“சுண்டலக்கா, இப்ப கண்ண தொறந்து பாருக்கா” என்றான் பிரகாஷ் . கையை இன்னும் சற்று இறுக மூடிக்கொண்டாள் சுடர்.
“கண்ண தொறக்காமலே நான் கண்டுபிடிச்சிட்டேண்டா?”
“என்னதுன்னு சொல்லு பாப்பம்?”
“டார்ச் லைட் பல்பு.”
“இல்லையே… இல்லையே…”
கையை விரித்து காட்டி
“பல்பு இல்லாம பெறகு இது என்னடா?”
“நீ டார்ச் லைட்டு பல்ப்புன்னு தானக்கா சொன்ன?”
“இது ஒண்ணும் டார்ச் லைட் பல்ப்பு இல்ல.”
“பெரிய வண்டி லைட்டு.”
“அப்புடியில்லடா. இத டார்ச்வலயும் போடலாம் வண்டிலயும் போடலாம்” என்றவாறே பல்பை விரல்களுக்கிடையே மொட்டு போல் பிடித்து சற்று உயர்த்திக் காட்டினாள்.
சட்டென்று அவளது கையை பிடித்து கீழே இழுத்தவன்
“இத யாருகிட்டயும் காட்டிராதக்கா” என்றான்.
“ஏண்டா?”
“அந்தா ஒக்காந்துருக்கு பாருக்கா அபிதா. அத ஒனக்குத் தெரியுமா?”
“தெரியுமே”
“அதுகிட்ட மட்டும் இதப்பத்தி சொல்லிடாதக்கா. வேற யாருகிட்டயுமே சொல்லிடாதக்கா. நம்ம பள்ளிக்கொடத்து பசங்க யாருமே நல்லவங்க கெடையாது. ஒடனே அதுகிட்ட போயி கோளிமூட்டிருவாங்க. அபிதாவோட அப்பா மொரட்டாளு. என்னய ஏரிக்கர ஆலமரத்துல கட்டி வச்சிருவாரு.”
“ஏண்டா?”
“இந்த லைட்டு அபிதா அப்பா வண்டிலேருந்து கயட்டுனதுக்கா. “
“அடப்பாவமே. வண்டிலேருந்தா கயட்டுன?”
ஆம் என்பதுபோல தலையை மட்டும் ஆட்டினான். முகம் கலவரமடைந்திருந்தது. கண்களில் லேசாக பயம் தெரிந்தது. அதை மறைக்க உதடுகளில் புன்னகையை நெளிய விட்டது அப்பட்டமாகத் தெரிந்தது.
“வண்டிலேருந்து எப்புடிடா கயட்டுன? பல்பு வெளிய தெரியிற மாதிரியாடா இருக்கும்?”
“கண்ணாடிக்கு உள்ளதாங்க்கா இருக்கும்.”
“அபிதா அப்பா வண்டில?”
“அதுலயும் கண்ணாடிக்கு உள்ளதாங்க்கா இருந்திச்சி. “
“அப்பறம் எப்புடிடா கயட்டுன?”
“……”
அவளின் முகத்தைப் பார்த்தான். சொல்லலாமா வேண்டாமா என்று பெரிதாய் யோசிக்கவில்லை என்றபோதும் அவனால் சட்டென்று சொல்ல முடியவில்லை.
“என்னடா குறுகுறுன்னு பாக்குற? எப்புடி கயட்டுன சொல்லு. “
“கண்ணாடிய ஒடச்சிட்டு கயட்டுனங்க்கா.”
“அடப்பாவி. இதுமாதிரியெல்லாம் செய்யலாமாடா?”
“யாங்க்கா? செய்யக்கூடாது?”
“டேய், இதெல்லாம் தப்புடா?
“இதெல்லாம் தப்பு இல்லக்கா?”
“எலேய், தப்புல்லயா? நீ பண்ணுணது தப்புல்லாம வேற என்னடா?”
