்தது.
மூன்று முறை முங்கி எழுந்து ஈரம் சொட்டச் சொட்ட ஏறி வந்தாள். தண்ணீரே உருவம் கொண்டு எழுந்து வந்த மாதிரி இருந்தது. நெருப்பு அணைந்து விட்ட மாதிரி அல்லது நீரால் பூத்த நெருப்பு மாதிரி கோயிலைப் பார்த்து நடந்தாள்.
பாஞ்சாலை தயக்கத்துடன் பின் தொடர்ந்தாள். ‘பின்னாலயே போலாமா? வூட்டுக்குத் திரும்பிப் போலாமா?’ என்று மனம் தடுமாறியது. கால்கள் வெள்ளிக்கொடியைப் பின் தொடர்ந்து சென்றன.
அவள் நீர் சொட்டச் சொட்ட கட்டேரி அம்மனை மூன்று முறை சுற்றி வந்தாள். அம்மனுக்கு நேராக நின்றுகொண்டாள். “கற்பூரம் ஏத்துடி” என்றாள். கும்பிட்டு உயர்த்தின கைகளை இறக்கவில்லை.
பாஞ்சாலை நடுக்கத்துடன் பெரிய கட்டிக் கற்பூரத்தை மண் தரையில் வைத்து எரிய வைத்தாள். நெருப்பு குவித்த கைகளைப் போல் உயர்ந்து எரிந்தது.
“உனக்கும் மாமனுக்கும் ஒன்னும் இல்லன்னு ஆத்தா முன்னாடி எரியற கற்பூரத்த அடிச்சி சத்தியம் பண்ணுடி…” கண்களை உருட்டி நாவை நீட்டிக்கொண்டாள்.
“எக்கா…” கண்ணீர் பெரிதாகக் கொட்டின.
“அடிறி! என்ன ஏமாத்துவடி. ஆத்தால ஏமாத்துவியா? நெருப்பு குண்டண்டி அவ. சாம்பலாக்கிப்புடுவா. அடிறி.”
பாஞ்சாலை கண்களை இறுக மூடினாள். ஒரு தீர்மானம் உள்ளுக்குள் கசிந்த நிலையில், கண்களில் நீர் தானே நின்றுகொண்டது.
“சத்திமா மாமனுக்கும் எனக்கும் ஒன்னுமில்லக்கா” என்றவள் வெள்ளிக்கொடியின் அணைந்த முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு “இதுவரைக்கும்” என்று சொல்லிக் கற்பூரத்தை ஓங்கி அடித்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.












