சமீபத்தியவை
சாதிக் கதைகளின் எல்லையை விரிக்கும் ‘பறைச்சி பெற்ற பன்னிரு குலம்’ பிள்ளைக் கனியமுதே – 3 Towards my dawn பிள்ளைக் கனியமுதே 2 பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு
சாதிக் கதைகளின் எல்லையை விரிக்கும் ‘பறைச்சி பெற்ற பன்னிரு குலம்’ பிள்ளைக் கனியமுதே – 3 Towards my dawn பிள்ளைக் கனியமுதே 2 பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 2

சாதிக் கதைகளின் எல்லையை விரிக்கும் ‘பறைச்சி பெற்ற பன்னிரு குலம்’

ஞா. குருசாமி By ஞா. குருசாமி
6 hours ago
A A
0
Saathi Kathaigalin Ellaiyai Virikkum Paraichi Petra Panniru Kulam

இந்தியச் சாதிகள் பற்றிய வாய்மொழிக் கதைகள் சாதிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். ஒவ்வொரு சாதிக்கும் ஏராளமான கதைகள் உண்டு. அவைகள் அனைத்தும் முழுமையாக எழுதப்பட்டதாகவோ, தொகுக்கப்பட்டதாகவோ இல்லை. ஆனாலும் அவை மக்களின் நினைவுகளில் நீடித்த வாழ்வை பெற்றனவாக இருக்கின்றன. அதற்குக் காரணம் சாதி என்பது ஒருவிதமான வகைமை என்பதாக அல்லாமல் பெருமைக்குரிய ஒன்றாகப் புரிந்துகொள்ளப்பட்டும் அது வழங்கும் லெளகீகத்தை அனுபவித்துக்கொண்டும் இருப்பதே.

பொதுவாக, சாதியைப் பேசும் வாய்மொழி / எழுதப்பட்ட கதைகள் யாவும் சாதிப் பெருமையைப் பேசக்கூடியவை தாம். அவற்றில் ஒப்புமைக் கருத்தாக்கத்தின் விளைச்சல் இருக்கும். அதாவது தன்னை உயர்வாக நிறுவிக் கொள்ள, தனக்குக் கீழாக ஒரு தாழ்வை உண்டு செய்யும். அந்த உயர்வையும் தாழ்வையும் நியாயப்படுத்தும் காரணிகளை அக்கதைகள் தனக்குள்ளாகவே வைத்திருக்கும். இது தான் தமிழில் உள்ள சாதிக் கதைகளின் பொதுவான அம்சம். இந்த அம்சத்தை மொழி, நிலம் சார்ந்தும் விரித்துப் பார்க்க முடியும் என்ற யோசனையைத் தந்திருக்கிறது செளமியா சுதாகரன் மலையாளத்திலிருந்து தமிழுக்குக் கொடுத்திருக்கும்’ பறைச்சி பெற்ற பன்னிரு குலம்’ நூல். களம் புதிது வெளியீடாக டிசம்பர் 2025இல் வெளிவந்திருக்கிறது. 

இந்நூலில் வரருஜி என்கிற பிராமணருக்கும் பஞ்சமி என்கிற பறையர் சாதி பெண்ணுக்கும் பிறந்த பன்னிரு குழந்தைகளில் பதினோரு குழந்தைகள் அவர்களால் கைவிடப்பட்டு வெவ்வேறு சாதிப் பின்னணிகளில் வளர்கிறார்கள், ஒவ்வொருவரும் தனித்தனி புகழ்பெற்ற ஆளுமையாக உருவெடுக்கிறார்கள். நூலில் இது தான் விவாதத்துக்கு உரிய பகுதி. இரண்டு பகுதிகளாக அமைந்திருக்கும் இக்கட்டுரையில் முதல் பகுதி நூலில் இடம் பெற்றுள்ள கதைகளின் சுருக்கமாகவும் இரண்டாம் பகுதி கதைகள் குறித்த விவாதமாகவும் அமையும். முதலில் கதைச் சுருக்கத்தைப் பார்க்கலாம்.