“அட்டூழியங்க்கா.”
“அட்டூழியந்தான். அட்டூழியம் பண்றது மட்டும் தப்பில்லயாடா?”
“வூடு நொழையிறது, பொம்பளப் புள்ளைவொ கையபுடிச்சி இழுக்குறதுதாங்க்கா தப்புதண்டா.”
“….”
வாயடைத்துப் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் சுடர்.
“நான் இதுமாதிரி பண்ணுனா எங்கம்மா யாண்டா இப்புடி அட்டூழியம் பண்றேன்னுதான் கேப்பாங்க.”
“இதுமாதிரி நீ பண்ணலாமாடா? பாவமில்லையாடா அபிதா அப்பா?”
“இல்லக்கா. அவரு பாவமெல்லாம் கெடையாது. அவரு பணக்கார்ருக்கா. அவருகிட்ட நெறையா பணம் இருக்கு தெரியுமா?”
“அவருகிட்ட பணம் இருந்தா என்னடா? நீ ஒடச்சது தப்புதாண்டா. பாவம்டா அவரு .”
“போக்கா அவரு ஒண்ணும் பாவமில்ல.”
“அவரு பாவமில்ல. அவருக்கிட்ட நெறயா பணம் இருக்குதுன்னே வச்சிக்க. அவரு வீடு எங்கயிருக்கு சொல்லு”
“ஆத்துக்கு அந்தாண்ட கரையில கொல்லயில இருக்குது.”
“இங்கேருந்து பக்கமா தூரமா?”
“அக்கா, ஆத்துக்கு அந்தாண்டக்கா. ரொம்ப தொலைட்டு.”
“அவ்வள தூரத்துலேருந்து அபிதாவ வண்டில கொண்டுவந்து விட்டுருக்காரு. வரும்போது வண்டி வெளிச்சத்துல வந்துட்டாரு. போகும்போது லைட்டு இல்லாம எப்புடிடா வண்டி ஓட்டுவாரு?”
“அதுக்குள்ள விடிஞ்சிரும்க்கா. வெளிச்சம் வந்துரும்.”
“சரி, நம்ம டூர் முடிச்சிட்டு திரும்பி வரக்குள்ள ராத்தியாயிடுமில்ல. அந்த இருட்டுல அவரு எப்புடிடா லைட்டு இல்லாம அபித்தாவ கூட்டிட்டு போவாரு?”
“அக்கா அவரு ஒடனே மாத்திருவாருக்கா. அதான் அவருகிட்ட பணம் இருக்கில்ல.”
“பணம் இருந்தாலும் மெனக்கெட்டு டவுனுக்கு போயிதானடா சரி பண்ணனும்?”
“அதெல்லாம் அவரு போயிடுவாருக்கா.”
“ஒனக்கு எப்புடி புரிய வைக்கிறதுன்னு தெரியலடா.”
“நீ டாக்டருக்கு தானக்கா படிச்சிருக்க?”
“ஆமா.”
“அப்பறம் எப்புடிக்கா ஒனக்கு தெரியலங்குற?”
“சரிடா நான் ஒன்னோட வழிக்கே வாறன். அபிதா அப்பாகிட்ட நெறையா பணம் இருக்கு. அவரு ஒடனே சீருபண்ணிடுவாறு. அது ஒரு பிரச்சனையே இல்ல ஒத்துக்கிறன். நீ எதுக்காக அந்த கண்ணாடிய ஒடச்சிட்டு இந்த பல்ப கயட்டிக்கிட்டு வந்த?” சுடர் இப்படிக் கேட்டதும் சுவிச்சை தட்டியவுடன் பளிச்சிடும் மின்விளக்குபோல சட்டென்று பிரகாசமடைந்தது அவன் முகம்.
“லைட்டு எரிய வைக்கலாங்க்கா.”
“இத எதுல மாட்டிடா எரிய விடுவ?”
