Friday, October 2, 2026
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு
      • கவிதை
      • கட்டுரை
      • சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கவிஞர் கரிகாலன்
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • பாரதி ஆரோக்கியராஜ்
    • அசதா
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு
      • கவிதை
      • கட்டுரை
      • சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கவிஞர் கரிகாலன்
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • பாரதி ஆரோக்கியராஜ்
    • அசதா
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 1

செத்த மூளி

சப்திகா By சப்திகா
2 weeks ago
In இதழ் – 1, இதழ்கள், சிறுகதை, சிறுகதை, படைப்புகள்
A A
0
Setha Mooli


“செத்த மூளி அன்னா வந்து நிக்கா”, தூக்கம் கலைந்தும் கலையாமலும் பாதி விழி மூடிய நிலையில்… எனது படுக்கையின் அருகிலிருக்கும் ஜன்னலின் வெளியே அவள் நிற்கிறாள்.

​இரண்டு மூன்று நாட்களாக இப்படித்தான். காலையில் தூக்க மயக்கத்தில் திறந்தும் திறவாமலும் இருக்கும் எனது கண்களுக்குத் தெரியுமவள், பதறிப்போய் கண்விழித்துப் பார்க்கும்போது ஓடிவிடுவாள்.

“இவளை விடக்கூடாது. எப்படியாவது பேசிடணும்”, மனதில் நினைத்தபடி…கண்களைத் திறவாமலே அவளைப் பார்த்தேன்.

​நெடுநடுவென நீண்டு வளர்ந்த அடர்ந்த கருங்கூந்தலென்று சொல்லத்தான் ஆசை. ஆனால் உண்மை அதுவல்ல. கூந்தலின் நீளம் சற்று குறைவாகவே இருந்தது. தலையில் எண்ணெயும் தண்ணீரும் பட்டு நெடுநாட்களானது போலும். ஈர்க்குச்சிகளை ஒடித்து அங்கங்கே சொருகிவிட்டது போல் மயிர்கள் சிலிர்த்து நின்றன. முகமோ நிறமோ ஒன்றும் தெளிவில்லை. அழிந்த மையத்தைப் போல் காட்சியளித்தாள்.

​ஒருவேளை என் கண்கள் தான் ஒளி இழந்துவிட்டனவோ… சந்தேகத்தில் கண்களை மெதுவாகத் தடவிவிட்டுப் பார்த்தபோது அவள் புறப்படத் தயாரானது போல் தோன்றியது. இனிமேலும் கண்கள் மூடிக் கிடந்தால் சரிவராது என்று நினைத்தபடி கண்களைத் திறந்து கத்தினேன்.

“ஏய் செத்த மூளி! ஓடாத, நில்லு!”

​நான் கத்தியதும் இடைநிறுத்தப் பொத்தான் அமுக்கியது போல் அசைவற்று நின்றது. இதுதான் தருணம் என்று மனதில் நினைத்ததை அவளிடம் கேட்டேன்.

“நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். மூணு நாளா நீ சன்னல் பக்கம் நின்னு பார்த்துக்கிட்டே இருக்க. நான் கண்ணைத் திறந்ததும் குடுகுடுன்னு ஓடிப் போயிடுற. என்ன செய்தி?”

​இப்படி நான் கேட்டதும் அதனுடைய அகண்ட கண்களை இன்னும் அகலமாக விரித்து என்னை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை இரண்டு முறை பார்த்தது.

“இன்று இரவு சரியாக ஏழரை மணிக்கு நீ இறந்துவிடுவாய்”, சொல்லிவிட்டு ஓடி மறைந்துவிட்டது.

​செத்த மூளி சொன்னதைக் கேட்ட மாத்திரத்தில் எனக்கு ஒரே மகிழ்ச்சி. அப்பாடா! ஒருவழியா என்னோட வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்தாச்சு. 78 வயசு வரை வாழ்ந்து பார்க்க வேண்டியதெல்லாம் பார்த்தாச்சு. இனி கால நேரத்தோடு போய் சேர வேண்டியதுதான் பாக்கி. மனதில் நினைத்தபடி ஒருக்களித்துப் படுத்தேன்.

​இந்தப் பருத்த உடம்பை வைத்துக்கொண்டு கட்டிலிலிருந்து எழும்புவதிலிருந்து போராட்டம் ஆரம்பமாகும். கண் விழித்ததும் உடனே எழும்ப முடியாது. மெதுவாக ஒருக்களித்துப் படுத்து வலது கையைக் கட்டிலில் ஊன்றி, இடது கையால் கட்டிலில் நீண்டிருக்கும் கம்பியைப் பிடித்துக் கால்களை மெதுவாக நகர்த்தித் தரையில் பதித்து எழும்புவதற்குள் மூத்திரம் கால் வழியாக வழிந்து ஓடத் தொடங்கிவிடும். மூத்திரம் வழிய வழிய தட்டுத்தடுமாறி கழிப்பறைக்குள் செல்வதற்குள் ஒருவழியாகிவிடும்.

​ஒரு நாளாவது மூத்திரம் வழிவதற்குள் கழிப்பறை சென்றுவிட வேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை. மூத்திர வாடையோடு வாழ நானும் இந்த வீடும் பழகிவிட்டது. இன்று இரவு அதிலிருந்து விடுதலை. எனக்கு மட்டுமா? இந்த வீட்டிற்கும் குறிப்பாக அறையைச் சுத்தம் செய்து, துணிமணிகளை துவைத்து, உணவு கொண்டுவர பிள்ளைகள் ஏற்பாடு செய்திருக்கும் சுகந்திக்கும் அல்லவா! விடுதலை!

​மூத்திரம் நனைந்த துணிகளை வாளியில் ஊறவைத்துவிட்டு வேறு உடை மாற்றினேன். கட்டிலிலிருந்து குளியலறை வரை சிதறிக்கிடக்கும் மூத்திரத்தின் மீது இதற்காகவே நான் வைத்திருக்கும் கிழிந்த பாவாடையை விரித்துக் கால் வைத்து நகர்த்தி நகர்த்தித் துடைத்தேன். சுகந்தி வரும் வரை இப்படியே விட்டுவைக்க மனம் இடம்தரவில்லை. குளியலறையில் இருந்த கொஞ்சம் நீரைப் பிடித்து அதில் சிறிதளவு டெட்டால் கலக்கி அறையில் தெளித்துவிட்டு வரவேற்பறையில் வந்து அமர்ந்தேன்.

​பிறகு அருகில் இருந்த கைபேசியை எடுத்துச் சுகந்தியை அழைத்தேன்.

“அன்னம்மா அக்கா, என்ன காலையிலேயே போன் போட்டு இருக்கீங்க? உடம்புக்கு ஏதாவது செய்யுதா?”

“அதெல்லாம் இல்ல மக்கா. நீ பயப்படாத. காலைல அடுப்பு வேலையெல்லாம் முடிஞ்சதா?”

“அதுவந்து அக்கா, இன்னும் முடியல. சின்னக்குட்டி தூக்கத்துல கனவு எதுவும் கண்டாளோ தெரியல. எழும்பின நேரமே கொழுக்கட்டை அவிச்சுத் தாங்கனு பிடிவாதம் பிடிச்சிட்டா. அதான் அவளுக்குக் கொழுக்கட்டை அவிச்சுக் கொடுத்துட்டு, அப்புறம் உங்களுக்குக் கோதுமை தோசை சுட்டுக் கொண்டுவரலாம்னு இருக்கேன். பசி எடுத்துட்டோ?”

“கொழுக்கட்டையா? பால்கொழுக்கட்டைதானே! நிறைய சீனி போட்டு தேங்காய்ப்பால் நிறைச்சு ஊத்தி மணக்க மணக்க செஞ்சுக் கொடு. அப்புறம் எனக்குத் தனியா கோதுமை தோசை சுடாத. அந்த பால்கொழுக்கட்டையையே கொண்டுவா. வாய்க்கு ருசியா தின்னு எத்தனை காலம் ஆச்சு!”

“நல்ல கதையா போச்சு! வெளிநாட்டுல இருக்க உங்க மக்கா அறிஞ்சா என்னை விடவா போறாங்க? சர்க்கரை நோயாளிக்கு நீ பால்கொழுக்கட்டையா கொடுத்தனு என்கிட்ட சண்டைக்கு வரமாட்டாங்க?”

“அதெல்லாம் தெரியாது. நீ கொழுக்கட்டை கொண்டுவர்றதுன்னா வா, இல்லாட்டி எனக்குச் சாப்பாடு வேண்டாம்”, அலைபேசியைத் துண்டித்தேன்.

​பாழாய்ப்போன சர்க்கரை நோய் வந்ததிலிருந்து ருசி என்பதே மறந்துவிட்டது. சுமார் 30 ஆண்டுகாலமாக மருந்து, மாத்திரை, பத்தியம் என்று பார்த்துப் பார்த்துச் சாப்பிடவேண்டியதாகிவிட்டது. இன்று பூமியில் நான் வாழும் இறுதி நாள். இன்று ஒரு நாளாவது எனக்குப் பிடித்த உணவுகளை வயிறும் மனமும் நிறையும் வண்ணம் திருப்தியாகச் சாப்பிடப் போகிறேன். நினைத்துக் கொண்டே… தொலைபேசியை எடுத்தேன்.

​கடலைமிட்டாய், லாலாகடை அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, முதலூர் தேங்காய் அல்வா, ஜாங்கிரி, நெய் மைசூர்பாகு என எனக்குப் பிடித்த அத்தனை இனிப்பு வகைகளையும் ஸ்விக்கியில் ஆர்டர் செய்தேன். அதற்குள் கொழுக்கட்டை வீடு தேடி வந்தது. ரசித்து ருசித்துச் சாப்பிட்டு முடித்தேன்.

​”கொழுக்கட்டை அருமையா செஞ்சிருக்க. என் முறிக்குள்ள போயி என்னோட பையை எடுத்துட்டு வா.”

​அவளும் எடுத்துவந்தாள். அதிலிருந்து பத்தாயிரம் ரூபாய் எடுத்து,

​”இந்தா இதைப் பிடி. திருவிழா வருதுல்ல, செலவுக்கு வச்சுக்க.”

​கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவும் அவளுக்கு நான் என்ன பெரிதாகச் செய்துவிடப் போகிறேன்?

“ரொம்ப நன்றி அக்கா! வேலையெல்லாம் முடிச்சிட்டேன், நான் கிளம்புறேன். மத்தியானம் சாப்பிடச் சின்ன வெங்காயம், மோர் ஊத்திக் கேழ்வரகுக் கஞ்சி வச்சுக் கொண்டுவரட்டுமா?”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எனக்குக் கொஞ்சம் பொருள் வாங்கணும். நான் வெளியே போறேன். மதியம் சாப்பாடு வெளியேதான். நம்ம குமார் ஆட்டோவுக்குத் தான் சொல்லி இருக்கேன்.”

​”தனியா போறீங்களே! வேணும்னா வேலைய முடிச்சுட்டுக் கூட வரட்டுமா அக்கா?”

​”வேண்டாம். குமார் ஆட்டோதானே… அவன் இருக்கான் இல்ல, சமாளிச்சுக்குவேன்.”

​”சொன்னா வாங்கிட்டு வரமாட்டேனா? நீங்கதான் போகணுமா?”

“போகவேண்டிய சில காரியத்துக்கு நான் தானே போகணும்? அப்புறம் இன்னொரு செய்தி… மர அலமாரிக்குள்ள இடது பக்கத்துல கொஞ்சம் பணம் வைத்திருக்கிறேன். இல்லாதப்போ செலவுக்குத் தேவைப்பட்டால் எடுத்துக்க.”

“நீங்க திரும்பி வர்றதுக்குள்ள அப்படி என்ன செலவு வந்துறப்போகுது? நீங்க என்ன வெளியூருக்கா போறீங்க!”

​இதைக் கேட்டு சிரித்தபடி, “ஒருவேளை எனக்கு எதுவும் ஒன்று கிடக்க ஒன்று ஆயிடுச்சுன்னா அமெரிக்கா, கனடால இருக்க பிள்ளைகளா வந்து காரியம் பண்ணப்போறாங்க? நீதானே எல்லாம் பண்ணனும்… அதுக்குத்தான் சொல்றேன்”, என்றதும் அவளுக்குக் கோபம் வந்துவிட்டது.

“காலையிலேயே இது என்ன பேச்சு? போய் வாயைக் கழுவுங்க அக்கா. அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. நீங்க வந்ததும் போன் போடுங்க, ராத்திரிக்குக் கம்பு தோசை சுட்டுக் கொண்டுவாரேன். வரட்டுமா?”

“தோசை வேண்டாம். இன்றைக்கு ஒரு நாளாவது வாய்க்கு ருசியா சாப்பிடுறேனே! நீ ஒரு ஏழேமுக்கால் போல வா… எல்லாம் முடிஞ்சிடும்… சரியா இருக்கும்.”

​சுகந்தியை வழியனுப்பிவிட்டு அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையில் மூழ்கினேன். பிள்ளைகளிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசலாமா? வேண்டாம், இப்போது அவர்களுக்கு இரவு நேரமாக இருக்கும்; அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம். அவர்களிடம் பிறகு பேசிக்கொள்ளலாம்.

​எனது இறப்புச் செய்தி கேட்டுப் பிள்ளைகள் நிச்சயம் வருத்தப்படுவார்கள். ஆனால் வருவார்களா? ஒருத்தருக்கு இந்தியா வந்து செல்வதற்கு விமானக் கட்டணம் மட்டுமே இரண்டு லட்சம் ஆகும். இதில் மொத்தக் குடும்பமும் வந்து போவது என்றால் கிட்டத்தட்ட ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம். இவ்வளவு தொகை செலுத்தி நம்மை வந்து பார்க்கப் போகிறார்களா? நல்லடக்கம் செய்வார்களா? நிச்சயமாக இல்லை. சுகந்தியிடமே பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வாட்ஸ்அப்பில் கண்ணீர் வடிப்பார்கள். அதுதான் நடக்கப் போகிறது. என்ன செய்வது, எல்லாவற்றையும் பணம்தானே தீர்மானிக்கின்றது!

​அடக்கத்திற்குத் தேவையானதை நானே செய்தால் என்ன? திடீரென மூளைக்குள் ஓர் எண்ணம். ‘அட, இது நல்லா இருக்கே! ஏழரை மணி வரைக்கும் தானே நமக்கு நேரம் இருக்கிறது? உடனே களத்தில் இறங்க வேண்டும்!’