1

உஜ்ஜைனி மன்னன் விக்ரமாதித்தன் தன் அவைப் புலவர்களிடம் ராமாயணத்தின் சிறந்த ஸ்லோகம் எதுவென்று கேட்க, அமைச்சரான வரருஜியால் உடனடியாகப் பதிலளிக்க முடியவில்லை. நாற்பத்தொரு நாள் கெடு விதிக்கப்பட்டதால், வரருஜி விடை தேடி காடுகளிலும் மலைகளிலும் அலைந்தார். ஒரு நாள் இரவில் மரத்திலிருந்த பறவைகள் பேசிக்கொண்டதைக் கேட்ட அவர், பறையர் குலப் பெண்ணைத் தான் திருமணம் செய்யப் போவதையும், ராமாயணக் கேள்விக்கான விடையையும் அறிந்துகொண்டார். அரண்மனைக்குத் திரும்பி சரியான பதிலைச் சொல்லி ‘மகா பண்டிதன்’ பட்டம் பெற்றார். பின், காட்டில் இருந்தபோது பறவைகள் பேசிக் கொண்டதைத் தவிர்க்க எண்ணி, ஒரு பறையர் சாதிப் பெண்ணுக்குப் பிறந்த பச்சிளம் குழந்தையை வாழைத்தண்டில் வைத்து ஆற்றில் விட மன்னனிடம் அனுமதி பெற்றுச் செய்தார். இதன் பிறகு ஆண்டுகள் பல காலம் கடந்தபின் தேசாந்திரம் சென்ற வரருஜி, ஒரு பிராமணரிடம் வளர்ந்த பஞ்சமியின் புத்தி கூர்மையைக் கண்டு அவளைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவள் ஆற்றில் மிதந்து வந்த பேழைக் குழந்தையாக மீட்கப்பட்டவள் என்பதை அறிந்து வருந்தினார். இருவரும் தென்திசை நோக்கி நடந்து செல்லும்போது, பஞ்சமிக்கு அடுத்தடுத்துப் பன்னிரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒவ்வொரு முறையும் ‘குழந்தைக்கு வாய் இருக்கிறதா?’ என்று வரருஜி கேட்க, பஞ்சமி இருக்கிறது என்றே கூறி குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றாள். பன்னிரண்டாவது குழந்தை இறந்து பிறக்க, அதை மலையடிவாரத்தில் புதைத்தனர். இவர்களே பன்னிரு குலங்களாக மலையாள வாய்மொழிக் கதைகளில் அறியப்படுகின்றனர் என்பது ‘பறைச்சி பெற்ற பன்னிரு குலம்’ நூலின் மொத்தச் சாரம். இனி ஒவ்வொரு கதையையும் சுருக்கமாகக் காணலாம்.

கதை 1 – பெருந்தச்சன்

வளர்ப்பு மகனை இழந்த பஞ்சனாசாரி, பிச்சிச் செடியின் அருகே கிடைத்த குழந்தைக்கு விஷ்வகர்மா என்று பெயரிட்டு வளர்க்கிறார். வளர்ந்தவன் பெருந்தச்சனாகப் புகழ் பெற்றுத் கோவில் திருப்பணிகள் செய்கிறான். நம்பூதிரிகளின் சாதிய அகந்தையை எதிர்க்கும் வகையில் நேராக நடந்தால் தலையில் இடிக்கும் விசித்திரக் கோவில் அமைப்பை உருவாக்குகிறான். அவனுக்குப் பிறந்த மகனோ, தந்தை தன்னைவிட்டுச் சென்ற கோபத்தால் பிற்காலத்தில் அவனை ஏற்க மறுக்கிறான். திருகண்டியூரில் குளம் வெட்டிப் பாவையைக் கட்டிய தச்சன், தன் மகனின் திறமையைக் கண்டு வியக்கிறான். ஒரு நாள் கோவில் பணியின் போது தற்செயலாகத் தவறி உளி பட்டுத் தன் மகனையே கொன்றுவிடும் சோகம் நேர்கிறது. புத்திர சோகத்தால் துடித்த அவனை ஒரு துறவி தேற்றி, தச்சு சாஸ்திர இலக்கண நூலை எழுதும்படி ஆசீர்வதிக்கிறார்.