“ரெண்டு ஒயரு எடுத்து இந்த லைட்ட சுத்தி இருக்கிக்கணும்க்கா. பேட்ரிகட்ட இருக்கில்லக்கா அதோட ரெண்டு பக்கமும் அந்த ரெண்டு ஒயரையும் வச்சி பிடிக்கணும்ங்க்கா.”
“……”
“லைட்டு சூப்பரா எரியும்ங்க்கா.”
“இப்ப இத மட்டும் வச்சி ஒன்னால ஒண்ணும் பண்ண முடியாதில்ல?”
“ஒயரும் பேட்ரிகட்டயும் வூட்ட வச்சிருக்கன்க்கா. “
“அத இங்கேருந்துடா எடுத்த?”
“எங்கேருந்தும் எடுக்கலக்கா. நான் முன்னயேபுடிச்சி வச்சிருக்கன். அது என்னோடதுதான்.”
“ரொம்ப நாளா வச்சிருந்தேன்னா அது ஒன்னோடதாத் தான் இருக்கும்” என்றாள் கிண்டலாய். ஆனால் சுடரின் வார்த்தைகளில் இருந்த நையாண்டி தெரியாமல் உண்மைமென்று ஏற்றுக்கொண்டான் பிரகாஷ்.
“ரொம்ப நாளா லைட்டு வேணுமேன்னு நெனச்சிக்கிட்டு இருந்தங்க்கா. கெடைக்கவே இல்ல. எந்த வண்டிகிட்ட போனாலும் யாராவுது ஒருத்த வந்துடுவாங்க. அதான் இவ்வள நாளா கெடைக்கவே இல்ல. இன்னக்கி கெடச்சிச்சி. “
“புதுவண்டி. லைட்டும் புதுசுதான். நல்லா பளிச்சின்னு எரியும்ங்க்கா.”
“நல்ல விஷயம்தான. லைட்ட எரியவைக்கப் போற. எல்லார்கிட்டயும் சொல்லி கைதட்டு வாங்கிக்கலாமா?”
“அக்கா வேண்டாங்க்கா. அபித்தா அப்பா என்னோட கால முறிச்சிருவாருக்கா.” என்றான் பரிதாபமாக கெஞ்சுவது போல .
“நீ பண்ணுனது தப்பில்ல தான? அவரு எதுக்காவ அடிக்கப்போறாரு. அதெல்லாம் அடிக்க மாட்டாரு. நம்ம எல்லாருகிட்டயும் சொல்லி ஜோரா ஒரு கைதட்டு வாங்கிக்கலாம் சரியா. “
“அக்கா நீ ஒத்துகிட்ட மாதிரி அவரு ஒத்துக்கிட மாட்டாருக்கா.”
“எதடா ஒத்துக்க மாட்டாரு?”
“நான் பண்ணுனது தப்பில்லன்னு ஒத்துக்க மாட்டாருக்கா.”
“அவரு ஒத்துக்க மாட்டாரு? இல்ல?”
சுடரின் முகத்தை பார்த்தபடியே குழப்பமாய் தலையாட்டினான்.
“அப்ப நீ செஞ்சது நல்ல காரியம்தான்னு அவருக்கு புரியவே புரியாதாடா பிரகாஷ்?”
“அக்கா நான் செஞ்சது நல்ல காரியமா?”
“ஆமா. புத்தம்புது வண்டி. அதோட கண்ணாடி டூம ஒடச்சிருக்க. லைட்ட கயட்டிருக்க. அவரு ஆயிரம் ரெண்டாயிரமாவுது செலவுபண்ணிதான் அத சரிபண்ண முடியுமுன்னா நீ செஞ்ச காரியம் ரொம்ப ரொம்ப நல்ல காரியம் தானடா?” என்றாள் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல். இப்போது சுடர் கோவத்தில்தான் அப்படி சொல்கிறாள் என்பதை ஓரளவு புரிந்துகொண்டான்.
