ஹிஷாம் மதார்
தமிழில்: அசதா
குறிப்பிட்ட காரணமோ முன்னறிவிப்போ இன்றி திடீரென என் அண்ணனுக்கு அவன் எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர்களிடமிருந்து அல்லது எங்களிருவருக்கும் பொதுவான நட்பில் இருந்தவர்களிடமிருந்து விசாரிப்புகள் வரத் தொடங்கின. பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு சொந்த நாட்டைவிட்டு நான் வெளியேறிய பிறகும் ஏதோவொரு வகையில் என்னோடு தொடர்பில் இருந்த அந்தச் சிலர் என்னைக் கெய்ரோவில் பார்த்ததாக அவனிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் கெய்ரோவின் தெருவொன்றில் நடந்து போவதையோ, ஒரு உணவகத்தில் தனியாக உட்கார்ந்திருப்பதையோ பார்த்ததாக அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பதினெட்டு வயதில் ஒரு சிறிய பையுடனும் என் நம்பிக்கைகள் கவலைகளுடனும், அப்போது சற்று நேரமே நீடித்த ஆனால் அவனுள் ஆழ ஊன்றிக் கொண்டிருந்த மெல்லிய சந்தேகத்தை என் அண்ணனின் கண்களில் பார்த்தவாறே விமான நிலையத்தில் அவனிடம் கையசைத்து விடைபெற்றுச் சென்றதிலிருந்து நான் திரும்பி வந்து அந்த நகரத்தில் குடியேறவில்லை என்றபோதிலும்கூட இது நடந்திருந்தது.
நாங்கள் எடுத்த முடிவு சரியானதுதான் என்பதில் அவனுக்கு முழு நம்பிக்கையில்லை. எங்களது பெற்றோர் தங்களால் இயன்றவரை முயன்றார்கள், ஆனால் கடைசியில் ஐரோப்பாவுக்குச் செல்ல ஒரேயொரு விமானப் பயணச்சீட்டு வாங்கத் தேவையான பணத்தை மட்டுமே அவர்களால் சேர்க்க முடிந்தது. நாங்கள் இருவரும் ஒன்றாகக் கிளம்புவதற்குப் பதிலாக, முதலில் அவன் போவதாகவும், பிறகு நான் போவதாகவும், மீண்டும் அவன் போவதாகவும் திட்டங்கள் மாறின. இவற்றுக்கு ஆதரவான, எதிரான காரணங்களெல்லாம் இப்போது எனக்கு மறந்துவிட்டன, இறுதியில் அது இளையவனான நான்தான் என்று முடிவானது.
ஒரு வருடம் கழித்து நான் புறப்பட்டேன். இத்தாலி பிரான்ஸ் இவற்றின் அரை டஜன் நகரங்களில் வாழ்க்கையைத் தொடங்கும் முயற்சிகளுடன், ஒரு சுற்றுவழியில் என் பயணம் தொடர்ந்தது. புதிய புதிய தொலைபேசி எண்களிலிருந்து இடைவிடாமல் குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தேன். நம்பிக்கையூட்டும் செய்திகள். அத்துடன் பணமும். இப்போது பயன்பாட்டில் இல்லாத அந்த எண்களும் நான் தங்கியிருந்த முகவரிகளும் இன்னும் எனக்குள் மனப்பாடமாக இருக்கின்றன. அந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் என் உடலின் ஒரு பகுதி இன்னமும் எஞ்சியிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அங்கே என்னுடன் பழகியவர்களுக்கு எப்போதாவது என் நினைவு வரக்கூடும். எந்தக் குறிப்பிட்ட காரணமுமின்றி எப்போதோ தற்செயலாகச் சந்தித்த ஒருவரது முகம் திடீரென நமக்கு நினைவுக்கு வருவதில்லையா, அதுபோல. என் நினைவிலுள்ளவற்றை ஏன் நினைவில் வைத்திருக்கிறேன், மறந்து போனவற்றை ஏன் மறந்துபோனேன் என்பதெல்லாம் எனக்கு விளங்குவதில்லை.
லண்டனை அடையும்வரை தொடர்ந்து வடக்கு நோக்கிப் பயணித்தேன். கெய்ரோ சர்வதேச விமான நிலையத்தில் என் அண்ணனிடம் விடைபெற்றதிலிருந்து இங்கே வந்து இறங்கியது வரையிலான என் பயணம் மொத்தம் நான்கு ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. களைத்துப் போனவனாய் சற்றே மாறிய மனிதனாய் இங்கு வந்து சேர்ந்தேன். ஆனால் நிச்சயமாக என்னிடம் முன்புபோல அதீத நம்பிக்கையோ, அச்சமோ இருக்கவில்லை. கடந்த எட்டு வருடங்களாக லண்டன்தான் என்னுடைய வீடு. வீடு – சொந்தமில்லாத ஒரு நகரத்தைக் குறிக்க எத்தனை விசித்திரமானதொரு வார்த்தை. அப்படியிருந்தும் சிலநேரம் இந்த நகரத்தை விட்டு வெளியேற முடியாமலே போய்விடுமோ என்ற அச்சவுணர்வு என்னை ஆட்கொள்கிறது.
நான் இங்கு வந்து சேர்ந்த நாளன்று “நான்கு வருடங்கள்” என்றான் என் அண்ணன். அதன் பிறகும் ஓரிரு முறை இதைச் சொல்லியிருக்கிறான், ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சியும் ஆறுதலும் ததும்பும் தொனியில். “ஒரு பட்டப்படிப்பை முடிப்பதற்கான காலம். ஒருவழியாக நீ பட்டப்படிப்பை முடித்துவிட்டாய், தம்பி.”
நான் லண்டனை வெறுக்கிறேன். ஒரேநேரத்தில் அதை வெறுக்கவும் நேசிக்கவும் செய்கிறேன். எப்போதும் நம்மால் விட்டு வெளியேற முடியாது என்று நினைக்கின்ற இடங்களைத்தான் ஒரேநேரத்தில் நாம் வெறுக்கவும் நேசிக்கவும் செய்கிறோம் என்பதை அவன் புரிந்துகொண்டு விடுவானோ என்ற பயத்தில் இதை என் அண்ணனிடம் நான் சொன்னதில்லை. அவன் எப்படி இதை எடுத்துக்கொள்வான் என்பது எனக்குத் தெரியும். என்னைப் போன்றவர்களை இங்கு யாரும் விரும்புவதில்லை என்ற யதார்த்தத்தை நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்பதையும் அவனிடம் சொன்னதில்லை. தேவைப்படலாம் ஆனால் விரும்பப்படுவதில்லை. அது வெளிப்படையாகவே தெரியும். லண்டனில் மட்டுமல்ல பொதுவாக வாழ்க்கையிலுமே இதுபோன்றவற்றை ஓரளவு வரை அசட்டை செய்தாலன்றி தொடர்ந்து மேற்செல்ல இயலாது என்பதைப் புரிந்துகொண்டு விட்டேன் என்பதையும் அவனிடம் நான் சொல்லவில்லை. எதையும் பெரிதாகக் கவனத்தில் கொள்ளாமல் கடந்துபோய்க்கொண்டே இருக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் சொல்வது நான் நன்றாக இருக்கிறேன் என்பதை உணர்த்தத்தான். நான் விலகியிருக்கப் பழகிக்கொண்டேன் அதனால் நன்றாக இருக்கிறேன். எனக்குத் தொழில் திறமை இருப்பதை அறிந்துகொண்டேன். இப்போது ஒன்றல்ல, மூன்று சிறிய கடைகளை – இங்கே அவற்றை ‘நியூஸ்ஏஜென்டுகள்’ என்று சொல்வார்கள் – நான் நடத்துகிறேன்.
முதன்முதலில் இந்தத் தொழிலில் இறங்கியபோது “எந்தச் சிக்கலிலும் மாட்டிக்கொள்ளாதே” என்றாள் என் அம்மா. “அரசியல் பக்கம் போகாதே. அரசியல் அழிவைத்தான் தரும்.”
இது என் அண்ணனுக்கு மிகுந்த வேடிக்கையாக இருந்தது. பின்னணியில் அவன் சிரிக்கும் சத்தம் கேட்டது.
“அம்மா, நியூஸ்ஏஜென்டுகளுக்கும் செய்திகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நாங்கள் மளிகைப் பொருட்களையும் வீட்டு உபயோகப் பொருட்களையும்தான் விற்கிறோம். பால், முட்டை, கழிப்பறை அடைப்பு நீக்கி போன்றவற்றை” என்றேன் நான்.
“கூடவே பத்திரிகைகளையும் நாளிதழ்களையும்” என்று என் அண்ணன் இடைமறித்தான். அம்மா கைபேசியை ஸ்பீக்கரில் போட்டிருப்பது தெரிந்தது.
மூன்று கடைகளுமே ஒரு சதுர மைல் சுற்றளவுக்குள் அமைந்துள்ளன. அவற்றுக்கிடையே நடப்பதிலேயே எனது நாட்களைக் கழிக்கிறேன். ஒன்பது பேரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறேன். உள்ளூர்வாசிகளுக்கு இப்போது என்னை நன்றாகத் தெரியும். தெருவில் நடக்கும்போது என்னைப் பார்த்தால் வந்தனம் சொல்கிறார்கள். சிலர் என்னைப் பெயர் சொல்லி அழைக்கிறார்கள். எனக்கும் அவர்களில் பலரது பெயர்களைத் தெரியும், அவர்களது குழந்தைகள், ஏன் அவர்களது செல்ல நாய்களின் பெயர்கள்கூடத் தெரியும். அவை முக்கியமானவையாகவோ அல்லது அப்படி இல்லாமலோ இருக்கலாம், இருந்தும் இந்த வேலையில் நீங்கள் சில விஷயங்களைக் கற்றுக்கொள்கிறீர்கள்: மக்கள் எவற்றை அருந்த விரும்புகிறார்கள், எந்த நாளிதழ்களைப் படிக்கிறார்கள், தங்கள் குழந்தைகளது இனிப்பு உண்ணும் ஆவலைக் கட்டுப்படுத்த எப்படி முயல்கிறார்கள், சபலமுற்றவர்களாய் அவர்களே சிலநேரம் புகையிலையை வாங்கிக்கொண்டு அதைத் தங்கள் துணையிடம் சொல்ல வேண்டாம் என்று நம்மிடம் எப்படி கேட்டுக்கொள்கிறார்கள், தனிமையில் வாழும் ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு வாரமும் லாட்டரிச் சீட்டு வாங்குவது உண்மையிலேயே பரிசாகக் கிடைக்கப்போகும் பணத்துக்காக அல்ல கடையிலிருப்பவரோடு பேச்சுக் கொடுக்க அமையும் சந்தர்ப்பத்துக்காகத்தான் என்பதுவரை பலவற்றை.
ஒவ்வொரு மாதமும் நான் வீட்டுக்கு அனுப்பும் பணம் என் செலவுக்கென நான் வைத்துக்கொள்ளும் தொகையை விட அதிகம். நான் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகான காலத்தில் அந்நியச் செலாவணி விகிதம் ஒரே திசையில் வேகமாக உயர்ந்துவிட்டது. நான் முதன்முதலில் வீட்டைவிட்டு வெளியேறியபோது ஒரு பிரிட்டிஷ் பவுண்டுக்கு பதினோரு எகிப்திய பவுண்டுகள் என்றிருந்தது, இப்போது அது எழுபது. ஒரு பேச்சுக்கு என் அப்பாவும் அண்ணனும் தங்களது உழைக்கும் திறனை இழந்துவிட்டார்கள் என்று வைத்துக்கொண்டால்கூட என் குடும்பத்துக்கு எந்தக் குறையும் இருக்காது.
என் அண்ணன் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டான், நான் அனுப்பிய பணத்தில் பாதியை முதலீடு செய்தான். புறநகர்ப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அடுக்ககத்தில் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே ஒரு வீட்டை வாங்கியிருந்தான். அதற்கு சுலபத் தவணை முறையில் பணம் செலுத்தும் வாய்ப்பை அளித்திருந்தார்கள். கட்டி முடிக்கப்பட்டபோது வீட்டின் மதிப்பு இரட்டிப்பாகிவிட்டிருந்தது. வீட்டை அவன் ஓர் இளம் தம்பதியருக்கு வாடகைக்கு விட்டிருந்தான், அவர்களும் மாதம் தவறாமல் வாடகையைக் கொடுத்து வந்தார்கள். இதுபோன்ற வேறு முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்கின்றனவா என்று அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். “ஒருவழியாக நீ சொந்த ஊர் திரும்பியதும் வசதியாக உனது ஓய்வைக் கழிப்பதற்காக” இதுபோன்ற சொத்துகளின் “தொகுப்பு” ஒன்றை உருவாக்கி வைக்க வேண்டும் என்று சொல்வான்.
நான் வீட்டைவிட்டு வெளியேறுவது எவ்வளவு கடினமாக இருந்தது என்பது வேறு யாரையும் விட அவனுக்கு நன்றாகத் தெரியும். என்னை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது நான் எவ்வளவு பயந்திருந்தேன் என்பதும் வேறு யாரையும் விட அவனுக்கு நன்றாகத் தெரியும். அப்போது காலம் இரண்டாகப் பிளவுபட்டு கடந்த காலம் உடைந்து நொறுங்கிவிட்டது போலவும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்னோக்கிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பது போலவும் எனக்குத் தோன்றியது. அதனால் ஏற்பட்ட துயரமும் கூடவே உண்டான என்னை முழுமையாக மறுஉருவாக்கம் செய்துகொள்ள வேண்டும் என்ற தீவிரமான, வெறிமிக்க உந்துதலும் என் நினைவிலிருக்கின்றன. அந்தத் தீவிர உணர்ச்சிகள் இப்போதும்கூட என்னோடு இருக்கின்றன, இந்த விதியோடு என்னைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளாக. நாங்கள் விடைபெற்றபோது என் கண்களில் இருந்த அச்சத்தை என் அண்ணன் பார்த்தான் என்பதை அறிவேன். எனக்கு எவ்வளவு தைரியம் தேவைப்பட்டது என்பதை உணர்ந்தவனாய் இதையெல்லாம் சிரமமாக எடுத்துக்கொள்ளாதே, அப்படி உணர்வதற்கு முன்னரே நீ வீடு திரும்பியிருப்பாய், வாழ்க்கை மேம்பட்டதாக, “மிக மிக மேம்பட்டதாக” மாறும் என்றும் சொல்லிக்கொண்டே இருந்தான். நான் அவனை நம்பவில்லை ஆனால் நம்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அவன்மீது எனக்குக் கோபம் இருந்தது, நன்றியுணர்வும் இருந்தது. அவனிடமிருந்து விலகி நடந்தபோது இந்த எதிரெதிர் உணர்ச்சிகள் ஒன்றோடொன்று மோதின. ‘அவன் என்னை ஏமாற்றவில்லை. அவனும் வேதனையில் இருக்கிறான் என்பதை நான் அறிவேன்’ என்று என் மனம் சொன்னது. ஆனால் மலை விளிம்பிலிருந்து கீழே குதிப்பதற்கு முன் ஒருவன் தனது கண்களை மூடிக்கொள்வதைப் போல லேசானதொரு விலகலுடன் அவன் அதனைத் தாங்கிக்கொண்டான். இருப்பினும் முன்பின் அறியாத உலகத்துக்குள் நுழைந்தது அவனுக்கு இரண்டு வயது இளையவனும், அவன் வழக்கமாக அழைப்பதைப் போல அவனுடைய சிறந்த நண்பனுமான நான்தான்.
—-
சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு நான் ஊருக்குச் சென்று வந்த கடைசிப் பயணத்துக்குப் பிறகுதான் என்னைக் கெய்ரோவில் பார்த்ததாக என் அண்ணன் சொல்லத் தொடங்கினான். அதில் ஏதோவொரு குரூரமும் விசித்திரமும் இருந்தது. ஏன் அவன் என்னிடம் இப்படி ஒரு விஷயத்தைச் சொல்கிறான் என்று எனக்குப் புரியவில்லை. அவன் அப்படிச் சொன்ன ஒவ்வொரு முறையும் ஒரு விசித்திரமான கொந்தளிப்புக்கு ஆளானதைப் போல, என்னால் முழுமையாக விளக்க முடியாத வழிகளில் அது என்னைப் பாதித்தது. எனக்கு அது ஆறுதலாக இருந்த அதேநேரம் ஆத்திரத்தையும் தந்தது. அந்த உணர்வு எதுவாக இருந்தாலும் சரி, நான் செயலற்றவனாகி தாக்குதலுக்கு ஆட்பட ஏதுவான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன்.
இன்னொரு நாள், நாங்களிருவரும் பதின்பருவத்தில் வியந்து பார்த்த அந்தப் பழமையான புகழ்பெற்ற ஜமாலெக் பகுதியில் ஒரு உணவகத்தில் தனியே நான் அமர்ந்திருப்பதை யாரோ பார்த்ததாக அவன் சொன்னான். பெரும் கனவுகளோடு நாங்கள் இருவரும் அந்தத் தெருக்களில் நடந்ததும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட கட்டடங்களை அண்ணாந்து பார்த்து அங்கே வாழும் ஒரு நாளை ஆசையுடன் கற்பனை செய்துகொண்டதும் எனக்கு நினைவுக்கு வந்தன.
வெளிநாட்டில் கழிந்த இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் நான் சில பயங்கரமான காலகட்டங்களைக் கடந்திருக்கிறேன். ஆனாலும் நான் உண்மையிலேயே நேசித்த யாவரும் கடல் கடந்து வெகு தொலைவில் வாழ்கிறார்கள், அதனால் என் நிலைமை இங்கே எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை அவர்களால் அறிய முடியாது என்பது எனக்குச் சற்றே நிம்மதியாக இருந்தது. அந்நிய நாடொன்றில் வாழும்போது, உங்களைத் தெரிந்த யாரும் அறிந்துகொள்ளும் ஆபத்து இன்றி கோடைகாலத்தில் பூங்காக்களிலும் குளிர்காலத்தில் இரயில் நிலையங்களிலும்கூட படுத்து நீங்கள் தூங்க முடியும். அப்போதெல்லாம் என்னை இயங்க வைத்தது என்றாவது ஒருநாள் சொந்த ஊருக்குத் திரும்பி ஜமாலெக்கில் ஒரு வீட்டை வாங்கிவிடுவோம் என்ற கற்பனைதான். கடைசியாக அங்கே, நான் பிறந்த நகரத்திலேயே, எனக்குரிய மரியாதையான சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். முற்றிலும் அறிமுகமற்ற மனிதர்களிடம் கூட ஏதோவொரு குடும்பப் பிணைப்பை அங்கே என்னால் உணர முடியும்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில், கடவுள் எனக்களித்த வெற்றிகளையடுத்து நான் ஜமாலெக்கைப் பற்றிப் பெரிதாக யோசிக்கவேயில்லை. சொல்லப்போனால் என் அண்ணன் தொலைபேசியில் அழைத்து முதல்முறை, குரலில் ஒரு குறும்பான சிரிப்போடு, “ஜமாலெக்கின் பிரேசில் தெருவைக் கடந்துபோகும்போது உன்னைப் பார்த்தார்களாமே” என்று சொல்லும்வரை ஏறக்குறைய அதை நான் மறந்துவிட்டிருந்தேன் என்பதை இப்போது உணர்கிறேன்.