கதை 2 – நாராயணத்து பிராந்தன்

ஆற்றங்கரையில் கைவிடப்பட்ட குழந்தைத் திருமேனியால் எடுக்கப்பட்டு நாராயணனாக வளர்க்கப்படுகிறான். சிறு வயதிலேயே சூரிய, சந்திர கலைகளையும் தத்துவங்களையும் அறிந்த அவன், சாதி கடந்த சமத்துவச் சிந்தனையோடு திகழ்கிறான். வளர்ப்புத் தந்தை இறந்த பிறகு தேசாந்திரம் சென்று, பாறையை மலை உச்சியில் உருட்டிவிட்டு விளையாடுவதன் வழி புகழின் நிலையாமையை உணர்த்துகிறான். நம்பூதிரிகள் தன்னை ஒதுக்கியபோது சமையலறையில் மாயங்களை நிகழ்த்திக் காட்டுகிறான். சுடுகாட்டில் காளி தேவியோடு வாதிட்டு அவளுக்கே சவால்கள் விடுக்கிறான். கொல்லனின் இரும்பைப் பொய்கை நீராக்கித் தாகம் தீர்க்கிறான். கோவில் கும்பாபிஷேகத்தின் போது தன்னை அவமதித்த அர்ச்சகருக்குப் பாடம் புகட்டி, தன் வாயில் உமிழ்ந்த வெற்றிலைச் சாற்றால் சிலையைப் பிரதிஷ்டை செய்கிறான்.

கதை 3 – பாக்கனார்

குட்டப்பாவும் சீதாவும் மூங்கில் தோப்பில் கண்டெடுத்த பச்சிளம் குழந்தைக்கு ‘பாக்கனார்’ என்று பெயரிட்டு வளர்க்கின்றனர். தூய்மையான தியான வாழ்வு வாழ்ந்த அவர், முறம் விக்கும் தொழிலில் விசித்திரமான அறநெறியைக் கடைபிடிக்கிறார். காளி என்பவளைத் திருமணம் செய்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்துகிறார். பிராமணர்கள் காசிக்குக் கொண்டு சென்ற கோலைக் கங்கையிலிருந்து தனது ஆற்றலால் மீட்டு எடுக்கிறார். இறந்த பசுவின் மடியைக் கொண்டுவந்து சமைக்கச் சொல்ல, முற்றத்தில் கோவக்கொடி முளைக்கும் மாயா யதார்த்தத்தை நிகழ்த்துகிறார். ‘புதையல்’ என்பது மக்களைக் கொல்லும் ஆள்கொல்லி என்பதை இரண்டு பேரின் இறப்பு மூலம் நிரூபிக்கிறார். ஸ்ரீதேவி அம்மனின் பாம்பு விஷத்தை நீக்கியதோடு, தன் மனைவியின் பதிவிரத தன்மையைச் சோதித்து உலகிற்கு உணர்த்துகிறார்.

கதை 4 – அகவூர் சாத்தன்

ஆற்றங்கரையில் கைவிடப்பட்ட ஆண் குழந்தையை நீலி எடுத்து ‘சாத்தன்’ என்று பெயரிட்டு வளர்க்கிறாள். அவள் மறைவுக்குப் பிறகு தரவாட்டு முதலாளி அவனுக்கு முறையான கல்வி அளிக்கிறார். இயற்கையையும் இறைவனையும் நேசித்த சாத்தன், ஓடமில்லாத போது ஆற்றங்கரையிலிருந்த கரும்பாறைக் கல்லை படகாக மாற்றித் தன் வளர்ப்புத் தந்தையுடன் ஆற்றைக் கடக்கிறான். கங்கையில் நீராடித் பாவத்தைத் தீர்க்க முயன்ற தந்தைக்கு, சுரைக்காயைக் கங்கையில் முக்கி எடுத்துவந்து கறியாகச் சமைத்து மனத்தின் தூய்மையே முக்கியமென்று உணர்த்துகிறான். தந்தையின் சொல்லால் இறைவனை ‘மாடன் போத்து’ வடிவில் தியானித்து நேரில் கண்டுகொள்கிறான். யாத்திரையின் போது மாடன் போத்து மறைந்துபோக, அதைக் காணாமல் மனமுடைந்து ஓச்சிற படர்நிலம் என்ற ஊரிலேயே சாத்தன் தங்கிவிடுகிறான்.

கதை 5 – ரஜகன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைத் துணி வெளுப்புத் தம்பதியினரால் கண்டெடுக்கப்பட்டு ‘ரஜகன்’ என்று பெயரிட்டு வளர்க்கப்படுகிறது. ஈ, எறும்புக்குக் கூட தீங்கு செய்யாத கருணை கொண்ட அவன், மூலிகைகளைக் கொண்டு தந்தையின் கால் வீக்கத்தைக் குணப்படுத்துகிறான். உயர்சாதியினர் மட்டுமே கல்வி கற்கும் காலத்தில், பாடசாலையின் ஓரத்தில் அமர்ந்து சமஸ்கிருதம் உள்ளிட்டவற்றைக் கற்றுத் தேர்கிறான். திருநாவாயில் நடைபெற்ற அறிஞர்கள் சபையில் பூர்வ மீமாம்ச தத்துவங்களை விளக்கிப் பேசி அனைவரையும் வியக்கச் செய்கிறான். திருப்பண்கோடு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து, வரதா என்ற தெய்வீகக் குழந்தையைக் கண்டெடுத்து வளர்க்கிறான். வரதாவின் மறைவுக்குப் பின் தாயும் இறந்துவிட, உஜ்ஜைனி அரசவைக்குச் சென்று ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுகிறான்.

கதை 6 – காரைக்கால் மாதா

கவளப்பாறை அரண்மனையில் வாரிசு இல்லாத் துயரம் நிலவிய காலத்தில், ஒரு குடிசையில் இருந்து கிடைத்த பச்சிளம் குழந்தையைத் தம்புராட்டிகள் எடுத்து ‘மாதா’ என்று பெயரிட்டு வளர்க்கின்றனர். அரண்மனைக்கு மங்கலங்களைக் கொண்டுவந்த மாதா, எப்போதும் தியானத்திலும் எல்லோருக்கும் உதவுவதிலும் ஈடுபட்டாள். மரக்கிளை முறிந்து விழுவதைத் தடுத்துத் தம்புராட்டியைக் காப்பாற்றினாள். செல்வம் மீது பற்றில்லாமல் எளிய முண்டு உடுத்தி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் குழந்தைகளுக்கும் கல்வி கற்பித்து உதவினாள். திருமண வயதை எட்டியபோது எளிய முறையில் மாப்பிள்ளை வீட்டார் முன் தோன்ற, அவளின் தெய்வீகத் தோற்றத்தைக் கண்ட அவர்கள் திருமணம் வேண்டாம் என்று கூறிச் செல்கின்றனர். பின்னர் வடக்கு திசையிலிருந்து வந்த அதே இளைஞனுடன் அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

கதை 7 – பாணனார்

பாணனார் கலை உணர்வும் இசை ஞானமும் கொண்டு தெருத்தெருவாகத் துடியிசைத்துச் பாடி வாழ்ந்தார். ஒருமுறை மன்னன் ஒருவன் தன் மகளின் வைர மாலையைத் திருடியதாகப் பழி சுமத்தி ஏழைச் சிறுவனைக் கொல்ல முயன்றபோது, பாணனார் தம்புரானைத் தடுத்து நிறுத்த முயன்றார். மன்னனின் அடியாள் வாளெடுத்துச் சிறுவனை வெட்ட முற்பட்டபோது, பாணனாரின் சக்தியால் அந்த வாள் மாயமாய் மறைந்து போனது. எளிய மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் அதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக அமைதியாகக் குரல் கொடுக்கும் கலகக் குரலாகப் பாணனார் திகழ்ந்தார்.

கதை 8 – வள்ளோன்

வள்ளோன் நெசவுத் தொழிலை முதன்மையாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். நெசவுத் தொழில் மட்டுமன்றி, உழைக்கும் எளிய மக்களுக்கு விவசாயத்தையும் கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினார். சிறந்த கலைத்தன்மையும் சிந்தனைத் தெளிவும் பெற்றிருந்த அவர், மானுட வாழ்வியலுக்கான அறநெறிகளை அடிப்படையாகக் கொண்டு குறள்களை இயற்றினார். அவர் எழுதிய குறள் செண்பகப் பாண்டியனின் அவையில் அரங்கேற்றப்பட்டு, அனைவராலும் போற்றப்பட்டு ‘திருக்குறள்’ என்னும் பெயரைப் பெற்றது. சாதியக் கட்டமைப்பால் ஒடுக்கப்பட்ட பின்னணியில் பிறந்த ஒருவரின் அறிவாற்றல் தமிழ் இலக்கியத்தில் உன்னத நிலையை அடைந்ததை இக்கதை உணர்த்துகிறது.