“அக்கா நான் வெளையாட்டுக்கு செஞ்சிட்டங்க்கா”
“நீ வெளையாடுறதுக்காக செய்யிறது இன்னொருத்தவங்களுக்கு கஷ்டத்த தருதான்னு பாக்கணுமில்லடா.”
“நான் நெனச்சி எல்லாம் பாத்தங்க்கா. அவரு அத சரிபண்ண பணம் செலவழிக்கணுமேன்னு எனக்கு அப்ப யோசன வல்லக்கா.”
“சரி இப்ப சொல்லு நீ பண்ணுனது தப்பா இல்லயா?”
“நான் பண்ணுனதா?”
“ஆமா”
“லைட்ட கயட்டுனதாக்கா?”
“அட ஆமாண்டா?”
சற்று நேரம் யோசிப்பது போல பாவனை செய்தான். இருந்தபோதும் அவனால் இதற்கு ஒரு பதிலையும் சொல்ல முடியவில்லை.
“அக்கா நீயே சொல்லுக்கா” என்றான்.
“நான் சொன்னா நீ ஏத்துப்பியா?”
:ஏத்துப்பங்க்கா.”
“நெசமா சொல்லு.”
“சாமி சத்தியமா. செல்லியம்மன் மேல சத்தியமா நான் ஏத்துக்குவன் அக்கா.”
“இதுக்கு ஏண்டா சாமியயெல்லாம் இழுக்குற?”
“செல்லியம்மன் பொல்லாத சாமிக்கா. பொய் சத்தியம் பண்ணுனா கண்ண குத்திரும்.”
“சரி சரி போதும் அத விடு.”
“நீ சொல்லுக்கா. “
“சொல்லலாமா?”
“சொல்லுக்கா. “
சுடரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“பிரகாஷ் ரொம்ப ரொம்ப நல்ல பையன். அவன் இனிமே எந்த தப்பும் பண்ண மாட்டான். ஆனா அவன் வண்டி கண்ணாடிய ஒடச்சி பல்பு கயட்டுனது மட்டும் தப்புதான்” என்றவாறே பிரகாஷின் முகத்தைப் பார்த்தாள். அவன் முகம் சோர்ந்து போனது. சுடர் இப்படி சொல்லமாட்டாளென்று நினைத்திருந்தானோ என்னவோ. பார்வையை வேறு பக்கம் திருப்பி சன்னலுக்கு வெளியே பார்த்தான். சூரியன் தன் இளம் கதிர்களை மெல்ல பரவ விட்டுக்கொண்டிருந்தான். பனி முற்றிலும் விலகாதிருந்ததால் அதை ஊடுருவி வர அவ்விளம் கதிர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தன. எப்போதும் போல பிரகாஷின் பெரிய விழிகளில் நீர் திரண்டு நின்றது. அந்த கண்களை எதிர் கொண்டு யார் பார்த்தாலும் சுற்றிவிடும் திருவையிலிருந்து மாவு கொட்டுவதைப் போல பொலபொலவென்று கண்ணீர் துளிகள் உதிரும். இதை தான் பெரிதாய் மதிக்கும் சுடரக்கா பார்த்துவிடக் கூடாதென்று நினைத்தான் பிரகாஷ். ஆனால் சுடருக்கு இதெல்லாம் தெரிந்திருக்கவில்லை.
“என்னடா பிரகாஷ் பேச்சையே காணும். யாம்மேல கோவமாடா?” என்றவாறே அவனது முகத்தை தன் பக்கம் திருப்பினாள். அவ்வளவுதான். கண்களிலிருந்து நீர் பிரவாகமெடுத்தது.
“பிரகாஷ் ஏண்டா அழுகிற? இப்ப என்னடா நடந்து போச்சி? நான் யாருகிட்டயும் சொல்ல மாட்டன்டா. நீ அழாதடா ” என்று பதறினாள். கண்ணீர் திரை பார்வையை பாதியாய் மறைத்த போதும் சுடரை ஏறிட்டு பார்த்தான். அவனது இதழ்களில் சிறு புன்னகை நெளிந்தது.
