சமீபத்தியவை
பிள்ளைக்கனியமுதே… – 4 இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும் எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ
பிள்ளைக்கனியமுதே… – 4 இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும் எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 2

பிள்ளைக்கனியமுதே… – 4

சு. தமிழ்ச்செல்வி By சு. தமிழ்ச்செல்வி
1 hour ago
A A
0
Pillai Kaniyamudhe 4

கோவில் முழுவதும் சுற்றிக்காட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் உட்கார வைத்தபோது மணி ஆறே முக்காலை தாண்டியிருந்தது. சூடு ஆறாமல் இருக்கும் டீ கேனை கிளினர் பையன் தூக்கிக்கொண்டு வந்து அந்த மண்டபத்தில் வைத்திருந்தான்.  அதில் முழுவதும் பால் இருந்தது. ஆதனூர் நல்லசிவம் கடை பால். பேருந்து கிளம்பும் நேரத்தில் கொண்டுவந்து வைத்திருந்தார்.  டீச்சர்களுக்கு தனியாக  பிளாஸ்கில் டீ தரப்பட்டிருந்தது. பிள்ளைகளுக்கு நல்ல பாலாக தர வேண்டுமென்று கேட்டபோது “எனக்கு ஒரு பைசாகூட லாபம் வேண்டாம் டீச்சர். நீங்க வாங்கிக் கொடுக்குற பாலு சக்கரயில கை வைக்காம அப்புடியே காய்ச்சி சக்கர போட்டு கொடுக்குறேன்.  கேனுக்கு மட்டும் வாடக கொடுங்க போதும்.  நம்ம ஊரு பிள்ளைங்க குடிச்சா போகுது” என்றார். ஆயாக்கள் இருவரும் பேப்பர் கப்களில் ஊற்றி பிள்ளைகளுக்கு வரிசையாக கொடுத்துக்கொண்டு வந்தார்கள். நல்லசிவம் சொல்லியது போலவே நம்ம ஊரு பிள்ளைங்க குடிக்கட்டும் என்பது போலத்தான் காய்ச்சியிருந்தார்.  பால் தடிப்பாக மணமாக இருந்தது. டீச்சர்கள் டீயை ஆளுக்கொரு பேப்பர் கப்பில் ஊற்றி குடித்துக்கொண்டிருந்தார்கள். சுடர் தனக்கான டீயை எடுத்துக் கொண்டு தன் அம்மாவிடம் சென்றாள்.  

“அம்மா ஒரு நிமிஷம் இப்புடி வாயேன்” என்றாள்.

“என்ன சுடர், பாத்ருமில்ல போகணுமாம்மா?”

“அது இல்ல.  வேற ஒரு விஷயம் கேக்கணும்.”

“என்ன விஷயம்மா?”

“அந்த பிரகாஷ் இருக்கான்ல்ல”

“ஒன்னகிட்டயும் வாலாட்ட ஆரம்பிச்சிட்டானா?”

“அதில்லம்மா. அவன் வீடு, அம்மா அப்பா பத்தி கேக்கதான் கூப்பிட்டேன்.”

“அவனுக்கு அப்பா இல்லம்மா.  நாலு அக்கா, ரெண்டு அண்ணன். அவனோட அம்மா ஊதிவிட்டா விழுந்துருவாங்க. ஒடம்புல ஒண்ணமே இருக்காது.  பாத்தா கம்மந்தட்டைக்கு கைகாலு மொளச்சி நடந்து வர்றது மாதிரி இருக்கும். புள்ளைகளும் சரியில்ல. வீட்டுக்கு கட்டுப்படாத புள்ளைங்கன்னு சொல்றாங்க. நாலஞ்சி  மாசத்துக்கு முன்னாடிதான் அவனோட மூணாவுது அக்கா தூக்கு போட்டுக்கிட்டு செத்துப் போச்சி.  ரொம்ப பாவப்பட்ட குடும்பம்மா. ஆனா இந்தப் பய எதையும் உணர்ந்து பாக்காம அவ்வள வால்தனம் பண்ணுவான்.”

“அவன் நார்மலா இருக்குறமாதிரி தெரியல. அதான் கேட்டன். “

“ஒன்ன தொந்தரவு பண்ணுனான்னா என்னகிட்ட விட்ரும்மா. நான் பாத்துக்கிர்றன். என்னகிட்ட கொஞ்சம் பதவிசா இருப்பான். “

“இல்லம்மா. அவன்  ஒண்ணும் பண்ணல. சும்மா தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன்.”

“அவங்க அப்பா எப்ப எறந்தாரு?”

