நேற்று ஒரு நாள் மட்டும்தான் வேலைக்கு போகாமல் இருந்திருக்கிறார்கள். அதற்குள்ளாக அவர்களுக்கு அவர்களது உயரதிகாரி ஏகாம்பரம் சாரிடமிருந்தும் அழைப்பு வந்திருந்தது. போய் பார்த்து கிருஷ்ணமூர்த்தி வாத்தியார் நம்பிக்கையாய் சொல்லியிருப்பது பற்றி கூறி வரலாமென்று ஐந்து பேருமே அலுவலக நேரத்தில் அவரது அறைக்குச் சென்றார்கள். அந்த நேரம் அவர் ஏதோ அவசர வேலை என்று கிளம்பிப் போய்விட்டார். ஆறுமணிக்கு மேல் தன் வீட்டிற்கு வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டு சென்றிருந்தார். எனவே ஆறு மணிக்கு மேல் ஐந்து பேரும் அவரது வீட்டிற்குச் சென்றார்கள்.
“என்னப்பா கெட்டிக்காரத் தனமா வேலய வாங்கிக்கப் போறீங்களா இல்ல கோட்டவிட்டுட்டு கடைசி வரைக்கும் கஷ்டப்பட போறீங்களா?” என்றார் எடுத்த எடுப்பிலேயே. பேச்சு லேசாக குழறியது போலிருந்தது. குடித்திருக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
“சர்டிபிகேட்டு நாளைக்கு கெடைச்சிரும் சார்” என்ற ராசாங்கம் கிருஷ்ணமூர்த்தி வாத்தியார் தருவதாக சொல்லியிருக்கிறார் என்று கூறி அங்கு நடந்த உரையாடல்களை கிட்டதட்ட அப்படியே சொல்லி முடித்தான்.
“கெடச்சா நிம்மதி. அஞ்சாறு வருசமா வெயிலு, மழதண்ணி பாக்காம நாங்க சொல்லி நீங்க செஞ்ச வேலதான் இது. தினக்கூலியா நாங்க கொடுத்தத மொகம் சுளிக்காம வாங்கிக்கிட்டு போனீங்க. இப்ப அரசாங்கமே அந்த வேலய செய்யச்சொல்லுது. அரசாங்கமே சம்பளம் கொடுக்க போகுது. கஷ்டப்பட்ட ஒங்கள விட்டுட்டு வேற ஆளுகளுக்குக் கொடுக்க மனசு கேக்கல.”
“பரவால்ல சார். நீங்க எங்களப்பத்தி இவ்வள தூரம் நெனச்சிப் பாக்குறீங்களே அதுவே போதும் சார். வேல கெடைக்கலன்னாலும் பரவால்ல” என்றான் செல்வமணி.
“எப்பா என்ன பேசுற நீ. நான் நெனச்சா போதுமா? ஒன்னோட தட்டுக்கு சோறு வந்துடுமா. “
“எப்பா, நாங்களும் மனுசங்கதான. எங்களுக்கும் மனசாட்சி இருக்கில்ல.”
யாரும் எதுவும் பதில் பேசவில்லை. அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள்.
“என்ன ஒண்ணு. அரசாங்க விதிகள மதிச்சிதான் ஆகணும். அரசாங்கம் எட்டாவது படிச்ச சர்டிபிகேட் கேக்குது. அது நம்ம கைல இருந்துட்டா பிரச்சனையே இல்ல. நம்ம பாட்டுக்கு போயிட்டே இருக்கலாம். அதுக்கும் வேலக்கிம் சம்மந்தமே இல்ல. அந்த பேப்பரா வந்து போஸ்ட் மரம் ஏறப்போகுது. கம்பி இழுத்துக் கட்டப் போகுது. எல்லாம் ரூல்ஸ். ” தனக்குத் தானே பேசுவது போல அவரே பேசிக்கொண்டிருந்தார்.
“சட்டம் இருக்கு பாத்தியா சட்டம். அதுக்கு இதயம் கெடையாது. கண்ணு தெரியாது. காது கேக்காது. ஆனா வாய் மட்டும் இருக்கும். அது என்ன சொன்னாலும் அத நம்ம கேட்டு எஸ் சார் மட்டும்தான் போடனும். வேற பதில் எதுவும் சொல்லக்கூடாது.”
“ஆனா நான் அப்புடியா சொல்லு? எனக்கு மனசு இருக்கு. மனசாட்சி இருக்கு. நல்லது கெட்டது யோசிச்சிப் பாக்க வேண்டி இருக்கு.”
“எனக்கும் புள்ளகுட்டி இருக்குல்ல. நாளைக்கி நானும் கடவுள்கிட்ட கையேந்தி நிக்கணுமில்ல.”
“நான் ஒனக்கு என்ன கொடுத்தனோ அதத்தான கடவுள் ரெண்டா, நாலா, எட்டா, பத்தா எனக்கு திருப்பிக் கொடுப்பாரு.”
“நான் ஒன்னோட தலயில மண்ணள்ளி போட்டா என்னோட தலயில அவரு பூவயா அள்ளி மோடுவாரு ? பாராங்கல்ல தூக்கிப் போட்ருவாரு.”
அளவாக குடித்திருப்பார் போல தோன்றியது. ஆனால் பேசுவதை மட்டும் நிறுத்தவேயில்லை. அதுவும் மிகவும் தெளிவாக பேசுகிறார். இவர்களுக்கு ஆதரவாக அவர் பேசுவதை கேக்க ஆறுதலாக இருந்தாலும் கூட தொடர்ந்து அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டு நிற்க அவர்கள் விரும்பவில்லை. என்ன இருந்தாலும் அவர் உயர்ந்த பதவியில் இருக்கின்ற அவர்களுடைய அதிகாரி. நம்மிடம் குடித்துவிட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாரே என்றுகூட எப்போதாவது வாய்தவறி வந்துவிடக் கூடாது என்று எண்ணினர். உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தனர். நல்ல வேளையாக அவரது உறவுக்காரர் ஒருவர் வரவே இவர்கள் அவரிடமிருந்து தப்பித்து வர முடிந்தது.
கரும்பாயிரம் கொண்டான் முன் விழுந்து கும்பிட்டு ‘எங்களுக்கும் வாழ்க்கையில் ஒரு விடிவுகாலத்தை உருவாக்கிக் கொடு தெய்வமே ‘ என்று வேண்டிக்கொண்டு சென்றார்கள்.
மறுநாள் அவர்கள் விரும்பியதுபோல, கிருஷ்ணமூர்த்தி வாத்தியார் வாக்கு கொடுத்தது போல ஐந்து பேருக்கும் எட்டாம் வகுப்பு பாசான சர்டிபிகேட்டை தயார் செய்து வைத்திருந்தார்.
“நான் வேலபாத்த வருசத்துல கொடுத்த மாதிரி தேதி போட்டுருக்கண்டா.”
“……”
“ஒங்க நல்ல நேரம் பொட்டிக்குள்ள பழய சீலு ஒண்ணு கெடந்துச்சி. டீசி தாளு மட்டும் தான் புதுசா வாங்குனேன்.”
“…..”
“தப்புதான்னாலும் இத வச்சிக்கிட்டு குறுக்கு வழியில கோட்டையயா புடிக்க போறீங்க. இல்ல யாரோட எடத்தயும் தட்டிப் பறிக்க போறிங்களா. இந்த வேல ஒங்க உரிம. அதுக்கு இந்த தாளு ஒதவப்போகுது. “
“…..”
“எடுத்துக்கிட்டு போயி கொடுத்துட்டு வேலயில ஒப்புகொள்ளுங்கடா.”
“சார், செலவுக்கு ” என்று தயங்கியபடி இழுத்தான் வீரன்.
“டேய், கஷ்டப்பட்டு தயார் பண்ணிருக்கேன். புடுங்கி கிழிச்சிகடாச வச்சிறாத ஆமா. “
“…..”
“பணத்துக்காக இத செய்து கொடுக்குறேன்னு நெனச்சிங்களாடா? என்ன அவ்வள எளப்பமா நெனச்சிட்டிங்களாடா?”
“தெரியாம கேட்டுட்டேன் சார். தப்புதான். என்ன மன்னிச்சிருங்க.”
“இனிமே நீங்க யாரும் சார்ன்னு கூப்பிட்டுக்கிட்டு என் கண்ணு மின்னாடி கூட வரக்கூடாது சொல்லிட்டன். பணம் கொடுக்குறானுங்களாம் பணம். ” கோவமாய் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டார்.
மற்றவர்கள் நால்வரும் வீரனிடம் கோவமாய் கத்த ஆரம்பித்து விட்டார்கள். எல்லோரும் சேர்ந்து பேசிக்கொண்டு வந்த விஷயம்தான். ஆளுக்கு கொஞ்சம் என்று எல்லோரும் போட்டு சிறு தொகையையாவது கிருஷ்ணமூர்த்தி வாத்தியாருக்கு கொடுக்க வேண்டும் என்று பேசி முடித்திருந்தார்கள். இருந்தபோதும் உள்ளன்போடும், இவர்களின் வாழ்க்கைப் பற்றிய அக்கறையோடும், இருண்டு போய்க்கிடக்கும் இந்த ஐந்து பேரின் வீட்டிலும் எப்படியாவது விளக்கேற்றி வைத்துவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும் அவர் இக்காரியத்தை செய்ய துணிகிறார் என்பதை புரிந்து கொண்ட மற்ற நால்வரும் நம்முடைய எந்த வார்த்தையும் கிருஷ்ணமூர்த்தி சாரை புண்படுத்திவிடக் கூடாது என கவனமாகவும் அமைதியாகவும் இருந்து விட்டார்கள். ஆனால் வீரன் இதுபோல் கேட்டால் தவறாகிவிடுமே என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் அவசரப்பட்டு அப்படி கேட்டுவிட்டான். அதற்காக இப்போது வருந்தவும் செய்தான்.
சர்டிபிகேட் கிடைத்த அடுத்த ஒருமணி நேரத்திற்குள் ஐந்து பேரும் தங்கள் உயரதிகாரி ஏகாம்பரம் முன் நின்றார்கள். இவர்களின் எட்டாம் வகுப்பு சான்றிதழ்களை வாங்கிப்பார்த்த அவருக்கு சட்டென்று பேச வார்த்தைகளே வரவில்லை.
“இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு. ஒங்க கிருஷ்ணமூர்த்தி சாரு ஒங்களுக்கு செய்து கொடுத்திருக்குற காரியம் இருக்கே அது ரொம்ப பெருசு. பெத்த புள்ளைகளுக்கு கூட யாரும் இப்படி துணிஞ்சி செய்ய மாட்டாங்க. நீங்க வாழ்க்கையில அவர ஒருநாளும் மறக்கக் கூடாது. அவரு பேருக்கு எப்பவுமே கலங்கம் ஏற்படாதமாதிரி நீங்க நடந்துக்கணும்” தன் பங்கிற்கு ஏகாம்பரமும் பலவாறு புத்திமதிகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டு அமைதியாக நின்றார்கள். அவ்வப்போது வீரனை சாடையாய் கவனித்துக் கொண்டாரிகள். கிருஷ்ணமூர்த்தி சாரிடம் பேசியதுபோல ஏதாவது சொல்கிறோமென்று அவன் வாயை விட்டுவிடக்கூடாதே என்று கவனமாயிருந்தார்கள்.
“போங்கப்பா போயி வேலயப்பாருங்க. நீங்க பேப்பர் கொடுத்தாச்சி. வேலைக்கான உத்தரவு ஒங்க வீட்டுக்கு வந்திரும். அதுவரைக்கிம் காத்துக்கிட்டு கெடக்க வேண்டாம். அஞ்சி பேரும் ஆளுக்கொரு லயன்ல ஓடுங்க” என்று சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தார்.
அன்று வேலையை ஒப்புக்கொண்டவர்கள் தான். எந்த இடையூறும் இல்லாமல் வேலைபார்த்து வந்தார்கள்.
வீட்டில் செல்வமணிக்கு கோட்டேரி ராமச்சந்திரன் மகள் சாந்தியை பெண்பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். அரசாங்க சம்பளம் வாங்கும் மாப்பிள்ளை என்பதால் நிலம் இல்லை, வசதியான வீடுவாசல் இல்லை என்பதையெல்லாம் குறையாகக் கருதாமல் பெண்ணைக் கொடுத்தார் ராமச்சந்திரன்.
“அரசாங்க சம்பளம் ஒண்ணு போதாதா. காத்து மழன்னு எதுக்கும் கவலபட வேண்டாம். ஒண்ணாம் தேதியானா தாள எண்ணிப்பாக்கலாம். ஒரு லோன போடலாம் மண்ணு மனைய வாங்கலாம், வீட்ட வாசல கட்டலாம். புள்ள குட்டிங்கள படிக்க வைக்கலாம். வேலகார மாப்பிள்ளைக்கி பொண்ண கட்டிக் கொடுத்தா வயசாயி விழுந்து கெடக்கும் காலத்துல பை நெறைய பழமும் ரொட்டியும் வாங்கிக்கிட்டு பாக்க வருவாங்க.” ராமச்சந்திரன் வீட்டில் ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
எல்லா காரணங்களும் செல்வமணிக்கு சாதகமாக அமைந்தது. வெகு சீக்கிரத்திலேயே சாந்தியை மணம்முடித்துக் கொண்டான். ஆதனூரில் மேற்குத்தெருவில் கருப்பஞ்சத்தை வேய்ந்த அந்த சிறிய கொட்டகைதான் செல்வமணி சாந்திக்கு கட்டித்தந்த தாஜ்மகால். சாந்தி தோற்றத்திலும் நிறத்திலும் நல்ல அழகுடையவளாய் இருந்தாள். நெடுநெடுவென்று வளர்ந்திருந்தாள். ஒடிசலாய் அதிக சதைப்பற்றில்லாத உடல்வாகு அவளுக்கு. பார்க்க கொடிபோல தோன்றினாள். அவள் பள்ளிக்கூடம் பக்கம் தலைவைத்துகூட படுத்ததில்லை. பள்ளிக்கூடத்தில் சேர்த்து ஓரிரு நாட்களிலேயே ஏதோ தடுப்பூசி போடப்போவதாய் ஜீப்பில் வந்து இறங்கிய நர்சையும் மற்றவர்களையும் பார்த்தாள். புத்தகப்பை சாப்பாட்டு தட்டு எதையும் பொருட்படுத்தாமல் பள்ளியிலேயே போட்டுவிட்டு முந்திரிக் காட்டுக்குள் ஓடி பதுங்கியவள் தான். எத்தனையோபேர் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பொழுது சாய்ந்த பிறகு இனி யாராலும் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகே அவள் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். மறுநாளும் மறுநாளும்கூட பொழுது விடிந்ததும் காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டாள். முந்திரிக்காட்டுக்குள் பதுங்கிக் கிடக்கும் முயலைப் போல கிடந்தாள். காட்டுக்கறிக்காக புதர்களுக்குள் பதுங்கிக்கிடக்கும் முயல்களை துரத்திப்பிடித்து வேட்டையாடும் இளஞ்செட்டு பசங்களால்கூட சாந்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. மரத்துக்கு மரம் தாவும் குரங்குக் குட்டிகள் போல மரங்களுக்கிடையே தாவிக்கொண்டிருந்தாள். அவளை யாராலும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியாது என்று தெரிந்தபின் அந்த முயற்சியை கைவிட்டிருந்தார் ராமச்சந்திரன். முந்திரிக்கொட்டை பொறுக்குவது பயத்தங்காய் பறிப்பது என காட்டு வேலைகளை சுறுசுறுப்பாய் செய்ய பழகிக்கொண்டாள். அவளுக்கு படிக்கத் தெரியாது என்பதாலோ என்னவோ படித்தவர்களை பெரிதாய் மதிப்பாள். அவர்களை அபூர்வ பிறவிகள் போல வியந்து பார்ப்பாள். சாந்தியின் இந்த மனப்போக்கு செல்வமணியின் வாழ்க்கையை இவர்கள் இருவருக்கிடையே பிணக்கு எதுவும் ஏற்படாமலும் சுமுகமாகவும் அமைத்துக் கொடுத்திருந்தது. தடுப்புகளற்ற அந்த சிறிய குடிசைவீடே இருவருக்கும் சொர்க்க லோகமாக இருக்கிறது என்பது போலத்தான் பார்ப்பவர்கள் பேசிக்கொண்டார்கள். வருடத்திற்கு ஒரு குழந்தையை வஞ்சனையின்றி பெற்றுக்கொடுத்தாள் சாந்தி. அடுத்த அடுத்த குழந்தைகள் பிறந்த போது உடல் நலிந்து கொண்டே வந்தது. இனி குழந்தை வேண்டாம் என்று நினைத்து மருத்துவமனை சென்றபோதும் கருத்தடை செய்ய உடலில் நல்ல ரத்தம் இல்லை. உடலில் வலுவும் இல்லை . உடம்பை தேற்றிக் கொண்டு வா என்று திருப்பியனுப்பினர். அதன்பிறகு உடலைத் தேற்ற முடியவில்லை அவளால். ஆனால் தொடர்ந்து பிள்ளை பெற்றுக்கொள்வதையும் நிறுத்த முடியவில்லை. இரண்டு ஆண், நான்கு பெண்பிள்ளைகள் என அரை டெஜன் பிள்ளைகள். ஆனால் செல்வமணியால் அந்த வீட்டையோ கூரையையோ மாற்ற முடியவில்லை. ஆறு பிள்ளைகளுடன் வசதியாய் கால்நீட்டி படுக்க சிரமமாய் இருந்தது.
“பசங்க வளந்துட்டுதுங்க. எல்லாத்தயும் இனிமேலயும் ஒண்ணா படுக்கவைக்க முடியாது. துணிமணி வெலகுறது தெரியாம தூங்குதுங்க. என்னதான் அண்ணன் தங்கச்சியா இருந்தாலும் தூங்கும்போது கைகாலு பட்டா கஷ்டமாத்தான இருக்கும். நடுவுலதடுப்பு வச்சி செத்த பெரிய கூரையா போட்டுத்தாரீங்களா?” என்றாள்.
“இந்த வருசம் கோடையில கூட்டாளிங்ககிட்ட கடன்,கைமாத்து வாங்கியாவது இதை பிரிச்சிட்டு கொஞ்சம் பெரிய கூரையாப் போட்டுருவம் கவலப்படாத” என்றான். அவனது அந்த அணுசரணையான வார்த்தைகளில் மனம் நிறைந்தவள் மறுபடியும் வயிற்றில் அவனது குழந்தையை வாங்கியிருந்தாள். “ஒவ்வொரு புள்ளைக்கும் முடிச்ச அவுத்து முடிச்ச அவுத்துதான் இன்னக்கு இந்த நெலமையில வந்து நிக்கிற. இதுக்கு மேலயும் புள்ள ஆச உடலயா ரெண்டு பேருக்கும்? அப்படி என்ன சொகங்கேக்குது” என பார்ப்பவர்கள் எல்லாம் ஏளனமாய் பேசிவிட்டுச் சென்றார்கள். இது பற்றி சாந்தி கவலைப்பட்டு செல்வமணியிடம் சொல்லும் போதெல்லாம்
“கவலபடாத புள்ள. நம்ம கிட்ட ஒண்ணுமா இல்ல. மாசமானா சம்பளம் வருதில்ல. இனிமே கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்சி ஒவ்வொண்ணா செய்வம். எல்லாம்தான் பள்ளிக்கொடம் போகுதுக. படிக்கட்டும் ஏதாவது வேல வாங்கிக் கொடுத்திருவம். பொம்புளப் புள்ளைங்கள நல்ல எடமா பாத்து கட்டி கொடுத்துருவம். நமக்கென்ன கவல சொல்லு. மாசமானா சம்பளம் வருதில்ல. நம்மாள சமாளிக்க முடியாம போகுமா?” என்பான் சமாதானமாக. இருந்தபோதும் அவனுக்குள்ளும் சற்று பயம் ஏற்பட்டிருந்தது. எத்தனை முயற்சித்தும் மாதம் ஒரு ரூபாய் கூட மிச்சம் செய்ய முடியவில்லையே என்று எண்ணி வருந்திக்கொண்டிருந்தான்.