“நான் அழுவலக்கா” என்றான். அவன் முகம் மலர்ந்திருந்ததைப் போல தெரிந்தது. ஆனாலும் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டு ஓடிக்கொண்டே இருந்தது.
“என்னடாயிது நீ அதிசயப் பிரவியாடா? அழுவுற. அதே சமயம் ஒதடு சிரிக்கிது. மொகம் மலருது ஆனாலும் கண்ணு ரெண்டுலேருந்தும் தண்ணி கொட்டுது. ஏதாவுது வித்த காட்றியாடா?” என்றாள் வியப்பு விலகாதவளாக.
“எனக்கு எப்பவுமே இப்புடித்தான்க்கா கண்ணு தண்ணி வரும்.”
“…”
“எல்லாருமே கேப்பாங்க யாண்டா அழுவுற? யாண்டா அழுவுறன்னு.”
“நான் அழுவலயேன்னு சிரிச்சி காட்டுவன்க்கா. அப்புடியும் நம்ப மாட்டாங்க. நான் பொய்மாத்துறேன்னு சொல்லுவாங்க”
“நான் நம்புறேண்டா நீ அழுவல. ஒன்னோட கண்ணுதான் அழுவுது.”
சுடரின் பதிலை அவன் ஏற்றுக்கொண்டானா என்று தெரியவில்லை. ஆனால் அவனது கண்கள் அவளுக்கு எத்தனையோ செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தது. அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனுடைய விழிகள் இரண்டும் கண்ணீரோடு பிதுங்கி வெளியே வந்து விடுவது போல தோன்றியது அவளுக்கு. சட்டென்று தன் இரு கைகளாலும் அவனது இரு கண்களையும் துடைத்துவிட்டாள். அப்படியும் இமைகளுக்குள் கண்கள் அடங்காதோ என்ற ஐயம் எழுந்தது.
தன் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் இருந்த கைக்குட்டை துணியை எடுத்துக்கொண்டாள்.
“பிரகாஷ், கண்ண மூடு. நல்லா தொடச்சிறலாம் ” என்றாள்.
பிரகாஷ் இரண்டு கண்களையும் மூடினான். கச்சிதமாக அவை மூடிக்கொண்டன. அப்பாடா என்றிருந்தது சுடருக்கு. கண்களைப் போலவே இமைகளும் பெரிதாகத்தான் இருக்கின்றன.
கண்களைச் சுற்றியிருந்த ஈரத்தை துடைத்தெடுத்தாள். பிரகாஷைப் பார்க்கும் போது சுடருக்கு ஏனோ அவன் நார்மலான பிள்ளை போல தோன்றவில்லை. அவனைப் பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்தது. அவனிடமிருந்தே எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை அவளுக்கு. முடிந்தவரை அவன் வாயிலாக தெரிந்து கொள்வதே அவனை புரிந்துகொள்ள ஏதுவாக இருக்குமென்று தோன்றியது.
“பிரகாஷ், வெளிய வேடிக்கப் பாக்குறியாடா?”
“ஆமாக்கா. நல்லா விடிஞ்சி போச்சி பாருக்கா.”
“ஆமாண்டா. நல்லா விடிஞ்சிச்சி இல்ல.”
“இது என்ன ஊருக்கா?” என்றான் சன்னலுக்கு வெளியே வெகு ஆர்வமாக பார்த்தபடி.
“இரு எங்கயாவது போர்டு இருக்கும் பாத்து சொல்றேன்” சற்று முன்புதான் ஏதோ ஓர் அதளபாதாளத்தில் விழுந்து விட்டவனைப்போல வலியில் துடித்து கண்களால் வடித்தான். அதற்குள் அதிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு அதன் சுவடு இம்மியும் தெரியாதபடி இவ்வளவு உற்சாகமாய் மாறிவிட்டானே என்று அவனைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது அவளுக்கு.
“அக்கா அந்த போர்டுல போட்டுருக்குப் பாரு.”
“சிதம்பரம்டா. சிதம்பரம் வரப்போவுது.”
“ஐ சிதம்பரம் வந்தாச்சி. நம்ம கோயிலுக்குத்தானக்கா போவப்போறம்?”
“ஆமாண்டா. அப்படித்தான் சொன்னாங்க.”
“சிதம்பரம் கோயில்ல என்ன சாமிக்கா இருக்கும்?”
“இது சிதம்பரம் நடராசர் கோயில்டா.”
“இங்க சிவன் டான்ஸ் ஆடுனபடியே நிப்பாராம்.”
“அதிகாலை வழிபாடு நடக்குமாம். அத பாக்கணும்னு டீச்சருங்க ஆசப்பட்டாங்க போல. அதுக்கப்பறம் கோயில நல்லா சுத்திப் பாத்துட்டு கிளம்புறதா இருக்கும்ன்னு நெனைக்கிறன்.”
“கோயில்ல சாப்பாடு தருவாங்களாக்கா?”
“தெரியலேயேடா. ஏன் ஒனக்கு கோயில் சாப்பாடு வேணுமா?”
“இந்த கோயில்ல குடுக்குற பட்ட சோறு நல்லாருக்குமாங்க்கா. எங்க தெருவுல ஒரு அக்கா சொல்லிச்சிது. அந்த அக்கா பொறந்தது இந்த ஊருதான். படிக்க போன எடத்துல எங்க ஊரு சேகர் அண்ண இல்ல. அத லவ்பண்ணி, வூட்டுக்கு சொல்லாம ஓடிவந்து கட்டிக்கிச்சி.”
“கெழவி மாதிரி பேசுறடா.”
“அஞ்சி வருசமா லவ் பண்ணிச்சாங்க்கா. கடைசில பாத்தா அவங்க ஊட்டுல ஒத்துக்கலயாம். அஞ்சி வருசம் லவ்பண்ணிட்டு மறக்க சொன்னா முடியுமாக்கா? அதான் அந்தக்கா ஓடிவந்துட்டுது.” அவன் பேசுவதை கேட்டு சுடருக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“யாங்க்கா சிரிக்கிற?”
“ஒண்ணுமில்லடா. நீ சொல்றத கேட்டதும் சிரிப்பு வந்துட்டுது. “
“நான் கெட்டவார்த்த பேசுனத கேட்டாக்கா சிரிப்பு வந்துச்சி ?”
“நீ என்னடா கெட்ட வார்த்த பேசுன?”
“லவ்பண்ணிச்சின்னு சொன்னேல்ல?”
“அது ஒண்ணும் கெட்ட வார்த்தை இல்லயேடா.”
“எங்க தெருவுல லவ்வுன்னு சொன்னாலே போதும் ‘சின்ன புள்ளைவொ பேசுற பேச்சாடா இதுன்னு’ யாரப்பாத்தாலும் வாயிலயே அடிக்கிறாங்க. யாங்க்கா?”
“விடுறா, அவங்களுக்கு தெரிஞ்சிருக்காது.”
“ஆமாங்க்கா. எல்லாம் படிக்காத கை நாட்டு மக்க. அதுங்களுக்கு எங்க தெரியப்போவுது.”
பேருந்து கோவிலின் கிழக்கு கோபுர வாசலில் வந்து நின்றது. தூங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை எழுப்பி வரிசையில் நிற்க வைத்தார்கள். கோவிலுக்குள்ளிருந்து ஓதுவார்களின் இனிய குரலில் பாடப்பட்டுக் கொண்டிருக்கும் தேவாரப்பாடல் காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது.