“அவன் பொறக்குறதுக்கு ரெண்டு மாசத்துக்கு மின்னாடியே  செத்துட்டாருன்னு சொன்னாங்க.”

“எப்புடி செத்தாராம்?”

“ நானுகிட்டுத்தான்”

“ஏதுனாலயாம்?”

“அதுவும் ஒரு மோசமான கததாம்மா. “

செல்வமணி ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அப்போதெல்லாம் ஊருக்குள் அவ்வளவாய் மின்சார வசதி இல்லாதிருந்தது. புதிதாக மின் கம்பங்களை நட்டு விவசாயத்திற்கும் மற்ற எல்லா பகுதிகளுக்கும் மின் இணைப்பு தர அரசு விரும்பியது. ஆதனூரிலிருந்து சொட்டவனம்,  ஆதனூர் வயல்வெளி எங்கும் மின்வசதி செய்து தர நிறைய கம்பங்களை நடவேண்டி இருந்தது. மின் வாரிய ஊழியர்களால் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான குழிகளை தோண்ட முடியவில்லை.  சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அந்த பகுதிகளில் சுற்றித்திரிந்த பள்ளிக்கூட பையன்களை அழைத்து குழிதோண்ட பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரு குழி தோண்டினால் இரண்டு ரூபாய் என்று பேசி மண்வெட்டி கடப்பாறை போன்றவற்றையும் கொடுத்திருக்கிறார்கள். ஊரைச்சுற்றி வந்து விளையாடி பொழுதைக்கழித்த பிள்ளைகளுக்கு அந்த தொகை மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. நான்கைந்து பேராக சேர்ந்து ஒவ்வொரு குழியாக தோண்டுவது கிடைப்பதை பிரித்துக் கொள்வது. பிள்ளைகள் சுறுசுறுப்பாய் வேலை செய்ததால் மின் வாரிய ஊழியர்களுக்கும் அவர்களைப் பிடித்துப்போனது.

செல்வமணியும் அவனது இன்னும் நான்கு நண்பர்களும் பள்ளிக்கூட நாட்களிலும் வீட்டுக்குத் தெரியாமல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர்.  பள்ளிக்கூடம் செல்வது  போல கிளம்பி புத்தகப்பையை ஆனந்தாயி கோயிலில் மறைத்து வைத்துவிட்டு மின் ஊழியர்களுடன் சென்று விடுவார்கள். இது ஒரு கட்டத்தில் வீட்டுக்கு தெரியவந்தது. யாருடைய பெற்றோரும் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை.  “படிச்சி பாழாகுறதவிட ஒழச்சி ஆளாகுறது நல்லதுதான்” என்று அவர்கள் போக்கில் விட்டுவிட்டார்கள்.

 மாவிடந்தல் கிருஷ்ணமூர்த்தி வாத்தியார் பள்ளிக்கூட பிள்ளைகளின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். வள்ளலார் பக்தர். வள்ளலாரின் காருண்ய நெறிகளை வாழ்க்கையில் பின்பற்றி நடப்பவர். அவர் இவர்களை எப்படியாவது வாழ்க்கையில் கரை சேர்த்துவிட வேண்டும் என்று விரும்பினார்.  பலமுறை இவர்கள் வேலை செய்யும் இடத்திற்கே தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு தேடிப்போவார். பலவிதமான புத்திமதிகளையும் சொல்லி பள்ளிக்கு வரும்படி வற்புறுத்தி அழைத்து வருவார். ஒருநாள் இரண்டு நாட்கள் தான் அவருடைய வார்த்தைகளால் அவர்களை பள்ளியில் உட்கார வைக்க முடியும்.  மூன்றாவது நாள்  ஏதாவது ஓர் ஊரில் குழி வெட்டிக் கொண்டும் கம்பி இழுத்துக் கட்டிக்கொண்டும் நிற்பார்கள். ஆறாம் வகுப்பில் இருந்த ஐந்து பேரின் பெயர்களும் கிருஷ்ணமூர்த்தி வாத்தியாரின் கருணையால் ஏழாம் வகுப்புக்கும் உயர்ந்து வந்திருந்தது. பாஸ் போட்டு வைத்தால் எந்த நேரத்திலும் மனம்மாறி அவர்கள் பள்ளிக்கு வரலாம். பெயில் என்று போட்டு விட்டால் அவர்கள் அதன் பிறகு பள்ளிக்கூடம் பக்கமே தலைவைத்து கூட படுக்க மாட்டார்கள் என்பது அவரது நம்பிக்கையாக இருந்தது. அவர் நினைத்தது போல அந்த வருடம் முழுவதும் எதுவும் நடக்கவில்லை. மறுபடியும் ஏழாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பிற்கு அவர்களது பெயர்களை கொண்டு வந்து விடலாமா எனவும் யோசித்தார். ஒரு நல்ல ஆசிரியர் தன் மாணவனின் எதிர் காலம் குறித்தும் சிந்திப்பவராக, அவனது இறுதி காலம் வரைக்கும் வழிகாட்டுபவராக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவார். கிருஷ்ணமூர்த்தி வாத்தியாரும் அப்படிப்பட்டவர்தான். இருந்தபோதும் பள்ளிக்கு வந்த ஆய்வு அதிகாரியின் கெடுபிடியால் ‘பரவால்ல பள்ளிக்கூடம் வரலன்னாலும் பசங்க வேல கத்துக்கிட்டாய்ங்க. இனிமே பொழச்சிப்பாய்ங்க’ என்று நினைத்தவர் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராதவர்கள் என்று காரணம் எழுதி ஐவர் பெயர்களையும் நீக்கிவிட்டார்.

 செல்வமணி மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு இதுபற்றி அப்போது எதுவும் தெரியவில்லை. மின்வாரிய அதிகாரிகளிடம் தினக்கூலிக்கு வேலை செய்வதே பெரிய காரியமென்று செய்து கொண்டிருந்தார்கள். மின்வாரிய ஊழியர்கள் செய்யும் அனைத்து பணிகளையும் திருத்தமாக செய்ய கற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இருபது வயது நடந்து கொண்டிருந்தது.  மின்வாரியத் துறை, லைன்மேன் வேலைக்கு ஆளெடுத்தது. கல்வித்தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.  

“எட்டு வருசமா நாங்க இந்த வேலய செய்யிறோம். எங்களுக்கு தான் நீங்க வேல போட்டுத் தரணும் ” என்று இந்த ஐந்து பேரும் விருத்தாசலம் டிவிசனில் பணியாற்றும் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.  “நீங்க  அஞ்சிபேருமே வேல தெரிஞ்ச பசங்கதான்.  ஒங்க அஞ்சி பேரையும் வேலைக்கி சேத்துக்கிட்டா பயிற்சி கொடுக்க வேண்டிய அவசியம்கூட இல்லதான். ஆனா எட்டாவது பாஸான சர்டிபிகேட் வைணுமேப்பா” என்றனர் உயரதிகாரிகள்.  நாங்க பள்ளிக்கொடம் போவலன்னாலும் எங்க பேர அடிக்காம பாஸாக்கி வச்சிருந்தாரு எங்க கிருஷ்ணமூர்த்தி சாரு. அவரு இப்ப பள்ளிக்கொடத்துல இல்ல. ரிட்டேராகி வீட்டுல சும்மாத்தான் இருக்காரு. அவரபுடிச்சி நாங்க சர்டிபிகேட் வாங்கிக்கிட்டு வந்துருவோம். எங்களுக்கு வேலைக்கான  ஏற்பாட்ட பண்ணி வையிங்க என்று சொல்லிவிட்டு வந்தார்கள்.  இவர்கள் வந்து பார்த்த போது கிருஷ்ணமூர்த்தி வாத்தியார் மிகவும் உடல் நலிவுற்று இருந்தார்.  விஷயத்தை கேட்டபோதுதான் அவருக்கு இவர்களின் பெயர்களை ஏழாம் வகுப்பிலேயே நீக்கியது நினைவுக்கு வந்தது.

“அடப்பாவிகளா நான் அப்பவே தலமூச்சின்னு அடிச்சிக்கிட்டேனேடா. என்னோட பேச்ச கேட்டியளாடா? பேருக்கு நாலு நாளு பள்ளிக்கொடம் வந்துட்டு மத்த நாளு வேலைக்கிப் போயிருந்தாக்கூட ஒங்க பேர நீக்கியிருக்க மாட்டேனேடா. என்னோட கையாலயே ஒங்க தலையில மண்ண அள்ளி போட வச்சிட்டீங்களேடா” என வருத்தப்பட்டார்.

“ஒங்களவிட்டா எங்களுக்கு வேற வழியே இல்ல சார்.  நீங்கதான் எங்க வாழ்க்கைக்கு வழி காட்டணும்” என்று நிலைக்காலில் நின்று கெஞ்சினர்.

“நீங்க அந்த வேலைக்கு தகுதியானவைங்களாடா?”

“எட்டாவது படிச்ச தாளுமட்டும்தான் சார் எங்க கிட்ட இல்ல.  மத்தபடி எங்க அளவுக்கு புசுசா வாற யாருக்கும் வேல செய்யத் தெரியாது சார்.”

“சரிடா என்னால ஒங்க வீட்டுகள்ல  வெளக்கு எரியும்ன்னா நான் அத செய்து தாரண்டா. ஆனா அதுக்கு முன்னாடி ஒங்களுக்கு வேல போட்டுத்தாறன்னு சொன்ன அதிகாரிய நானும் பாத்து ரெண்டு வார்த்த பேசிட்டு வந்து தாறன்.  என்ன அவர்கிட்ட கூட்டிட்டு போங்க.”

“அவர்கிட்டயெல்லாம் நீங்க எதுக்கு சார் வந்து நிக்கணும்?”

“ஒங்களுக்கு உறுதியா வேல போட்டு கொடுப்பாரான்னு விசாரிக்கதாண்டா.”

“சார்,  எங்களுக்கு வேலகொடுத்தா அவங்களுக்குதான் சார் லாபம்.  அதுனால தரலன்னெல்லாம் சொல்லமாட்டாங்க சார்.  எட்டாவது படிச்ச தாளு மட்டும் தான் சார் இப்ப பிரச்சனை” என்றனர்.

“இல்லடா வேல போட்டுத் தாறது யாருன்னு தெரிஞ்சா நீங்க அஞ்சுபேரும்  நல்ல பசங்க. கஷ்டவாளிக் குடும்பம். சொன்ன பேச்ச கேட்டு பதவிசா நடந்துக்கிற பசங்கதான்னு ஒங்களுக்காக சிவாரிசு பண்ணுவேண்டா.”

“சார் இப்ப நீங்க எப்புடி எங்கமேல அக்கறயா இருக்கீங்களோ அதேமாதிரி அக்கற உள்ள அதிகாரிதான் சார் அவரும். எங்களுக்கு எப்புடியாவது இந்த வேலைய போட்டுக் கொடுத்திரணும்ன்னு ஆசப்படுறாரு. எட்டாவது படிச்ச தாளு மட்டும் கொண்டாந்திருங்கடான்னு சொல்லி அனுப்பிருக்காரு. ஊருக்கு ஊரு கரண்டுமரம் நட்டு சப்ளை போகுதில்ல. ஒடனே இருவத்தியோரு ஆள போட்டாவணுமாம்.  எங்க ஏகாம்பரம் சார்தான் அதுக்கு பொறுப்பு. இன்னும் பத்து நாளுக்குள்ள லிஸ்ட விழுப்புரத்துக்கு அனுப்பனுமாம். அங்கேருந்து கையெழுத்து போட்டு வந்த பெறகு பதினஞ்சி நாளு பயிற்சி கொடுப்பாங்களாம். அப்பறம் ஆறுமாசம் போல எப்புடி வேல செய்யிறம்ன்னு பாப்பாங்களாம்.  அதுக்கப்பறம் பர்மனெண்டு பண்ணிடுவாங்க . காலம் முழுக்க அரசாங்க சம்பளம் வாங்கலாம். எங்களையும் நாலுபேரு மதிப்பாங்க.  மதிப்பா கௌவுரவமா வாழலாம்” விளக்கமாய் சொல்லிக் கொண்டிருந்த ராசாங்கத்தின் குரல் தழுதழுத்தது. விட்டால் அழுதே விடுவான் போல தோன்றியது.  படிப்பறிவில்லாத அம்மா அப்பா.  நல்ல சாப்பாடு,  துணிமணியை கண்டிராத குடும்பத்து பிள்ளைகள் இவர்கள். பகல் முழுவதும் உடலை பிழிந்து வேலை செய்துவிட்டு  எப்போது கூலி கொடுப்பார்கள் என்று அதற்காகவும் கால்கடுக்க நின்று எத்தனையோ விதமான அவமானங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள். தலை நிமிர ஒரு சிறு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றால் அதை பற்றிக்கொள்ளத்தானே ஆசைப்படுவார்கள்.  

“சார் நீங்க இப்ப எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த வாத்தியாரு மட்டுமில்ல சார். வேடப்பசாமியே நீங்க தான் சார்.”  அடியோடு அறுத்துவிட்ட நெடுமரங்கள் விழுவது போல சடசடவென ஐந்து பேரும் அவரது கால்களில் விழுந்தார்கள்.

கிருஷ்ணமூர்த்தி வாத்தியாருக்குள் ஒளிந்துகிடந்த வேடப்பசாமி மீசையை முறுக்கிக்கொண்டு நெஞ்சு விடைக்க விரைப்பாய் எழுந்து நின்றார்.  

“டேய் என்ன ஆனாலும் பாத்துருவம்டா. நான் இருக்கன்டா ஒங்களுக்கு. கவலப்படாம போங்கடா.  நாளைக்கு…   வந்து என்ன பாருங்க.”

“சார் நிச்சயமா நாளைக்கு மறாம் நாளு வந்து பாக்கலாமா சார்?” என்றான் வீரன்.

“டேய், என்னடா சார் செய்வாரோ மாட்டாரோன்னு சந்தேகமா இருக்காடா?”

“இல்ல சார்.  சந்தேகமெல்லாம் படல சார். ஒங்க கூட வேல பாத்த சாருங்க  எதுவும் சொல்லி,  ஒங்க மனச மாத்திடுவாங்களோன்னு இருக்கு சார்.”

“டேய்,  ஒருத்தவங்களுக்கு உதவனும்னு முடிவு பண்ணிட்டா அதுக்குப் பெறவு நடக்கப் போற நல்லது கெட்டதப்பத்தி யோசிக்கவேக் கூடாதுடா. நம்ம  பண்றது தப்புன்னுகூட நெனக்கக் கூடாது.  அதுனால ஆகப்போற நல்லது மட்டும்தான் நம்ம கண்ணுக்கு தெரியணும்.  நான் ஒங்களுக்கு உதவுறதுன்னு முடிவு பண்ணிட்டேன். இதுக்கு மேல யாரு சொல்லியும் என்னோட மனச நான் மாத்திக்க மாட்டேன். அதே மாதிரி எந்த காலத்துலயும் என்னோட பேருக்கு கலங்கம் வர்றது மாதிரி நீங்களும் நடந்துக்கக் கூடாது.”

அதற்கு மேல் அவரிடம் ஒரு வார்த்தை பேசினால்கூட அவரை அவமதிப்பது போலாகி விடும் என எண்ணினார்கள். அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.

“சார் நமக்கு இந்த வேலய செய்து கொடுத்தாலும் கொடுக்காம விட்டாலும் நம்ம கிருஷ்ணமூர்த்தி சார தப்பா நெனைக்கக் கூடாதுடா. அவரு நம்மள பள்ளிக்கொடத்துக்கு வரவச்சிரனும்னு எவ்வளவு கஷ்டப்பட்டாரு. நம்ம தாண்டா அவரு பேச்ச கேக்கல. “

“அன்னைக்கே அவரு பேச்ச கேட்டு நடந்திருந்தா இன்னைக்கு நமக்கு இந்த நெலம வந்துருக்குமாடா?”

“இப்பகொட பாருங்களேன்டா  அவரு நமக்கு நல்லதுதான் செய்யப்போறாரு” ஏதேதோ பேசியபடி திரும்பினர். இரவு முழுவதும் வேட்ப்பசாமி போலவும் வள்ளலார் போலவும் அவர்களின் மனக்கண்ணிலும் சிந்தனையிலும் உலா வந்து கொண்டிருந்தார் கிருஷ்ணமூர்த்தி வாத்தியார்.

Previous Post

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

சு. தமிழ்ச்செல்வி

சு. தமிழ்ச்செல்வி

எழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வி, சமகாலத் தமிழ் எழுத்துலகில் எளிய மக்களின் வாழ்வியலையும், விளிம்புநிலை பெண்களின் துயரங்களையும் உழைப்பையும் தனது புதினங்களில் நுட்பமாகப் பதிவுசெய்டவர். ஆணாதிக்கச் சூழல், வறுமை, இயற்கைச் சீற்றங்கள் எனப் பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் பெண்களின் அசைக்க முடியாத வாழ்வுறுதியையும், தீரத்தையும் இவரது கதைகள் பேசுகின்றன. மண்ணின் மணமும், உழைக்கும் மக்களின் வியர்வையும் கமழும் இவருடைய படைப்புகள், தமிழ் புனைவு உலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப்பெற்றுள்ளன.

கருத்தைப் பதிவிடுங்கள் Cancel reply

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. அவசியமான புலங்கள் * எனக் குறிக்கப்பட்டுள்ளன.

Archives

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 8, 2026
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 8, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

Koor Seevuthal

கூர் சீவுதல்

Pillai Kaniyamudhe 4

பிள்ளைக்கனியமுதே… – 4

November 1, 2026
Ingirunthu Thodangugiren

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

November 1, 2026
interview-issue-2

எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

November 1, 2026
Paav

பாவ்

November 1, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • ஆங்கில படைப்புகள் (3)
  • இதழ்கள் (48)
  • படைப்புகள் (44)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

Pillai Kaniyamudhe 4

பிள்ளைக்கனியமுதே… – 4

November 1, 2026
Ingirunthu Thodangugiren

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

November 1, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Product successfully added to the cart!
No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு