“படீர்” என்ற சத்தத்தோடு ஏதோ ஒன்று வெடித்துச் சிதறியது அந்த பாப்கார்ன் மிஷினில்! வெடித்த வேகத்தில் அதன் ஒருபுற கண்ணாடி தகர்ந்து மஞ்சள்தூளும், காரத்தூளும், சோள முத்துக்களும் பறந்து அருகே நின்றிருந்த அந்த ஆளின் முகத்தைப் பதம் பார்த்தன. “அய்யோ” என்று அலறினாலும், அனிச்சை செயலாக மெயின் சுவிட்ச்சை அணைத்து விட்டான். ஆனாலும் முகம் பஞ்சர் ஆகிப்போனது போனதுதான். பழைய நிலைக்குத் திரும்ப நிறைய நாளாகும். வலியும் வேதனையும் இருக்கும். இருக்கட்டும்!
** ** **
நகரமும் இல்லாத கிராமமும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் ஊர் எங்களுடையது. ரயில் தண்டவாளத்தை ஒட்டி ஒரு சின்னஞ்சிறு கால்வாய் ஓடும். அந்த கால்வாயைக் கொஞ்சம் ‘தம்’ பிடித்து தாண்டியதும் ‘ரசாக் லே-அவுட்’ என்ற அந்த சிறிய குடியிருப்பு வரும். அதன் முதல் தெருவில் இடது புறம் ‘பாலாஜி இல்லம்’ என்ற பெயர் பலகையோடிருக்கும் முதல் வீடு எங்களது. அது ஒரு ஸ்டோர் வீடு; வீட்டு உரிமையாளர் ‘பாலா டீச்சர்’ குடும்பத்துடன் சேர்த்து மொத்தம் ஏழு குடும்பங்கள். அதில் ஒன்றுதான் எங்களுடையது.
எங்கள் ஸ்டோர் வீட்டின் காம்பவுண்ட், ரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகில் இருந்தது. அடிக்கடி கடந்து போகும் ரயில்களைப் பார்ப்பதுதான் எங்கள் சிறுவர் பட்டாளத்துக்கு (நான், என் அண்ணன் மற்றும் தங்கை ஆகியோரும் இதில் அடக்கம்) மிகவும் பிடித்தப் பொழுதுபோக்கு. சுவற்றில் உயரவாரியாக ஒருவர் பின் ஒருவர் அமர்ந்து கொள்வோம். ரயில் எங்கள் வீட்டைக் கடக்கையில் வலது உள்ளங்கையின் கட்டை விரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையே வாய் வைத்து “கூ..கூ..” என்று கத்துவதும், ரயிலில் போவருக்கு ‘டாடா’ என்று கோரஸாக கையசைத்து கத்துவதும் எங்களின் அனுதின விளையாட்டுகளில் ஒன்று. அச்சமயத்தில் காம்பவுண்ட் சுவர் தடதடக்கும். நாங்களே ரயிலில் போவதுபோன்ற உணர்வைத் தந்து எங்களை அபரிமிதமாகக் குதூகலிக்கச் செய்யும். ஏனெனில் எங்களில் பலர் அதுவரை ரயிலில் போனதே இல்லை.
எங்கள் காம்பவுண்டில் குடியிருந்த வீடுகளில் ஏழுபேர் தவிர பக்கத்து அக்கத்து வீட்டுப்பிள்ளைகளையும் சேர்ந்து சுமார் இருபது பிள்ளைகள் இருந்தோம். எல்லோரும் நாப்பாளயத்தெருவிலிருந்த நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் நான்காவது முதல் ஆறாவது வரை வகுப்புகளில் இருந்ததால் ஒரே மாதிரி சீருடை அணிந்திருப்போம். ஒரே சமயத்தில் விடுமுறை வேறு வந்துவிடும் என்பதால் எங்கள் தெருவே அமளி துமளிப்படும்.
எங்கள் காம்பவுண்டுக்கு நேர் எதிர்ப்புறம் காரை பெயர்ந்த ஒரு பழைய வீடிருந்தது. எப்போதும் கலகலப்பாக இருந்த எங்கள் வீட்டிற்கு முற்றிலும் எதிர்மாறானது அந்த வீடு. ஏனெனில் அந்த வீட்டில் ஒரே ஒரு ஆள்தான் குடி இருந்தான். அவன் யாரோடும் பேசியோ சிரித்தோ என் வாழ்க்கையில் (என் வயது பத்து) நான் பார்த்ததே இல்லை. சரியான சிடுமூஞ்சி. ஆனாலும் அந்த ஆளைப் பற்றி இவ்வளவு விவரமாக ஏன் சொல்கிறேன் தெரியுமா? அதற்குக் காரணம் அந்த வீட்டிலிருந்து மதிய வேளைகளில் வரும் ‘பாப்கான்’ பொரிக்கும் ரம்யமான வாசனை தான். அச்சமயத்தில், நானும் அக்கம்பக்கத்து வீட்டுப் பிள்ளைகளும் கையில் காசுடன் போய் நின்றால், கடுகடு முகத்தோடு கதவைத் திறந்து கொண்டு வந்து எங்கள் கைகளில் சூடாக இருக்கும் பாப்கார்ன் பொட்டலங்களை திணித்துவிட்டு, எங்களிடமிருந்து காசை அலட்சியமாக வாங்கி சட்டைப் பையில் போட்டு கொள்வானே தவிர ஒரு வார்த்தை பேச மாட்டான் அவன்.
எங்கப்பா இந்தாள் மாதிரி கிடையாது. ரொம்ப மகிழ்ச்சியானவர். அக்கம்பக்கத்தில் எல்லோரோடும் சிரித்துப் பேசி நட்பாய் இருப்பார். எல்லோருக்கும் விளையாட்டாக காரணப்பெயர் வைப்பது அவர் வழக்கம். உதாரணமாக எனது வகுப்பாசிரியை திலகா மிஸ், காதில் தங்க ரிங் அணிந்து இருப்பாங்க; அதனால அவங்களுக்கு அப்பா வைத்த பெயர் ‘ரிங் டீச்சர்’. அப்பா ஆபீஸில் அவரது உயர் அதிகாரி சற்று உயரம் குறைந்தவர். அதனால அவருக்கு ‘குட்டி ஆபீசர்’ன்னு பெயர். தன்னோட உடற்பயிற்சிக்கு வரும் ஒருவருக்கு, அவர் தேர்ச்சி பெற்றிருந்த பயிற்சியை வைத்து ‘பாம்பு தண்டால்’ ன்னு பேர் வச்சிருந்தார். கொஞ்சநாளில், அவர்களின் நிஜ பெயர்களே எங்களுக்கு மறந்து போய் விட்டது. அப்படித்தான் அந்த எதிர் வீட்டு ஆளுக்கு அவர் வைத்த பெயர் ‘மத்தியான மாமா’. ஏனென்றால், காலை மற்றும் மாலை நேரங்களில் எதிர் வீட்டுக் கதவு மூடியேதான் இருக்கும். மதிய நேரத்தில் மட்டும் அந்த ஆள் வீட்டில் இருந்து கொண்டு பாப்கான் பொறிப்பான்.
எப்போதிலிருந்து என்று சரியாக நினைவில்லை. ஆனால் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை நேரத்தில், சோனி பச்சான்களாக இரண்டு சிறுமிகள் ‘மத்தியான மாமா’ வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள். சாயம் போன கவுன், சேஃப்டி பின் போட்டு முட்டுக் கொடுத்த ஹவாய் செப்பல், பலநாட்களாக எண்ணெய் வைக்காததால் சரட்டை போலிருந்த தலைமுடி, உடம்பில் சத்து குறைந்தால் வரும் வாய்ப்புண் சகிதமாக, சிறுபிள்ளைகளுக்கு இருக்க வேண்டிய துறுதுறுப்போ மகிழ்ச்சியோ சிரிதும் இல்லாமல், மணிக்கணக்கில் அவர்கள் எதிர்வீட்டு வாசலில் நிற்பதை கவனித்திருந்தேன். பார்க்கவே பரிதாபமாக இருக்கும். வெகு நேரம் கழித்து தான் அந்த ஆள் அசட்டையாக வெளியே வருவான். ஓரிரு ரூபாய் நோட்டுகளையும், இரண்டு கவர்களில் முந்தைய நாள் பொறித்த, பதத்துப் போய் விற்பனைக்கு உதவாத, பாப்கார்னையும் அவர்கள் கையில் வேண்டா வெறுப்போடு தந்துவிட்டு, “போ” என்பது போல ஏளனமாக கையைக் காட்டுவான். அவர்ககளும் மறு வார்த்தை பேசாமல் கொடுத்ததை வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். அந்தச் சிறுமிகளிடம் மட்டும் அந்த ஆள் பாப்கார்னுக்கு பணம் வாங்குவதில்லை என்பதையும் நான் கவனித்தே வைத்திருந்தேன். ‘அதென்ன இதுங்க மட்டும் ஓசியில வாங்கிட்டுப் போகுதுங்க?” என்று கொஞ்சம் கடுப்பாக இருக்கும். ஆனாலும் அந்தச் சின்னப்பெண்களின் மெலிந்த தோற்றமும், சோகமான கண்களும் பார்க்கையில் பாவமாக இருக்கும். ‘போனால் போகட்டும்’ என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்.
“இந்த மத்தியான மாமா ஏன்ப்பா இப்படி சிடுசிடுன்னு இருக்காரு?” ஒரு நாள் அப்பாவிடம் ஆர்வத்தோடு கேட்டேன்.
“அது, சிலபேர் சுபாவமே அப்படித்தான். சதா சர்வகாலமும் தன்னைப் பற்றியே சிந்தனை கொண்டவங்க அப்படித்தான் இருப்பாங்க” என்றார் அப்பா.
“வாராவாரம் இவர்கிட்டேருந்து பணம் வாங்கிட்டு போறாங்களே யாருப்பா அந்த குட்டி பொண்ணுங்க?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டேன்.
“அட, எதிர்வீட்டையே நோட்டம் பார்த்துக்கிட்டு இருக்கியா நீ?” என்று கேட்டு என் தலையைக் கோதிவிட்டுப் புன்னகைத்தார் அப்பா.
“சொல்லுங்கப்பா யாரு அந்தப் பொண்ணுங்க? இவங்களுக்கு அப்பாம்மால்லாம் இல்லியா? பார்க்கவே பரிதாபமா இருக்குங்க. ரொம்ப நேரம் கால்கடுக்க நிக்குதுங்க” என்று மறுபடி கேட்டேன்.
“அதுவா? அவங்க ரெண்டு பேரும் இந்த ஆளோட குழந்தைகள்தான். இந்தாளு பொண்டாட்டியை சண்டை போட்டு வீட்டை விட்டு விரட்டி விட்டுட்டாராம். அந்த அம்மா பாவம். இந்த ரெண்டு பெண் குழந்தைகளோட அவங்க அண்ணன் வீட்டில ஒண்டிக்கிட்டிருக்காம். அவ அண்ணி அவளை ஒரு வேலைக்காரி மாதிரி நடத்துறாளாம். வாராவாரம் அவங்க செலவுக்கு இந்தாள் ஏதோ கொஞ்சம் காசு கொடுக்குறான். அதை வாங்கத்தான் அந்தக் குழந்தைங்க ரெண்டும் வந்து கால் கடுக்க நிக்குதுங்க. இந்தாளு நிறைய மொத்த வியாபாரக் கடைகளுக்கு பாப்கார்ன் கொண்டு போட்டு, கைநிறைய சம்பாதிக்கிறான். ஆனா, சம்பாதிக்கிறது பூராத்தையும் தானே குடிச்சு அழிக்கிறான். அந்த அப்பாவிகளுக்கு சில்லறை காசை விட்டு எறியுறான். கிராதகன், ராஸ்கல்” என்று சொல்லும் போதே, எப்போதும் கண்கள் சிரிக்க பேசும் அப்பாவின் முகம் கோபத்தில் சிவந்ததை அன்று தான் பார்த்தேன்.
** ** **
அடுத்த வாரத்தில் பள்ளிக்கூடம் முடிந்து ஒருநாள் அம்மாவின் தையல் பள்ளிக்குப் போகும் வழியில் சிவன் கோவில் தெருவில் ஒரு ஓட்டு வீட்டுத் திண்ணையில் அந்தக் குட்டிப்பெண்கள் இருவரும் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். என் கையில் வைத்திருந்த ஹார்லிக்ஸ் மிட்டாய்களில் சிலவற்றை அவர்களுக்குத் தந்தேன். தயக்கத்தோடு எடுத்துக் கொண்டார்கள். அப்போது வீட்டுக்குள் ஒரு பெண் ஆக்ரோஷமாகக் கத்தும் சத்தம் கேட்டது.
“தரித்திரம். பீடை. புருஷன் துரத்திட்டான்னா, ஆத்துல குளத்துல விழுந்து சாக வேண்டியது தானே? அண்ணன் நொண்ணன்னு இங்க வந்து உக்காந்துகிட்டு என் கழுத்தை அறுக்குற. அடுத்த வாரம் நான் கேட்ட பணம் வரலை. அப்பறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன். உன்னையும் உன் பொண்ணுங்களையும் தெருவில தள்ளி விட்ருவேன். உங்கண்ணன் உனக்கு பரிஞ்சுகிட்டுப் பேசினா, அந்தாளையும் சேர்த்து விரட்டிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். இதென்ன சத்திரமா சாவடியா? ஊர்ல இருக்குறதுங்க எல்லாம் உக்காந்து திங்கறதுக்கு?” அத்தோடு யாரோ இன்னொருவரை அடிக்கும் சத்தமும் கேட்டது.
சில நொடிகளுக்குப்பின் அந்தப் பெண்களைப் போன்ற சாயலும் சோனியான உடல்வாகும் கொண்ட ஒரு அம்மாள் வீங்கிய கன்னத்தில் கண்ணீர் வழிய வெளியே வந்தாள். பயந்து போயிருந்த அந்தச் சிறுமிகளை இரு கைகளிலும் பற்றிக் கொண்டு, பக்கத்தில் சிலைபோல் நின்ற என்னைப் பார்த்து ஒரு அசட்டுப் புன்னகை செய்து விட்டு, சிவன் கோவிலை நோக்கி நடந்தாள்.
உள்ளே நடந்ததை நான் தெளிவாக ஊகித்துக் கொண்டேன். உள்ளே ஓடிப்போய் பிடாரி போலக் கத்திக்கொண்டு இந்த அப்பாவி அம்மாவை அடித்த அந்தப் பெண்ணை ஓங்கி மண்டையில் குட்ட வேண்டும்போல் ஆத்திரம் வந்தது.
** ** **
அந்த வாரம் ஞாயிறன்று எப்போதும் போல அந்தச் சிறுமிகள் இருவரும் எதிர்வீட்டு வாசலில் வந்து நின்றார்கள். கால்வாய் தாண்டி, ரயில்வே டிராக் பக்கத்தில், சற்று உயரமாயிருந்த இடத்தில் ஆடு தொடா செடிகளின் ஊடே மறைந்து நின்று கொண்டு அவர்களின் அம்மா அவர்கள் பணத்தோடு வருவதற்கு காத்திருப்பதையும் கவனித்தேன். அந்தாள் வேண்டா வெறுப்பாக வெளியே வந்தான். சிறுமிகளில் மூத்தவள் மெல்லிய குரலில் கெஞ்சியதையும், அந்த சிடுமூஞ்சான் எரிந்து விழுந்து துரத்தியதையும் பார்த்தேன். இறுதியில் குழந்தைகள் இருவரும் தங்கள் தாயிடம் போனார்கள். அந்த அம்மாளின் முகம், தன் அண்ணியிடமிருந்து வரப்போகும் வசைகளை எண்ணி வெளுத்திருந்தது. குட்டிப்பெண்கள் முகங்களில் அன்று நமத்துப் போன பாப்கார்ன் கிடைக்காத ஏமாற்றம் தெளிவாகத் தெரிந்தது. அவர்களுக்கு பாப்கார்ன் சூட்டோடு சுவைத்த அனுபவம் இருக்குமா இல்லையா? என்ற கேள்வி எனக்குள் வந்தது. ‘இருக்காது’ என்று எண்ணியபோது அவர்கள் மேல் மிகுந்த பரிதாபம் தோன்றியது. அடுத்தமுறை சுடச்சுட பாப்கார்ன் வாங்கிக்கொண்டு சிவன்கோவில் தெருவுக்குப் போக முடிவெடுத்தேன். சில நிமிடங்கள் அவர்கள் மூவரும் தண்டவாளத்துக்கு அருகிலேயே நின்றிருந்தார்கள். பின்பு அந்த அம்மாள் சிறுமிகளை கைப்பிடித்து அழைத்துக் கொண்டு சோகமாக நடந்து போனாள்.
இந்த அப்பாவிகளில் துயரத்துக்குக் காரணமான எதிர்வீட்டு ஆளின் மேல் எனக்குக் கோபம் எகிறியது.
போன வருடம் லட்சதீப திருவிழாவின் போது பாப்கார்ன் ஆபரேட்டர் ஒருவன் மிஷினுக்குள் சோளமுத்துக்களை அளந்து போடும் சிறு கரண்டியை சோளக்குவியலுக்குள் கைமறதியாக வைத்து ஆன் செய்துவிட, சிலநிமிடங்கள் கழித்து அந்த பாப்கார்ன் மிஷின் வெடித்து சிதறியது நினைவுக்கு வந்தது. நல்லவேளையாக அந்த மெஷின் உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தது, கடை ஆளும் கீழே நின்றிருந்த எங்களுக்குப் பொரித்த பாப்கார்ன் பொட்டலங்களைத் தர கீழிறங்கி வந்திருந்தார். அதனால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
சமையலறையில் இருந்து ஒரு சின்னஞ்சிறு கரண்டியை என் அரை டிராயரில் மறைத்து எடுத்துக்கொண்டு, எதிர் வீட்டுக்குள் பூனை நடையில் புகுந்தேன். குளியலறை சத்தத்திலிருந்து அந்த ஆள் குளித்துக் கொண்டிருந்தது புரிந்தது. சத்தமின்றி, மிஷினுக்குள் பொறிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சோளக்குவியலுக்குள் கரண்டியை மறைத்து வைத்துவிட்டு, பக்கவாட்டு சந்திலிருந்த ஜன்னலருகே ஒளிந்து காத்திருந்தேன்.