கதை 9 – வடுதல நாயர்

வடுதல நாயர் கேரளப் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரியைப் பயின்று அதில் மாபெரும் தேர்ச்சி பெற்றார். அன்றைய சமூகத்தில் தற்காப்புக் கலைகளும் சாஸ்திரங்களும் சில குறிப்பிட்ட மேல்தட்டுச் சமூகத்தினருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்ட நிலையை அவர் உடைத்தெறிந்தார். சாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் களரியைக் கற்றுக்கொடுத்தார். மேலாதிக்கத் தன்மையும் ஆதிக்க மனப்பான்மையும் இல்லாத, அனைவரும் சமமாக வாழக்கூடிய ஒரு சமதர்மச் சமுதாயத்தை உருவாக்க அவர் பாடுபட்டார்.

கதை 10 – உப்பு கூற்றன்

உப்பு கூற்றன் இஸ்லாமிய வாழ்வியல் பின்புலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் உப்பளங்களில் இருந்து உப்பு விளைவிக்கும் தொழிலை முதன்மையாகச் செய்து வந்தார். சாதாரண முறைகளில் அன்றி, கிணற்றிலிருந்து நீரை இறைத்து எடுத்துத் தன் உழைப்பால் உப்பு விளைச்சல் செய்யும் நுட்பமான வழியைக் கையாண்டார். எளிய மனிதனாக வாழ்ந்தாலும், தன் தொழில் நுட்பத்தாலும் உழைப்பாலும் தனக்கான அடையாளத்தையும் சுயமரியாதையையும் சமூகத்தில் உருவாக்கி வாழ்ந்தார்.

கதை 11 – மேளத்தூர் அக்னிஹோத்ரி

மேளத்தூர் அக்னிஹோத்ரி பிராமணக் குடும்பப் பின்புலத்தில் வளர்ந்து யாகங்கள் வளர்க்கும் வைதீகச் சடங்குகளைச் செய்து வந்தார். ஆனால், அன்றைய வைதீக மரபில் யாகங்களின் போது விலங்குகளைப் பலியிடும் இரத்த பலிச் சடங்கு வழக்கத்தில் இருந்தது. அக்னிஹோத்ரி உயிர்க்கொலையை முற்றிலும் எதிர்த்து, யாகங்களை உயிர்ப்பலி இல்லாத தூய்மையான ஆன்மிகச் சடங்காக மாற்றியமைத்தார். இவரின் இச்செயல் வைதீக மரபுக்குள் சமண தத்துவங்களின் அஹிம்சைக் கோட்பாடு வேரூன்றச் செய்ததோடு, வைதீகச் சடங்குகளின் உறைந்த தர்மத்தை மாற்றி அமைப்பதாகவும் அமைந்தது.

இவை நூலில் உள்ள கதைகளின் சுருக்கம். நிறைய விவாதங்களுக்கு இடமளிக்கும் இத்தகைய மலையாள வாய்மொழி இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்தமைக்காக இந்நூல் பாராட்டத்தக்கது. பறையார் சாதிப் பெண்ணின் பிள்ளைகள் கலை, அறிவு, மருத்துவம், போர்த்திறன், பக்தி என்று வெவ்வேறு துறைகளில் உச்சம் தொடுவதாக இருக்கும் சித்திரிப்பு, சாதிய படிநிலைக் கருத்தாக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் உத்தியாக நூலில் வெளிப்பட்டு இருக்கிறது. கையாண்டுள்ள மொழிநடை பேச்சு வழக்கிற்கு நெருக்கமானதாகவும் எளிய தன்மையில் அமைந்திருப்பதும் வாசிப்போட்டத்தை இயல்பாக நிகழ்த்துகிறது.

எல்லா இயல்களிலும் ‘கைவிடப்பட்ட குழந்தை – அற்புத ஆற்றல் வெளிப்பாடு – புகழ்பெறுதல்’ என்ற ஒரே கதை அம்சம் திரும்பத் திரும்ப வருவதைக் குறையாகச் சொல்ல முடியாது. வாய்மொழிக் கதைகளின் பண்பு அது. ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது’ போன்ற வாக்கியங்கள் பல இயல்களில் திரும்பத் திரும்ப வருவதையும் கூட அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். திருவள்ளுவரும் காரைக்கால் அம்மையாரும் மலையாள வாய்மொழி இலக்கியத்திலும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்பாய்வுக்கு உதவும் அருமையான இடம் இது. அதற்கு வழிகாட்டும் நோக்கில் அடிக்குறிப்புகளோ மூல வேறுபாடுகளுக்கான விளக்கமோ கொடுக்கப்பட்டு இருந்திருக்கலாம். நிற்க, இனி விவாதத்திற்குச் செல்லலாம்.