​இறப்புச் செய்தி கேட்டு வருபவர்கள் உட்காருவதற்கு ஒரு 50 நாற்காலிகள் வேண்டும். அவர்கள் மீது வெயில் படாமல் இருக்க ஒரு பந்தலும் போட வேண்டும். உடனே அலைபேசியை எடுத்துச் சாமியானா சந்திரனுக்கு அழைத்து, 50 ஆட்கள் உட்காரும் அளவிற்கு ஒரு பந்தல் போட வேண்டுமென கூறினேன்.

“இதோ உடனே வாரேன். வீட்ல ஏதும் விசேஷமா பாட்டி?”, அன்பொழுகக் கேட்டான்.

“ஆமாப்பா, நாளைக்கு ஒரு விசேஷம், அதுக்குத்தான் கூப்பிடுறேன். நீ இப்போ வர வேண்டாம், ஒரு எட்டு மணி வாக்குல வந்தா போதும். அப்புறம் ரெண்டு கூடை உதிரிப்பூக்களும் ரோஜாப்பூ மாலையும் வேணும்.”

“அதுக்கென்ன பாட்டி, நம்ம தோவாளை கணேசன் கிட்ட சொன்னா எவ்வளவு பூ வேணும்னாலும் கொண்டுவந்துருவாப்ல.”

“அப்போ சரி. நீ வரும்போது அதையும் சேர்த்து வாங்கிட்டு வந்துடு. அப்படியே ரெண்டு கிலோ கருப்பட்டி, நல்லமிளகு, ரெண்டு ரோல் பேப்பர் கப் வாங்கிட்டு வந்துடு. அதுக்கும் சேர்த்து மொத்தமா எவ்வளவு ஆச்சுன்னு சொல்லு, உன் நம்பருக்கு பணம் போட்டுவிட்டுடுறேன்”, சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தேன்.

​கல்லறையில் குழி வெட்ட வேண்டுமே… சிந்தித்தபடி வழக்கமாக ஊரில் நிகழும் ஒவ்வொரு இறப்பிற்கும் குழி வெட்டும் அருளப்பனை கைப்பேசியில் அழைத்து, நாளை ஒரு குழி வெட்ட வேண்டும் அதற்கான பணத்தை வீட்டில் வந்து வாங்குமாறு கூறினேன். சற்றும் தாமதிக்காமல் ஓடோடி வந்து வாங்கிச் சென்றுவிட்டான்.

​அன்பிய வரி, ஊர் வரி, திருவிழா வரியென ஏதேனும் வரி செலுத்தாமல் இருக்கிறதா… யோசித்துப்பார்த்தேன். இல்லை, ஒன்றுவிடாமல் அனைத்தும் செலுத்தியாகிவிட்டது. நாளை அடக்கம் செய்வதற்கு எந்தவொரு தடையும் வராது. நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

​அடக்கத்திற்கு இன்னும் ஏதேனும் செய்ய வேண்டுமா என்று யோசித்துப்பார்த்தேன்; ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. சரி, நினைவுக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம், நினைத்தபடி அடக்கத்துணி மற்றும் அலங்காரப் பொருட்கள் வாங்கச் செல்வதற்காக உடை மாற்றச் சென்றேன்.

​என்னுடைய திருமணத்தின்போது தலை முதல் கால் வரை அணிந்திருந்த ஒன்று கூட நான் தேர்ந்தெடுக்கவில்லை. அனைத்துமே பெற்றோர்களின் விருப்பம். கட்டிய கணவன் முதல் கட்டியிருந்த ஆடை வரை அனைத்தும் அவர்கள் விருப்பம். இறப்பிலாவது என் விருப்பம் போல் இருக்கட்டுமே!

​மெல்ல எழுந்து கவனமாக அடி மீது அடி வைத்து அறைக்குள் சென்றேன். எப்போதோ வாங்கி வைத்த டயஃபர் நினைவில் வர, அது இருக்கும் இடத்தைத் தேடிக் கையில் எடுத்தேன். இதுகூட சுகந்தி வாங்கிக்கொடுத்ததுதான். ஒரு நாள் வீட்டிற்கு வந்தவள் கையில் இது இருந்தது.

“அக்கா, உங்களுக்கு காலைல சடார்னு எழும்பி பாத்ரூமுக்குள்ள போக முடியல. மூத்திரத்தையும் உங்களால அடக்க முடியல. நீங்க படுத்திருக்க மெத்தை, அறை எல்லாம் நாசமாகுது. அதனால இந்த டயஃபரை ராத்திரி தூங்கப் போகும்போது போட்டுக்கிட்டு படுங்க. காலையில குழிமுறிக்குள்ள கழட்டி வைங்க, நான் எடுத்து எரிச்சிடுறேன். சரியாக்கா?” என்றவளைப் பார்த்துச் சிரித்தேன்.

“இது நீ சொல்லித்தான் எனக்கு தெரியணுமாடி? இதையெல்லாம் நான் எப்போவோ முயற்சி செய்து பார்த்துட்டேன். எனக்கு இது ஒத்துக்கொள்ளாது, ரெண்டு தொடையும் பிஞ்சிடும். உனக்கு சுத்தம் செய்ய சங்கடமா இருந்தா சொல்லு, வேற ஆளைப் பார்க்குறேன்”, சொல்லும்போது என்னுடைய நிலையை எண்ணிக் கண்களில் கண்ணீர் கோர்த்துவிட்டது.

​”என்னக்கா இப்படி சொல்லிட்டீங்க? நான் வர்ற வரைக்கும் உங்க அறை நாறிட்டு இருக்குமேனுதான சொன்னேன். சரி, உங்களுக்கு வேண்டாம்னா விடுங்க. உங்களுக்கு எது வசதியோ அப்படியே பண்ணுங்க”, என்று அலுத்துக்கொண்டாள் சுகந்தி.

​கையிலிருந்த பேம்பர்ஸைச் சுருட்டி, அலமாரியின் ஒரு மூலையில் திணித்துவிட்டுச் சென்றாள். அதைத்தான் இப்போது தேடி எடுத்தேன்.

​நாகர்கோவில் வரை போய் வர நேரமாகும். வழியில் உடனுக்குடன் கழிப்பறைக்குச் செல்லும் வசதி கிடைக்குமா? தெரியாது. 

எப்படியாவது இதை முயற்சி செய்து அணிந்துகொள்வோம்.

கையில் எடுத்தேன்.

​அப்பாடி… உடம்பு எவ்வளவு பெருத்துப் போய்விட்டது! முன்னெல்லாம் நான் எப்படி இருப்பேன் தெரியுமா? அப்படியே ஒல்லிக்குச்சி மாதிரி இருப்பேன். ஆனால் இப்போது வீங்கிப்போய் நிற்கிறேன். வயது ஏற ஏற உடம்பு இப்படிப் பெருத்துவிட்டதா, அல்லது நான் தினமும் விழுங்கும் மாத்திரைகளின் பக்கவிளைவா… தெரியவில்லை.

​கல்யாணத்தின்போது எப்படி இருந்தேன் தெரியுமா? அழகு தேவதையாக இருப்பேன். இப்போது இருக்கும் நடிகைகள் கூட என் அழகுக்கு முன்னால் நிற்கக்கூட முடியாது; அவ்வளவு அழகு! ஆனால் என்ன செய்வது? அழகும் இளமையும் நிலைப்பதில்லை. சரி, அது போகட்டும்… 

​அந்த டயஃபரை அணிவதற்குள் நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. இந்த உடம்பை வைத்துக்கொண்டு குனியவும் முடியவில்லை. என்னால் ஒற்றைக்காலை தூக்கிக்கொண்டு சரிவர நிற்கவும் முடியாது. உண்மையைச் சொல்லப்போனால் டயஃபர் ஒத்துக்காது என்பதைவிட அதை அணிய நான் படும் சிரமம்தான் பெரிய வேதனை. இதற்காகவே அதை அணிவதைத் தவிர்த்து வந்தேன்.

​இப்போது வேறு வழி இல்லை. எப்பாடுபட்டாவது அதை அணிந்தேயாக வேண்டும். மெதுவாகக் கட்டிலில் அமர்ந்து, கால்களை ஒவ்வொன்றாக நுழைத்து ஒருவாறாக மாட்டி முடித்தேன். அதன்பிறகு மிகவும் பிடித்த புடவை ஒன்றை எடுத்து உடுத்திக்கொண்டு, ஆட்டோ குமாருக்கு போன் செய்தேன்.

​”தம்பி குமார், கொஞ்சம் நாகர்கோவில் துணிக்கடைக்குப் போகணும்ப்பா… வர முடியுமா?”

​”பாட்டி, நான் இங்க ஒரு சவாரி வந்திருக்கேன். திரும்பி வர அரை மணி நேரம் ஆகுமே?”.

​”பரவாயில்லைப்பா, நீ மெதுவா வா. நான் காத்திருக்கேன்”.

​அவன் வருவதற்குள் வேறு என்ன வேலை பாக்கி இருக்கிறது… சிந்தித்தேன்.

​’ஆமாம், குழி வெட்டுவதற்குச் சொல்லியாச்சு. அடக்கத்திற்கு வருகிறவர்களுக்குக் கொடுக்க எதுவும் வேண்டாமா?’

​பொதுவாக, கல்லறைக்கு வெளியில் அடக்கத்திற்கு வந்தவர்களுக்குச் சாப்பிட எதுவும் கொடுக்கக் கூடாதென இந்த ஊரில் ஒரு புதிய சட்டம் போட்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் அடக்கம் முடிந்த கையோடு கல்லறைக்கு வெளியிலேயே வந்தவர்களுக்குச் சிற்றுண்டி கொடுப்பார்கள். இப்போது அது தடைசெய்யப்பட்டுள்ளது. வருகிறவர்களுக்குத் தண்ணீர் மட்டுமே கொடுக்கலாம்.

​சரி… அடக்கத்திற்கு யார் யார் வருவார்கள்? எத்தனை பேர் வருவார்கள்? ஒரு இருநூறு பேர், முந்நூறு பேர்… அல்லது ஒரு ஆயிரம் பேர் வருவார்களா? ஆயிரம் பேர் வருவதற்கு நான் அப்படி என்ன சாதனை செய்துவிட்டேன்? ஒரு சாதனையும் செய்யவில்லை! சரி, ஒரு 300 பேர் வருவார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

​உடனே நான் எப்பொழுதும் இனிப்புப் பலகாரங்கள் வாங்கும் பிரிட்டிஷ் பேக்கரியைத் தொடர்புகொண்டு 300 தண்ணீர் பாட்டில்களுக்கும், 300 பேருக்கான சிற்றுண்டிக்கும் ஆர்டர் கொடுத்து, நாளை காலையில் கொண்டுவரும்படி சொன்னேன்.

​அந்த வேலையை நல்லபடியாக முடித்தபோது, ஆட்டோ குமார் வாசலில் வந்து வண்டியை நிறுத்தினான். கைப்பையை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறுவதற்காகச் சென்றேன். அவன் இறங்கி வந்து கைபிடித்து மெதுவாக ஆட்டோவில் ஏற்றி உட்கார வைத்தான்.

​”என்ன பாட்டி, திடீர்னு துணிக்கடைக்குப் போகணும்னு சொல்றீங்க?”

​”ஆமாப்பா, துணி எடுத்து ரொம்ப நாளாயிடுச்சு. வீட்டை விட்டு வெளிய வந்து ரொம்ப நாளாயிடுச்சு. அதான் போய் எடுத்துட்டு வரலாம்னு தோணுச்சு.”

​”சரி பாட்டி, எந்தக் கடைக்குப் போகணும்?”

​”நாகர்கோவில்ல இருக்கிற ஒரு பெரிய கடையில கொண்டு இறக்கி விடுப்பா.”

​”சரி பாட்டி”, தனக்கு நன்கு பழக்கமான ஒரு பிரம்மாண்டமான துணிக்கடையில் கொண்டு நிறுத்தினான்.

​துணிக்கடையைப் பார்த்ததும் பிரமிப்பாக இருந்தது. அடேயப்பா… இந்த நாகர்கோவில்தான் எவ்வளவு மாறிவிட்டது! பிரம்மாண்டமான கட்டிடங்கள், பெரிய பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகள், உணவகங்கள், விதவிதமான வண்ண வண்ண டீக்கடைகள், நாகர்கோவிலே ஒரு புது உலகமாக மாறியிருந்தது.

இப்படி வெளியே வந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன! என் உலகம் ரொம்பச் சிறியது. ஒரு கோயில், இல்லையென்றால் மருத்துவமனை… இதைத் தவிர வேறு எங்குமே சென்றதில்லை. வீட்டில் ஏதேனும் தேவையென்றால் சுகந்தியிடம் சொன்னால் வாங்கி வருவாள், அல்லது ஆட்டோ குமாரிடம் சொன்னால் வழியில் வாங்கிவந்து தந்துவிடுவான். வெளியே வரவேண்டிய அவசியமே இல்லாமல் இருந்தது.

​நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெளியே வந்து பார்க்கும் எனக்கு, உலகமே தலைகீழாக மாறியது போல் இருந்தது. ஒரு வழியாகக் கடைக்குள் சென்றோம்.

​குமார் கூடவே வந்தான். அவனது உதவி இல்லாமல் தனியாக நடப்பது கஷ்டம். சொந்தப் பையன் போல முகம் கோணாமல் கூடவே வருவான். ரொம்ப நல்ல பையன்.

​கடைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த பெண் ஊழியர்கள் வரிசையாக வந்து, “பாட்டி, என்ன பார்க்கிறீங்க?” 

​”எனக்கு ஒரு அழகான புடவை… இல்லை இல்லை, புடவை வேண்டாம்… ஒரு அழகான உடுப்பு, கல்யாணத்துக்கு போடுவாங்களே அந்த மாதிரி உடுப்பு எடுத்துப் போடுங்க.”

​எனக்குக் கல்யாணத்தப்போ உடுப்பு போட்டுக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ரொம்ப ஆசை. ஆனா எங்க அம்மா அதுக்குச் சம்மதிக்கவே இல்லை. “சீ, உடுப்பா? அதெல்லாம் கூடவே கூடாது”னு பிடிவாதமா நின்னுட்டாங்க. அப்போதெல்லாம் நம்ம ஊரில் உடுப்பு போட்டுக் கல்யாணம் பண்ற பழக்கமும் இல்லை. பாவம் அவங்களும் என்ன செய்வாங்க? ஆனா, சாகும்போது அந்த ஆசையை நிறைவேத்திக்கணும். உடுப்பு போட்டுதான் அடக்கப்பெட்டிக்குள்ள இருக்கணும்.

​அந்தப் பெண்கள் சிரித்துக்கொண்டே, “யாருக்கு பாட்டி, உங்க பேத்திக்கா?” 

​”இல்லைம்மா, எனக்குத்தான்!”.

​அவர்கள் இதழோரம் பொறாமையும் கூடவே நக்கலும் கலந்த ஒரு சிறிய புன்னகை வந்து சென்றதை கவனிக்கத் தவறவில்லை.

​அவர்கள் அழகழகான உடுப்புகளை எடுத்துப் போட்டார்கள். ஒவ்வொன்றும் ஒருவித அழகாக இருந்தது. அதில் ஒரு வானநீல நிற உடுப்பு மனதைக் கொள்ளைகொண்டது. உடனே மனதில் ஓர் எண்ணம்.

​“ஐயோ! ஒரு விதவை நீல நிற உடுப்பு போடலாமா? பொதுவாக விதவைகள் இறந்துவிட்டால் வெள்ளை நிற அல்லது சந்தன நிறப் புடவைதான் உடுத்துவார்கள். இந்த உடுப்பு நீல நிறத்தில் இருக்கிறதே! அடக்கத்திற்கு வந்தவர்கள் இதைப் பார்த்துக் குறை சொல்லிவிட்டால்?”

​அவர்கள் சொல்வதைக் கேட்க நான் உயிரோடா இருக்கப்போகிறேன்? அவர்கள் சொன்னால் சொல்லிட்டுப் போகட்டும், எனக்குப் பிடித்த நீல உடுப்பைத்தான் உடுக்கப்போகிறேன் 

​நினைத்தபடி…

“இது இருக்கட்டும்மா” என்றேன்.

​”பாட்டி, போட்டுப் பாருங்களேன். ஒருவேளை அளவு சரியா இல்லைன்னா என்ன பண்றது?…ஒரு பெண்.

​”அய்யோ, எனக்குப் போட்டுப் பார்ப்பதெல்லாம் சிரமமாச்சே…” தயங்கியபடி…

​”பரவாயில்லை பாட்டி, நான் உதவி பண்றேன். வாங்க போட்டுப் பார்க்கலாம்”, 

அந்தப் பெண்ணே உடை மாற்றும் அறைக்கு வந்து அணிவித்துவிட்டாள்.

​கண்ணாடியில் பார்த்தேன். மிகவும் பிடித்துப்போனது. அதைப் பார்த்த அந்தப் பெண், “பாட்டி! இந்த உடுப்புல உங்களுக்கு அப்படியே 10 வயசு குறைஞ்ச மாதிரி இருக்கு! அவ்வளவு அழகா இருக்கீங்க பாட்டி!”.

மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. “ரொம்ப நன்றிம்மா”, விலை போட்டு வாங்கிக் கொண்டேன்.

​அடுத்ததாகத் தலையில் வைக்கக் கிரீடம் வாங்க வேண்டும். இறந்த பிறகு எல்லாரும் பெரிய ரீத் (Wreath) வைப்பார்கள். ஆனால் அதில் விருப்பமில்லை. ஓர் இளவரசி போலச் சிறிய, அழகான கிரீடம் வைக்க வேண்டுமென்பது ஆசை. கல்யாணத்தின்போது என்ன செய்தார்கள் தெரியுமா? ஒரு பெரிய வெள்ளை நிற ரீத்தை எடுத்து தலையில் வைத்து விழுந்துவிடாமல் இருக்க இரண்டு பக்கமும் பின் குத்தினார்கள். அதையும் தாண்டி அது ஒரு பக்கமாகச் சரிந்துவிட்டது. ஒரு கையில் பூங்கொத்தும் ஒரு கையில் ரீத்துமாக அன்றைய பொழுது கழிந்தது. ஒரே சிரிப்பா போச்சு.

​தலையில் ரீத் வைக்க வேண்டுமென்ற ஆசை அன்றோடு முடிந்துவிட்டது. இப்போது அழகான கிரீடமும், முகத்தை மறைக்க வலைத்துணியும் பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றாக வாங்கினேன். கையுறை, காலையுறை எல்லாவற்றையும் தேர்வு செய்து வாங்கிவிட்டேன். அடுத்து ஒரு நல்ல செருப்பு வாங்க வேண்டும்.

​”பாட்டி, எல்லாம் வாங்கியாச்சுல்ல? இனி வீட்டுக்குப் போலாமா?” ஆட்டோ குமார்.

​”இல்லை குமாரு, ஒரு செருப்புக் கடைக்குப் போகணும்ப்பா.”

​”சரி பாட்டி”, வாங்கிய பொருட்களுடன் செருப்புக் கடைக்குச் சென்றோம்.

​அங்கே விதவிதமான, வண்ண வண்ண செருப்புகள்! 100 ரூபாய் செருப்பு முதல் லட்ச ரூபாய் மதிப்புள்ள செருப்பு வரை விதவிதமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. செருப்புகளில் இத்தனை ரகங்களா! மலைத்துப் போனேன். வசதிக்கு ஏற்றபடி, நல்ல செருப்பு எடுக்க வேண்டும். அதுவும் ஹை ஹீல்ஸ் (High heels) வைக்கப்பட்ட செருப்பாக எடுக்க வேண்டும்.

திருமணத்திற்கு முன்னால் எப்போதுமே ஹை ஹீல்ஸ் செருப்புதான் அணிவேன். ஆனால் கல்யாணமான அன்றிலிருந்தே அதை நிறுத்திவிட்டேன். ஏனென்றால் கணவர் எனது அளவிற்கு உயரமில்லை; என்னைவிடச் சற்றே குள்ளமாகத்தான் இருப்பார். நான் ஹீல்ஸ் போட்டால் அவரைவிட உயரமாகத் தெரிவேன், எல்லாரும் கிண்டல் செய்வார்கள் என்பதற்காகவே அதைத் துறந்துவிட்டேன்.

​யாராவது தோழிகள் “ஏண்டி, இப்போதெல்லாம் ஹீல்ஸ் போடுவதில்லை?” என்று கேட்டால், “ஹீல்ஸ் போட்டா முதுகு வலி வருமாண்டி, அதான் விட்டுட்டேன்” என்று பொய் சொல்லிச் சமாளிப்பேன். ஆனால் உண்மை காரணம் கணவரைவிட உயரமாகத் தெரியக்கூடாது என்பதுதான்.

​பாருங்கள், கல்யாணத்திற்காக எதையெல்லாம் நாம் இழக்க வேண்டியிருக்கிறது! அதனால் இறப்பிலாவது எனக்குப் பிடித்த மாதிரி நல்ல ஹை ஹீல்ஸ் செருப்போடுதான் போக வேண்டுமென்று பிடிவாதமாகத் தேடினேன். கால்களுக்குச் சரியாகப் பொருந்தும் ஒரு ஹை ஹீல்ஸ் செருப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

​அதைப் பார்த்த குமார், “பாட்டி! இந்த செருப்பைப் போட்டுட்டு நீங்க எங்க நடக்கப் போறீங்க? தவறி விழுந்தா என்ன ஆகும் தெரியுமா?”

​”போடா வீணாப்போனவனே, விடுடா”, அவனை ஒரு வழியாகச் சமாளித்து அந்தச் செருப்பையும் வாங்கிக்கொண்டேன்.

​”சரி பாட்டி, இப்போ வீட்டுக்கு போலாமா?”

​”இல்லைடா, இன்னும் ஒரு முக்கியமான வேலை இருக்கு.”