அப்போது நாங்கள் இருவருமே சிரித்தோம்.
ஆனால் அன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. அந்தக் கனவிலிருந்து நான் விடுபடவில்லை, உள்ளுக்குள் அதை அழுத்தி மட்டுமே வைத்திருந்தேன் என்பதைத் தெரிந்துகொண்டேன். பிரேசில் தெருவில் ஒரு வீட்டை நான் அழகுபடுத்துவதாகவும், கெய்ரோவின் வானமும் அதற்குக் கீழே நைல் நதியும் ஒரு கணம் தங்களது மூச்சடக்கி நிற்பது போலத் தோன்றும் அந்த அந்திப் பொழுதில் பால்கனியில் அமர்ந்தபடி தேநீர் அருந்துவதாகவும் கற்பனை செய்தவாறு படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன்.
ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குப் பிறகு என் அண்ணன் மீண்டும் அழைத்து, அவனுடைய தோழி ஒருத்தி நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு புத்தகக் கடையின் அலமாரியில் நான் “பதுங்கிப் பதுங்கி எதையோ தேடிக்கொண்டிருந்ததை” பார்த்ததாக உறுதியாகச் சொன்னாள் என்றான்.
“ஏன் அவனிடம் நின்று பேசவில்லை?” என்று என் அண்ணன் அவளிடம் கேட்டிருக்கிறான், குரலில் நான் உணர்ந்த அதே சிரிப்புடன்தான் கேட்டிருப்பான் என்று நினைக்கிறேன்.
“ஏனென்றால்” அந்தப் பெண் அவனிடம் சொல்லியிருக்கிறாள், “உன் தம்பி ஏதோ… தீவிரமான வேலையில் ஈடுபட்டிருப்பது போல் இருந்தது.” அதைச் சரியாக என்ன அர்த்தத்தில் சொல்கிறோம் என்பது தெரியாதவளைப் போல ‘தீவிரமான’ என்ற வார்த்தைக்கு முன்னால் அவள் சற்று நிறுத்தியிருக்கிறாள். “நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்” என்று அவள் தொடர்ந்தாள், “அவன் வெறுமனே புத்தகங்களைப் பார்ப்பது போலத் தெரியவில்லை, தன் வாழ்க்கையே ஒரு புத்தகத்தைச் சார்ந்திருப்பது போலவும் அந்தப் புத்தகத்தை அங்கே அவன் தேடிக்கொண்டிருப்பது போலவும் இருந்தது.”
என் அண்ணன் இதைச் சொல்ல அழைக்கையில் தற்செயலாக நான் ஒரு புத்தக அலமாரியின் முன் நின்றபடி புத்தகங்களின் முதுகுப் பக்கப் பெயர்களைப் படிப்பதற்காகத் தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், படிப்பதற்கு ஏதேனும் கிடைக்குமா என்ற எந்த நோக்கமும் இல்லாத ஒரு நம்பிக்கையில் எங்கள் பகுதியிலிருந்த புத்தகக் கடைக்குள் நுழைந்திருந்தேன் – ரத்தம் தெறிக்கும், திருப்பங்கள் நிறைந்த, பக்கங்களை வேகமாகப் புரட்டச் செய்யும், இந்த உலகத்திலிருந்து சற்றே விலகியிருக்க உதவும் ஏதாவதொரு விறுவிறுப்பான நாவலைத் தேடி. இந்தத் தற்செயல் அவனுக்கு வேடிக்கையாக இருக்கும் அத்துடன் நான் பொய் சொல்லவில்லை, லண்டனில்தான் இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கையில் நான் இருக்கும் இடத்தை அண்ணனிடம் சொன்னேன். ஆனால் அவனோ “அப்படியா” என்றான். சுரத்தற்ற குரலில் சந்தேகப்படுவது போன்ற தொனியில் அதைச் சொன்னான்.
என்னால் அதற்குமேல் கவனத்தைச் செலுத்த முடியாமல் வெறும் கையோடு புத்தகக் கடையை விட்டு வெளியேறினேன். உண்மையிலேயே அவன் என்னை நம்பவில்லையா? நான் ஒரு இரட்டை வாழ்க்கை வாழ்வதாக அவன் சந்தேகிக்கிறானா? கெய்ரோவிற்கான என் பயணங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் அறிவித்துவிட்டுச் செல்லும் பயணங்கள் ஒருபுறமும், ரகசியமாக நகரத்துக்குள் நுழைந்து இங்கே லண்டனில் அமைத்துக் கொண்டது போன்ற யாருடனும் தொடர்பில்லாத ஒரு வாழ்க்கையை அங்கும் வாழ்ந்து பார்க்க முயல்வது மறுபுறமுமா? இரண்டையும் ஒன்றை மாற்றி ஒன்று என மேற்கொள்கிறேனா? அத்துடன், இந்த இரு நகரங்களுக்கும் இடையிலான விமானப் பயணம் ஐந்து மணி நேரம் மட்டுமே, ஒரு சிறிய புத்தகத்தைப் படித்து முடிக்கப் போதுமான நேரம். அவனுடைய குரலில் நான் உணர்ந்த தயக்கம் சந்தேகமாக இருக்கலாம், ஒருவேளை அது என்னை என் போக்கில் விட்டுவிட வேண்டும் என்ற அவனுடைய விருப்பத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். ஒருநாள் அது என்னை அவனுக்கு நெருக்கத்தில் கொண்டுவந்து மீண்டும் என்னை ஊருக்குத் திரும்பச் செய்யும் என்ற நம்பிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் இந்தச் சந்தேகத்தின் அல்லது நம்பிக்கையின்மையின் ஆழத்தில் ஒரு புதிய சோகத்தை நான் உணர்ந்தேன். என் வெளிநாட்டு வாழ்க்கை அடுத்தவரை நான் நம்பவைக்க வேண்டிய நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டது என்ற மறைமுகமான உண்மையே அந்தச் சோகம். என்னை இப்போது தடுத்து நிறுத்துவது, அவன் ஒருமுறை சொன்னது போல “ஒருவன் தனது அதிர்ஷ்டத்தைத் தேடும் உயரிய முயற்சி” மட்டுமல்ல, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நான் வேறு ஒரு வாழ்க்கைக்குப் பழகிவிட்டதும், அது என் சொந்த இடம் என்ற உணர்வின் திசைகாட்டியை மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகர்த்திவிட்டதும்தான்.
என்னை யாரோ பார்த்ததாகச் சொல்லும் என் அண்ணனின் கதைகளில் தடுமாற்றம் கலந்த ஒரு ஏமாற்றத்தின் தொனியை உணர்ந்தேன். அவனுடைய ஆரம்பகால வேடிக்கை உணர்வுக்குப் பிறகு தெளிவற்ற ஒரு கவலை அவனது தொண்டையை அடைத்துக்கொண்டு அவனது வார்த்தைகளில் அது வெளிப்பட்டது. அதைவிட விசித்திரமானது என்னவென்றால் நானும் என்னை இரண்டாகப் பிளவுபட்டவனாக உணரத் தொடங்கியது. பாதி இங்கேயும், பாதி அங்கேயும். எனவே, ஏதேனும் ஒரு உணவகத்திலோ அல்லது புத்தகக் கடையிலோ அல்லது நாங்கள் இருவருமே நன்கறிந்த ஒரு தெருவிலோ யாரோ என்னைப் பார்த்ததாக அவன் சொல்லும்போதெல்லாம் அந்தச் செய்தி எனக்குள் வீட்டையும் குடும்பத்தையும் குறித்த ஒரு தீவிரமான ஏக்கத்தை உருவாக்குவது போலிருந்தது, நான் வேறெங்கோ இருப்பதாக பகல்கனவு காண்பதாக உணரத் தொடங்கினேன். தற்போதைய நான், அதாவது சொந்த வீட்டை விட்டு வெளியேறி லண்டனில் அன்றாட வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கும் நான், ஒருவேளை என் சொந்த மண்ணிலேயே இருந்திருந்தால் எத்தகையவனாக மாறியிருப்பேனோ அந்தக் கற்பனை மனிதனிடமிருந்து ஏதோ ஒரு வகையில் என்னைத் துண்டித்துக்கொண்டு விட்டேன். நாட்கள் நகர நகர, இரண்டாகப் பிளவுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்ற இந்த மூடநம்பிக்கையை நான் பற்றிக்கொண்டேன். முன்பு எப்போதையும்விட அதிகத் தனிமையை உணரத் தொடங்கினேன். கெய்ரோவில் அவர்கள் என்னைப் பார்த்ததாகக் கூறிய சந்தர்ப்பங்களில் நான் தனியாகவோ அல்லது ஏதாவதொரு சங்கடமான தகராறில் ஈடுபட்டவாறோ இருந்ததாகச் சொல்லப்பட்டது எனக்கு மேலும் தொந்தரவளிப்பதாக இருந்தது. லண்டனில் என் வாழ்க்கை, பெயரளவுக்கு சில சொற்ப விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு எப்படியோ நான் ஓட்டிக்கொண்டிருந்த அந்த வாழ்க்கை, மெலிந்து நம்பிக்கையற்றதாக மாறியது. இப்போதெல்லாம் அரிதாகவே அது உண்மையானதொரு வாழ்க்கை என்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது.
——-
நாட்கள் அமைதியாகக் கடந்தன. குறிப்பிட்ட எல்லைக்கோடு எதுவுமில்லாமல், நாட்களுக்கு இடையிலான பிளவு தெளிவற்றதாகிவிட்டது போலவும், காலம் அத்தியாயங்களாகப் பிரிக்கப்படாமல் ஒருசில தனித்த அடையாளங்களுடன் தொடர்ந்து ஒரே மாதிரியாக விரிக்கப்படும் துணிச் சுருணையைப் போலவும் காட்சியளித்தது. வீழ்தலின் அமைதியாக இருந்தாலுமேகூட இதில் ஒரு அமைதி இருந்தது. அத்துடன், நான் ஏதோ பனிமூட்டம் சூழ்ந்த, எல்லைகளால் பகுக்கப்படாத நிலப்பரப்பைப் போலிருக்க, என்னுள் மரத்துப்போன ஒரு சமநிலையையும் உணர்ந்தேன்.
வழக்கமாக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை அழைக்கும் வழக்கத்தைக் கொண்ட என் அண்ணன் முற்றிலும் அமைதியாகிவிட்டிருந்தான். அவனது குரலைக் கேட்டு அல்லது அவனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தியாவது வந்து முழுதாக மூன்று வாரங்கள் கடந்துவிட்டன. இந்தப் புதிய மாற்றத்தில் எனக்கு ஒரு நிம்மதி கிடைத்தது என்று சொன்னால் அது பொய்யில்லை. என் அம்மாவிடமிருந்து குறுஞ்செய்திகள் வந்துகொண்டுதான் இருந்தன. நான் நலமாக இருக்கிறேனா, ஆரோக்கியமாக இருக்கிறேனா, தூங்குகிறேனா, சரியாகச் சாப்பிடுகிறேனா என்பதை உறுதிப்படுத்துவதிலேயே அவை கவனம் செலுத்தின.
பிறகு, ஒருநாள் பிற்பகலில் சேரிங் க்ராஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த 24ஆம் எண் பேருந்தின் மேல் தளத்தில் நான் அமர்ந்திருந்தபோது அவன் அழைத்தான். அவனது குரல் சரியில்லை. முதல் வார்த்தையிலிலேயே ஒரு பதற்றமான அல்லது கலக்கமடைந்த தொனியை நான் உணர்ந்தேன். எங்கள் அப்பாவோ அம்மாவோ தூக்கத்திலேயே இறந்துவிட்டார்கள், அல்லது படியிலிருந்து வழுக்கி விழுந்துவிட்டார்கள், அல்லது கவனமில்லாத ஓட்டுநர்களில் ஒருவனால் சாலையில் அடிபட்டுவிட்டார்கள், அல்லது கடுமையான பக்கவாதம் வந்து பேசவோ நகரவோ முடியாத நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற கெட்ட செய்தியைச் சொல்ல அவன் அழைக்கும் அந்த நாளை நான் நீண்ட காலமாக அஞ்சியபடி எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். பேச அவனுக்கு வாய்ப்புத் தராமல் இயல்பை மீறிய உரத்த குரலில் – பேருந்தில் எனக்கு மூன்று வரிசைகளுக்கு முன்னால் அமர்ந்திருந்த பெண் ஆட்சேபிக்கும் முகத்துடன் திரும்பிப் பார்த்தாள் – “என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று? எல்லாம் நன்றாகத்தானே இருக்கின்றன? உறுதியாகத்தான் சொல்கிறாயா? பிறகு ஏன் உன் குரல் இப்படி இருக்கிறது? எதை மறைக்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். இவற்றை நான் கேட்டுக்கொண்டிருந்தபோதுமே கூட என்னை ஆட்கொண்டிருந்த அந்தப் பதற்றமான உணர்ச்சியைக் கண்டு நானே குழப்பமடைந்தேன்.
“என் குரலில் அப்படி என்ன கண்டுவிட்டாய்?” என்றான் அவன். “இங்கே ஒன்றுமில்லை. நீதான்…” என்று நிறுத்தினான். “நான் இப்போதுதான் மஜீத்திடம் போனில் பேசினேன். உனக்கு மஜீத்தை நினைவிருக்கிறதா?”
நிச்சயமாக எனக்கு அவனை நினைவிருக்கிறது. பள்ளிக் காலத்தில் மஜீத்தும் நானும் மிகவும் நெருக்கமாக இருந்தோம். இப்போது அதிகமும் அவன் என் அண்ணனின் நண்பனாக மாறிவிட்டான். அப்படி இருக்கையில் ஏன் இந்தக் கேள்வி? நான் மௌனமாக இருந்தேன், என் கண்கள் அந்தப் பெண்ணின் தலையின் பின்புறத்திலேயே நிலைத்திருந்தன. பேருந்தின் அசைவுக்கேற்ப அவளது மென்மையான பழுப்பு நிற முடி அசைந்தது.
“நீ பத்திரமாகத் திரும்பியதற்கு வாழ்த்துச் சொல்லத்தான் அவன் போன் செய்தான்” என்றான் என் அண்ணன். “உன்னை எப்போது பார்க்கலாம், நாம் மூவரும் எப்போது ஒன்றாகச் சந்திக்கலாம் என்று கேட்டான்.”
நான் ஏதேனும் பேசுவேன் என்று எதிர்பார்ப்பது போல் அவன் நிறுத்தினான்.
“நீ லண்டனில் இருப்பதாகச் சொன்னேன்” என்று தொடர்ந்தான். “நிச்சயமாகச் சொன்னேன். வேறு என்ன சொல்வது? ஆனால் அவன் அதை விடுவதாக இல்லை. கோபப்பட்டு, ஏன் நீ பொய் சொல்கிறாய் என்று கேட்டான். ‘என் கண் முன்னே அவனைப் பார்த்தேன்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.”
இங்கே அவன் மீண்டும் நிறுத்தினான். நான் அதை உறுதிப்படுத்த அல்லது மறுக்க முயலுவேன் என்று காத்திருந்தானா?
“சரிதான்” என்றேன் நான், “இது சுத்த முட்டாள்தனம்.”
“நீ ஒரு உணவகத்துக்கு வெளியே உட்கார்ந்திருந்தாயாம்” என்றான் அவன். “அவன் வாடைக் காரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்தானாம். குறிக்கப்பட்ட ஓர் அலுவல் சந்திப்புக்கு ஏற்கெனவே தாமதமாகி விட்டிருந்தது, இல்லாவிடில் வீதியைக் கடந்து ஓடிவந்து உனக்கு முகமன் கூறியிருப்பேன் என்றான். ‘அவனைக் கட்டியணைக்க வேண்டும் போல் இருந்தது’ என்று சொன்னான்.”
அந்தப் பெண் மீண்டும் திரும்பிப் பார்த்தாள். நான் உறைந்துபோய் போனில் ஒலித்த குரலைக் கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்த அவள் இந்த முறை எந்த உணர்ச்சியுமற்ற முகத்துடன் மீண்டும் முன்னோக்கித் திரும்பினாள், அவளது முடி மீண்டும் சீரானது.
“மஜீத்துக்கு உன்மேல் பிரியம்” என்றான் என் அண்ணன், தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவது போல.
இதயம் துடிப்பது என் காதுகளில் கேட்டது, அது என் மேல் அண்ணத்தில் எதிரொலிப்பதையும் உணர முடிந்தது.
“இன்னொரு விஷயமும் சொன்னான்” என்று தொடர்ந்தான் என் அண்ணன், “அதுதான் மஜீத் உன்னை நெருங்க விடாமல் தடுத்தது.” இந்த இடத்தில் என் அண்ணன் லேசாகச் சிரிக்க முயன்றான். “நான் பலமுறை கேட்க வேண்டியிருந்தது, இறுதியாக அவன் சொல்ல ஒப்புக்கொண்டபோது அதை உன்னிடம் சொல்லக்கூடாது என்று என்னிடம் வாக்குறுதி பெற்றுக்கொண்டான். நீ தவறாகப் புரிந்து கொள்வாய், அவன் உளவு பார்ப்பதாக நினைப்பாய் என்று பயந்தான். அவன் நல்ல மனிதன். உனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறான்.”
ஏதோ காரணத்துக்காக என் நினைவுகளில் வெனிஸ் நகரம் தோன்றியது. வீட்டைவிட்டு வெளியேறிய பிறகான முதல் கோடைகாலத்தில் அந்நகரத்தின் ஒரு சிறிய மூன்று நட்சத்திர விடுதியில் தூய்மைப் பணியாளனாக நான் பணி செய்தேன். அந்த இடம் வெனிஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க மையப்பகுதிக்கு அந்தப் பக்கம், நீர்வெளியைக் கடந்து ஜியூடெக்காவில் இருந்தது. எனக்கு அந்த மொழி தெரியாது. என் தாய்மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் எனக்குத் தெரியாது. அங்கே என் ஓய்வு நேரங்களில் நிழலான ஒரு இடத்தைக் கண்டுபிடித்து தண்ணீருக்கு அருகே அமர்ந்து படகுகள் கடந்து செல்வதைப் பார்ப்பேன்.
“இறுதியில்” என்று என் அண்ணன் தொடர்ந்தான், “அவன் எதைப் பார்த்தான் என்று சொன்னபோது, எதை உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டானோ அதில் அவ்வளவு பெரிய விஷயம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அது ஒன்றும் தீவிரமானதும் இல்லை. நீ ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தாயாம், அவ்வளவுதான். உன்னோடு உணவகத்தில் அமர்ந்திருந்த மனிதருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தாயாம், அவர் வயதானவராம், நம் அப்பாவின் வயதிருக்கும் என்றான் மஜீத். அவர் உன்னை நோக்கிக் குனிந்து மிகவும் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தாராம், கைகளை ஆட்டிப் பேசிக்கொண்டிருந்தாராம். மஜீத்தினால் குரலைக் கேட்க முடியாவிட்டாலும், அந்த மனிதர் கத்தினார் என்பதில் அவனுக்குச் சந்தேகமில்லை. நீயும் கத்திக்கொண்டிருந்தாயாம். உன் கழுத்து நரம்புகள் புடைத்துத் தெரிந்ததை என்னால் பார்க்க முடிந்தது என்றான் மஜீத்.”
என் அண்ணன் கொட்டாவி விடுவதுபோல் நடித்தான். அவன் என்ன யோசிக்கிறான் என்பதை ஊகித்தேன். நான் எதுவும் பேசாதபோது அவன் சொன்னான் “எது எப்படியோ, உன்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், அவ்வளவுதான்.”
என் நாவைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். நான் இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்த ஒரு சிறிய முனகலையோ அல்லது வேறு சத்தத்தையோகூட நான் வெளிப்படுத்தவில்லை.
என் அண்ணன் மீண்டும் சிரிக்க முயன்றான். “விசித்திரமாக இருக்கிறது” என்றான், “வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு முந்தைய வருடம், நீ சிறுவனாக இருந்தபோது, நீயும் அப்பாவும் சிறிய விஷயங்களுக்குக்கூட முரண்பட்டு சண்டை போட்டுக்கொண்டிருந்த அந்த நாட்களின் காட்சிகளோடு இது எப்படி ஒத்துப்போகிறது பார்த்தாயா? அதெல்லாம் நினைவிருக்கிறதா?” பிறகு, இரக்கத்தினாலா அல்லது எனக்குக் கோபமூட்ட வேண்டுமென்ற நோக்கத்திலா என்று தெரியவில்லை, “அது நடந்து வெகு காலமாகிறது” என்று சேர்த்துக் கொண்டான்.
பேருந்து இன்னும் சேரிங் க்ராஸ் சாலையில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. மீண்டும் என் வெனிஸ் நினைவுகளுக்குள் செல்ல முயன்றேன். ஏன் வெனிஸ், ஏன் இப்போது, ஏன் நீரில் கண்ட அந்த பிம்பம்? இங்கே என் வாழ்க்கை ஏதோ அருவமான ஒன்றாக அல்லது கற்பனையான ஒன்றாக மாறிவிட்டது போல, பேருந்து கடந்து சென்ற கட்டடங்களின் ஒவ்வொரு சன்னலும் எனக்குள் ஒரு தீவிர ஏக்கத்தைத் உண்டாக்கின. பல வருடங்களாகத் திறக்கப்படாதது போன்று கறுத்துப்போன சன்னல் கண்ணாடிகளைக் கொண்ட இந்த அறைகள்தாம் எவ்வளவு பெரிய இரட்சிப்பை வழங்குவதாகத் தோன்றுகின்றன. அப்படியிருந்தும் அவற்றை நான் எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தேனோ அவ்வளவுக்கு என் உள்ளம் தளர்வுற்றது. அவற்றிலிருந்து என் பார்வையைத் திருப்பிக்கொள்ள வேண்டியிருந்தது. என் பார்வையைத் தரையில் பதித்தபடி அப்பாவுடனான அந்த வாக்குவாதங்களை நினைவுகூராமலிருக்க என்னால் இயன்ற எல்லாவற்றையும் முயன்றேன். குறிப்பாக அந்த வாக்குவாதங்களை நினைவுகூராமலிருக்க என்று அல்ல, ஏனென்றால் கெய்ரோவை விட்டு நான் கிளம்பிய பிறகு எதைக் குறித்து அந்த வாக்குவாதங்கள் நிகழ்ந்தன என்பதே மறந்துபோய்விட்டிருந்தது. நான் தொடர்ந்து வீட்டிலேயே இருக்க அனுமதிக்கப்பட்டிருந்தால், அப்பாவுக்கும் பதின்பருவ மகனுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் வழக்கமாகத் தீர்க்கப்படுவதுபோலத் தீர்க்கப்பட்டிருக்கக்கூடிய அந்தச் சண்டைகளிலிருந்து எஞ்சியது என்னவென்றால், என் வெனிஸ் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் வீட்டைக் குறித்த ஏக்கமும் குழப்பமான மனவருத்தமும் கலந்திருக்க மௌனமாக நான் வேலை செய்துகொண்டிருக்கையில் என்னைச் சூழ்ந்த மூச்சுமுட்ட வைக்கும் கசப்புப் புகைதான். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 24ஆம் எண் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த நான் என் வாயில் அதே கசப்புச் சுவையை மீண்டும் உணர்ந்தேன்.
——-
அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கி கூட்ட நெரிசல் மிகுந்த நடைபாதையில் நடந்தேன். என் குடும்பத்தினருக்கு முன்னால் நன்றாக உடுத்திச் செல்ல வேண்டுமென்ற ஆசையில் என் வருடாந்திர வீட்டுப் பயணங்களுக்கு முந்தைய நாட்களில் வாங்கிய ஆடைகள்தாம் என்னிடம் உள்ள ஆடைகள் என்பது எவ்வளவு விசித்திரமானது என்ற எண்ணம் திடீரென தோன்றியது. வீட்டைவிட்டுப் பிரிந்து சென்றதற்கு நானே பொறுப்பு, குற்றவாளி நானே. இதற்கான பரிகாரமாக குடும்பத்தினரை மகிழ்விக்கும் பொருட்டு நல்ல காலத்திலும் கெட்ட காலத்திலும் நான் அவர்களுக்குப் பரிசுகளைக் கொண்டு வந்து என்னை வெற்றி பெற்ற ஒருவனாகக் காட்டிக் கொண்டேன் என்பது முதல்முறையாக எனக்கு உரைத்தது. பன்னிரண்டு ஆண்டுகளில் பன்னிரண்டு வருகைகள், ஒன்றுமே ஒரு மாதத்துக்கு மேல் நீடிக்காது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாட்டைவிட்டு வெளியேறிய பிறகு குடும்பத்தோடு நான் சேர்ந்து செலவிட்ட மொத்த காலம் சுமார் ஒரு வருடம்தான். பன்னிரண்டில் ஒரு வருடம். எனக்கு ஒரு சராசரி ஆயுட்காலம் வழங்கப்பட்டால், நான் இறப்பதற்கு முன் என் நாட்டில் வாழ எனக்குக் கிடைக்கும் மொத்தக் காலம் சுமார் நான்கு ஆண்டுகள் மட்டுமே.
நான் மீண்டும் ஊருக்குச் செல்ல இன்னும் நான்கு மாதங்கள் இருந்தன, ஆனாலும் ஜெர்மின் தெருவில் உள்ள ஆடம்பரமான கடைகளில் ஒன்றில் புதிய காலணிகளை வாங்கிக்கொள்ள முடிவு செய்தேன். கோட்டும் கழுத்துப்பட்டியும் அணிந்த ஒரு சிப்பந்தி என்னைக் கவனித்துக்கொண்டான். என் வயதை ஒத்திருந்தாலும் அவன் மிகவும் இளையவனாகத் தெரிந்தான். உங்களைக் குற்றம் சாட்டப்பட்டவரைப் போல உணர வைக்கும், ஆரம்பம் முதலே உங்களை நீங்கள் தகுதியானவர் என்று நிரூபிக்க நிர்பந்திக்கும் அந்த ஆங்கிலேயக் கலையை அவன் ஏற்கெனவே கற்று தேர்ந்திருந்தான். இந்த ஒரு காரணத்திற்காகவே ‘செல்சி பூட்ஸ்’, ‘ஆக்ஸ்ஃபோர்ட்ஸ்’, ‘டெர்பிஸ்’, ‘லோஃபர்ஸ்’ எனப் பல ரகங்களை அணிந்து பார்க்க முடிவு செய்தேன். குதிரைத் தோலால் ஆன, நாடா கொண்டு இறுக்கிக் கட்டும் காலணி எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. குதிரைத் தோலில் காலணிகள் செய்வார்கள் என்பது அதுவரை எனக்குத் தெரியாது. அது விறைப்பாக மின்னியது, மெருகூட்டப்பட்ட பழங்கால மரத்தின் ஆழ்ந்த சீரற்ற வண்ணத்தில் இருந்தது. காலணிகள் கனமாக இருந்தன, ஒவ்வொன்றும் குறைந்தது மூன்று பவுண்டுகள் எடைகொண்டதாக இருக்க வேண்டும். அந்தக் கனமான காலணிகளால் நான் நிலைகொண்டவனாக உணர்ந்தேன். எனக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது கெய்ரோவின் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அளவுக்குப் பெய்த மழையை அந்தக் காலணிகள் என் நினைவுக்குக் கொண்டுவந்தன. நானும் என் அண்ணனும் பள்ளியிலிருந்து வீட்டுக்கு நடந்து செல்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. நாங்கள் நடந்து செல்லச் செல்ல எங்கள் காலணிகள் நீர் நிரம்பி கனத்தன. அப்போது நாங்கள் எவ்வளவு சிரித்தோம், அது எவ்வளவு புதியதாகவும் விநோதமானதாகவும் பரவசமூட்டுவதாகவும் இருந்தது என்பது நினைவுக்கு வந்தது. விற்பனையாளன் சலிப்புடனும் நான் அவனைத் தடுத்து வைத்திருப்பதான உணர்வுடனும் பார்த்துக்கொண்டிருக்க, கடை முழுவதும் முன்னும் பின்னுமாக நடந்து பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு அவனிடம் விலை கேட்டேன்.
“எண்ணூறு பவுண்டுகள்” என்றான். “நீங்கள் அவற்றை அணியாதவரை பதினான்கு நாட்களுக்குள் திருப்பித் தந்துவிடலாம்.”
“அப்படியானால் நான் இவற்றை அணிந்துகொண்டே வெளியே நடந்தால் அவ்வளவுதானா?”
“ஆமாம்” என்றான் அவன்.
என் பழைய ஜோடி காலணிகளைப் பெட்டியில் திணித்துக்கொண்டு ட்ரஃபால்கர் சதுக்கத்தை நோக்கி நடந்தேன். ‘அட்மிரல்டி’ மதுக்கூடத்துக்கு வெளியே உட்கார்ந்து பின்னணியில் தனது தூண்மீது நெல்சன் நின்றுகொண்டிருக்க என் காலை வானத்தை நோக்கி உயர்த்தி ஒரு படம் எடுத்தேன். “புதிய காலணிகள்” என்ற வார்த்தைகளுடன் அதை என் அண்ணனுக்கு அனுப்பினேன்.
அவன் அதைப் பார்த்துவிட்டான் என்பதைத் தெரிந்துகொண்டேன். அவன் பதில் அளிப்பான் என்று எதிர்பார்த்துத் திரையைப் பார்த்தேன். பிறகு குனிந்து என் கால்களைப் பார்த்தேன், வெட்கமாகவும் வருத்தமாகவும் இருந்தது. எண்ணூறு பவுண்டுகள் என்பது ஐம்பத்தாறாயிரம் எகிப்திய பவுண்டுகள் என்று கணக்கிட்டேன். அது என் அப்பாவின் வருடாந்திர சம்பளத்தில் பாதிக்குச் சமம். மொத்தமும் ஒரு ஜோடி காலணிகளுக்காகச் செலவழிக்கப்பட்டுவிட்டது. புதிய காலணிக்குள் என் பாதங்கள் வலித்தன. கடை சிப்பந்தி அவை பாதங்களுக்குப் பழக்கப்படும் வரை அப்படித்தான் இருக்கும் என்று சொல்லியிருந்தான்.
நான் கைபேசியை கால்சராய் பைக்குள் போட்டேன். சூரியன் வெளியே வந்திருந்தது. அது ஒரு அழகான மாலைப் பொழுது. வீடு வரை நடந்தே செல்ல முடிவு செய்தேன்.
—-
தி நியூ யார்க்கர், செப்டம்பர் 14, 2026
எழுத்தாளர் ஹிஷாம் மதார் 1970-இல் நியூயார்க்கில் ஒரு லிபியக் குடும்பத்தில் பிறந்தவர். புகழ்பெற்ற லிபிய-பிரிட்டிஷ் எழுத்தாளரான இவரது முதல் நாவல் ‘இன் தி கன்ட்ரி ஆஃப் மென்’ (In the Country of Men) ஆகும். உலகளவில் பெரிதும் பேசப்பட்ட இந்த நாவல் மேன் புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலிலும் இடம்பெற்றது. காணாமல் போன தந்தையைத் தேடும் தனது நிஜ வாழ்க்கைப் போராட்டத்தையும் லிபியாவின் அரசியல் வரலாற்றையும் மையமாகக் கொண்டு எழுதிய ‘தி ரிட்டர்ன்’ (The Return) என்ற சுயசரிதை நூலுக்காக 2017ஆம் ஆண்டு புலிட்சர் விருதைப் (Pulitzer Prize) பெற்றார் மதார்.












