இந்திய சமூக அமைப்பில் சாதிய அடக்குமுறைகளும், விளிம்புநிலை மக்களின் உரிமை பறிப்புகளும் நுட்பமாகவும் வெளிப்படையாகவும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்நாட்டின் கிராமப் புறங்களில் இரட்டைக் குவளை முறை இன்னமும்கூட முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை. பொது இடங்களுக்குச் செல்லத் தடை. கோயில்களுக்குள் அனுமதி மறுப்பு மற்றும் சவ அடக்கத்துக்கான பாதைகள் மறுக்கப்படுதல் போன்ற வன்கொடுமைகள் 21ஆம் நூற்றாண்டிலும் நிகழும் அவலம் நாகரீக சமூகத்தை பின்னுக்கு இழுக்கிறது. இத்தகு சூழலில் பாதிக்கப்படும் மக்களுக்கு சட்டப்பூர்வமாக, களரீதியாக போராட ஒருவர் கிடைக்க மாட்டாரா? என்கிற எதிர்பார்ப்பு பாதிக்கப்பட்ட விளிம்புநிலைச் சமூகத்திடம் எழுவது இயல்பே.
இப்படி சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகிறவர்களின் உரிமைகளை மீட்க ஒருவர் இருக்கிறார்! என்பது மனித உரிமையில் அக்கறை கொண்டோருக்கு ஆறுதலைத் தரும் செய்தி. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமை பாதுகாப்பு, சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டம், சமூக நீதி மற்றும் இலக்கியப் பங்களிப்பு எனப் பல்வேறு தளங்களில் இயங்கிவருபவர், ‘எவிடென்ஸ்’ கதிர் (இயற் பெயர்: அ. வின்சென்ட் ராஜ்). தமிழ்நாட்டின் முக்கிய மனித உரிமை செயல்பாட்டாளர்களுள் ஒருவர்.
மதுரையை மையமாகக் கொண்டு இயங்கும் ‘எவிடென்ஸ்’ (Evidence) அமைப்பின் நிறுவனர். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், சாதியப் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டப் போராட்டங்களின் முக்கியச் சக்தியாகவும் திகழும் எவிடென்ஸ் கதிரோடு சென்னையின் பிரபலமான கஃபே ஒன்றில் அமர்ந்து உரையாடினோம் (கரிகாலன், கதிர்பாரதி, பாரதிஆரோக்கியராஜ்) .
நம் காலத்தின் எல்லா சிக்கல்களைக் குறித்தும் கதிரிடம் ஒரு பார்வை இருக்கிறது. அது புரட்சியாளர் அமேபேத்கர் வழங்கிய பார்வை. கதிரின் பதில்களில் நிதானமும் நேர்மையும் இருந்தது. பெரும்பாலும் கதிரின் உரையாடல் மேடையில் அவர் பேசுவதுபோல, ஒரு கட்டுரை வடிவத்திலேயே அமைந்திருந்தது. நாம் வாழும் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் சிக்கல்களை கதிர் மிக அமைதியாக நேர்த்தியாக எதிர்கொண்டார். இனி, அவரோடு நீங்களும் உரையாடலாம்.
1. கதை, கவிதை எழுதும் மென்மையான இளைஞராக அறிமுகமானவர் நீங்கள். ஒரு கலைஞராகப் பரிணமிப்பீர்கள் என எண்ணியிருந்த வேளையில் தமிழகத்தின் முக்கியமான மனித உரிமைச் செயற்பாட்டாளராக மாறியிருக்கிறீர்கள். இந்த மாற்றம் எப்படி நடந்தது கதிர்?
வாழ்க்கையின் மீது எல்லோருக்கும் ஒரு லட்சியம் இருந்திருக்கும். கனவும் இருந்திருக்கும். அதுபோன்றுதான் எனக்கும் சில கனவுகள் இருந்தன. ஆனால் அந்த கனவுகளில் மனித உரிமை செயற்பாட்டாளராக களம்காண வேண்டும் என்று இருந்ததில்லை. என் கல்லூரிக் காலத்தில் இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு இருந்தது. நான் படித்த விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில் ‘சுவடுகள்’ என்கிற கையெழுத்து பிரதியின் ஆசிரியராகவும் இருந்தேன். நாவல், சிறுகதை, கவிதை என்று வாசித்து திளைத்திருந்த காலகட்டம் அது. கவிதைகள் எழுதவும் தொடங்கினேன். வழிபோக்கன் என்கிற கவிதைத் தொகுப்பும் வெளிவந்தது. அந்த கவிதைகள் முழுக்க விளிம்பு நிலை சமூக மக்களின் வாழ்க்கை நிலை மட்டுமே இருந்தது. ஒரு கவிதையில் கூட மகிழ்ச்சியின் வாசனை எட்டிப் பார்க்கவில்லை. அதற்கான காரணங்கள் அப்போது புரியவில்லை. நாளாக நாளாக மெல்ல எனக்குள் சில உண்மைகள் புலப்பட ஆரம்பித்தது.
எளிய மனிதர்கள் மீதான அக்கறையும் நான் வாழ்ந்த சூழலும்தான் இதுபோன்ற கவிதைகள் வர காரணமாக இருந்திருக்கும் என்று கருதுகிறேன். அதேநேரத்தில் ஒரு கவிஞராக சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? என்கிற கேள்வியும் எனக்குள் எழுந்தது.
கல்லூரி படிக்கின்ற போது அம்பேத்கர், மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங், பெரியார் போன்ற தலைவர்களின் வரலாறு படிக்க நேர்ந்தது. உண்மையில் அவர்களின் கொள்கை மீதும் செயல்பாடுகள் மீதும் ஒரு ஈர்ப்பும் வந்தது. ஆனாலும் கலையின் மீது இருந்த தாகம் என்னைவிட்டு அகலவில்லை.
ஒரு கட்டத்தில் இலக்கிய பித்தால் சூழ்ந்து கிடந்தேன். அது ஒருவிதமான போதையாகவும் தென்பட்டது. அதில் இருந்து மீள்வது சவாலாகவும் இருந்தது.
கவிஞர் அப்துல் ரகுமான், ஒரு பூ விற்கும் சிறுமியை பார்த்து இந்த பூவைவிட உலகத்தில் வேறு என்ன உனக்கு கிடைத்துவிடப் போகிறது என்று சிலாகித்து பேசியதாக ஞாபகம். அதற்கு எதிராக பிரபஞ்சன், இந்த நாட்டில் பசி பட்டினியோடு பலரும் இருக்கின்றனர். குழந்தைகள் கல்வி படிக்காமல் எண்ணற்றோர் அவதிப்பட்டு வருகின்றனர். இப்போதும் பூ குறித்து சிலாகித்து பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்று எதிர்வினை ஆற்றியிருப்பார். அதெல்லாம் எனக்கு ஒரு படிப்பினையாக இருந்தது.
இலக்கியத்தில் பல்வேறு கூறுகள் இருக்கலாம். ஆனால் எனக்கு, ‘அநீதி எதிர்ப்பு’ எல்லாவற்றையும்விட மேலாக தெரிந்தது.
தலைவர் அம்பேத்கர், அரசியல் சாசனத்தை அறிமுகப்படுத்தி பேசுகிறபோது எதிர்காலத்தில் நமக்கு பொருளாதார சுதந்திரம் கிடைக்கலாம். அரசியல் சுதந்திரமும் கிடைக்கலாம். ஆனால் சமூக மாற்றம் என்பது அவ்வளவு எளிதாக கிடைக்காது என்று கூறியிருப்பார். ஆகவே சமூக மாற்றத்திற்கான பணிதான் எனக்கான இலக்கு என்று முடிவெடுத்தேன். இந்த சமூக மாற்றத்திற்கான ஒரு கருவிதான் கலையும், இலக்கியமும் என்று புலப்படவும் ஆரம்பித்தது.
நான் பிறந்த என் அம்மாவின் வீடு, 7 அடி அகலமும், 10 அடி நீளமும் கொண்ட வீடு. அது ஒரு சிறு குடிசை. அங்கு வாழக் கூடிய எல்லோரும் ஏழைகள் என்பதைவிட பரம ஏழைகளாகத்தான் இருந்தனர். என் அப்பாவின் சேரிப்பகுதியில் உள்ள மக்களும் கல்வி மறுக்கப்பட்டு ஏழ்மை நிலையில்தான் இருந்தனர். குறிப்பாக என் தாத்தா பாப்பு தப்படிப்பவர். இறப்பு வீடுகளில் பாட்டுப்பாடி மேளம் அடிப்பவர். ஆனாலும் என் தாத்தாவிடம் ஒரு நாளும் அடிமை உணர்வு இருந்ததில்லை. ஒரு சமயம் மேளம் அடிக்க சென்ற இடத்தில் சிலர் குடித்துவிட்டு என் தாத்தா உடன் சென்றவர்களை தாக்கிவிட, பதிலுக்கு என் தாத்தா தாக்கினார். அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த பிரச்சனை காவல்நிலையம் வரை சென்றது. அதனால் மேளம் அடிக்க கூப்பிடுகிற ஆதிக்கசாதியினர் என் தாத்தாவிடம் பணிவுடன் நடந்து கொண்டதை நேரில் பார்த்திருக்கிறேன். என் தாத்தா இறந்த சமயத்தில் என் பாட்டி அந்தோணியம்மாள் அழவில்லை. என் அப்பா அவரிடத்தில், எல்லோரும் பார்க்கிறார்கள் அவர்களுக்காகவாவது அழு என்று கூறினார். அதற்கு என் பாட்டி, நான் அழுதால் உன் அப்பா உயிரோடு வந்துவிடப் போகிறாரா? எல்லா ஆம்பளைங்களும் அயோக்கியர்கள்தான். ஒருவனும் நல்லவன் இல்லை. உன் அப்பாவுக்கு வயசாகிவிட்டது, செத்துப்போய்விட்டார். எனக்கு பசிக்குது நான்கு இட்லி வாங்கி வரச்சொல்லு என்று கூறிவிட்டு இயல்பாக இருந்தார். இந்த மதிப்பீடு, எல்லா இலக்கியத்தையும் விட மேலானதாக கருதுகிறேன்.
தனிப்பட்ட முறையில் எங்கள் குடும்பத்தினர் ஓரளவு வசதி என்பதைவிட உணவுக்கு பஞ்சமில்லாத அளவிற்கு இருந்தனர் என்று சொல்லலாம்.
என் உறவினர்கள் தப்படிக்கின்றனர். செத்த மாட்டை சுமக்கின்றனர். அவர்களுக்கு கோவிலில் அனுமதி இல்லை. பிணங்கள் புதைக்கக்கூட ஒரு நல்ல சுடுகாடு இல்லை. எனது சகோதரி ஒருத்தி கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாள். அப்போது சாதி பஞ்சாயத்தினர் குற்றவாளிகளுக்கு 80 ரூபாய் அபராதம் போட்டு காலில் விழவைத்த கொடுமையும் நடந்தது. இதையெல்லாம் நேரில் பார்த்தவன் நான். என் பெரியப்பா அழைத்துச் சென்ற தேனீர் கடை ஒன்றில் எல்லோரும் உட்கார்ந்து தேனீர் அருந்த, நானும் என் பெரியப்பாவும் நின்று கொண்டு தேனீர் பருகினோம். அது எனக்கு அவமானமாக இருந்தது. இந்த நீசத்தனமான ஒடுக்குதல் எனக்குள் பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தியது. உலகின் சிறந்த இலக்கியம், உலகின் அதீத அவமானத்தால் பிறக்கிறது என்று சொல்வேன்.
தென்னாற்காடு மாவட்டத்தில் சாதி ஒழிப்பிற்கு எதிராக இளையபெருமாள், பொன் நாகப்பன் போன்ற தலைவர்கள் போராடிக் கொண்டிருந்தனர். விருத்தாசலம் பகுதியில் பொன்னருவி என்கிற தலித் பெண் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். பொன் நாகப்பன் தலைமையில் 5000த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு நீதி கேட்டனர். அந்த வலுவான போராட்டத்தின் திரட்சி எனக்குள் அதிர்வினை ஏற்படுத்தியது. தொன்னூறுகளின் ஆரம்பத்தில் அண்ணன் திருமாவின் தலையிலான டிபிஐ இயக்கமும் வலுப்பெற ஆரம்பித்தது. தென்னாற்காடு மாவட்டத்தில் தலித்துகள் திருப்பி அடிக்க ஆரம்பித்தனர். நீங்கள் எங்களை அடித்தால் நான்கு பானைகளும் பாத்திரங்களும் மட்டும் தான் உடைபடும். நாங்கள் உங்களை திருப்பி அடித்தால் உங்கள் சொத்துக்கள் எல்லாம் எரிக்கப்படும், உடைக்கப்படும் என்கிற அண்ணன் திருமாவின் சூளுரை எழுச்சியை ஏற்படுத்தியது.
தென்மாவட்டங்களில் சந்திரபோஸ், ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி ஆகியோரின் திருப்பி அடிக்கும் போராட்டமும் எனக்குள் ஒரு ஆர்வத்தை தூண்டியது.
இந்த முன்னெடுப்புகள் எல்லாம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தன. அதே நேரத்தில் ஒரு அரசியல் கட்சியிலோ இயக்கத்திலோ இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வமும் இல்லை. ஆனால் களப்பணி செய்ய வேண்டும் என்கிற கனவு துளிர்விட ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலனாக பணியினை துவங்கினேன். இரண்டாண்டு காலம் பணியாற்றினேன். ஆனாலும் மனதிற்குள் சாதி ஒழிப்பு களத்தில் பணி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. எனது விருப்பத்திற்கு ஏற்றவாறே 1998ல் மக்கள் கண்காணிப்பகம் என்கிற அமைப்பில் பணிக்கு சேர்ந்தேன். மக்கள் கண்காணிப்பகம் ஒரு பொதுவான மனித உரிமை அமைப்பு. அங்கு 6 ஆண்டுகள் பணி செய்த பிறகு குறிப்பாக தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக களம் காண வேண்டும் என்று முடிவெடுத்து 2005ல் எவிடென்ஸ் அமைப்பினை துவங்கினேன்.
இதுவரை மூன்று முறை என் மீது கொலை முயற்சியும், ஏழு முறை தாக்குதலும் நடந்துள்ளது. ஆனாலும் ஒரு நாளும் இதுகுறித்து கவலைப்பட்டது கிடையாது. கடந்த 2022ம் ஆண்டு 47 உறுப்பு நாடுகளை கொண்ட ஐரோப்பிய கவுன்சில், ராவுல் வெல்லன்பர்க் விருதினை எனக்கு வழங்கிய போது கூட அந்த விருதினை ஒரு தலித் மனித உரிமை பரப்புரைக்கான கருவியாக கருதினேன். இந்த விருதுக்கு நூற்று இருபது நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இந்த விருது எனக்கு கிடைத்தது. இந்த எல்லா பெருமைகளுக்கும் காரணமானவர்கள் தலித்துகள். அவர்களே எனது முன்னோடிகள்.
நீங்கள் சொல்வது போன்று சிறு வயதில் மென்மையாகவும் பயந்த சுபாவமும் கொண்ட நான், ஒரு கட்டத்தில் துணிச்சல் பெறுவதற்கு களமும் தலித் மக்களின் ஆதரவும் எனக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய தலைவர்களின் பேச்சுக்களும் எழுத்துக்களும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
2. எவிடென்ஸ் அமைப்பைத் தொடங்கி, வன்கொடுமைகளுக்கு எதிராக இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாகக் களத்தில் நிற்கிறீர்கள். இந்த நீண்டகாலப் பயணத்தில் மனித உரிமை சார்ந்த களச்சூழலில் நேர்மறையான மாற்றங்கள் நடந்துள்ளனவா?
இந்த தளத்திற்கு வந்து முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எவிடென்ஸ் துவங்கி இருபத்து ஒன்று ஆண்டுகள் கடந்தும் விட்டன. இதுவரை எமது எவிடென்ஸ் அமைப்பு 3500க்கும் மேற்பட்ட சம்பவங்களில் சுமார் 27000 மக்களை மனித உரிமை மீறல்களில் இருந்து மீட்டெடுத்திருக்கிறது. நிவாரணம், பாதுகாப்பு, மறுவாழ்வு, நீதி போன்ற உரிமைகளையும் வளங்களையும் உறுதிபடுத்தியும் இருக்கிறோம். ஒரு அமைப்பை தாண்டி இங்கே பல்வேறு சிவில் சமூக இயக்கங்களும் கட்சிகளும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக போராடி வருகின்றன. இதுபோன்ற போராட்டங்களும் தொடர் நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சட்டத்தை பலப்படுத்தியும் இருக்கிறது. விழிப்புணர்வும் ஏற்பட்டு இருக்கிறது. கொள்கை அளவிலான மாற்றங்களும் நடந்திருக்கிறது.
இதுஒரு தொடர் செயல்பாடு ஆகும். தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டிய பொறுப்பும் நம்மை சார்ந்தது ஆகும். அதே நேரத்தில் மக்களை இயங்கிக் கொண்டே வைத்திருப்பது மிக முக்கியமான கடமையாக கருதுகிறேன்.
சமூகப்பணி என்பது ஓட்டப்பந்தயம் அல்ல. தமிழக சூழலில் பல தலித் ஆளுமைகள் இருந்துள்ளனர். இருந்தும் வருகின்றனர். அவர்கள் நூறு கி.மீ. வேகத்தில் ஓட முடியும். அப்படி ஓடி சமூக பணியிலோ, அரசியல் பணியிலோ முதல் பரிசு வாங்க முடியும். அதனால் ஒரு பயனும் அல்ல. நாற்பது கி.மீ. ஓடுகிற மக்களை அறுபது கி.மீ. வேகத்தில் ஓட வைத்து நூறு கி.மீ. ஓடுகிற ஆளுமைகள் தங்களது வேகத்தை குறைத்து அந்த மக்களோடு இணைந்து ஓட வேண்டும். அதுதான் கூட்டு முயற்சியாகும். அந்த பொறுப்பை உணர்ந்துதான் செயல்பட்டு வருகிறோம்.
எனக்கு தெரிந்து கடந்த முப்பது ஆண்டுகளில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. சாதியம் எப்படி அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்றவாறு தங்களது இருப்பை புதுப்பித்துக் கொள்கிறதோ, அதேபோன்று தான் சாதியத்திற்கு எதிராக வேலை செய்பவர்களும் தங்களது யுக்தியை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றனர்.
ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏசு காலத்தில் இருந்த அதே போராளிகள்தான் இன்றும் இருக்கின்றனர். ஏசு கொல்லப்பட்டது போன்றுதான் இன்றும் போராளிகள் கொல்லப்படுகின்றனர். ஏசு காலத்தில் இருந்த அதே மக்கள் விரோத அரசுதான் இன்றும் இருக்கிறது. அதே நேரத்தில் பல முன்னெடுப்புகள் நடந்துள்ளன.
குறிப்பாக ஐரோப்பியர்கள் மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் கல்வி, மருத்துவம், வாழ்க்கை தரம், பாலின சமத்துவம் போன்றவை அனைவருக்கும் சரிசமமாக கிடைப்பதில் அவர்கள் தன்னிறைவை அடைந்துள்ளனர். அதனால் தான் அறிஞர் அண்ணா, ஐரோப்பிய நாடுகளை மேலை நாடுகள் என்று கூறுவார். மேலை நாடு என்றால் நம்மைவிட எல்லாவற்றிலும் அவர்கள் மேலானவர்களாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். மேலானவர்கள் என்றால் பொருளாதார பலம் அல்ல, மனித மதிப்பீடுகளான சமத்துவம், சுதந்திரம், நீதி, வாழ்வு போன்ற உரிமைகள் ஆகும். ஆனால் இந்திய சமூகம் அப்படியல்ல.
மூவாயிரம் வருட சாதியத்தை எழுபது – எண்பது ஆண்டுகளில் உடைத்துவிட முடியாது. கடுமையாக போராட வேண்டியிருக்கிறது. தலித்துகள் இன்று ஓரளவு கல்வி, சட்டம், பொருளாதாரம் என்று முன்னேறி வருவது ஆறுதல் அளிக்கிறது. தங்களது உரிமைக்காக ஒன்றிணைவது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்துகிற மாநாடுகளில் இலட்சக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியாக கலந்து கொள்கின்றனர். இது வேறு எந்த கட்சியாலும் இத்தகைய கூட்டத்தை கூட்ட முடியாது.
பல்வேறு பலவீனங்களும் பிழைகளும் இருந்தாலும் மாற்றங்கள் நடந்து வருவதையும் மறுக்க முடியாது.
3. வன்கொடுமையால் பாதிக்கப்படும் மக்களுக்கு சட்டப்பூர்வ நீதி கிடைப்பதில் காவல்துறை மற்றும் நீதித்துறை அமைப்புகளின் தற்போதைய அணுகுமுறை மற்றும் தடைகள் என்னவாக இருக்கின்றன?
சாதியம், ஆணாதிக்கம், வர்க்கம் போன்ற பிடியில் காவல்துறையும், நீதித்துறையும் சிக்கிக் கிடக்கிறது என்பதை எவறும் மறுக்க முடியாது. இருக்கிறவனுக்கு ஒரு நீதியும் இல்லாதவனுக்கு ஒரு நீதியும், தலித்துகளுக்கு ஒரு நீதியும், தலித் அல்லாதவனுக்கு ஒரு நீதியும், இந்துக்களுக்கு ஒரு நீதியும், இஸ்லாமியனுக்கு ஒரு நீதியும் கிடைப்பதை நாம் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம்.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா சம்பவத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது சகோதரி கூட்டுப்பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொல்லவும் பட்டார். அவரது உறவினர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ஆனால் அந்த வழக்கு குஜராத்தில் நீதிமன்றத்தில் இருந்து மகாராஸ்டிரா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. தண்டனையும் கிடைக்கப் பெற்று குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். தண்டனையும் பெரிதாக இல்லை. ஏனென்றால் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மத அடிப்படைவாத கும்பல்.
இச்சம்பவம் நடந்து பத்து ஆண்டுகள் கழித்து 2012ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டபோது அதில் ஈடுபட்ட ஆறு பேருக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட்டது. குற்றவாளிகள் அனைவரும் நகர்புற சேரியில் வசித்த இளைஞர்கள்.
ஆகவே பாதிக்கப்படுபவர்கள் என்ன சமூகம், என்ன மதம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்ன சமூகம், என்ன மதம் என்பதை ஆராய்ந்து தண்டனை கொடுக்கக்கூடிய இந்த பாகுபாடான நீதி சிஸ்டத்தை என்னவென்று சொல்வது?
என்னுடைய கேள்வி என்னவென்றால் நிர்பயாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் ஏன் பில்கிஸ் பானுவிற்கு கொடுக்கவில்லை. இப்படி தான் இந்திய சட்டமைப்பு சூழல் உள்ளது. இதை சாதியின் அடிப்படையிலும் பார்க்கலாம்.
நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேசனில் சுவாதி என்கிற இளம் பெண் கொல்லப்பட்டார். இந்த கொலையை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார்.
ஆனால் அதே ஆண்டு நந்தினி என்கிற தலித் பெண் அரியலூரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார். நந்தினை கிணற்றில் இருந்து எடுக்கின்ற போது அவரது உடலில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. நந்தினியை கொன்ற கயவர்கள் மத அடிப்படைவாத கும்பல் மட்டுமல்ல சாதியவாதிகளும் தான்.
ஆகவே இங்கே பாதிக்கப்படுபவர்கள் சிகப்பு தோலாக இருந்தால், இன்போசிசில் வேலை பார்த்தால், மருத்துவராக இருந்தால் ஒரு நீதியும், பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளாக இருந்தால் கருப்பு தோலாக இருந்தால், சேரியாக இருந்தால் அவர்களுக்கு ஒரு நீதியும் கிடைக்கிறது.
எங்களது ஆய்வில் 1957ம் ஆண்டு தியாகி இமானுவேல் சேகரன் படுகொலையில் இருந்து இதுவரை ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சாதிய படுகொலைகள் நடந்திருக்கின்றன. இவற்றில் ஐம்பது வழக்குகளுக்கு கூட குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது இல்லை.
நம்முடைய குற்றவியல் நீதிமன்றம் சிஸ்டம் இருபது காண்டாமிருக தோல்களை கொண்ட கடினமான சிஸ்டம் ஆகும். அதை உடைப்பதற்க கோணி ஊசி பத்தாது. கடப்பாறை கூட பத்தாது. அந்த அளவிற்கு கடினமான இருகிப்போன சிஸ்டமாக உள்ளது. அதே நேரத்தில் சட்டத்தை பலப்படுத்த வேண்டும். நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். அரசின் பதில் சொல்கிற கடப்பாட்டினை உறுதி செய்ய வேண்டும். இவை எல்லாம் நம் யுக்திகளாக இருக்க வேண்டும்.
தலைவர் அம்பேத்கர், சட்டம் தன் அளவில்தான் இருக்கும். அதை திறம்பட பயன்படுத்த பயன்படுத்த வலுவான கருவியாக மாறும் என்று கூறுவார். ஆகவே சட்டத்தை வலிமையாக பயன்படுத்துகிற திறனை அதிகரிக்க வேண்டும்.
சட்டம் போன்ற ஒரு அருமையான துறை வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்வேன். மருத்துவம், விஞ்ஞானம் போன்று சட்டத்துறையில் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு. இன்னும் சொல்லாப்போனால் சட்டதை நான் ஒரு கலையாக கருவியாக பார்க்கிறேன். இந்த சட்டத்தின் மூலம் சில சமயங்களில் நம்ப முடியாத அளவிற்கான நம்பிக்கையான மாற்றங்களையும் ஏற்படுத்தி இருக்கிறோம்.
ஆகவே சிஸ்டம் அப்படித்தான் இருக்கும். அந்த சிஸ்டத்தை மாற்றக்கூடிய சமூக செயல்பாட்டாளர்கள் சலிப்பின்றி போராட வேண்டியிருக்கிறது. மாற்று உலகம் சாத்தியம் என்கிற நம்பிக்கை உள்ளவர்களே போராளிகளாக உள்ளனர். அவர்களால்தான் இங்கே மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த கள எதார்த்தத்தை புரிந்து கொண்டு செயல்பட வேண்டியும் இருக்கிறது.
நீதித்துறை போக்கு குறித்து ஒரு எளிய உதாரணத்தை கூற விரும்புகிறேன். நீதிபதி சங்கர நாராயணன் என்பவர் உடுமலை பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியான சின்னசாமி என்பவரை விடுதலை செய்தார். அதன்பிறகு ஓய்வு பெற்ற சங்கர நாராயணன், கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞராக பணி செய்தார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் வழக்கறிஞராக பணி செய்வது அவரது உரிமை. ஆனால் நீதிபதியாக இருக்கும் போது ஆணவக்கொலைக்கு எதிராக தீர்ப்பு கொடுத்துவிட்டு, ஓய்வு பெற்ற பிறகு ஆணவக் கொலைக்கு ஆதரவாக வாதாடுவது எந்தவிதத்தில் நியாயம்? அதற்கென்று எல்லா நீதிபதிகளையும் குறை கூறவில்லை.
நீதிபதி கிருஷ்ணய்யர் தீவிர இந்து மத பற்றாளர். ஏன் ஆவி இருக்கிறது என்று கூட நம்பக்கூடிய மனிதர். ஆனால் அவரது தீர்ப்புகள் அனைத்தும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஆதிவாசி, இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக இருந்தது. இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது மதம் எனது தனிப்பட்ட நம்பிக்கை, ஆனால் நீதி செயல்பாடுகளில் நான் அறத்தை கடைபிடிப்பேன் என்றார்.
இந்த அறம் காவல்துறையிலும் நீதித்துறையிலும் இல்லை என்றுதான் சொல்வேன்.
4. தலித் பெண்கள் மீதான வன்கொடுமைகளும் பாலியல் தாக்குதல்களும் தொடர்ச்சியாக நடக்கும் சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பையும் நீதியையும் உறுதிசெய்ய என்ன மாதிரியான பிரத்யேகச் சட்டங்களை சமூக மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள்?
இந்தியாவில் மிகக் கொடூரமான அநீதி எதுவென்றால் சாதியம். அந்த கொடூர சாதியத்தால் பாதிக்கப்படுபவர்கள் தலித்துகள். அவர்களிலும் அதிகமாக பாதிக்கப்படுவது யாரென்றால் தலித் பெண்கள். பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை திருத்த சட்டம் 2016ல் தலித் பெண்களுக்கான பாதுகாப்பையும் அவர்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளையும் வலுவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினாலே ஓரளவு பாதுகாப்பை ஏற்படுத்த முடியும்.
உதாரணமாக தலித் அல்லாத பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டால் ஏழு – பத்து ஆண்டுகள் தண்டனை உண்டு. அதுவே தலித் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டால் ஆயுள் தண்டனை. இரண்டு பேரும் பெண்கள் தானே அது என்ன தலித் பெண்கள் பாதிக்கப்பட்டால் மட்டும் குற்றவாளிகளுக்கு கூடுதல் தண்டனை கிடைக்கிறது என்று நமக்குள் கேள்வி எழலாம். ஒரு பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டால் ஆணாதிக்கம் என்கிற காரணம் அடிப்படையாக உள்ளது. அதுவே தலித் பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படால் ஆணாதிக்கத்தோடு சாதியமும் காரணமாக அமைந்து விடுகின்றன. அதற்கு தான் இந்த கூடுதல் தண்டனை.
தலித் பெண்கள் மீதான தாக்குதல், பாலியல் சீண்டல், பின் தொடர்வது, மானபங்கப்படுத்துவது, ஆபாசமாக பேசுவது, தவறாக ஜாடை காட்டுவது, பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, கூட்டு பாலியல் பலாத்காரம் போன்ற பல்வேறு வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை உண்டு. ஆனால் உரிய முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது கிடையாது.
திண்டுக்கல் அருகில் பதிமூன்று வயது சிறுமி பாலியல் வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டாள். ஆனால் காவல்துறை தந்திரமாக அந்த சிறுமிக்கு பதினான்கு வயது என்று வழக்கில் குறிப்பிட்டிருந்தனர். நமக்கு தோனலாம் பதிமூன்று வயதிற்கும் பதினான்கு வயதிற்கும் என்ன வித்தியாசம் இருந்துவிட போகிறது?
பதிமூன்று வயது சிறுமி பாதிக்கப்பட்டால் குற்றவாளிகள் தொன்னூறு நாட்களுக்கு ஜாமீன் கேட்க முடியாது. ஆனால் பதினான்கு வயது மேல் சிறுமிகளோ, பெண்களோ பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டால் ஜாமீன் கேட்க முடியும். குற்றவாளிகள் ஜாமீன் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் போலீசார் திட்டமிட்டு பதிமூன்று வயதை பதினான்காக மாற்றியுள்ளனர். இதுகுறித்து நான் அந்த காவல் உயர் அதிகாரியிடம் பேசியபோது, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், பதினான்கு என்றுதான் கூறினார்கள் என்றார். அவர்கள் கூறினாலும் குழந்தையின் வயது குறித்து ஆவணங்களை சரி பார்த்திருக்க வேண்டும் அல்லவா என்று கூறி போலீசாருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்தேன். ஆகவே இதுபோன்று வேண்டுமென்றே பாதிக்கப்பட்ட தலித் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நீதி கிடைக்க முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
இருக்கக்கூடிய சட்டங்களை பலப்படுத்தினாலே மாற்றங்களை காணலாம்.
5 ஆணவக் கொலைகள் (Honor Killings) தமிழகத்தில் தொடர்கதையாக இருக்கும் சூழல். தமிழகத்தில் விசிகவின் சார்பாக சமூகநீதித்துறை அமைச்சராக வன்னியரசு நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கெனத் தனியாகச் சிறப்புச் சட்டம் இயற்றும் நிலை உருவாக வாய்ப்புள்ளதா?
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 2017 முதல் செப்டம்பர் 2026 வரை 74 பேர் சாதி ஆணவக் கொலையால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தமிழ்நாடு அரசு வெறும் நான்கு ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாகவே தெரிவித்திருக்கிறது. காதல் விவகாரமான தற்கொலைகளில் ஆண்டுதோறும் எண்ணூறு பேர் இறந்துபோகின்றனர். கணவன்களால், மனைவிகள் கொலை செய்யப்படுவது ஆண்டுக்கு சராசரி எண்பது – தொன்னூறு பேர். இவை எல்லாம் ஆணவ மரணங்கள், ஆணவக் கொலைகள் தான். ஆனால் இவை எல்லாம் நாம் கணக்கில் எடுத்துக் கொள்வது கிடையாது. சாதிய ரீதியான ஆணவக் கொலைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.
சாதிய ஆணவக் கொலைகளால் கடந்த 2003ம் ஆண்டு முதல் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் ஏழு ஆணவக் கொலைகளுக்கு மட்டுமே கீழமை நீதிமன்றங்களில் தண்டனை கிடைத்துள்ளது. திருநெல்வேலி கல்பனா, உடுமலைபேட்டை சங்கர், திருவாரூர் அமிர்தவள்ளி – பழனியப்பன், திருச்செங்கோடு கோகுல்ராஜ், விருத்தாசலம் கண்ணகி – முருகேசன், மேட்டுப்பாளையம் வர்சினிபிரியா – கனகராஜ், நாகப்பட்டினம் அபிராமி ஆகிய சம்பவங்களுக்கு மட்டும்தான் தண்டனை கிடைத்திருக்கிறது. தண்டனை அனைத்தும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மகளையோ, சகோதரியையோ கொன்ற பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள், உறவினர்கள் போன்றோருக்கு இதுவரை தண்டனை கிடைத்தது இல்லை. உடுமலைபேட்டை சங்கருக்கு பதிலாக கௌசல்யா கொல்லப்பட்டிருந்தாலோ, கண்ணகி – முருகேசன் வழக்கில் முருகேசன் கொல்லப்படாமல் கண்ணகி மட்டும் கொல்லப்பட்டிருந்தாலோ தண்டனை கிடைத்திருக்காது.
கடந்த 2012ம் ஆண்டு தேசிய சட்ட ஆணையம் ஆணவக்கொலைகளை தடுப்பதற்கு வரைவு ஒன்றினை கொண்டு வந்தது. இந்த வரைவு சட்டமாக்கப்பட வேண்டும் என்று அப்போதைய தேசிய பெண்கள் ஆணையமும் வலியுறுத்தி இருந்தது. அதுமட்டுமல்லாமல் கடந்த 2019 அன்று பஞ்சாப் மாநிலத்தில் ஆணவக்கொலைகளுக்கு எதிராக சட்ட வரைவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மார்ச் 2026 மாதம் கர்நாடகா சட்டமன்றத்தில் ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை எவிடென்ஸ் அமைப்பு உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் ஆணவக்கொலைக்கு எதிராக கொடுக்கப்பட்ட 120 தீர்ப்புகளை சேகரித்து வைத்துள்ளோம்.
லதா சிங் எதிர் உத்தரபிரதேசம் வழக்கில் சாதி மறுப்பு திருணமத்திற்கு இந்து திருமண சட்டம் தடையாக இல்லை என்று தீர்ப்பு வழங்கியது, அதேபோன்று ஆறுமுக சேர்வை எதிர் தமிழ்நாடு வழக்கில் காப் பஞ்சாயத்தும் சாதி பஞ்சாயத்தும் ஒன்றுதான் என்று கூறப்பட்டுள்ளது.
விகேஷ் யாதவ் எதிர் உத்தரபிரதேசம், ஆஷா ரஞ்சன் எதிர் பீகார் ஆகிய வழக்குகளில் ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கான முடிவெடுக்கும் அனைத்து அதிகாரங்களும் பெண்களுக்கு உள்ளது. அவர்களது திருமண முடிவில் யாரும் குறுக்கீடு செய்ய கூடாது என்று தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு சக்தி வாகினி வழக்கில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு உச்சநீதிமன்றம் இருபது வழிகாட்டுதல்களை மத்திய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் இந்த வழிகாட்டுதல்களை எந்த மாநில அரசுகளும் கடைபிடிக்கவில்லை.
தேசிய அளவில் எனது தலைமையில் ஆணவக் குற்றங்களை தடுப்பதற்கென்று ஒரு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. பதினாறு மாநிலங்களில் இதுகுறித்து கருத்துகேட்பு கூட்டத்தை நடத்தினேன். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்கள், துணை வேந்தர்கள், மூத்த வழக்கறிஞர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட சுமார் ஆயிரம் நபர்களிடம் கருத்தும் கேட்கப்பட்டது. இதனடிப்படையில் இருபத்தி ஏழு பக்கங்களை கொண்ட தனி சட்ட வரைவினையும் உருவாக்கினோம். இவற்றை சட்டமாக்க வேண்டும் என்பதற்கான 45 நாடாளுமன்ற உறுப்பினர்களை தனித்தனியாக சந்தித்து வலியுறுத்தினேன். கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரையும் நேரடியாக சந்தித்து தனிச்சட்டம் அவசியம் குறித்து மனுவும் கொடுத்தேன்.
கடந்த அக்டோபர் 2025 மாதத்தில் திமுக அரசு நீதியரசர் கே.என். பாஷா தலைமையில் ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் தேவையா இல்லையா என்பதை ஆராய்வதற்கு ஆணையம் ஒன்றினை நியமித்தது. அந்த ஆணையத்திடம் தமிழகத்தில் உள்ள ஆணவக்கொலையால் பாதிக்கப்பட்ட 32 குடும்பங்களை நேரடியாக அழைத்து சென்று சாட்சியம் அளித்தது மட்டுமல்லாமல் 6000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் கொடுத்தோம்.
இதன் தொடர்ச்சியாகத்தான் சமூக நலத்துறை அமைச்சர் வன்னியரசு அவர்கள் ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றுவதில் சிறப்பு கவனம் எடுத்து வருகிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள். நான் நடத்தின கருத்து கேட்பு கூட்டத்தில் இரண்டு கூட்டங்களில் அமைச்சர் வன்னியரசு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்ல கடந்த அக்டோபர் மாதம் ஆதவ் அர்ஜுனா அவர்கள் என்னை தொடர்பு கொண்டு ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இருக்கிறேன். அதற்கு நீங்கள் ஆவணங்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது மட்டுமல்லாமல் ஒரு வழக்கறிஞர் குழுவினையும் அனுப்பி வைத்தார். எவிடென்ஸ் அமைப்பு கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் கடந்த நவம்பர் 2025ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தார். தற்போது தவெக அரசு அமைந்திருப்பதால் அவர்கள் எளிதாக ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றலாம்.
குறிப்பாக விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு சிவில் சமூக இயக்கங்கள் ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற குரல் கொடுத்து வருகின்றன. எவிடென்ஸ் அமைப்பு ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று 2010ம் ஆண்டு முதல் குரல் கொடுத்து வருகிறது. தேசிய அளவில் பல்வேறு ஆவணங்கள் திரட்டி வைத்திருக்கிறோம். தென்னிந்தியாவில் ஆணவக் கொலைகளுக்கு எதிராக ஆவணங்கள் திரட்டி வைத்திருக்கும் ஒரே அமைப்பு எவிடென்ஸ் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஏற்கனவே 6000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் ஆணையத்திடம் கொடுத்திருந்தாலும், இன்னும் 20000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் இருக்கின்றன. இவற்றை கணக்கில் எடுத்து கொண்டு அரசு ஆணவ குற்றங்களுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றும் என்று நம்புகிறேன். இதுமட்டுமல்லாமல் கடந்த இருபது ஆண்டுகளில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட உயிருக்கு அச்சறுத்தலுடன் இருந்த இருநூறுக்கும் மேற்பட்ட தம்பதிகளை பாதுகாத்தும் உள்ளோம். ஆகவே சாதி மறுப்பு, மத மறுப்பு, காதல் திருமணம் போன்ற தம்பதியர் சுதந்திரமாக வாழ்வதற்கு அவர்களுக்கான பாதுகாப்பான சட்டம் அவசியம் தேவை.
6. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல்களும், அரசு அமைப்புகளின் கண்காணிப்புகளும் அதிகரிக்கும் சூழலில், ஒரு செயற்பாட்டாளராக உங்களின் பாதுகாப்பையும் மனவுறுதியையும் எப்படித் தக்கவைத்துக்கொள்கிறீர்கள்?
ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தல், அரசு எந்திரங்களின் நெருக்கடி இந்த இரண்டு எதிர்ப்புகளையும் ஒவ்வொரு மனித உரிமை செயல்பாட்டாளர்களும் எதிர்கொண்டு தான் வருகின்றனர். இதுபோன்ற அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் மனித உரிமை காப்பு பணியின் ஒரு அங்கமாகவே கருதுகிறேன்.
நம்முடைய நடவடிக்கைகளை வெளிப்படை தன்மையோடு வைத்திருப்பது, அரசியல் சாசன மதிப்பீடுகளின் வரையறைக்குள் பணி செய்வது, கணக்கு வழக்குகளை நேர்மையாக கையாளுவது, நம் மக்களின் ஆதரவினை பெறுவது, இதர சிவில் சமூகத்தின் தோழமைகளை பலப்படுத்துவது போன்ற செயல்பாடுகளால் பாதுகாப்பினை உறுதிபடுத்திக் கொள்கிறேன்.
கௌரி லங்கேஷ், கல்புர்கி போன்ற மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மட்டும் கொல்லப்படுவதில்லை. தமிழ்நாட்டில் தலித் அரசியல் செயல்பாட்டாளர்கள் வருடம் தோறும் பத்து – பனிரெண்டு பேர் கொல்லப்படுகின்றனர். அதுமட்டுமல்ல செயல்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து, அமைப்புகளை முடக்குவது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருவது ஏற்புடையதல்ல.
இந்திய அளவில் ஆம்னெஸ்டி இன்டர்நேசனல், கிரின்பீஸ் போன்ற அமைப்புகள் முடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மக்கள் கண்காணிப்பகம், சசி உள்ளிட்ட அமைப்புகளும் முடக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு மக்கள் கண்காணிப்பகத்தின் வெளிநாட்டு நிதி பெறும் உரிமை 2012ம் ஆண்டு அரசு முடக்கியது. அவர்கள் மீது சிபிஐ வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் விசாரணையில் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு நேர்மையுடன் இருந்திருப்பதை கண்டறிய முடிந்தது. அவர்கள் மீது இருந்த தடையினை ரத்து செய்ய நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மக்கள் கண்காணிப்பகத்தின் 14 ஆண்டு நடவடிக்கை முடக்கப்பட்டதற்கான நஷ்ட ஈட்டினை யார் தருவார்கள்?
பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் உள்ளிட்ட பல்வேறு விளிம்பு நிலை மக்களுக்காகத்தான் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் போராடி வருகின்றனர். இவர்கள் யாரும் சுயநலவாதிகள் கிடையாது. பொது நலத்திற்காக பணி செய்யக்கூடியவர்கள். தகவல் பெறும் உரிமைச் சட்டம், நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளின் பின்னணியில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அமைப்புகளின் பங்கு இருக்கிறது.
ஐ.நா. சபை கடந்த 1997ம் ஆண்டு மனித உரிமை காப்பாளர்களுக்கான பிரகடனத்தை கொண்டு வந்தது. மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு 1993ம் ஆண்டு இந்திய அளவில் மனித உரிமை பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. தேசிய, மாநில அளவில் மனித உரிமை ஆணையங்களும் உள்ளன. மாவட்டம் தோறும் மனித உரிமை நீதிமன்றங்களும் உள்ளன. ஆயினும் மனித உரிமைகளுக்கு எதிரான மீறல்கள் நின்றபாடில்லை.
தேசிய அளவில் மனித உரிமை காப்பாளர்களுக்கான பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட வேண்டும். மனித உரிமை காப்பாளர்கள் என்றால் செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், படைப்பாளர்கள், கல்வியாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் அடங்குவார்கள்.
உலகின் மிகப்பெரிய சிறை எதுவென்றால், பயம். அந்த சிறையில் இருந்து வெளியே வருவதுதான் உண்மையான விடுதலை என்பார்கள். விடுதலைக்காக பணி செய்பவர்கள், பயத்தோடு இருப்பது பேரவலம். இந்த வாசகம் என்னை வழிநடத்துகிறது என்றும் கூறலாம்.
அநீதி செய்பவர்கள் சுதந்திரத்தோடும், திமிரோடும் வாழ்கிற போது நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள் கம்பீரத்தோடு இருப்பது தான் அழகு. இந்த புரிதல் தான் சோர்வடையாமல் இயக்குகிறது என்று நினைக்கின்றேன்.
7. கடந்த அரை நூற்றாண்டில் தலித் அரசியல் இயக்கங்கள் தமிழகத்தில் ஏற்படுத்திய மிக முக்கியப் பாய்ச்சலாக எதனைக் கருதுகிறீர்கள்? இன்று தவெக கூட்டணி அரசில் இடம் பெற்றிருப்பதை தலித் இயக்கங்களின் வெற்றியாக கருதுகிறீர்களா?
மூன்று மிக முக்கியமான நடவடிக்கைள் நடந்திருப்பதாக கருதுகிறேன். ஒன்று தலித்துகள் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக வீரியமான போராட்டங்களும் கள செயல்பாடுகளும், இரண்டு அவர்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற வளங்களை உறுதிபடுத்துகிற செயல்பாடுகள், மூன்று வெகுஜன அரசியல் கட்சிகளில் தலித்துகள் பிரதிநிதித்துவம், தலித் தலைமையில் ஆன இயக்க செயல்பாடுகள். இவற்றில் தொய்வுகளும் உண்டு, தோல்விகளும் உண்டு, வெற்றிகளும் உண்டு, கணிசமான மாற்றங்களும் உண்டு.
தவெக கூட்டணியில் தலித்துகள் இடம் பெற்றிருப்பது வெற்றியாக கருதவில்லை. அது தலித்துகளின் உரிமை. கிறிஸ்துவ தலித்துகளோடு கணக்கிட்டு பார்க்கிறபோது தமிழகத்தில் 25 சதவீதம் தலித்துகள் உள்ளனர். அதுமட்டுமல்ல தற்போது சட்டமன்றத்தில் 49 உறுப்பினர்கள் உள்னர். மொத்த அமைச்சர்களில் 25 விழுக்காடு என்பது 8-9 அமைச்சர்கள் கணக்கில் வருகின்றனர். அந்த உரிமையை தான் நாங்கள் கேட்டு பெற்றிருக்கிறோம். இதுவரை ஆண்ட திராவிட கட்சிகள் இந்த உரிமையை வழங்கவில்லை என்பது கசப்பான உண்மை. ஆகவே தவெக அரசில் தலித் அமைச்சர்கள் கணிசமாக இடம் பெற்றிருப்பது ஒரு சாதமான முன்னெடுப்பாக மட்டுமே கருதுகிறேன்.
8. பஞ்சமி நில மீட்பு, சாதியப் பாகுபாடு இல்லாத மயானப் பாதை போன்ற அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்கள் இன்னும் முடிவுக்கு வராததன் பின்னணியில் உள்ள அரசியல் அதிகாரம் எது? அரச அதிகாரத்தைவிடவும் சனாதன அதிகாரம் மேலோங்கியிருப்பதை இந்தியாவில் சனநாயகத்தின் பலவீனமாகக் கருதலாமா?
கடந்த 1892ம் ஆண்டு செங்கல்பட்டு ஆட்சித் தலைவராக இருந்த ஜே.ஹெச்.ஏ. திரெம்மன்ஹீர், தலித்துகளுக்கு 12 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கொடுத்தார். இந்த நிலம் கிடைப்பதற்கு அருட்தந்தை ஆடம் ஆன்ட்ரோ, அருட்தந்தை வில்லியம் கௌடி ஆகியோரது பங்களிப்பை மறுக்க முடியாது. தலித் மக்களுக்கு என்று கொடுக்கப்ட்ட 12 இலட்சம் ஏக்கர் நிலங்களில் தற்போது அம்மக்களிடம் வெறும் 3000 ஏக்கர் மட்டுமே உள்ளது என்பது பெரும் துயரம்.
குறிப்பாக கடந்த 58 ஆண்டு காலம் திராவிட அரசுகள் தாள் தமிழ்நாட்டை ஆளுகின்றன. சனாதானத்தை எதிர்த்து களம் கண்ட திராவிட அரசுகள் நினைத்திருந்தால் பஞ்சமி நிலத்தையோ அல்லது அதற்கு சமமான நிலங்களையோ தலித் மக்களுக்கு கொடுத்திருக் முடியும். ஆனால் அவர்கள் எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை. திராவிட கருத்தியலை நம்பலாம். சனாதான கருத்துக்கள் நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் வெளிப்படையாக நான் சனாதானவாதி என்று சொல்கிறவனையும் நம்பலாம். ஆனால் திராவிட சனாதானம் என்பது ஆபத்தானது. திராவிட கருத்தியலை உள் வாங்கிக் கொண்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் இன்று சனாதானவாதியாக மாறியிருப்பது பேரவலம். இதனை நாம் விமர்சனம் செய்தால் நீல சங்கி என்று கூறுவார்கள். ஆனாலும் வெளிப்படையாக விமர்சனம் செய்ய வேண்டும் என்றே கருதுகிறேன்.
ஊரும் சேரியும் தனித்தனியாக உள்ளது. தனி சுடுகாடு, தேனீர் கடையில் இரட்டை குவளை முறை, கோவிலில் நுழைய அனுமதி மறுப்பு என்று தமிழ்நாட்டில் நானூறுக்கும் மேற்பட்ட தீண்டாமை கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. இவற்றை தடுப்பதில் ஒழிப்பதில் திராவிட அரசுகுள் தோற்றுப் போயுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.
சனாதானம் என்றால் நீ கீழே, நான் மேலே என்று அர்த்தம். நான் புனிதமானவன், நீ அவப்புனிதமானவன் என்று அர்த்தம். சனாதானம் தான் பாகுபாட்டை வளர்த்தெடுக்கிறது. இந்து வர்ணாசிரம சாதி, பாலினம், வர்க்கம் என்று தொடங்கி பல்வேறு நிலைகளில் அதன் பாகுபாடு விருட்சமெடுத்து வளர்ந்து நிற்கிறது. இந்த பாகுபாடு ஒழிக்க வேண்டும் என்றால் சகோதரத்துவமும் சமத்துவமும் சமூகநீதியும் முக்கியம் ஆகும். இந்த மதிப்பீடுகளை நடைமுறைப்படுத்த தவறியதன் விளைவு தான் சனாதானம் என்கிற நச்சு மனிதனை கூறுபோட்டு கொன்று குவித்து வருகிறது.
இதற்கு எதிராக இயக்கங்கள் எதிர்வினையாற்றிய அளவிற்கு அரசுகள் செய்யவில்லை என்பது அவலத்தின் உச்சம் என்பேன்.
9. தலித் இயக்கங்களுக்கிடையே உள்ள உள்முரண்பாடுகளும் பிரிவுகளும், ஒரு வலுவான தலித் அதிகார மையத்தை உருவாக்குவதைத் தடுக்கிறதா? இல்லை. இது இதல்பதான் எனக் கருதினால், இதனூடாகவும் முன்னேற தலித் அரசியல் அமைப்புகள் எத்தகைய தந்திரோபாய நடவடிக்களைக் கடைபிடிக்கவேண்டும்?
தலித் இயக்களிடையே மூன்று விதமான சிக்கல்கள் உள்ளன. ஒன்று அதிகாரப்போட்டி, மற்றொன்று உள்சாதி முரண்பாடு, மூன்று சமரசம் செய்து கொள்ளுதல். இதை ஒரு பொதுவான விமர்சனமாக முன்வைத்தாலும் ஒவ்வொரு தலித் இயக்கங்களும் தங்களது பணியினை திறம்பட செய்கின்றனர். ஆனாலும் இணைந்து வருவது அவ்வளவு எளிதான காரியமல்ல.
தமிழ்நாட்டில் தலித்துகள் மட்டுமல்ல பெரும்பான்மை சாதிகளாக இருப்பவர்களுக்கு இடையே ஒருவருக்கொருர் போட்டி போட்டுக் கொண்டு அடித்துக் கொண்டு தான் உள்ளனர். தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய பறையர், வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர் உள்ளிட்ட சாதிகளை நாம் எடுத்துக் கொள்வோம். இவர்கள் யாரும் இதுவரை முதலமைச்சராக ஆனது கிடையாது. அரசியல் சூழ்நிலையால் முதலமைச்சார்களாக பணியாற்றிய ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இவர்கள் இருவரும் வெகுஜன மக்கள் ஆதரவோடு முதலமைச்சராக ஆனவர்கள் அல்ல.
தமிழகத்தில் இதுவரை ஆண்ட அனைத்து முதலமைச்சர்களும் மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
இதேபோன்று தலித் இயக்கங்களிடமும் இந்த சிக்கல் உள்ளது. ஆகவே தலித் இயக்கங்களாக சேர்ந்து என்னவிதமான சந்திரோபாய திட்டங்கள் தீட்டினாலும் அது சாத்தியம் ஆகாது. வெகுஜன பொது மக்களை வென்றெடுப்பதுதான் இதற்கான தீர்வாக நான் பார்க்கிறேன்.
ஓபாமா அமெரிக்காவில் அதிபராக வந்தபோது எல்லோருக்கும் தெரியும் அவர் ஒரு கருப்பின தலைவர் என்கிற உண்மை. ஆனாலும் அவர் ஒரு பொதுநிலை அரசியல் முன்னெடுப்புகளை எடுத்தார். எதிர்காலத்தில் அதுபோன்ற ஒரு யுக்தி தேவைப்படுகிறது.
10. தமிழக அரசியலில் தலித்துகள் தலைமை தாங்க வேண்டிய காலம் கனிந்திருக்கிறது” என்ற கருத்தாக்கத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தலித் தலைமை வரவேண்டும் என்பது நம்முடைய கனவாக இருக்கலாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்றே கருதுகிறேன். தலித் தலைமை என்பது அரசியல் சமரச தந்திரத்தால் ஏற்படுத்துவது அல்ல. அது ஆர்கானிக்காக உருவாகி வருவது. இப்போது தலித் தலைமை என்பது வலிந்து பேசக்கூடிய பரப்புரையாகவே பார்க்கிறேன்.
நமது கனவு தலித் தலைமையாக இருக்கலாம். ஆனால் ரியாலிட்டி என்று ஒன்று உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் சாதியத்தோடும், தலித் வெறுப்போடும்தான் உள்ளனர். இவர்களில் சிலர் தலித்துகளை கழிவிரக்கத்தோடு பார்க்கின்றனர். வெகுசிலர் தான் தலித் தோழமையை ஏற்றுக் கொள்கின்றனர்.
அம்பேத்கர் அவர்கள் இறந்தபோது பெரும்பான்மையான இந்திய மக்கள் துயரம் கொள்ளவில்லை. நேரு கூட தன்னுடைய இரங்கல் குறிப்பில் ஒரு சர்ச்சைக்குரிய அரசியல் தலைவர் இறந்துபோனார் என்று தான் கூறியிருந்தார். அம்பேத்கர் மீது பெரும்பான்மை மக்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு இருந்தது என்றால் பெரும்பான்மை மக்கள் சாதியை கடைபிடித்தனர். ஆனால் அம்பேத்கர் அவற்றிற்கு எதிராக களமாடினார். இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு, பெண்களுக்கு சொத்து உரிமை கேட்டார், விவகாரத்து உரிமை கேட்டார் அதை காங்கிரஸ் கொடுக்கவில்லை என்பதற்காகத்தான் இந்த முடிவை எடுத்தார் என்று கூறுவார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் பிற்படுத்தப்பட்டோருக்கான நல ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பிற்படுத்தப்பட்டோருக்கும் பெண்களுக்காகவும் தான் அவர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும் சாதியத்தை எதிர்த்தார் அல்லவா அதுதான் பெரும்பான்மை மக்கள் மனதில் இருந்தது. அந்த நிலைதான் இன்றும் இருப்பது துயரம். ஆகவே வெகுஜன மக்களிடத்தில் சாதியை அழித்தொழிப்பது மூலம் தலித் தலைமை சாத்தியப்படும்.
11. தேசியக் கட்சியான காங்கிரஸில் தலித் தலைமை சாத்தியமாயிருக்கிறது. ஆனால் தீண்டாமை ஒழிப்பதை இலட்சியமாகக் கொண்டிருக்கும் திராவிட இயக்கங்களில் தலித் தலைமை என்பது சாத்தியமாகவில்லை. ஏன்?
திராவிட இயக்கங்கள் சாதி ஒழிப்பை முன்னிறுத்தாமல் பிராமண எதிர்ப்போடு நிறுத்திக் கொண்டதன் விளைவுதான் இதற்கெல்லாம் அடிப்படை காரணம். சாதி ஒழிப்பு என்பது தலித்துகள் அதிகாரப்படுத்துதல் என்கிற செயல்பாட்டிற்கே அவர்கள் வரவில்லை. அதுமட்டும் காரணம் அல்ல. இடைநிலைசாதி ஆதிக்கத்திற்கு எதிராக அவர்கள் வலுவாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டுகிறேன். மூன்று சதவீத பிராமணர்களை எதிர்ப்பது எளிது, இந்த மூன்று சதவீத பிராமணர்களை தவிர்த்து 25 விழுக்காடு தலித்துகள் என்று வைத்துக் கொண்டால், மற்ற அனைவரும் இடைநிலை சாதியினர் தான். இங்கே தலித்துகள் மீது நடத்தப்படுகிற வன்கொடுமைகளில் 99 சதவீதத்தினர் இடைநிலை சாதியினரின் பங்கு உள்ளது. இதை உணர்ந்து திராவிட இயக்கங்கள் களமாடவில்லை.
சமத்துவம், சமநீதி போன்ற போராட்ட செயல்பாடுகள் மெட்ராஸ் மாகாணத்தில் நீதி கட்சியிலிருந்து துவங்கியதாக ஒரு வரலாறு இங்கே சொல்லப்படுகிறது. அதாவது 1916க்கு பிறகு தான் இத்தகைய செயல்பாடுகள் வீரியம் பெற்றதாக சொல்கிறோம். இதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் நீதிக்கட்சிக்கு முன்பே மெட்ராஸ் மாகாணத்தில் ரெட்டமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் போன்றவர்கள் எல்லாம் சமூகநீதி பிரதிநிதித்துவதிற்காக குரல் கொடுத்து வந்துள்ளனர். அதுமட்டுமல்ல மைசூர், மகராஸ்டிரா போன்ற மாகாணங்களில் நமக்கு முன்னே சமூகநீதிக்கான முன்னெடுப்புகள் துவங்கிவிட்டன. அதுமட்டுமல்ல நீதிக்கட்சியின் முதல் இடஒதுக்கீட்டில் 44 சதவீதம் பிராமணர்கள் அல்லாத முற்படுத்தப்பட்ட சாதியினருக்கு தான். பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு போதிய அளவில் இல்லை. ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் இருந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கான இடஒதுக்கீடும் குறைக்கப்பட்டது. அதன்பிறகு நடந்த முன்னெடுப்புகள் குறிப்பாக பெரியார், கலைஞர், எம்ஜிஆர் போன்றவர்கள் இடஒதுக்கீடுக்கு பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாட்டில் கொண்டு வந்தனர். கடந்த 1960களின் பிற்பகுதியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 25 ஆக இருந்தது. இன்று 50ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பட்டியல் சாதியினர் இடஒதுக்கீடு 2 சதவீதமே உயர்த்தப்பட்டு 18ஆக உள்ளது. இதை எப்படி புரிந்து கொள்வது?
இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய இயக்கங்களின் செயல்பாடுகளும் அப்படிதான் இருந்தன. எம்ஜிஆர் அவர்களுக்கு 1988ல் பாரத ரத்னா கிடைத்தது. ஆனால் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு 1990ல் கிடைத்தது. உலகத்தின் தொலைநோக்கு தலைவர் அம்பேத்கருக்கு முன்னரே எம்ஜிஆருக்கு பாரத ரத்னா கொடுத்ததை எப்படி எடுத்துக் கொள்வது?
கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் போன்ற வெகுசில திராவிட இயக்கங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே இடைநிலைசாதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக தி.க. தலித்துகள் மீதான வன்கொடுமைக்கு பெரிய அளவில் செயல்படவில்லை. அதிமுக ஒரு திராவிட கட்சி என்கிற அந்தஸ்த்தை எப்போதோ இழந்துவிட்டது. ஆனால் திமுக அப்படி அல்ல. திராவிட சித்தாந்தங்களை உள்வாங்கிய கட்சி. ஆனாலும் திமுக வின் பலரும் தலித் வெறுப்போடு செயல்படுவதை பார்க்கிறேன். அவர்களிடம் ஒருவிதமான அடாவடி அச்சுறுத்தல் போக்கும் இருக்கிறது. இதையெல்லாம் கடந்து வெகுசில திமுகவினர் தலித் அக்கறையோடு இருப்பதையும் பார்க்கின்றேன். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது.
திராவிட இயக்கம் என்பது பாட்டாளி வர்க்கத்தோடு தொடர்புடைய கொள்கை சார்ந்தது. ஆனால் இன்றைக்கு திமுகவில் அமைச்சராக இருந்தவர்களில் பலர் பண்ணையார்களாக செயல்படுவதை கண்கூடாக பார்க்கிறோம்.
நடந்து முடிந்த தேர்தலில் கூட தனிப்பட்ட முறையில் நான் திமுக கூட்டணிக்கு தான் ஆதரவு கொடுத்தேன். அதே நேரத்தில் திமுகவின் நிர்வாக சீர்கேடுகளை சுட்டியும் காட்டினேன். நிர்வாக சீர்கேடுகளை சுட்டிக்காட்டியதற்காக என் மீது மோசமான தனிமனித வசவுகள் நடத்தப்பட்டது. சகிப்புதன்மை என்பது முற்றிலும் குறைந்துபோய்விட்டது.
ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் ஆரம்பத்தில் இயக்கங்களாக இருக்கிறபோது அவை வளர்வதற்கு இரத்தம் சிந்திய பெரும்பாலானோர் தலித்துகளாக இருப்பார்கள். ஆனால் அந்த இயக்கங்கள் கட்சிகளாக அதிகார இடத்திற்கு வருகிறபோது தலித்துகள் ஓரங்கட்டப்படுவார்கள். இதை எல்லாம் திராவிட இயக்கங்களும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
12. தற்கால இளைஞர்களிடம் பரவிவரும் சாதிய உணர்வுகளை முறியடித்து, தலித் தலைமையை ஏற்கும் அரசியல் விழிப்புணர்வை தமிழக இளைய தலைமுறையிடம் எப்படி உருவாக்குவது?
சமத்துவம், மாண்பு, சுதந்திரம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஒருவருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தரமான உணவு, இருப்பிடம், மருத்துவம், அறிவியல் முன்னேற்றங்களை பயன்படுத்துதல், பாதுகாப்பான வாழ்க்கை போன்ற உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும். இதை கடந்து அவசியமில்லாத சாதி, ஆணாதிக்கம், பாகுபாடு போன்ற மோசமான நச்சான நம்பிக்கைகள் நம்மை அழித்துவிடும் என்கிற உண்மையை பரப்புரையாக எடுத்துச் செல்ல வேண்டும். சாதி, மதம், ஆணாதிக்கம் போன்றவை எல்லாம் கலாச்சாரமல்ல. சமத்துவமும், சுதந்திரமும்தான் கலாச்சாரம் என்கிற உண்மையை கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டங்களாக கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் மனித உரிமை கல்வி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
எல்லா கிராமங்களும் சமூகநீதி பஞ்சாயத்து கிராமங்களாக உருவாக்குவதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். பாகுபாட்டினை அழித்தொழித்தல் முக்கிய செயல்திட்டமாக இருக்க வேண்டும்.
13. சமூகப் போராட்டங்களுக்கும் தலித் இலக்கியத்திற்கும் இடையிலான தொடர்பு எத்தகையது? இலக்கியம் சமூகத்தில் எந்தளவு தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?
இலக்கியம் என்பது சமூக போராட்டத்திற்கான வழிகாட்டியாகவும் உள்ளது. அந்த போராட்டத்திற்கு பிறகான ஆவணங்களாகவும் மாறுகிறது. தலித் விடுதலை கவிதைகளும், பாடல்களும், படைப்புகளும் போராட்டங்களுக்கு மிகப்பெரிய கருவியாக உள்ளன என்பது மறுப்பதற்கல்ல. கலைகளையும் கருவிகளாக்குவோம் என்கிற உன்னத லட்சியங்களோடு தான் இந்த போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் பெரும்பாலான தலித் இலக்கியம் என்பது தாழ்வு மனப்பான்மையில் சிக்கி தவிக்கிறது. தலித்துகளின் ஜனநாயக பண்புகளையும் நீதி உணர்ச்சி கொண்ட வாழ்க்கை முறைகளையும் தீர்க்கமான போராட்ட உணர்வுகளையும் இலக்கியமாக கொண்டுவரப்படவில்லை என்று தான் சொல்வேன்.
இதுபோன்ற தாழ்வு மனப்பான்மை கொண்ட இலக்கியத்தை, இலக்கியம் என்று கொண்டாடுவது ஒருவிதமான தந்திரமாக பார்க்கிறேன். அதை இலக்கியம் என்று முத்திரை குத்துவது அபத்தம் என்று சொல்வேன். நீ அந்த நிலையிலேயே எழுது அதையே இலக்கியமாக வரையறை செய் என்று இலக்கிய பிதாமகன்கள் தீர்ப்பு எழுதுவது அபத்தத்தின் உச்சம். மகாராஸ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தலித் இலக்கியங்களில் ஒருவிதமான நீதி உணர்ச்சியும் போராட்ட தீயும் கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
கீழ்வெண்மணி, மேலவளவு முருகேசன் படுகொலை, தாமிரபரணி படுகொலை, தர்மபுரி கலவரம், கவின் ஆணவப்படுகொலை போன்ற பல்வேறு கொடுமைகளுக்கு எதிராக இலக்கியங்கள் பெருமளவு வெடிப்பாக வந்திருக்க வேண்டும்.
தலித் சுப்பையா போன்ற தலித் கலைஞர்கள் அளவுக்கு தலித் இலக்கியவாதிகள் பெருமளவு பங்காற்றவில்லை என்கிற ஏமாற்றம் எனக்கு உள்ளது.
14. தற்காலத் தமிழ் இலக்கிய உலகில் தலித் படைப்பாளிகளின் குரல்களுக்குப் போதிய அங்கீகாரமும் இடமும் கிடைக்கிறதா? அல்லது அங்கேயும் நுணுக்கமான வகையில் சாதியப் பாகுபாடுகள் இருக்கின்றனவா?
போதிய அங்கீகாரம் இல்லை என்றே கருதுகிறேன். கண்டிப்பாக நுணுக்கமான சாதிய பாகுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதைத்தாண்டி தலித்துகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால் அவர்கள் ஏதோ ஒருவிதத்தில் ஆதிக்க இலக்கிய அமைப்பின் ஆதரவை வேண்டி நிற்க வேண்டியிருக்கிறது. இந்த அவலம் மாற வேண்டும்.
பாமா, இமையம், சுகிர்தராணி, அழகிய பெரியவன் போன்ற ஆளுமைமிக்க தலித் இலக்கியவாதிகளுக்கு உரிய அங்கீகாரம் இங்கே கிடைக்கவில்லை. அவர்களுக்கான அங்கீகாரத்தை கூட நீலம் அமைப்பு தான் செய்கிறதே தவிர பிற அமைப்புகள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்கிற வருத்தம் தனிப்பட்ட முறையில் எனக்குள்ளது.
ரவிக்குமார், ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் எழுத்து, இலக்கியம் என்பதில் இந்திய முன்னோடிகளாக உள்ளனர். அவர்களுக்கான அங்கீகாரமும் பெரிதாக இல்லை.
15. கலை மற்றும் சினிமா துறையில் தற்போது எழுந்துள்ள தலித் அரசியல் படைப்புகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து என்ன கருதுகிறீர்கள்?
சமூக மாற்றத்திற்கான மிக முக்கியமான கருவியாக சினிமாவை பார்க்கிறேன். ஸ்பைக் லீ, அகிரா குரோசவா, இன்னாரிட்டோ, மார்டின் ஸ்கார்சசி, பாங்கு ஜுன் ஹு, அப்பாஸ் கியாஸ்டாமி, ஜாபர் பனாரி, கிறிஸ்டோபர் நோலன் போன்ற சர்வதேசிய இயக்குனர்களின் படங்கள் என்னை வியக்க வைத்திருக்கின்றன.
தமிழில் வெற்றிமாறன், சுசீந்திரன், பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், கோபி நயினார் போன்ற இயக்குனர்களின் படங்கள் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறது. குறிப்பாக அசுரன், வடசென்னை, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை, பரியேறும் பெருமாள், வாழை. அறம் போன்ற படங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதை கடந்து தமிழில் வந்த மிக முக்கியமான படம் சுப்ரமணியபுரம் என்பேன். எளிய சமூகங்களை அரசியல் சூழ்ச்சி எப்படி எல்லாம் பலி ஆடுகளாக மாற்றுகிறது என்பதுதான் இப்படத்தின் நோக்கம். வாழ்வியலோடு சமூக அரசியலை இணைத்து படமாக்கியது வியக்க வைத்தது.
குறிப்பாக ரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி இந்திய அளவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தலித் கலையை தேசிய அளவில் கவனம் பெற செய்வதில் ரஞ்சித்திற்கு அதிகம் பங்குண்டு. தலித் சினிமாவிற்கு மிகப்பெரிய மார்க்கெட்டிங் டிரென்ட் செட்டராக ரஞ்சித் உள்ளார்.
கவனிக்கப்படாத கதைகளையும், மனிதர்களையும் பொது சமூகத்திற்கு எடுத்து வந்து அவர்களுக்கான இடத்தை கொடுத்ததில் மாரி செல்வராஜின் பங்கு பெரிது என்பதை எவறும் மறுக்க முடியாது.
மனித உரிமை சார்ந்த சினிமா என்றால் அது வெற்றிமாறன் தான். காவல் வன்முறை, தலித் எழுச்சி, இடதுசாரி இயக்கத்தின் பங்களிப்பு போன்றவற்றை எல்லாம் வெற்றிமாறன் தன் சினிமா மூலம் வெகுஜன மக்களை கவர்ந்துள்ளார்.
தலித் வாழ்வியலை ரஞ்சித் அழகாக சொல்கிறார். தலித் ஒடுக்குதலை மாரி செல்வராஜ் பிரமாதமாக காட்சிப்படுத்துகிறார். ஆனால் தலித் எழுச்சியை அற்புதமாக வெற்றிமாறன் பதிவு செய்கிறார். ஆகவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உண்டு. ஆனாலும் தமிழில் தலித் சினிமா என்பது இன்னும் போதாமையில் தான் உள்ளது.
சர்வதேசிய கலைத்தர நிர்ணயங்களை தமிழுக்கு கொண்டு வருவதில்லை. அல்லது அந்த கலைத்தர நிர்ணயங்களை கற்றுக் கொள்வதில் படைப்பாளர்களுக்கு ஒரு சுணக்கம் இருப்பதாகவும் பார்க்கிறேன். எண்பத்து மூன்று வயதில் சிம்பொனி இசைக்கிறார் இளையராஜா. ஒரு கலையை சர்வதேசிய அளவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற வித்தை அவருக்கு தெரிகிறது. அதுபோன்ற முன்னெடுப்புகள் இல்லை என்று தான் சொல்வேன்.
என்னைப் பொறுத்தவரை தலித் கலையின் பிதாமகன் இசைஞானி இளையராஜா என்பேன். அது அவருக்கு உகந்ததா அல்லது இல்லையா என்பது எனக்கு பிரச்சனை இல்லை. அதுமட்டுமல்ல தலித் கலை என்பது இந்திய கலையின் முன்னோடி. உலக கலைகளின் தொகுப்பில் அதற்கென்று தனி இடம் உண்டு. அதனடிப்படையில் தான் இளையராஜாவை வரையறுக்கிறேன்.
தாக்கம் என்பது விவாதம் அல்ல, எழுச்சி, சமூக மாற்றம். ஆகவே தற்போதைய தலித் சினிமா விவாத அளவில் மட்டுமே நின்று விடுகிறது. அவை நீண்ட நிலைத்த சமூக எழுச்சியை கொண்டுவரவில்லை என்று தான் சொல்வேன். இது தலித் கலைகளுக்கும் பொருந்தும்.
16. அதிகாரத்தையும் சாதியக் கட்டமைப்பையும் எதிர்த்து கேள்வி கேட்கும் படைப்புகள் தணிக்கை அல்லது எதிர்ப்புகளுக்கு உள்ளாக்கப்படும் சூழலை எப்படிப் எதிர்கொள்வது?
இது அராஜகம். பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்று இந்திய அரசியல் சாசனம் பிரிவு 19ல் வரையறுக்கப்பட்டுள்ளது. தணிக்கை என்கிற பெயரில் அல்லது மிதவாத கும்பலின் அச்சுறுத்தல் என்கிற அடிப்படையில் ஒரு படைப்பை முடக்க நினைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும்.
ஒரு தனி மனிதன் தைரியமாக அரசின் எதேச்சதிகார போக்கினையும் ஆதிக்கவாதிகளின் அராஜகத்தையும் துணிந்து கேள்வி கேட்க வேண்டும். அப்படி கேள்வி கேட்கக்கூடிய சுதந்திரம் எந்த நாட்டில் இருக்கிறதோ அந்த நாடுதான் மனித உரிமை உள்ள நாடு என்று டி.டி. பாசு கூறுவார். ஆகவே இதுபோன்று முடக்குவதனால் ஒரு பயனும் இல்லை.
தற்போது இளைஞர்கள் வலது சாரி அரசியலுக்கு எதிராக, கர்ப்பரேட் கும்பலுக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடி வருவது ஆறுதல் அளிக்கிறது. கடந்த மாதம் சுவீடனில் வலதுசாரி அரசு வீழ்ந்து போய்விட்டது.
ஆகவே மக்கள் தான் இங்கே பிரதானம். அதை அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களை ஒடுக்க நினைப்பது ஒரு அரசு தன்னையே தற்கொலை செய்து கொள்வது போன்றதாகும்.
ஒரு இளைஞனின் வார்த்தை என்னை வெகுவாக கவர்ந்தது. காதலுக்காக நான் எல்லாவற்றையும் இழப்பேன். ஆனால் என் மக்களின் சுதந்திரத்திற்காக அந்த காதலையே இழப்பேன். சுதந்திரம் உன்னதமான வாழ்வின் அறம்.
17. ஒரு கவிஞராக உங்கள் பயணத்தைத் தொடங்கினீர்கள். இடையில் ஆக்டிவிசம். நீண்டகாலத்துக்குப், பின் கறுப்பு ரட்சகன் நாவல் எழுதியுள்ளீர்கள். இடைப்பட்ட காலத்தில் இலக்கிய வெளியில் உங்கள் மௌனம் ஏன்?
இனி தொடர்ந்து எழுத விரும்புகிறீர்களா?
கடுமையான வேலை பளுதான் அதற்கு காரணம். எழுதுவதற்கான சூழல் இல்லாமல் போய்விட்டது. அதே நேரத்தில் கலையின் மீதும் இசையின் மீதும் இலக்கியத்தின் மீதும் எனக்கு ஆர்வம் உண்டு. கறுப்பு ரட்சகன் நாவல் இரண்டாண்டு காலம் எழுதினேன். உண்மையில் அந்த இரண்டாண்டு காலம் என் வாழ்வின் பொற்காலம் என்பேன். அது ஒரு தவம் போன்று இருந்தது. அந்த அனுபவத்தின், உணர்வை மகிழ்ச்சியை எந்த எழுத்தாலும் விவரிக்க முடியாது.
இனி தொடர்ந்து எழுத விரும்புகிறேன். தற்போது மூன்று நாவல்கள் எழுதுவதற்கான ரெபரன்ஸ் இருக்கிறது. எதிர்காலத்தில் அவை நாவலாக கொண்டு வருவேன் என்று நம்புகிறேன்.
18. அமெரிக்காவின் Black Lives Matter (கருப்பினத்தவர் உரிமை) போராட்டம் போன்ற சர்வதேச மனித உரிமை இயக்கங்களோடு, இந்தியாவில் உள்ள தலித் உரிமைப் போராட்டங்களை நீங்கள் எவ்வாறு ஒப்பிடுகிறீர்கள்?
இந்தியாவில் Dalit Lives Matter என்கிற தளம் உருவாக்கப்பட்டு அதற்கான முன்னெடுப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கருப்பின மக்களின் பிரச்சனை சர்வதேசிய அரங்குகளில் இருநூறு ஆண்டுகளாக பேசப்பட்டு வருகின்றன. ஆனால் தலித் மக்களின் பிரச்சனை முதன் முதலில் ஐ.நா. சபையில் 2001ம் ஆண்டு இனவெறிக்கு எதிரான உலக மாநாட்டில் தான் பேசப்பட்டது.
ஆகவே கருப்பின மக்களின் பிரச்சனை இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் நம்முடைய பிரச்சனை தற்போதுதான் விவாதத்திற்கு எடுத்திருக்கிறோம்., சாதியமும் இனபாகுபாடே என்பதை இதுவரை ஐ.நா. சபை ஒப்புக் கொள்ளவில்லை. அதற்காக தேசிய அளவிலும் சர்வதேசிய அளவிலும் தலித் அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இனவெறி என்றால் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கருப்பு – வெள்ளை பிரச்சனையை மட்டுமே என்று கருதிக் கொண்டிருந்தோம். ஆனால் உலகில் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமான இன பாகுபாடுகள் இருந்து வருகின்றன. உதாரணத்திற்கு இந்தியாவில் தலித்துகள், ஆஸ்திரேலியாவில் அபார்ஜின், ஜப்பானில் புரோக்கோ, ஹங்கேரியில் ஜிப்ஸிகள், கிழக்கு ஆப்பிரிக்காவில் கருப்பின இஸ்லாமியர்கள் என்று பல்வேறு இனக்குழுக்கள் தங்களது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். எல்லா இனக்குழுக்களும் தற்போது ஒன்றிணைந்து இனபாகுபாட்டிற்கு எதிராக போராடுகிற சூழல் உருவாகியுள்ளது என்று தான் கருதுகிறேன்.
சர்வதேசிய முன்னெடுப்புகள் கீழ்மட்ட அளவில் தெரிவிதில்லை என்பது கசப்பான உண்மை. சாதிய பாகுபாட்டிற்கு எதிராக இந்தியாவில் மட்டுமல்ல இங்கிலாந்திலும் அமெரிக்காவின் சில மாகாணங்களிலும் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அமெரிக்க செயல்பாட்டாளர், எனது நெருங்கிய சகோதரி தோன்மொழி சௌந்தர்ராஜன் பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும் அவர் அமெரிக்காவில் வசிக்கிறார். கூகுள் நிறுவனம் நடத்திய கருத்தரங்களில் அவர் பேச அனுமதி மறுக்கப்பட்டார். அப்போது தேன்மொழி சௌந்தர்ராஜன் பகிரங்கமாக கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை அவர்களை பார்த்து, என் நண்பர் எவிடென்ஸ் கதிர் மதுரையில் தான் அமைப்பு வைத்துள்ளார். அவரது அலுவலகத்திற்கு செல்லுங்கள் சாதி கொடுமைகளின் மொத்த ஆவணங்களும் உள்ளன. எப்படி நீங்கள் சாதியே இந்தியாவில் இல்லை என்று கூறலாம் என்று கேள்வி எழுப்பினார். ஆகவே சாதிக்கு எதிராக சர்வதேசிய அளவில் குரல் எழுப்பப்பட்டு தான் வருகிறது.
19.உலகமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி தலித் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உதவியிருக்கிறதா, அல்லது புதிய வடிவிலான சுரண்டலையும் பாகுபாட்டையும் உருவாக்கியிருக்கிறதா?
இந்த கேள்விக்கு இரண்டு விதமான பதில்களை நான் அளிக்க விரும்புகிறேன். உலகமயமாக்கல் பல சீர்கேடுகளை கொடுத்திருந்தாலும் தலித்துகள் சுதந்திரமாக தீண்டாமையிலிருந்து வெளியேறி தங்களுடைய வாழ்க்கையை வாழ துவங்கியுள்ளனர் என்று கெயில் ஓம்லட் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல ஐ.நா. வின் மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைவர் மேரி ராபின்சன் ஒருமுறை உலகமயமாக்கலுக்கு எதிராக இனி எந்த திட்டமும் செய்யமுடியாது. அதே நேரத்தில் விளிம்பு நிலை சமூகங்கள் பாதிக்காதவாறு நம்முடைய திட்டங்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கார்ப்பரேட்டுகளை இரண்டு வகையாக நாம் பிரிக்கலாம். ஒன்று அசிம்பிரேம்ஜி, டாடா, ஷிவ் நாடார் போன்றவர்கள் விளிம்பு நிலை மக்கள் மீதான கரிசனையோடு இருக்கின்றனர். அதே நேரத்தில் அதானி, அம்பானி அப்படி அல்ல. ஆகவே இவற்றை தட்டையாக அணுக முடியாது.
வளர்ச்சி இருக்க வேண்டும். அதே நேரத்தில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இருக்கக்கூடாது. உலகமயாக்கல் இருக்க வேண்டும். அதே நேரத்தில் விளம்பு நிலை மக்கள் பாதிக்கப்படக்கூடாது. இந்த பொறுப்புணர்வு மிகவும் அவசியம் என்று கருதுகிறேன்.
பகுத்தறிவும் அறிவியலும் தான் பாகுபாட்டை ஒழிக்கும் என்று நான் நம்புகிறேன். ஆகவே எல்லா முன்னேற்றங்களிலும் உள்ள சாதக பாதகங்களை அலசி மக்கள் கொள்கை வரைவினை கொண்டு வருவது மிக முக்கியம்.
தற்போது உலக அளவில் எஸ்டிஜி கோல் என்று வரையறுத்துள்ளனர். விளிம்பு நிலை சமூக மக்களின் பாதுகாப்பும் அவற்றில் உள்ளன. அடிப்படை உரிமைகள் மட்டுமல்ல அறிவியல் முன்னேற்றங்களும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை அவை வலியுறுத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.