​மதியம் மணி 2 தாண்டிவிட்டது.

​”முதலில் ஒரு உணவகத்தைப் பார் குமாரு. பசிக்குது, சாப்பிடுவோம்”,

​”சரி பாட்டி, வழக்கமா நீங்க போற சைவ உணவகத்துக்கு போவோமா?”

​”சைவமா? வேண்டாம் வேண்டாம்! இன்னைக்கு ஒரு நாள் நல்லா திருப்தியா சாப்பிடுவோம்டா. கொலஸ்ட்ரால், சுகர், பிரஷர் எல்லாத்தையும் மறந்துடுவோம். இந்த ஒரு வேளை சாப்பாட்டை மனசுக்கு நிறைவா சாப்பிடுவோம்” 

​”என்ன பாட்டி, ஒரு முடிவோடு தான் வந்திருக்கீங்க போலிருக்கு?” அவன் கேட்க, நான் மெல்லச் சிரித்துக்கொண்டு,

​“ஆமாடா, எல்லாத்தையும் முடிச்சரணும்னு முடிவோடுதான் இருக்கேன்”, அவன் பக்கத்திலிருந்த ஒரு பெரிய அசைவ உணவகத்தில் வண்டியை நிறுத்தினான்.

​இறங்கி உள்ளே சென்றோம். முதலில் ஆளுக்கு ஒரு மட்டன் சூப். பிறகு சில்லி சிக்கன், சிக்கன் 65, ஃப்ரைட் ரைஸ், மட்டன் பிரியாணி, பட்டர் நான், பட்டர் சிக்கன் மசாலா என மனதிற்குள் என்னவெல்லாம் சாப்பிட வேண்டுமென தோன்றியதோ, எல்லாவற்றையும் கொண்டுவரச் சொன்னேன்.

​நானும் அவனுமாகச் சேர்ந்து ரசித்துச் சாப்பிட்டோம். அவன் சாப்பிடுவதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது.

​”சாப்பிடுடா, நீ என் பேரன் மாதிரிடா. வெட்கப்படாம சாப்பிடு. இன்னும் ஏதாவது வேணுமா?” என்றேன்.

​”அய்யய்யோ, வேண்டாம் பாட்டி! இதுவே நிறைய இருக்கு!”

​சாப்பிட்டு முடித்ததும் ஒரு பெரிய ஃபாலூடா (Falooda) ஐஸ்கிரீமும், அவனுக்கு ஒரு பட்டர்ஸ்காட்ச் கார்னெட்டோவும் வாங்கினேன்.

​”என்ன பாட்டி, ஐஸ்கிரீம் வாங்குறீங்க? நீங்க குளிரானதெல்லாம் சாப்பிடவே மாட்டீங்களே, ஒத்துக்காதே?”

​”ஆமாப்பா… எனக்கு இந்த இழுப்பு நோய் வந்ததிலிருந்தே ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ் குடிப்பதை நிறுத்திவிட்டேன். ஆனால் இன்றைக்கு ஒரு நாள் நோயை, வலியையெல்லாம் மறந்துவிட்டு மனதிற்குப் பிடித்ததைச் சாப்பிட வேண்டுமென முடிவெடுத்துவிட்டேன். அதனால இன்னைக்கு நான் எது சாப்பிட்டாலும் நீ கண்டுக்காதே, கேள்வியும் கேட்காதே, சரியா?”…அந்த ஐஸ்கிரீமையும் சுவைத்துச் சாப்பிட்டேன். சுகந்திக்காக ஒரு ஃபேமிலி பேக் (Family Pack) ஐஸ்கிரீமும் வாங்கிக்கொண்டோம்.

​வண்டியில் ஏறியதும் குமார், “பாட்டி, நேரா வீட்டுக்கா? இல்ல வேற எங்காவது போகணுமா?”

​”வீட்டுக்குதான் போகணும். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான இடத்துக்குப் போகணும்ப்பா.”

​”எங்க பாட்டி?”

​”அடக்கப்பெட்டி வாங்கணும்ல? அந்த பெட்டி செய்யுற கடைக்குப் போகணும். நல்ல கடையா பார்த்து இறக்கு.”

​”ஏன் பாட்டி… யாராவது இறந்துட்டாங்களா?”

​”இல்லை இல்லை, கேள்வி கேட்காதே குமாரு. போகச் சொன்னா போயேன், எதுக்கு தேவையில்லாம கேள்வி கேட்டுட்டு இருக்க?”

​அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் முகம் குழப்பத்தில் இருப்பதைக் காட்டிக்கொடுத்தது. ஆனாலும் நேராகக் கடைக்குக் கூட்டிச் சென்றான்.

​கடை வந்ததும், “நீ ஆட்டோவிலேயே இரு குமாரு, போய்ப் பேசிட்டு வரேன்”

​”இல்லை பாட்டி, நீங்க எப்படி தனியா போவீங்க? நானும் வரேன்”, என் கைபிடித்து உள்ளே கூட்டிச் சென்றான்.

​உள்ளே பெட்டி செய்பவர் வந்தார். “என்ன வேணும் உங்களுக்கு?” 

​”நல்லதா ஒரு அடக்கப்பெட்டி வேணும்….”

​”யாருக்கு அம்மா?”

​”எனக்குத்தான்…”

​அவர் முகத்தில் ஒரே ஆச்சரியம். “என்னது… உங்களுக்கா?”

​”அட, எனக்குத் தெரிஞ்சவங்க ஒருத்தங்க இறந்துட்டாங்கப்பா. ஏழை வீட்டுக்காரங்க, அவங்களுக்கு எடுத்துக் கொடுக்கத்தான் வந்திருக்கேன்”, சமாளித்தேன்.

​”அப்படியா! அளவு சொன்னீங்கன்னா பெட்டி எடுக்க வசதியா இருக்குமே. 

என்ன அளவுல வேணும்?”

​”எனக்கு அளவெல்லாம் தெரியாதப்பா. அந்த அம்மா இறந்துபோனப்போ என்ன மாதிரிதான் இருப்பாங்க. என் அளவுக்கு ஒரு பெட்டி கொடுங்க.”

​”சாகும்போது உங்க அளவுல இருந்தாங்களா, இல்ல இப்போ உங்க அளவுல இருக்காங்களா?”

​”அதை ஏன் கேட்கிறீங்க?”

​”இல்லைம்மா, சாகும்போது உங்க அளவுல இருந்தா பாடி இன்னும் கொஞ்சம் ஊதும். அதுக்கேத்த மாதிரி அளவு எடுக்கணும், அதுக்குதான் கேட்டேன்.”

​”சாகும்போதுதான் என் அளவுல இருந்தாங்க. அதைக் கணக்கு பண்ணி ஒரு பெட்டி கொடுங்க. பாடி உள்ள அடங்கணும். அங்கேயும் இங்கேயும் இடிச்சுக்கிட்டு இருக்கக் கூடாது.”

​”கவலைப்படாதீங்கம்மா, இப்போ உங்களைப் பெட்டியில வச்சா எவ்வளவு வசதியா இருக்குமோ, அந்த அளவுக்கு வசதியான பெட்டியா பார்த்து எடுத்துத் தர்றேன்”

​பணத்தையும், பெட்டியை வீட்டுக்கு அனுப்புவதற்கான வண்டி வாடகையையும் கொடுத்துவிட்டு, முகவரியைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

​”பெட்டி எப்போ வந்து சேரும்?” 

“உடனே வண்டியில அனுப்பிடுறோம்மா, உங்க கண்ணு முன்னாடியே ஏத்துறோம் பாருங்க”, 

பெட்டியை ஏற்றினார்கள்.

​’அப்பாடா… அடக்கத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் நாமளே செஞ்சாச்சு’ நிம்மதியோடு ஆட்டோவில் ஏறினேன். “வா குமாரு, வீட்டுக்குப் போவோம்”, கிளம்பினோம்.

​வரும் வழியில் ஒரு கரும்புச்சாறு கடை.

​”வண்டியை நிறுத்து குமாரு! உனக்கும் எனக்கும் கரும்புச்சாறு வாங்கிட்டு வா.”

​”பாட்டி, ஏற்கனவே தேவையில்லாததெல்லாம் சாப்பிட்டிருக்கீங்க. இதுல கரும்புச்சாறு தேவையா?”

​”வாங்கு குமாரு… இனி விட்டா கிடைக்கவா போகுது? நான் வரவா போறேன்? இதுதான் கடைசி, வாங்கித் தா”, என்றதும் அவன் சென்று ஆளுக்கு ஒரு கரும்புச்சாறு வாங்கி வந்தான். அதையும் சந்தோஷமாகக் குடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

​நாங்கள் வந்து சேர்ந்த நேரமும், அடக்கப்பெட்டி வந்த நேரமும் சரியாக இருந்தது. அதைப் பார்த்த குமார், “பாட்டி! வீட்டு முகவரியை மாத்தி கொடுத்துட்டீங்களா? பெட்டியை இங்க கொண்டு வந்துட்டாங்க?” 

​நான் மனதிற்குள் சிரித்துக்கொண்டேன். ‘அட, அதுதான் போல!’

​”சரி, பெட்டி கொண்டு வந்தாச்சுல… நம்ம வீட்டுக்குள்ள கொண்டு வரச் சொல்லு. அப்புறமா அந்த வீட்டுக்காரங்களுக்கு போன் பண்ணி எடுத்துட்டு போகச் சொல்றேன்.”

​”அது நல்லா இல்லையே பாட்டி. நீங்க முகவரி சரியா சொன்னீங்கன்னா அங்கேயே கொண்டு போய் கொடுத்துருவாங்கள்ல?”

​”இல்லை இல்லை, இப்போ எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. பெட்டியை எடுத்துட்டு வீட்டுக்குள்ள வரச்சொல்லு.”

​”அட என்ன பாட்டி! அடக்கப்பெட்டியை யாராவது வீட்டுக்குள்ள கொண்டு வருவாங்களா? வேணும்னா வண்டி நிறுத்துற தாழ்வாரம் சும்மா தானே இருக்கு, அதுல இறக்கச் சொல்றேன்.”

​”சரி, அதுவும் சரிதான். அங்கேயே வை”.

​எதற்கு வீட்டுக்குள் வைத்து எல்லாரையும் கூப்பிட்டு இந்த வீடும் அழுக்காக வேண்டும்? நாம் போய் சேர்ந்த பிறகு பாவம் சுகந்திதான் அதைச் சுத்தம் செய்ய வேண்டும்.

​முன்பு அந்த இடத்தில் அவருக்கு ஒன்றும் குடும்பத்திற்கு ஒன்றுமென இரண்டு கார்கள் நிற்கும். அவரும் இறந்துவிட்டார். பிள்ளைகள் வெளிநாட்டுக்குச் சென்ற பிறகு கார்களுக்கு ஏது வேலை! கார்களுக்காகக் கட்டிய தாழ்வாரம் இப்போது சும்மா வெறுமனே கிடக்கிறது. அதில் தான் பெட்டியை வைத்துவிட்டுச் சென்றார்கள். குமாரும் விடைபெற்றுச் சென்றான்.

​வீட்டிற்குள் வந்தேன். மணி கிட்டத்தட்ட 4:30 ஆகிவிட்டது. ‘இப்போது பிள்ளைகள் விழித்திருப்பார்களா? விடியற்காலையாகத்தான் இருக்கும். இருந்தாலும் இப்போது பேசாவிட்டால் அப்புறம் பேசவே நேரம் இருக்காது’ யோசித்து, இரண்டு குழந்தைகளுக்கும் வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்தேன்.

​”என்னம்மா, இந்த விடியற்காலையிலேயே போன் பண்ணியிருக்கீங்க?” மகள்.

​”ஒன்னுமில்லைம்மா, உங்களையெல்லாம் பார்க்கணும் போல இருந்தது. அதான் போன் பண்ணேன். எப்படி இருக்கீங்க எல்லாரும்?”

​”நல்லா இருக்கோம்மா… குழந்தைகள் நல்லா இருக்காங்க, தூங்கிட்டு இருக்காங்க.”

​அதேநேரம் மகனும் வீடியோ காலில் வந்தான். “என்னம்மா, இந்த நேரத்துல போன் பண்ணிருக்கீங்க? உடம்புக்கு முடியலையா?”

​”இல்லைப்பா, அதெல்லாம் நல்லா இருக்கேன். நீங்கெல்லாம் எப்படி இருக்கீங்க?” கேட்டு, அவர்களிடம் ஒரு அரை மணி நேரம் பேசி பேசி, ஆசை தீர கண்களுக்குள் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

​என்னை அறியாமலேயே கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. அதைப் பார்த்ததும் குழந்தைகளுக்கும் கண்கள் கலங்கிவிட்டன.

​”ஏம்மா அழறீங்க?” அவர்கள் கேட்டதும் எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

​”இல்லைம்மா… உங்களையெல்லாம் இனி எப்போ பார்க்கப் போறேனோனு நினைச்சாலே கவலையா இருக்கு. நான் இல்லைனாலும் நீங்க ரொம்ப அழக்கூடாது. ஒருவேளை உங்களைப் பார்க்க முடியாமலே நான் போயிட்டேன்னா, அதை நினைச்சு நீங்க வருத்தப்படக்கூடாது. எல்லாமே கடவுள் நல்லதுக்குத்தான் செய்வாருன்ற நம்பிக்கையோடு இருங்க…” எனக்குத் தெரிந்த சில அறிவுரைகளைச் சொல்லிவிட்டு, வீட்டுப் பத்திரம், நிலப் பத்திரங்கள், நகைகளின் விவரம், வங்கிக் கணக்குகள் அனைத்தையும் அவர்களிடம் கூறினேன்.

​”அம்மா, இப்போ எதுக்குமா இதெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க?” – மகள்.

“இந்தக் கதையை சொல்றதுக்கா தூங்க விடாம விடியகாலமே போன் போட்டீங்க?” – மகன்.

​அதற்கு மேல் பேச முடியாமல் போனைத் துண்டித்துவிட்டேன். குழந்தைகள் நம் வழியாக உலகிற்கு வந்தவர்களே தவிர நமக்கானவர்கள் இல்லை. அவரவர் வாழ்க்கை அவரவர் வாழ்கிறார்கள்.

​சாகப்போகும் நேரத்தில் எதை நினைத்தும் அழக்கூடாது என்பதில் தெளிவான முடிவோடு இருந்ததால், மனதைக் கல்லாக்கிக்கொண்டு, வாழ்க்கையில் நடந்த நல்ல நிகழ்வுகளை நினைத்துப் பார்க்க எண்ணி அலமாரியில் இருந்த பழைய புகைப்பட ஆல்பத்தை எடுத்து ஒவ்வொன்றாகப் பார்த்துச் சிரித்துக்கொண்டேன்.

​மணி 6:30 ஆகப்போகிறது. ‘சரி, இனி மெதுவாக இறப்பதற்குத் தயாராகுவோம். நாம் இறந்த பிறகு இவர்கள் குளிப்பாட்டுவார்களா, இல்லையா? சுகந்தி குளிப்பாட்டுவாள், இருந்தாலும் நாமே நம் உடம்பைக் குளிப்பாட்டுவோம்’ என்று எண்ணி ஹீட்டரைப் போட்டேன்.

​வெதுவெதுப்பான தண்ணீரில் ஆசை தீரக் குளித்தேன். இந்த இழுப்பு நோய் வந்ததிலிருந்து மாதத்தில் ஒருநாள்தான் தலைக்குக் குளிப்பது என்றாகிப்போனது. இன்றைக்கு ஆசை தீர அரை மணி நேரம் குளித்தேன். இறுதிக் குளியல் ஆயிற்றே! நன்றாக அழுக்குத் தேய்த்துக் குளித்து முடித்துவிட்டு, என் புதிய ஆடையை உடுத்தினேன்.

​7:30 மணிக்கு அந்தச் ‘செத்த மூளி’ நம்மை அழைத்துச் செல்ல வந்துவிடுவாள். அதனால் ஒரு மணி நேரமாவது இந்த ஆடைகளை அணிந்து, நம்மை நாமே ரசித்துக்கொள்வோம்.

மெதுவாக உடைகளை உடுத்திக்கொண்டேன். முகப்பூச்சு, கண்மை, லேசான உதட்டுச்சாயம், நெற்றியில் சிறிய வட்டப் பொட்டென என்னை அழகுபடுத்திக்கொண்டேன். சிகை அலங்காரம் எப்படி இருக்க வேண்டும்? பார்த்துப் பார்த்து, கொண்டை முடிகளைச் சரிசெய்து வைத்தேன்.

​முகத்திற்கு நெட் போட்டேன். கையுறைகளை மாட்டிக்கொண்டேன். செருப்பை மட்டும் காலில் போடவில்லை; போட்டுக்கொண்டு நடந்தால் விழுந்துவிடுவேனோ? பயம் இருந்தது. பெட்டியில் படுக்கும்போது போட்டுக்கொள்வோம். கையில் வைத்துக்கொண்டேன்.

​கண்ணாடியில் என்னையே ரசித்துக்கொண்டேன். ரொம்ப அழகாக இருந்தேன். கிரீடம் அணிந்து மகாராணி போல் காட்சியளித்தேன். எல்லாம் கச்சிதமாக இருந்தது.

​அப்படியே நான் வாழ்ந்த அந்த வீட்டை ஒருமுறை சுற்றிப் பார்த்தேன். 18 வயதில் திருமணம்… 25 வயதில் இந்த வீட்டிற்கு குடிவந்தேன். இன்று எனக்கு 78 வயது. 53 வருடங்கள் இந்த வீட்டோடு வாழ்ந்திருக்கிறேன் என்பதை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. உடம்பின் ஒரு பகுதியாகவே இந்த வீடு மாறிவிட்டது. இந்த வீட்டை விட்டுப் போவதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது. ஆனால் என்ன செய்வது? வரமாட்டேன் என்று சொன்னால் செத்த மூளி சும்மாவா விடுவாள்? கூட்டிட்டுதான் போவாள்.

​சரி, எல்லாம் தயாராகிவிட்டது. கதவு, ஜன்னல் எல்லாம் பூட்டியாச்சு. ஸ்டவ், கேஸ் சிலிண்டர் எல்லாம் ஆஃப் செய்தாச்சு. பாத்திரங்கள் கழுவி வைக்கப்பட்டிருக்கின்றன. வீடும் காலையிலேயே துடைத்துச் சுத்தமாக இருக்கிறது.

​மணி 7:30 ஆகப்போகிறது. பெட்டியில் போய் படுத்துவிட வேண்டியதுதான். காதில் அணிந்திருந்த கம்மல், மூக்கில் அணிந்திருந்த ஒற்றைக்கல் மூக்குத்தி, விரலில் அணிந்திருந்த மோதிரங்கள், எப்பொழுதுமே கைகளில் கிடந்த வளையல்கள், கழுத்தில் இருந்த செயின் என அத்தனை நகைகளையும் கழற்றி அலமாரிக்குள் வைத்தேன். புதிதாக வாங்கிய ஹை ஹீல்ஸ் செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு மெதுவாக நடந்தேன்.

​தாழ்வாரத்தில் இருந்த அடக்கப்பெட்டிக்குள் தட்டுத்தடுமாறி ஏறி உட்கார்ந்து, செருப்பை அணிந்துகொண்டு, பெட்டிக்குள் நிமிர்ந்து படுத்துக்கொண்டேன்.

​மணி 7:30…

காற்றில் சருகுகள் மெல்ல அசைவது போல் அந்த உருவம் வரக் கண்டேன்…

​’செத்த மூளி’ தான்…

​நான் கண்களை மூடினேன்!

Previous Post

லைலா கயஸ் கவிதைகள்

Next Post

சாவச்சம்

சப்திகா

சப்திகா

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர். அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட விளிம்பில் வாழுகின்ற பெண்ணின் வாழ்வையையும் மீனவ சமூகத்தின் பண்பாட்டு வெளியையும் எழுதியும் பொதுவெளியில் பேசியும் வருகிறார்.

Next Post
Saavacham

சாவச்சம்

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Amma Immurai Calendarai Paarkkavillai

அம்மா இம்முறை காலண்டரைப் பார்க்கவில்லை

October 2, 2026
Indiyavil Dalit Cinema

இந்தியாவில் தலித் சினிமா

October 2, 2026
Panpaattu Tharkolai

பண்பாட்டுத் தற்கொலை: போருக்குப் பின்னரான ஈழத்து இலக்கியம்

October 2, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 2, 2026
Kaadhalin Thooram Pathinettu Mile

காதலின் தூரம் பதினெட்டு மைல்

0
Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

0
Mozhiyatra Mugam

மொழியற்ற முகம்

0
Indiyavil Dalit Cinema

இந்தியாவில் தலித் சினிமா

0
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 2, 2026
Ingirundhu Thodangugiren-1

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 2, 2026
Thodarottam

ஏன் எழுதுகிறேன்..

October 2, 2026
Pillai Kaniyamudhe

பிள்ளைக் கனியமுதே

October 2, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • இதழ் – 1 (18)
  • இதழ்கள் (18)
  • கட்டுரை (2)
  • கட்டுரை (2)
  • கவிதை (3)
  • கவிதை (4)
  • சிறுகதை (6)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (5)
  • தலையங்கம் (1)
  • தொடர் (3)
  • நேர்காணல் (1)
  • படைப்புகள் (12)
  • மொழிபெயர்ப்பு (1)
  • மொழிபெயர்ப்பு கவிதை (1)
  • மொழிபெயர்ப்பு சிறுகதை (1)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • பதிப்பகம்
  • காட்சியகம்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 2, 2026
Ingirundhu Thodangugiren-1

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 2, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு
      • கவிதை
      • கட்டுரை
      • சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கவிஞர் கரிகாலன்
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • பாரதி ஆரோக்கியராஜ்
    • அசதா
  • தொடர்புக்கு