2

இந்தக் கதையில் பஞ்சமியை வளர்க்கிறவரும் பிராமணராக இருக்கிறார். பஞ்சமியை மணந்துகொள்கிறவரான வரருஜியும் பிராமணர். ஆக, பஞ்சமியின் வளர்ப்பும் வாழ்வும் பிராமணர்களோடு இணைத்துச் சொல்லப்பட்டு இருக்கிறது. இதே வேலைப்பாடு கொண்ட கதை தமிழிலும் உண்டு. அது குறித்து ஸ்டாலின் ராஜாங்கம். ஞா.குருசாமி ஆகியோர் உட்பட பலரும் எழுதியும் பேசியும் வந்திருக்கின்றனர். அந்தத் தமிழ்க்கதையைப் பற்றிப் பார்ப்போம்.

1873 ஆம் ஆண்டு சரவணப் பெருமாளையரால் பரிசோதிக்கப்பெற்று வெளியான திருக்குறள் பதிப்பில் திருவள்ளுவர் பிறப்பு குறித்த கதை இடம் பெற்றுள்ளது. அந்தக் கதை வருமாறு:

பூர்வத்தில் நிகழ்ந்த பிரளயத்திலிருந்து தப்பிய பிராமணரான பகவன் என்பவரும், பறையர் குலப் பெண்ணான ஆதி என்பவரும் தற்செயலாகச் சந்தித்தனர். பகவன் ஆரம்பத்தில் ஆதியை அடையாளம் காணாமல் கோபித்துச் சென்றாலும், பின்னர் அவளது சௌந்தரியத்தில் மயங்கி அவளுடன் வாழத் தொடங்கினார். எனினும், தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பிறந்தவுடனேயே அங்கங்கே விட்டுவிட்டு வர வேண்டும் என்ற நிபந்தனையோடு இருவரும் இணைந்தனர். அதன்படி அவர்களுக்கு ஒளவை, உப்பை, அதிகமான், உறுவை, கபிலர், வள்ளியம்மை, திருவள்ளுவர் ஆகிய எழுவர் பிறந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு இடங்களிலும் வெவ்வேறு சூழல்களில் வளர்ந்தனர் என்பது அதில் உள்ள கதை.

இந்தக் கதை பெண்ணை பறையராகவும் ஆணை பிராமணராகவும் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளை அதீத அறிவு வாய்க்கப்பெற்றவர்களாகவும் சித்திரிக்கிறது. இதனூடாக, பறையர் குலப் பெண் பெற்ற பிள்ளைகள் அறிவார்ந்தவர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் பிராமண விந்துவால் பிறந்தமையே என்னும் சித்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சித்திரம் செளமியா சுதாகரன் கொடுத்திருக்கும் மலையாள வாய்மொழிக் கதைகளுக்கும் பொருந்துவதாக இருப்பது தான் குறிப்பிடத்தக்க அம்சம். சாதிக் கதைகளின் உருவாக்கத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியின் அறிவுப் பாரம்பரியம் கூட அவர்கள் உருவாக்கிக் கொண்டதல்ல. பிராமணர்களால் கொடுக்கப்பட்டது என்பதான கருத்தியல் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அறிவு பிராமணர்களுடன் தொடர்புடையது என்றும் பிராமணரல்லாதர் எவரேனும் அறிவாளியாக இருந்தால் அவரது தந்தை பிராமணராக இருக்க வேண்டும் என்பதான சிந்தனை மொழி, நிலம் முதலிய வரையறைகளைக் கடந்து பரவியிருக்கிறது. இதன்வழி பிறரின் அறிவைத் தன்வயப்படுத்தி தங்களை அறிவாளிகளாகச் சித்திரித்துக்கொண்ட பிராமணர்கள் எதார்த்த அறிவோடு சம்பந்தப்பட்டவர்கள் இல்லை என்கிற உட்கிடையும் புலனாகிறது. அயோத்திதாசரின் ‘வேஷப் பிராமணர்கள்’ என்பதும் நினைவுக்கு வருகிறது.

இந்த இடத்தில் இன்னொரு ஒப்புமையையும் சொல்லியாக வேண்டும். ‘பார்ப்பானுக்கு மூத்தவன் பறையன்’ என்கிற சொல்வழக்கு தமிழில் இருப்பது அறிந்ததே. இதே சொல்லாடலைப் பிரதிபலிக்கும் கதையாடல் ஒன்று கேரளத்திலும் இருப்பதை கே.ஏ.ஷாஜி தன்னுடைய கட்டுரை (Hindu, https://www.thehindu.com/news/national/kerala/quaint-but-filled-with-the-legend/article7183539.ece) ஒன்றில் விவரிக்கிறார். அந்தக் கட்டுரையில் அவர் பறைச்சி பெற்ற பன்னிருகுலத்தில் வரும் பாக்கனாரின் வம்சவழி பற்றிய கதையைத் தருகிறார். பந்திருகுலம் (பன்னிரு குலம்) தொடர்பான தொன்மக் கதைகள் திரிதலா பகுதி முழுவதும் பரவியுள்ளதாகவும் அந்தக் குலத்தின் மரபில் வந்தவரும், பாக்கனாரின் சகோதரருமான மேழத்தோல் அக்னிஹோத்ரியின் பிராமணக் குடும்பம் (செளமியா சுதாகரன் நூலில் மேளத்தூர் அக்னிஹோத்திரி என்று உள்ளது) பாக்கனார் வம்சாவளியினர் வாழும் ஈராட்டிங்கல் கிராமத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது என்பதாகத் தமக்குக் கிடைத்த தகவலையும் அக்கட்டுரையில் கொடுத்திருக்கிறார் ஷாஜி. இந்தக் குறிப்புகள் ‘பறைச்சி பெற்ற பன்னிரு குலம்’ நூலோடு சேர்த்து வாசிக்கக் கூடியதாக இருக்கின்றன.

பிராமணர் – பறையர் குறித்த கதைகளும் சொல்லாடல்களும் தமிழில் இருப்பதைப் போல ஏறக்குறைய ஒரேமாதிரியாக கேரளாவிலும் எல்லை கடந்து பரவியிருக்கின்றன என்பதை அறிந்துகொள்வதற்குச்  ‘பறைச்சி பெற்ற பன்னிரு குலம்’ துணை நின்றிருக்கிறது. தமிழில் உள்ள சாதி குறித்த சிந்தனைப் பரவலை மலையாள வாய்மொழி இலக்கியங்களோடும் இணைத்துப் பார்ப்பதற்கான வாய்ப்புகளை செளமியா சுதாகரன் ஏற்படுத்தித் தந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இந்தப் புள்ளியை வட இந்திய மொழிகளிலுள்ள சாதி குறித்த வாய்மொழி / எழுத்து இலக்கியங்களுடன் இணைத்து வாசிக்கும்போது சாதிக் கதைகள் குறித்த பார்வையில் மாற்றத்தை நிகழ்த்தலாம்.

……………………

தொடர்புக்கு : jeyaseelanphd@yahoo.in

Previous Post

பிள்ளைக் கனியமுதே – 3

ஞா. குருசாமி

ஞா. குருசாமி

கருத்தைப் பதிவிடுங்கள் Cancel reply

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. அவசியமான புலங்கள் * எனக் குறிக்கப்பட்டுள்ளன.

Archives

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 8, 2026
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 8, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

Koor Seevuthal

கூர் சீவுதல்

Saathi Kathaigalin Ellaiyai Virikkum Paraichi Petra Panniru Kulam

சாதிக் கதைகளின் எல்லையை விரிக்கும் ‘பறைச்சி பெற்ற பன்னிரு குலம்’

October 30, 2026
Pillai Kaniyamudhe - 3

பிள்ளைக் கனியமுதே – 3

October 26, 2026
Towards my dawn

Towards my dawn

October 16, 2026
Pillai Kaniyamudhe - 2

பிள்ளைக் கனியமுதே 2

October 13, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • ஆங்கில படைப்புகள் (1)
  • இதழ்கள் (21)
  • படைப்புகள் (20)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

Saathi Kathaigalin Ellaiyai Virikkum Paraichi Petra Panniru Kulam

சாதிக் கதைகளின் எல்லையை விரிக்கும் ‘பறைச்சி பெற்ற பன்னிரு குலம்’

October 30, 2026
Pillai Kaniyamudhe - 3

பிள்ளைக் கனியமுதே – 3

October 26, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Product successfully added to the cart!
No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு