1.மச்சங்கள்
என் சிறு வயதில்
பாட்டியின் மச்சங்களைப் பற்றி கேட்டேன்
அவள் என்னிடமிருந்து எதையும் மறைக்கவில்லை
அவளுடைய முதுகெங்கும் இருந்த மச்சங்களையும்
மார்பகங்களுக்கு அருகிலிருந்த மச்சங்களையும் எண்ணினேன்
அவளுடைய காது மடல்கள்
முழங்கை முழங்கால் மடிப்புகள்
மற்றும் எல்லா இடங்களிலும்
என் பார்வை அலைந்து திரிந்தது
நான் எண்ணி முடித்த போது
“நீயும் என் உடலின் ஒரு பகுதிதான்,” என்றாள்
அவள் உடம்பில் முடித்த எண்ணிக்கையிலிருந்து
எனது மச்சங்களையும் எண்ண தொடங்கினேன்
2. நண்பர்கள்
ஒரு நாட்டு கொய்யா பழத்தினுள்
இரண்டு விதைகள் நண்பர்களாக இருந்தன
அவை எப்போதும்
ஒன்றுக்கொன்று இவ்வாறு வாக்குறுதி அளித்துக்கொண்டன:
“நாம் உலகிற்கு செல்லும்போது ஒன்றாகவே இருப்போம்”
ஒரு விதை முளைத்து எட்டிப் பார்த்தபோது
மற்றொன்றின் தடயமே தெரியவில்லை
முதலாவது ஏற்கெனவே உயரமாக வளர்ந்திருந்தது
இலையுதிர்காலக் காற்று வீசியது
உயரமான அந்தச் செடி
தன் பழைய நண்பனை
இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் தேடியது
அதன் காலடியில் மற்றொன்று
அப்போதுதான் முளைவிட்டிருந்தது.











