சமீபத்தியவை
Conversations on caste திருநெல்வேலித் தமிழின் உருள்பெருந்தேர் பிள்ளைக்கனியமுதே… – 4 இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும் எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்
Conversations on caste திருநெல்வேலித் தமிழின் உருள்பெருந்தேர் பிள்ளைக்கனியமுதே… – 4 இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும் எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 2 Articles

திருநெல்வேலித் தமிழின் உருள்பெருந்தேர்

சேது பாலா By சேது பாலா
17 hours ago
A A
0
Thirunelveli Tamilin Urupperum Ther

ஊர் கூடுந் தேரோட்டம்:

ஒரு நல்ல Coffee குடித்த பிறகு அதன் after taste எனப்படும் பிற்சுவை நாவில் தங்க வேண்டும். அச்சுவை தவிர யான்போய் இன்னொரு கடையில் coffee எச்சுவை தரினும் வேண்டேன் என்னும் அளவிற்கு அது குடித்தவரைக் கட்டிப் போடுதல் உண்டு. ஆனால் சில நேரத்தில் சிலரை யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னுமாறு பிறரையும் அக்கடைக்கு அழைத்துச் செல்லத் தூண்டும். வெகு அரிதாகவே வெகு சிலருக்கே அச்சுவை தரும் Coffee ஒன்றை ஏன் அதனினும் மேலான ஒரு சுவையை நானே என் கைகளால் சமைத்துப் பிறருந்தக் கொடுப்பேன் என்ற எண்ணம் தோன்றும். என் கைகளுக்குக் கிடைத்தவற்றை எல்லாம் பிறர் கைகளுக்குக் கொடுத்துவிடுகிற முயற்சி தான் இந்த வாழ்வு, எழுத்து எல்லாம் என்று எழுத்தாளர் வண்ணதாசன் முன்பொரு முறை இராசபாளைய இலக்கியக் கூட்டமொன்றில் பேசியிருந்தார். அப்படித்தான் இருந்தார் Sep 06, 2026  மயிலாடுதுறை இலக்கியப் பூங்கா நிகழ்த்திய “கல்யாண்ஜி 81” காலமெல்லாம் கவிதை வாழ்க! நிகழ்வில் உரையாற்றவிட்டு மயில் ஆடும் துறையில் இருந்து ஊர் திரும்பியது முதல் பூமத்தியரேகை அல்புனைவு நூலாசிரியர் சண்முகசுந்தரம்.

தம்பி எல்லாரும் அவாளுக்கு எந்தெந்த ஊர்லயோ இருந்துட்டு விழா எடுக்காக… நம்ம ஊர்ல நம்ம திருநெல்வேலில நம்ம செய்யவேண்டாமா… நீ சென்னை கிளம்புதியோ… சரி நீ போயிட்டு ஊருக்கு வந்ததும் பேசுவோம் வா… நா அதுக்குள்ள நம்ம தீன் கிட்டயும் வண்ணமுத்து கிட்டயும் பேசி வைக்கேன்… என்று ஒரு நாள் காலையில் அழைத்தார் சண்முகசுந்தரம் அண்ணன்.

ஊட்டிக்குப் புறப்பாடு:

ஊட்டிக்குச் செல்வது என்பது ஊட்டிக்குச் செல்வது மட்டுமன்று ஊட்டிக்குப் போவோமா என்ற பேச்சுத் தொடங்கி ஒவ்வொருநாளும் அதை எதிர்பார்த்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டு குடும்பத்தில் குழந்தைகளுக்குப் பள்ளியிலும் பெரியவர்களுக்குப் பணியிடத்திலும் விடுப்புப் பெற்றுக்கொண்டு வேண்டியவற்றை எல்லாம் பெட்டியிலும் பையிலுமாகக் கட்டிக் கொண்டு வீட்டைப் பூட்டி வெளியில் கிளம்பும் யாவுமே ஊட்டிச் சுற்றுலாவின் ஓர் அங்கமே. அப்படித்தான் கழிந்தன அந்த அலைபேசி அழைப்பு வந்த நொடிமுதலான எங்கள் நாட்கள். எந்த அரங்கம் அமர்த்த வேண்டும் சிறப்பு விருந்தினராக யாரை அழைத்தால் பொருத்தமாக இருக்கும் உரையாற்ற யாரை அழைத்தால் சரியாக இருக்கும் மற்ற ஏற்பாடுகளை யார் யாரால் பார்த்துக் கொள்ள முடியும் இப்படியான வினாக்களும் அவற்றிற்கான விடைகிட்டலுமாக ஓடின நாட்கள்.

கொடைக்கால் நாட்டு:

நான் சென்னையில் இருக்கும்பொழுதே ஒரு நாள் மீண்டும் அழைத்தார். தம்பி நாள் குறிச்சாச்சி அக்டோபர் 4, சரோஜ் அரங்கம் அமத்தியாச்சு சென்னைல இருந்து தென்றல் சிவக்குமாரும் சரஸ்வதி காயத்ரியும் வரதுக்கு ticket போட்டுட்டாங்க. தீன் வண்ணமுத்து நா மூனு பேரும் மத்ததெல்லாம் பேசி வைக்கோம் நீ வந்ததும் ஒரு தடவ நாலு பேரும் சந்திச்சிப் பேசுவோம் நீ ஊருக்கு வந்துட்டுச் சொல்லு என்று மகிழ்பரபரப்பில் பேசினார். ஊருக்கு வந்து நேரில் சந்தித்துப் பேசித் தலைமை முன்னிலை சிறப்பு விருந்தினர் கவிதைகள் அமர்வு சிறுகதை அமர்வு பேச்சாளர்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் வரவேற்புரை நன்றியரை என ஒவ்வொன்றாக நிரல் பெற்று இப்படித்தான் ஊட்டிச் சுற்றுலாப் போலத் தொடங்கி ஊர்த்திருவிழாக் கோயில் கொடை போலக் கொடியேறி நெல்லையப்பர் தேர்த்திருவிழாவாகப் புலர்ந்தது. ’புலரி’ என்கிற முதல் கவிதைத் தொகுப்பில் தொடங்கி இதுவரை 21 கவிதைத் தொகுப்பு வனைந்திருக்கும், ’கலைக்க முடியாத ஒப்பனைகள்’ சிறுகதைத் தொகுப்பில் தொடங்கி இதுவரை 242 சிறுகதைகளைப் புனைந்திருக்கும் எழுத்தாளர் வண்ணதாசன் என்றும் கவிஞர் கல்யாண்ஜி என்றும் அறியப்படுகிற சி.கல்யாணசுந்தரம் அவர்களின் எழுத்தைக் கொண்டாடும் எழுத்தின் வழி அவற்றை இயற்றியவரைக் கொண்டாடும் “வண்ணதாசன் 81” அகவை போற்றும் விழா.

மாமழை போற்றும் நெல்லையப்பர் தேரோட்டம்:

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டத்தில் ஒரு சில நொடிகள் சாரல் விழும் முன்பெல்லாம். முன்பெல்லாம் என்றால் ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம். இம்முறை ஐப்பசியில் பெய்யும் அடைமழை புரட்டாசியில் வண்ணதாசன் 81 விழாவிற்கு முன்பே பொழியத் தொடங்கியது திருநெல்வேலியில். விழா நாளிலும் நல்ல மழை. அதென்ன நல்ல மழை? நன்று பெரிதாகும் என்று தொல்காப்பியர் சொல்வது போல பெரிய மழையா என்றால் ஆம் பெரிய மழை தான். எவ்வளவு பெரிய மழை? என்றால் விழாவிற்கு முந்தைய நாள் வாயிற்பதாகை கட்டுவதற்கும் விழா நாளில் காலையில் அனைவரும் சரோஜ் நினைவக அரங்கிற்கு வருவதற்கும் விழா நிறைவின் பின் நிறைமனத்துடன் வீடு செல்வதற்கும் எவ்வித இடையூறும் செய்யாத பெரியமனது படைத்த பெரிய மழை அது. அரங்கத்திற்குள் இலக்கிய மாமழை பொழிந்து கொண்டிருக்க அரங்கத்திற்கு வெளியே பலநூறு சீனி வெடி வெடித்துக் கொட்டித் தீர்த்த பெரிய மழை அது. பலநூறு சீனி வெடிகள் சேர்ந்தது தானே ஒரு முழுநீளச் சரவெடி. நீர்ச்சரங்கள் கோர்த்துக்கட்டிய தண்ணீர் வெடிகள் வெளியே வெடித்துக் கொண்டிருக்க சொற்சரங்கள் சேர்த்துக்கட்டிய வண்ணதாசனின் எழுத்தை வியந்து பார்த்து உயர்ந்து நவின்ற உரைச்சரவெடிகள் அரங்கத்திற்குள் தீப்பொன் துகள்களைத் தெறித்துக்கொண்டிருந்தன.

இலக்கியத் தேரோட்டம்:

நவரத்தின மோதிரத்தில் கூட ஒன்பது மணிகளே இருக்கும். ஆனால் அரங்க வாயிலில் வண்ணதாசன் வரைந்த 12 ஓவியங்களை மணிகளாக நிறுத்தி நடுவில் அவற்றை வரைந்தவரின் ஈறு தெரியச் சிரிக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் எல்லோரையும் பிடிக்கும் முகத்தை முத்துப் போல் பதித்த பதாகையைக் கட்டி எழுப்பியிருந்தார் விழா ஒருங்கிணைப்பாளருள் ஒருவரான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் வண்ணமுத்து. மேடைப் பின்புலப் பதாகையையும் இருகண் விரித்து விழுங்கும் அளவிற்குப் பேருருவில் வடிவமைத்திருந்தார்.

ஆயிரம் பிறை கண்டவர்க்கு மாலை மாற்று:

விழாவின் தொடக்கமாக மங்கல மாலை மாற்று நிகழ்ந்தது. சங்கரி அம்மாவுக்கும் ஆயிரம் பிறை கண்ட கல்யாணசுந்தரம் ஐயாவிற்கும் எண்பதாங்கல்யாணமாக அந்த மாலை மாற்றை நிகழ்த்தி மண மேடையாகக் கலைக்க முடியாத ஒப்பனையைப் புனைந்து கொண்டது விழா மேடை. மனைமாட்சி மிகுந்த மணமக்களைக் கண்டு அரங்கம் வாழ்த்துப் பெற்றது. மேடையில் சோமசுந்தரம் என்கிற எழுத்தாளர் கலாப்ரியா அவர்களும் அவர்தம் துணைவியார் சரஸ்வதி அம்மாவும் உடனிருந்து வாழ்த்தி மகிழ்ந்தனர்.

கவிதைகள் அமர்வு:

பெருமேடைக்கு ஒரு தொகுப்பாளர் போதுமா? சென்னையில் இருந்து வந்திருந்த தமிழமுதம் நளினா மற்றும் தமிழ் வாசகன் மனோகரன் இருவரும் தொகுப்பாளர்களாக மேடையேறி நிகழ்வைத் தொகுத்து வழங்கினர். எழுத்தாளர் எம்.எம்.தீன் வண்ணதாசனின் வரலாற்றுரையாக நிகழ்விற்குப் பொருத்தமான வரவேற்புரையை வழங்க, கவிஞர் கிருஷி சுருக்கமான தலைமையுரை ஆற்றினார்.

கணபதி அண்ணன் எழுந்தருளல்:

முன்னறிவிப்பின்றிச் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்ட கலாப்ரியா வண்ணதாசனின் தந்தையார் தி.க.சி.யின் அன்பகத்தில் தொடங்கி கணபதி அண்ணனிடத்தில் நிறைவு செய்து கணபதி அண்ணன் படம் ஒன்றையும் அன்பளிப்பாக அளித்து வண்ணதாசனையும் வந்திருந்த அனைவரையும் நெகிழ்த்தியமைந்தார். அடுத்து அரங்கேறவிருக்கும் கவிதைகள் அமர்விற்குச் செவிகூர்ந்து காத்திருந்தது அரங்கம்.

த.மு.எ.க.ச. துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் அ.இலட்சுமி காந்தன் கவிதைகள் அமர்வைத் தம் முதல் உரையால் தொடங்கினார். உச்சி வெயிலில் நடந்துகொண்டிருந்த பொழுது இவ்விழா அழைப்பு வந்ததும் குளிர்மழையாக மாறியதைக் கூறிக் கல்யாண்ஜி எழுதிய ஆதிநாள் கவிதைகளுள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் துணைத்தலைவர் கண்மணிராசா, கல்யாண்ஜி கவிதைகளோடே தாம் வாழ்ந்து கொண்டிருப்பதை ஒவ்வொரு நிலையிலும் தம் குடும்பத்தினருக்கு அவரின் கவிதைகளைச் சொல்லி நம்பிக்கை உரமேற்றும் வழக்கத்தை வாழ்க்கைச் சிக்கலில் சிக்கிச் சுழன்றுழலும் ஓர் ஊர்தி ஓட்டுநர் கல்யாண்ஜி கவிதைகளால் மனவெழுச்சி பெறுவதை என ஒவ்வொன்றாக ஒவ்வொரு கவிதையாகக் கூறிப் படிக்கும் நாமும் கல்யாண்ஜியாக மாறிவரும் நிலை வரை ஓர் உரைக்கட்டுமானத்தைக் கண்முன் கட்டியெழுப்பினார்.

அவரைத் தொடர்ந்து சரஸ்வதி காயத்ரி பல்லாண்டுகளாகத் தமக்கும் வண்ணதாசனுக்கும் இருக்கும் கவிதைப் போக்குவரத்தைக் கூறி ஒரு மகளைப் போல அவர் எழுத்துக்களைக் கையைப் பிடித்தழைத்துச் சென்று கனிவாக எடுத்துரைத்தார். வாழ்வின் பல்வேறு நிலைகளில் அவர் கடிதங்களும் எழுத்துக்களும் கடிதம் எழுதும் தமக்கு மட்டுமின்றித் தம் குடும்பத்தினருக்கும் எவ்வளவு உறுதுணையாக இருந்துள்ளன என்று நினைவுகூர்ந்தார்.

கவிதைகள் அமர்வின் நிறைவாக 2002ஆம் ஆண்டு வண்ணதாசன் படைப்பு இலக்கியங்கள் என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டவரான பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன் பேச்சில் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள வெள்ளி வீதியார் இயற்றிய பாடலையும் கல்யாண்ஜி கவிதையையும் ஒப்பிட்டுக் கூறினார். இன்று எல்லாமே cinematic ஆகிவிட்டது என்றார். அரங்கத்தில் வண்ணதாசன் ஐயாவிற்குக் கிரீடம் சூட்டப்பட்டபோது அவர் கூச்சத்தில் நெளிந்துகொண்டிருந்ததை அருகமர்ந்து பார்த்து அவர் தம்முடைய உரையில் இந்த இயல்புக்கு மீறிய cinematic தனமான செயல் ஒரு படைப்பாளிக்கு எவ்வளவு கூச்சத்தைத் தருகிறது என்பதையும் நயமாகக் குறிப்பிட்டார்.

கவிதைகள் அமர்வின் நிறைவில் முன்னிலை வகித்த எழுத்தாளர் வீ.பழனி, கலை பதிப்பகர் பாப்பாக்குடி இரா.செல்வமணி தத்தம் வாழ்த்துரையை வழங்கினர். விழாவிற்கு வந்திருந்த பலரும் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு மரியாதை செய்தும் அன்பளிப்பு வழங்கியும் புத்தகத்தில் கையெழுத்துப் பெற்றும் உடனின்று புகைப்படமெடுத்தும் தம் ஆசைகளை ஆர ஆர உண்டு களித்தனர்.

நல்ல வேளையாக அந்தப் பெரிய மனது படைத்த நல்ல மழை அரங்கத்தின் பக்கவாட்டு வெளியில் நின்று அனைவரும் உணவுட்கொண்ட உணவு இடைவேளைக்குப் பிறகு தான் பொழிந்தது.

சிறுகதைகள் அமர்வு:

உணவுண்டு உறங்கவிருக்கும் கண்களை மணங்கமழ்ந்து நாசி வழி நுழைந்தெழுப்பும் மலர் போலச் செவிவழி சொல் புகுத்தியெழுப்பக் கவிதை படித்தாள் சிறுமி காயத்ரி.

சிறுகதைகள் அமர்வின் தொடக்கவுரையாகத் தென்றல் சிவக்குமார் வண்ணதாசன் எழுதிய பல்வேறு சிறுகதைகளைப் பற்றி மிக நுணுக்கமாகவும் விரிவாகவும் மகிழ்வுரை ஆற்றினார். எப்படி வண்ணதாசனின் ஒரு கதையில் வரும் ஒரு வரி அவரின் மற்றொரு கதையில் வரும் மற்றொரு வரியை நினைவு படுத்துகிறது என்ற தொடர்புக் கண்ணியைக் காட்டிக் கொடுத்து அரங்கத்தைக் கட்டிப்போட்டார்.

அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் த.அறம் தம் தந்தை தனுஷ்கோடி இராமசாமியிடம் இருந்து தொடங்கி வண்ணதாசனிடம் வந்தடைந்து தம் உரையை நிகழ்த்தினார் வெள்ளம் கதை சொல்லி. குற்றம் இழைத்தவர்களுக்குக் கூட இரக்கம் காட்டும் வண்ணதாசன் கதைக்கூறுகளை எடுத்துரைத்தார்.

சிறுகதைகள் அமர்வின் சிகரமாக த.மு.எ.க.ச. மாநிலத் துணைச் செயலாளர் ம.மணிமாறன் வண்ணதாசன் சிறுகதைகள் இதுவரை தமிழிலும் உலகின் பிற மொழிகளிலும் வெளிவந்திருக்கும் பிற அத்தனை இலட்சம் சிறுகதைகளில் இருந்தும் சிறுகதையின் பொதுவான இலக்கணத்தில் இருந்தும் மாறுபட்ட சொற்சித்திரங்களாக எப்படி மிளிர்கின்றன என்பதைச் சில எடுத்துக்காட்டுக் கதைகளின் வழி எடுத்துக்கூறினார்.

சிறுகதைகள் அமர்விற்கு தலைமை வகித்த தோழர் முத்தையா முன்னிலை வகித்த தளவாய் நாதன் தம் வாழ்த்துரையைப் பகிர்ந்தனர். விழா ஒருங்கிணைப்பாளர்களான வீரசோழன் க.சோ.திருமாளவன், சண்முக சுந்தரம் மற்றும் நான் (சேது பாலா) சுருக்கமாக எங்கள் மகிழ்வைத் தெரித்துச் சிற்றுரையாற்றினோம்.

உருள்பெருந்தேர்:

காலையில் இருந்து ஒவ்வொரு பேச்சாளராக உரையாற்ற இடையிடையே நளினாவும் மனோகரனும் கல்யாண்ஜி கவிதைகளை ஒவ்வொன்றாக ஆங்காங்கே படித்துக்காட்டி அடுத்த பேச்சாளரை உரையாற்ற அழைக்க என்று இப்படியாகச் சென்றுகொண்டிருந்த விழா அதன் உச்சகட்டமான அழைப்பிதழில் அறிவிக்கப்படாத அறிவிப்பென்ற ஒன்றே இல்லாதபோதும் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட விழா நாயகரின் நிறைவுரைக்கு அரங்கம் தன்னை ஆளக்கொடுத்து அமைதியில் ஆழ்ந்தது. அவரின் சொற்களாலேயே அல்லது அவரிடமிருந்து கடன் வாங்கிச் சொல்ல வேண்டுமென்றால் Pin drop silence என்பது போல Feather drop silence எனும்படி இறகு விழுந்தால் கூட ஓசை எழும் அளவிற்கு அரங்கம் அமைதி காத்தது. அத்தனை செவிகளும் ஆயிரம் மடங்கு கூர்மை பெற்றன எழுத்தாளர் வண்ணதாசனின் நிறைவுரை கேட்க.

ஏறக்குறைய நாற்பத்தைந்து நிமிடங்கள் இறகுவீழமைதி கொண்ட அரங்கம் அப்பேருரையால் அந்த நிறைவுரையால் தன்னை முழுதாக நிரப்பி நிறைத்துக் கொண்டது. கிளையில் அமர்ந்த பறவை போல் தம்மை உருவகித்துக் கொண்டு உரையாற்றினார் வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி என்கிற கல்யாணசுந்தரம். இது கல்யாண சுந்தரத்திற்குத்தானே 81, 1962ஆம் ஆண்டில் சிறுகதை எழுதத் தொடங்கிய வண்ணதாசனுக்கு 64 தானே என்று அவர் கூறிய சொற்களையே மீண்டும் கடன் வாங்கி நூற்றாண்டை நோக்கி இன்னும் 36 ஆண்டுகளும் அதற்கு மேலும் வண்ணதாசன் சிறுகதை புனையவும் கல்யாண்ஜி கவிதை வனையவும் கல்யாணசுந்தரம் நீடூழி வாழ விரும்பின அரங்கத்திலிருந்த அத்தனை மனங்களும்.

தாம் பெற்ற யாவையும் கொடுத்துவிட்டுச் செல்ல விரும்புகிற
தாம் படிக்கும் நல்ல எழுத்துக்களைப் பிறருக்குக் காட்டித் தர விழைகிற
தம் பதிப்பாளர்கள் இளையபாரதியையும் சந்தியா நடராஜனையும் நினைத்துக்கொண்ட அந்த நடராஜன் பங்குகொள்ள வேண்டிய நிகழ்வில் தங்கள் மகன் நடராஜன் பங்குகொண்டதைக் கண்டு மகிழ்ந்த தம் கதைகளில் வரும் ஈஸ்வரியாகிய தம்மிணையாள் சங்கரி அம்மா அந்நாளில் மகிழக் கண்டு தாமும் மகிழ்ந்த மழையை மண்ணிற்கு வாவென்று அழைப்பது போலத் தம் இரு கைகளையும் விரித்துயர்த்தி அக்கைகளையே வானளக்கும் சிறகுகளாக விரித்து நல்லா இருங்க என்ற அவரின் சொற்றொடர் போலவே அனைவரையும் வாழ்த்துவதாக ஒருகையை உயர்த்தி தமக்கு அச்சாணியாக இருந்த அத்தனை பேரையும் நினைவுகூர்ந்த அந்த உருள்பெருந்தேர் தன் நிறைவுரையை ஆற்றி நிலையம் வந்து சேர்ந்து நின்றது. நின்று ஒரு கணம் ஒரு பெருங்கணம் கோமுவாக நின்ற எங்கள் அத்தனை பேரையும் பார்த்தது. விழா நிறைந்தது. மழை நிறைந்தது. மனம் நிறைந்தது.

தேர் நிலையம்:

நிறைமனத்தோடு வண்ணமுத்து நன்றியுரை நவில அவை விழா மேடையில் அமர்ந்திருந்த தேரைக் கொண்டாடிக்கொண்டிருந்தது.

விழாவின் அத்தனை நொடிகளையும் பதிவு செய்து உலகெல்லாம் கொண்டு சேர்க்க Shruti TV பெரும்பங்காற்றியது. விழா நிறைவாக நடைபெற்று இதோ இந்தப் பதிவை எழுதும் அக்டோபர் 17ஆம் நாளின் இந்த மழைமாலை வரை அக்டோபர் 4 தன்னை நீட்டிக்கொண்டே வருகிறது. இவ்வாயுள் முழுதும் நீளும் இந்த அக்டோபர் 4ஆம் நாளை ஒளியொலிப் பதிவு செய்த Shruti TV ஆற்றிய பங்கு எத்தகையதோ அதே அளவு இவ்விழாவை எழுத்தாக்கித் தன் இணைய இதழில் காலத்திற்கும் நிலைத்து நிற்கச் செய்ய முன்வந்த களம்புதிது ஆற்றும் பங்கும் இனியது. இனி எப்போது நினைத்தாலும் Oct 4ஆம் நாளிற்குச் சுமந்து செல்லும் காலக்கலன் இவ்விரு தளங்களின் பதிவுகள்.

வண்ணதாசன் 81 நூறாகுக!

Previous Post

பிள்ளைக்கனியமுதே… – 4

Next Post

Conversations on caste

சேது பாலா

சேது பாலா

திருநெல்வேலியைச் சேர்ந்தவர். மென்பொருள் பொறியாளன். வெண்பா 96 நூலாசிரியர்.

Next Post
Conversation on Caste

Conversations on caste

கருத்தைப் பதிவிடுங்கள் Cancel reply

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. அவசியமான புலங்கள் * எனக் குறிக்கப்பட்டுள்ளன.

Archives

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 8, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 8, 2026
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

October 8, 2026
Poovithazh Umesh Kavithaigal

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

Saathi Kathaigalin Ellaiyai Virikkum Paraichi Petra Panniru Kulam

சாதிக் கதைகளின் எல்லையை விரிக்கும் ‘பறைச்சி பெற்ற பன்னிரு குலம்’

Conversation on Caste

Conversations on caste

November 1, 2026
Thirunelveli Tamilin Urupperum Ther

திருநெல்வேலித் தமிழின் உருள்பெருந்தேர்

November 1, 2026
Pillai Kaniyamudhe 4

பிள்ளைக்கனியமுதே… – 4

November 1, 2026
Ingirunthu Thodangugiren

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

November 1, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • ஆங்கில படைப்புகள் (4)
  • இதழ்கள் (50)
  • படைப்புகள் (44)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

Conversation on Caste

Conversations on caste

November 1, 2026
Thirunelveli Tamilin Urupperum Ther

திருநெல்வேலித் தமிழின் உருள்பெருந்தேர்

November 1, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Product successfully added to the cart!
No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு