சமீபத்தியவை
பிள்ளைக்கனியமுதே… – 4 இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும் எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ
பிள்ளைக்கனியமுதே… – 4 இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும் எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 2

பாவ்

இன்பா By இன்பா
3 hours ago
A A
0
Paav

அங் மோ கியோவின் அந்தக் குடியிருப்பு வளாகத்தில் மழை ஓயாமல் பெய்துகொண்டிருந்த இரவு. கீழ்த்தளப் பொதுயிடத்தில் நீலமும் வெள்ளையுமான பந்தல் போடப்பட்டிருந்தது. பந்தலின் நடுவே வெள்ளைச் சாமந்திப் பூக்களால் சூழப்பட்ட சவப்பெட்டி. அதன்முன் கறுப்பு ரிப்பன் கட்டிய புகைப்படத்தில் டான் ஆ கோங் என்ற முதியவர் சிரித்துக்கொண்டிருந்தார். ஏழுநாள் துக்கத்தின் கடைசி இரவு அது.

பெட்டியின் கால்மாட்டில் ஒரு சிறு எண்ணெய் விளக்கு எரிந்தது. அதன் அருகே ஒரு கிண்ணம் நிறையச் சோறு, அந்தச் சோற்றின் மீது வேகவைத்த முட்டை, இரண்டு குச்சிகள் நேராக நிமிர்த்தி நடப்பட்டிருந்தன. பந்தலின் ஒரு பக்கம் தாவோ குருமார்கள் அரக்கு வண்ண அங்கிகளுடன் அமர்ந்து மணியடித்து மந்திரம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு குடும்பம் வட்டமாக அமர்ந்து, தங்க நிறக் காகிதங்களைப் படகுபோல மடித்துக் கூடையில் போட்டுக்கொண்டிருந்தது. இன்னொரு மூலையில் நான்கு பேர் மஹ்ஜோங் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

சீனச் சாவு வீட்டுக்கு நான் வருவது அதுவே முதல் முறை. எனக்கு அருகே வெள்ளை நிறப் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து, தேநீர்க் குவளையை இரு கைகளாலும் பற்றியபடி கந்தசாமி ஐயா சொன்னார்.

“இந்த ஊரில் சாவுக்கெனத் தனி இடம் கிடையாது தம்பி, லிஃப்டுக்குப் பக்கத்தில், பிள்ளைகள் சைக்கிள் விடுகிற அதே தரையில்தான் வைக்க வேண்டும். வாழ்க்கைக்கும் சாவுக்கும் இங்கே ஒரே படிக்கட்டுதான். ஃபூனரல் பார்லர்ன்னு போயிட்டா நிறையச் செலவாகும்.

“ஏழு நாட்களா ஐயா?” என்றேன். “நம் வீட்டில் சாவு ஒரே நாளில் முடிந்துவிடுமே. இவர்கள் ஏன் இத்தனை நாள் வைத்திருக்கிறார்கள்?”

“சீனர்களுக்குச் சாவு ஒற்றைப்படை எண்ணில்தான் நடக்கும். மூன்று, ஐந்து, ஏழு. கல்யாணத்துக்கு இரட்டைப்படை எண்கள், மங்கலம் எப்போதும் இரட்டிப்பாக வரும் என்பது நம்பிக்கை. சாவு தனித்துவிடப்படுகிறது என்பதால் ஒற்றைப்படை எண். எத்தனை நாள் வேக் என்பதைக் குரு நாள் பார்த்துச் சொல்வார். குடும்பத்தின் வசதியும் கருத்தில் கொண்டு இத்தனை நாள் என்பதைத் தீர்மானிப்பார்கள்.”

அவர் தேநீரை ஊதினார். “நாம் ஒரே நாளில் நெருப்புக்குக் கொடுத்துவிடுகிறோம். இவர்கள் ஒரு வாரம் வைத்துக்கொள்கிறார்கள். விடைகொடுக்க நமக்கு அவசரம், அவர்களுக்கு நிதானம். ஆனால் இருவரும் செய்யாத ஒன்று உண்டு. இறந்தவனைத் தனியாக விடுவதில்லை.”

கந்தசாமி ஹிந்து அறக்கட்டளையின் தொண்டூழியர். முப்பது ஆண்டுகளாக ஆளில்லாத சாவு வீடுகளுக்குப் போய் நிற்பவர். ஆனால் இந்த ஏழு இரவுகளும் அவர் இந்தச் சீனக் கிழவரின் பந்தலுக்கு வந்து அமர்ந்திருந்திருக்கிறார். இறந்தவர் அவருக்குத் தெரிந்தவர் அல்ல. ஏன் என்று கேட்டேன்.

“வேலுவிடம் கற்றது,” என்றார். அன்றிரவு அவர் சொன்னது வேலு என்பவரின் கதை.

வேலுவுக்கு எழுபத்தெட்டு வயது. மனைவி போனபின் பன்னிரண்டாம் தளத்து ஒற்றையறைக் குடியிருப்பில் தனியாக இருந்தார். மகன் முருகன் பெர்த் நகரில் பொறியாளன். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தொலைபேசியில் அழைப்பான். “சாப்பிட்டீங்களா?” என்பான். “ஆச்சு” என்பார் வேலு. பேச்சு அங்கேயே முடிந்துவிடும். இருவருக்கும் பேசிக்கொள்ள வேறு சொற்கள் தெரியவில்லை.

எதிர்வீட்டில் கோ ஆண்ட்டி இருந்தாள். எழுபத்தாறு வயது ஹொக்கியன் சீனக்கிழவி. அவளுக்குத் தமிழ் தெரியாது. வேலுவுக்குச் சீனம் தெரியாது. அந்த நடைவெளியில் இரண்டு வாசல்கள். அவளுடைய வாசலில் சிவப்புத் தாளில் தங்க எழுத்துகளில் வாழ்த்து அட்டை ஒட்டியிருக்கும். அவருடைய வாசலில் அரிசிமாக் கோலம். இரண்டும் ஒரே பொருளைத் தான் சொல்லின, இந்த வீட்டுக்குள் நல்லது மட்டும் வரட்டும் என்பதுதான்.

ஒவ்வொரு காலையும் அவள் ஒரு பிளாஸ்டிக் பையில் இரண்டு பாவ் வைத்து அவர் கதவுக்கருகே தொங்கவிடுவாள். அவை எப்போதும் மொச்சைப்பயறு அல்லது தாமரை விழுது வைத்த பாவ்கள், இறைச்சி வைத்தது ஒன்றுகூட இருந்ததில்லை. அவளுக்குத் தனியாக டெரியாக்கிச் சிக்கன் வாங்கிக்கொள்வாள். தீபாவளிக்கு வேலு ஒரு தட்டு முறுக்கை அவள் கதவுக்கு முன் நீட்டிக்கொண்டு நிற்பார். சீனப் புத்தாண்டுக்கு அவள் இரண்டு மாண்டரின் ஆரஞ்சுப் பழங்களை நீட்டுவாள். எப்போதும் இரண்டுதான். இரட்டை எண் மங்கலம் என்பது அவர்கள் நம்பிக்கை.

அவர்களுக்குள் இருந்த ஒரே வாக்கியம் இதுதான். அவள் கேட்பாள்,“சாப்பிட்டாச்சா?” ஹொக்கியன் மொழியில் அது “ஜியாக் பா புவே?” என்று ஒலிக்கும். வயிறு நிறைந்ததா என்று பொருள். சீனர்களுக்கு அதுவே வணக்கம் என்பதை வேலு பின்னால்தான் அறிந்துகொண்டார்.

“சாப்பிட்டாயா என்று கேட்பதைத் தவிர மனிதன் வேறு எந்த அன்பைச் சொல்லிவிட முடியும்?” என்றார் கந்தசாமி.

ஒரு மாதத்துக்கு முன் கோ ஆண்ட்டியின் கணவர் இறந்துவிட்டார். அதே பந்தல், அதே இடம். அவருக்கு ஐந்து நாள் துக்கம்.

முதல் நாளே வேலு கந்தசாமியிடம் வந்தார். “ஐயா, சீன வீட்டுச் சாவுக்கு வெறுங்கையோடு போகலாமா?” கந்தசாமி கேட்டார்,

“வெள்ளை அம்பாவ் உறையில் முடிந்த பணத்தை வச்சிடு”, இதற்கு ‘பாய் ஜின்’ என்று பெயர். துக்கவீட்டுச் செலவுக்கு நம் பங்கு, அந்தக் காசு ஒற்றைப்படையாக இருக்கவேண்டும். சிவப்பு நிறத்தை உடுத்திக்கொண்டு வரக்கூடாது.” வேலு இருபத்தொரு டாலர் வைத்தார். அவருடைய மாத செலவில் அது சிறிய தொகை அல்ல. வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்து போனார். வெள்ளை இரு இனத்துக்கும் துக்க நிறம்.

கவரைக் கொடுத்ததும் குடும்பத்தார் அவர் கையில் சிவப்பு நூல் கட்டிய ஓர் இனிப்பையும், சிவப்பு உறையில் ஒரு நாணயத்தையும் வைத்துக் கொடுத்தார்கள். வந்தவர்களுக்குத் துக்கவீடு தரும் பதில் மரியாதை அது. இனிப்பு துக்கத்தின் கசப்பைக் குறைக்கும். நூல் தீய நிழலை விலக்கும். நாணயத்தை அன்றே செலவழித்துவிடவேண்டும். திரும்பும்போது குடும்பத்து இளையர் ஒருவன் அவரை நிறுத்தினான்.

“அங்கிள், நேராக வீட்டுக்குப் போகாதீர்கள். சாவு உங்கள் பின்னாலேயே லிஃப்டில் ஏறிவிடும்.” வேலுவின் வீடு அதே கட்டிடத்தில்தான். அவர் முழுக் கட்டிடத்தையும் ஒரு முறை சுற்றி நடந்துவிட்டுத்தான் லிஃப்ட் பொத்தானை அழுத்தினார்.

இரவுகளில் தாவோ குருமார்கள் மணியடித்து, முரசு தட்டி மந்திரம் சொன்னார்கள். வேலுவுக்கு ஒரு சொல்லும் புரியவில்லை. ஆனால் அந்த ஏற்றய்றக்கம் அவருக்குத் தேவாரத்தை நினைவூட்டியது. அங்கே சைவ பீகூனும் தேநீரும் பரிமாறப்பட்டன. மேசையில் வேர்க்கடலையும், பொறித்த பச்சைப்பட்டாணியும் பாட்டிலில் வைக்கப்பட்டிருந்தன. தேநீர் பாக்கெட்டுகள் இருந்தன. அருகில் சுடுதண்ணீர் ப்ளாஸ்க்கும் இருந்தன. துக்க வீட்டில் எதையும் உண்ணக்கூடாது என்ற நம் பழக்கத்தால் அவர் ஒரு வாய்கூட உண்ணவில்லை. அங்கே எல்லோரும் சீட்டாடியும் மஹ்ஜோங் ஆடியும் இரவு முழுக்க விழித்திருந்தார்கள். இறந்தவரைத் தனியாக விடக்கூடாது என்பதற்காக விளையாடுவது அவர்கள் வழக்கம். ஓர் இந்தியக் கிழவன் ஒருவார்த்தையும் பேசாமல் தங்களுடன் கண்விழிக்கிறானே என்று அவர்கள் வியந்தார்கள்.

கோ ஆண்ட்டி ஒவ்வொரு இரவும் தன் மருமகள்களுடன் அமர்ந்து தங்க நிறக் காகிதங்களை மடித்துக்கொண்டிருந்தாள். அவை யுவான்பாவோ. பழங்காலத் தங்கக்கட்டியின் வடிவம், படகு போலத் தோன்றும். இறந்தவன் போகும் உலகத்தில் அவனுக்குச் செல்வம் குறையக்கூடாது என்பதற்காக அவற்றை எரிப்பார்கள். வேலு அதை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஐந்தாம் இரவு, கடைசி இரவு, குருமார்கள் ‘நரக வாசலை உடைக்கும்’ சடங்கைச் செய்தார்கள். காகிதத்தாலும் மூங்கிலாலும் செய்த ஒரு வாசல் நடுவில் வைக்கப்பட்டது. முதன்மை குரு மணியை ஒலித்தபடி அதைச் சுற்றி வந்து ஓர் ஓட்டை உடைத்தார். இறந்தவனின் ஆன்மா நரகத்தின் காவலைக் கடந்து விடுபடவேண்டும் என்பது நம்பிக்கை. மூத்தமகன் புகைப்படத்தையும், இளையவன் விளக்கையும் ஏந்தி குருவின் பின்னால் வட்டமாக நடந்தார்கள். பிறகு ஒரு காகிதப் பாலம். அதன் மேல் அவன் ஆன்மா அக்கரை செல்வதாகச் சொல்லி அதையும் எரித்தார்கள்.

எல்லாம் முடிந்தபின் கோ ஆண்ட்டி வேலுவிடம் வந்து தன் உடைந்த ஆங்கிலத்தில் கேட்டாள்: “ நீ ஏன் வருகிறாய்?”

“பக்கத்து வீட்டுச் சாவு நம் வீட்டுச் சாவு” என்றார் வேலு. அவள் அதைப் புரிந்துகொண்டாளா என்று தெரியாது. தலையசைத்தாள்.

மறுநாள் காலை ஊர்வலம். பெட்டியைத் தூக்குமுன் குடும்பத்தார் அனைவரும் மண்டியிட்டார்கள். பெட்டி கால்பக்கம் முன்னால் செல்ல வெளியே கொண்டுவரப்பட்டது, இறந்தவன் வீட்டை நோக்கித் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக. மூத்த மகன் புகைப்படத்தை ஏந்தினான். இளையவன் வெள்ளைத் துணி கட்டிய மூங்கில் கொடியை ஏந்தினான். அது ஆன்மாவுக்கு வழிகாட்டும் கொடி. மகன்களுக்கு வெள்ளை உடையும் சணல் துண்டும், பேரப்பிள்ளைகளுக்கு நீலத் துணித்துண்டுகள். குடும்பத்தில் யார் யார் என்பதை நிறங்களே சொல்லிவிடும்.

பெட்டி ஊர்தியில் ஏற்றப்பட்டது. ஊர்தி மெதுவாக நகர்ந்தது. முன்னால் ஓர் இசைக்குழு சுவோனா என்ற ஊதுகுழலை ஊதியது. நம் நாதசுவரத்தின் சகோதரன் அது, ஆனால் அதனை வாசிக்கும்போது மங்கல ஓசையின்றி அதில் ஏக்கம் மட்டும் வழிநெடுக இசைத்துக்கொண்டே சென்றது. மஞ்சள், வெள்ளைக் காகிதப் பணம் காற்றில் தூவப்பட்டது. இறந்தவனுக்கு வழிச்செலவுக்குத் தேவைப்படும். வழியில் காத்திருக்கும் பசித்த ஆவிகளுக்கும் ஒரு பங்கு அதில் செல்லும்.

குடும்பத்தார் ஊர்தியின் பின்னால் நடந்தார்கள். வெள்ளை உடையில் வேலுவும் கடைசியில் அவர்களுடன் கலந்தார். எவரும் அவரை அழைக்கவில்லை. எவரும் தடுக்கவுமில்லை. தெருவின் இருபக்கமும் சீன, மலாய், தமிழ் அண்டை வீட்டார் நின்று பார்த்தார்கள்.

“இறந்தவனோடு எவ்வளவு தூரம் நடக்கவேண்டும்?” என்று வேலு முன்பே கந்தசாமியிடம் கேட்டிருந்தார்.

“தெருக்கோடிவரை,” என்றார் கந்தசாமி. “அதுவரைதான் குடும்பமும் அயலாரும் கூடவே போவார்கள். அதன் பிறகு அவன் பயணம் அவனுடையது.”

தெருக்கோடியில், சாலை பெரியசாலையுடன் சேரும் முனையில் ஊர்தி நின்றது. மகன்கள் மண்டியிட்டு வந்தவர்களுக்கு நன்றி சொல்லி வணங்கினார்கள். பிறகு குடும்பத்தினர் பின்னால் வந்த நீல நிறப் பேருந்துகளில் ஏறி அமர வண்டிகள் மாண்டாய்க்குச் சென்றன. வேலு தெருக்கோடியில் நின்றுகொண்டிருந்தார். ஊர்தி திரும்பி நெடுஞ்சாலையில் மறைந்தது. அவர் தனியாகத் திரும்பி தன் பிளாக் வரை நடந்தார்.

“போகிறவன் பின்னால் நடப்பது எளிது,” என்று அவர் பின்னாளில் கந்தசாமியிடம் சொன்னார். “திரும்பி நடப்பதுதான் கடினம்.”

அதற்கு இரண்டு வாரம் கழித்து, ஒரு காலைப்பொழுதில், பாவ் பை அவர் கதவில் அப்படியே தொங்கிக்கொண்டிருந்தது. மூன்றாம் நாளும் அதே பை.

வேலுவின் வீட்டிலிருந்து எப்போதும் ஒரு குரல் வரும். ஒலி 96.8 வானொலியில் பழைய தமிழ்ப்பாடல்கள். அவை இரவு பகலாக ஒலித்துக்கொண்டிருக்கும். அதனுடன் அவருடைய இருமலும் கேட்கும். சுவர் மெல்லியது. கோ ஆண்ட்டி அந்த இருமலைக் கேட்டுக்கேட்டுத் தன் இரவுகளைக் கழித்தவள். பாடல் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால் இருமல் நின்றுவிட்டிருந்தது.

அவள் அந்த அமைதியைக் கண்டு அஞ்சினாள். என்ன செய்வதெனத் தெரியாமல், போலீசை அழைத்தாள்.

கதவு திறந்தபோது வேலு நாற்காலியில் அமர்ந்த நிலையில் இருந்தார், பால்கனியை நோக்கி. கைகள் மடியில். வானொலி தானாகப் பாடிக்கொண்டிருந்தது. அவர் முகத்தில் எதுவும் தெரியவில்லை, போலீஸ்காரர் சொன்னார். மூன்று நாட்கள் ஆகியிருந்தன. மூன்று நாட்கள், ஒருவர் தனியாக இருந்திருக்கிறார்.

கந்தசாமி சற்று நேரம் பேசவில்லை. மழை பந்தலின் மேல் ஒலித்தது.

“நான் வருவதற்குள் கோ ஆண்ட்டி எல்லாம் செய்திருந்தாள்,” என்றார். “போலீசும் மருத்துவரும் வந்து சான்றிதழ் கொடுத்து விட்டுச் சென்ற பிறகு, அவள் தனக்குத் தெரிந்ததைச் செய்தாள். தன் வீட்டுச் சிறு பலிபீடத்திலிருந்து ஒரு எண்ணெய் விளக்கை எடுத்து வந்து அவர் கால்மாட்டில் ஏற்றியிருந்தாள். சீனர்கள் அப்படித்தான். பயணம் தொடங்கும் இடத்தில் வெளிச்சம் இருக்கவேண்டும். பக்கத்தில் ஒரு கிண்ணம் சோறு. முட்டை வைக்கவில்லை. வேலு முட்டை உண்பதில்லை என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அத்தனை ஆண்டுகள் அவள் தந்த பாவ்களில் ஒன்றிலும் இறைச்சி இருந்ததில்லை என்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது. அவள் இத்தனை காலமும் அவரைக் கவனித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறாள்.”

“தலைமாட்டில் இன்னொரு விளக்கு. வேலுவின் சாமி மாடத்துக் குத்துவிளக்கு. அவர் தினமும் மாலை நேரத்தில் அதை ஏற்றுவதை அவள் தன் வாசல் வழியே ஆண்டுக்கணக்கில் பார்த்திருந்தாள். சாவுக்குத் தலைமாட்டில் விளக்கு என்பது நம் வழக்கம். அது அவளுக்கு யாரும் சொல்லித் தரவில்லை. அவள் அதை அவருடைய மாடத்திலிருந்து எடுத்துவந்து, தீப்பெட்டியில் ஏற்றி, அவர் தலைமாட்டில் வைத்திருந்தாள்.”

“நான் உள்ளே நுழைந்தேன். இரண்டு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. தலைமாட்டில் தமிழனுடையது. கால்மாட்டில் சீனனுடையது. யார் யாருக்கு எதைக் கற்றுக்கொடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. கோ ஆண்ட்டியின் முகத்தைப் பார்த்தேன். அவள் என் முகத்தைப் பார்த்தாள். இருவரும் ஒரு சொல்லும் பேசவில்லை.”

முருகன் மறுநாள் மாலை வந்து சேர்ந்தான். நாற்பத்தொரு வயது. விமான நிலையத்திலிருந்து நேராக வந்த அழுக்கு உடையுடன் நின்றான். அழவில்லை. கதறவில்லை. வெறுமனே நின்றான்.

அதற்குள் கோ ஆண்ட்டியின் மகன்கள் பந்தலுக்கான நாற்காலிகளையும் மேசைகளையும் கீழே அடுக்கிவிட்டிருந்தார்கள். ஒருவன் வேலுவின் வீட்டுக் கண்ணாடிகளை வெள்ளைத் துணியால் மூடியிருந்தான். சவத்தின் அருகில் கண்ணாடி இருக்கக்கூடாது என்பது சீன நம்பிக்கை, ஆன்மா தன் நிழலைக் கண்டு திகைத்துவிடக்கூடாது. நாங்கள் ஏன் என்று கேட்கவில்லை. அவர்கள் ஏன் என்று சொல்லவும் இல்லை.

“தம்பி, அவன் முகத்தில் நான் ஒன்றைக் கண்டேன்,” என்றார் கந்தசாமி. “அதை எவரிடமும் சொல்லக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் உன்னிடம் சொல்கிறேன். அதில் நிம்மதி இருந்தது. ஒரு நொடி. செய்யவேண்டிய கடமை ஒன்று முடிந்தது என்பது போல. அடுத்த நொடி அவன் அந்த நிம்மதியைக் கண்டு திகைத்தான். தன்னையே வெறுத்தான். இறந்தவர்களின் பிள்ளைகளுக்கு இது நிகழும். அவர்கள் அதை எவரிடமும் சொல்வதில்லை.”

சடங்குகள் தொடங்கின. இறந்தவரை நீராட்டி வெள்ளை வேட்டி அணிவித்து, நெற்றியில் திருநீறு பூசினோம். மகன் அரிசியும் தண்ணீரும் அவர் வாயில் இட்டான். அவன் கை நடுங்கியது. அரிசி உதடுகளில் ஒட்டிக்கொண்டது. கோ ஆண்ட்டி தூரத்தில் நின்றபடி ஏதோ முணுமுணுத்தாள். பின்னர்தான் தெரிந்தது. சீனர்களும் இறந்தவர் வாயில் அரிசியோ ஒரு நாணயமோ முத்தோ வைக்கிறார்கள். வயிறு காலியாகப் போகக்கூடாது என்பதற்காகச் செய்கிறார்கள்.

ஒப்பாரி வைக்க நம் தெருவில் பெண்கள் இல்லை. இது சிங்கப்பூர். ஆனால் வேலுவின் தங்கை மகள் பினாங்கிலிருந்து வந்திருந்தாள். அவள் தொடங்கினாள். வழக்கொழிந்த அந்த ஒப்பாரி கோபுர உயரத்துக்குச் சென்று கீழ்த்தளத்தில் எதிரொலித்தது. கோ ஆண்ட்டியின் மகன்கள் திகைத்தனர். சீனர்கள் இவ்வளவு பகிரங்கமாக அழுவதில்லை. அவர்களுடைய துக்கம் மெல்லிய அடக்கமான ஒரு மணியோசை போன்றது. நம்முடையது சுவர்களை உடைக்கும் கூக்குரலாக இருக்கும். ஆனால் கோ ஆண்ட்டி அங்கேயே நின்றாள். ஒப்பாரி முடியும்வரை. அவள் கண்களிலிருந்து நீர் வழிந்தது. அவளுக்கு ஒரு சொல்லும் புரியவில்லை. ஒப்பாரிக்குச் சொற்கள் தேவையுமில்லை.

இரவில் அந்த விசித்திரம் நிகழ்ந்தது. கோ ஆண்ட்டி ஒரு சிறிய பிளாஸ்டிக் பையுடன் வந்தாள். அதற்குள் தங்கம்போல மஞ்சள் தாள்கள். சீனர்கள் இறந்தவர்களுக்காக அவற்றை மடித்து எரிக்கிறார்கள். அந்த உலகத்தில் இறந்தவன் பணமின்றித் தவிக்கக்கூடாது. அவள் என்னிடம் ஆங்கிலத்தில் மெல்லக் கேட்டாள்: “அங்கிள், நான் இதை எரிக்கலாமா? இது உங்கள் மதத்தில் இல்லை என்று தெரியும்.”

எனக்கு ஒரு கணம் தயக்கம் ஏற்பட்டது. நாங்கள் காகிதப் பணம் எரிப்பதில்லை. நம் சடங்கு நமக்குரியது. அதன் எல்லைகள் எனக்குத் தெரியும். ஆனால் அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் ஒரு மாதம் முன்தான் தன் கணவனை அனுப்பிவைத்தவள். வேலு அவளுடைய துக்கத்தில் ஐந்து இரவுகள் அமர்ந்திருந்தவர்.

“எரியுங்கள்,” என்றேன்.

அவள் அமர்ந்து, தாள்களை ஒவ்வொன்றாக யுவான்பாவோ வடிவில் மடிக்கத் தொடங்கினாள். பிறகு பையிலிருந்து இன்னொன்றை எடுத்தாள். காகிதத்தில் மடித்துச் செய்த ஒரு சிறிய வானொலி. “கடையில் கிடைக்கவில்லை,” என்றாள். “நானே செய்தேன். அவர் இரவு பகலாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.”

முருகன் அவளருகே வந்து நின்றான். சற்றுநேரம் பார்த்துவிட்டு அவன் சொன்னான்: “ஆண்ட்டி, எனக்குக் காட்டுங்கள்.”

அவள் மடித்துக் காட்டினாள். அவன் தவறாக மடித்தான். மீண்டும் காட்டினாள். இருவரும் நடு இரவில் வேலுவின் உடலுக்கு அருகே, இரண்டு விளக்குகளின் நடுவே அமர்ந்து, மொழி இல்லாமல், அந்த வெளிநாட்டுக் காகிதத் தங்கக்கட்டிகளை மடித்துக்கொண்டிருந்தார்கள். அவன் தந்தைக்காகப் பேசாத சொற்கள் அந்த மடிப்புகளுக்குள் போயின.

“அந்தத் தங்கக் கட்டிகள் எங்கே போகும் என்று எனக்குத் தெரியவில்லை,” என்றார் கந்தசாமி. “ஆனால் அவை போய்ச் சேர வேண்டும் என்று அன்று நான் மனமார விரும்பினேன்.”

மறுநாள் காலை பெட்டி கீழே இறக்கப்பட்டது. ஊர்தி பந்தலுக்கு முன் காத்திருந்தது. முருகன் தந்தையின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்தபடி முன்னால் நின்றான். பின்னால் உறவினர்கள். பெட்டி ஊர்தியில் ஏற்றப்பட்டதும் அது மெதுவாக நகரத் தொடங்கியது. வழியெங்கும் பொரியும் பூவும் சில்லறையும் தூவப்பட்டன. நம் வழக்கத்தில் அதுதான் இறந்தவனின் வழிச்செலவுக்குக் கொடுப்பது.

ஊர்தியின் பின்னால் நடந்தவர்களில் ஒரு குழு நமக்குரியது அல்ல என்பதைக் கவனித்தேன். கோ ஆண்ட்டி. அவளுடைய இரண்டு மகன்கள். மருமகள்கள். எல்லோரும் வெள்ளை உடையில். எவரும் அழைக்கவில்லை. எவரும் தடுக்கவுமில்லை. ஒரு மாதம் முன் வேலு நடந்த அதே தெருவில், அதே வேகத்தில், அதே கடைசி வரிசையில் அவர்கள் நடந்தார்கள்.

தெருக்கோடியில் ஊர்தி நின்றது. அங்கிருந்து அது பெரிய சாலைக்குத் திரும்பவேண்டும். குடும்பத்தார் அங்கே நின்றார்கள். வேலுவின் அண்டை வீட்டார் தெருவின் இருபக்கமும் வரிசையாகத் தலைகுனிந்து நின்றிருந்தார்கள். கோ ஆண்ட்டி ஊர்தியை நோக்கிக் கூப்பிய கைகளுடன் மூன்று முறை தலைவணங்கினாள். அவள் நின்ற இடம் ஒரு மாதத்துக்கு முன் வேலு நின்ற அதே இடம். அவளுடைய மகன் அவள் முழங்கையைத் தாங்கிப் பிடித்தான்.

“இறந்தவனுடன் தெருக்கோடிவரைதான் நாம் போகலாம்,” என்றார் கந்தசாமி. “அதற்குமேல் நம்மால் போக முடியாது. ஆனால் அவனுக்காக அந்த இடம்வரையாவது நடந்தவர்கள் யார் என்பதை அவன் அறிவான் என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கை கணக்கில் அடங்காது.”

ஊர்தி இடப்புறம் திரும்பி மறைந்தது. தெருக்கோடியில் நின்றவர்கள் ஒவ்வொருவராகத் திரும்பி நடந்தார்கள். திரும்பி நடப்பது கடினம் என்று வேலு சொன்னதை நான் அப்போது நினைத்துக்கொண்டு வேகமாகச் சென்று பேருந்தில் ஏறிக்கொண்டேன்.

மாண்டாய் மயானத்தில் மகன் கொள்ளிக்குடத்தைத் தோளில் வைத்து, உடலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்தான். குடத்தை உடைத்தான். நம் வழக்கத்தில் பிள்ளை திரும்பிப் பார்க்கக்கூடாது. அவன் திரும்பவில்லை. பின்னால் அவன் முதுகு நடுங்கிக்கொண்டிருந்தது. கோ ஆண்ட்டி அவளுடைய மகன்களுடன் கடைசி வரிசையில் நின்றாள். எப்போது தலைகுனிவது என்று தெரியாமல் மற்றவர்கள் குனியும்போது குனிந்தாள்.

வீடு திரும்பியதும் நாங்கள் நம் வழக்கப்படி வாசலில் கால் கழுவிவிட்டுத்தான் உள்ளே நுழைந்தோம். கோ ஆண்ட்டி ஒரு பெரிய பாத்திரத்தில் பம்பளிமாஸ் இலை போட்ட நீரைக் கொண்டுவந்து வாசலில் வைத்தாள். சாவு வீட்டிலிருந்து திரும்பும் சீனர்கள் அந்த நீரில் முகம் கழுவுவார்கள். சிலர் எரியும் காகிதத்தின் மேல் தாண்டுவார்கள். முருகன் அந்த நீரில் முகம் கழுவினான். பிறகு நம் முறைப்படி குளித்தான். இரண்டு வழிகள், ஒரே நம்பிக்கை: சாவு வீட்டிலிருந்து சாவை உடன் கொண்டுபோகக்கூடாது.

அன்று இரவு கோ ஆண்ட்டி முருகனிடம் சிவப்பு நூலில் கட்டிய ஒரு மிட்டாயை நீட்டினாள். ஒரு மாதத்துக்கு முன் வேலு வாங்கிக்கொண்டு போன அதே மிட்டாய். வாயில் இனிப்பு இருந்தால் துக்கம் கசக்காது. சிவப்பு நூல் தீய நிழலைத் துரத்தும்.

முருகன் தலையை அசைத்தான். “ஆண்ட்டி, எங்களுக்கு இனிப்புக் கூடாது. எங்கள் வீட்டில் ஓராண்டுக்கு இனிப்பு இல்லை. துக்க வீடு.”

கோ ஆண்ட்டிக்கு அது புரிந்ததா என்று தெரியவில்லை. ஆனால் அவள் கையைத் திரும்ப இழுக்கவில்லை. அவன் உள்ளங்கையில் அந்த மிட்டாயை வைத்து, விரல்களை மடித்துமூடினாள். “உங்கள் அப்பா எனக்கு முறுக்கு தந்தார்,” என்றாள். “நான் ஒரு மிட்டாய்கூடத் தரக்கூடாதா?”

அவன் தலைகுனிந்து நின்றான்.

அன்றிரவு நான் கீழே பந்தலைப் பிரிக்கும் வேலையில் இருந்தபோது முருகன் என்னருகே வந்து அமர்ந்தான். அவன் தன் மூடிய கையைத் திறந்தான். சிவப்பு நூலில் கட்டிய அந்த மிட்டாய். அதைப் பிரித்து வாயில் போட்டான். நம் சடங்கை மீறிவிட்டோமே என்ற குற்றவுணர்வு அவன் முகத்தில் இல்லை. அவன் அழுதான். ஞாயிறுதோறும் தந்தையிடம் சொல்லாமல் விட்ட சொற்களெல்லாம் ஒரு மிட்டாயின் இனிப்பில் கரைந்து கண்ணீராக வந்தன.

“அப்பா மூன்று நாள் தனியாக இருந்தார்,” என்றான். “மூன்று நாள்.”

“இல்லை,” என்றேன். “ரேடியோ பாடிக்கொண்டிருந்தது. கோ ஆண்ட்டி சுவருக்கு அந்தப்பக்கம் விழித்திருந்தாள். அவர் தனியாக இல்லை, ஆனால் யாருக்கும் தெரியாத அளவு அமைதியாகத் தனியாக இருந்தார்.” அதை உண்மையாகச் சொல்கிறேனா, ஆறுதலுக்காகச் சொல்கிறேனா என்று எனக்கே தெரியவில்லை.

ஏழாம் நாள் மாலை கோ ஆண்ட்டி ஏதோ சொல்லத் தயங்கி வேலுவின் வாசலில் நின்றாள். தன் மகனை மொழிபெயர்ப்பாளனாக அழைத்து வந்திருந்தாள்.

“எங்கள் வழக்கத்தில் இறந்தவர் ஏழாம் நாள் இரவு தன் வீட்டுக்கு ஒருமுறை கடைசியாகத் திரும்பி வருவார். அதை ‘தௌ ச்சீ’ என்போம். சில குடும்பங்கள் அன்று இரவு வீட்டில் தங்கமாட்டார்கள். வந்தவர் உறவினரைப் பார்த்துக் கலங்கிவிடக்கூடாது. மேசையில் உணவு வைத்துவிட்டு வெளியே போய்விடுவார்கள். என் அப்பாவுக்கு நாங்கள் அப்படித்தான் செய்தோம்.”

முருகன் சற்றுநேரம் பேசவில்லை. “என் அப்பா என்னைப் பார்த்துக் கலங்கமாட்டார்,” என்றான். “ஆண்டுக்கணக்காக நான் அவரை நேரில் பார்க்கவில்லை. இன்றிரவு அவர் வந்தால் நான் இங்கே இருப்பேன்.”

கோ ஆண்ட்டி எதுவும் சொல்லவில்லை. முருகன் சமையலறைக்குச் சென்று தயிர்சாதம் பிசைந்தான். பிறந்தது முதல் அவன் தந்தைக்குச் சமைத்தது அதுவே முதல் முறை. கிண்ணத்தை வேலுவின் புகைப்படத்தின் முன் வைத்தான். கோ ஆண்ட்டி தன் பழக்கத்தில் இரண்டு குச்சிகளை எடுத்துச் சோற்றில் நேராக நிமிர்த்தி நட்டாள். சற்று ரம் அதைப் பார்த்தாள். பிறகு குச்சிகளை உருவி எடுத்துக்கொண்டாள். “அவர் கையால்தான் சாப்பிடுவார்,” என்றாள் தன் மொழியில். மகன் மொழிபெயர்த்தான். “என் கதவு வழியாகப் பார்த்திருக்கிறேன் என்கிறார்.”

அன்றிரவு வானொலி ஒலி 96.8 இல் பழைய பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தது. முருகன் தந்தையின் நாற்காலியில் பால்கனியை நோக்கி அமர்ந்தான். கைகள் மடியில். வாசலில், திறந்த கதவுக்கு வெளியே, கோ ஆண்ட்டி தான் கொண்டுவந்த சிறு பிளாஸ்டிக் ஸ்டூலில் இரவு முழுக்க அமர்ந்திருந்தாள். குடும்பம் வீட்டில் தங்கக்கூடாது என்றால் அவள் வாசலில் தங்கலாம். அவள் தனக்குத்தானே கண்டுபிடித்த விதி அது.

காலையில் முருகன் கந்தசாமியிடம் சொன்னான்: “ஐயா, அவர் வந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் இரவு முழுக்க யாரும் தனியாக இல்லை.”

பதினாறாம் நாள் காரியம் அன்று முருகன் மொட்டையடித்துக்கொண்டான். வெளியே வந்தபோது கோ ஆண்ட்டி அவனை வியப்புடன் பார்த்தாள். அவளுடைய மரபில் துக்க நாட்களில் முடி வெட்டுவதில்லை. நம் மரபில் துக்கத்தில் தலையை வழிப்பது கடமை. அவள் தன் கையால் தன் தலையைத் தடவிக்காட்டி, சிரித்தாள். அவன் தன் மொட்டைத் தலையைத் தடவிப் புன்னகைத்தான்.

பிண்டம் வைத்தோம். சோற்று உருண்டையைக் கீழ்த்தளத்தின் மொட்டை மாடியில் வைத்துவிட்டுக் காத்திருந்தோம். காகம் வந்து தொட்டால்தான் முன்னோர் ஏற்றுக்கொண்டார்கள் என்று பொருள்.

காகம் வரவில்லை.

ஒரு மணி நேரம் ஆயிற்று. காகங்கள் சிங்கப்பூரில் ஏராளம். அவை மேலே வட்டமிட்டன. ஆனால் இறங்கவில்லை.

முருகன் முகம் வெளுத்தது. “அப்பா கோபமாக இருக்கிறாரா? நான் கடைசி வரை அவரிடம் வராததால்…” என்றான்.

அப்போது கோ ஆண்ட்டி மெல்ல நடந்து வந்தாள். கையில் ஒரு பாவ். அவள் தினமும் வேலு வாசலில் தொங்கவிட்டு வந்த அதே பாவ். சோற்று உருண்டைக்குப் பக்கத்தில் அதை வைத்தாள். எதுவும் சொல்லவில்லை. பின்னால் நகர்ந்து நின்றாள்.

சற்று நேரத்தில் ஒரு காகம் இறங்கியது. முதலில் பாவைக் கொத்தியது. பிறகு சோற்று உருண்டையையும்.

முருகன் மண்டியிட்டான்.

“தம்பி,” என்றார் கந்தசாமி, “அந்தக் காகம் பாவுக்காக வந்ததா, சோற்றுக்காக வந்ததா, வேலுவுக்காக வந்ததா என்று கேட்காதே. கேட்கத் தொடங்கினால் எல்லாச் சடங்குகளையும் கேட்கவேண்டியிருக்கும்.”

மழை நின்றிருந்தது. பந்தலின் கூரையிலிருந்து சொட்டுகள் ஒவ்வொன்றாக விழுந்துகொண்டிருந்தன. தொலைவில், பன்னிரண்டாம் தளத்தில், ஒரு சன்னலில் சிறு விளக்கு எரிந்தது. கோ ஆண்ட்டி இன்னும் தினமும் வேலுவின் பூட்டிய கதவுக்கு முன் ஒரு விளக்கு வைக்கிறாள், என்றார்.

“கடவுள் வேறுவேறாக இருக்கலாம்,” என்றார் கந்தசாமி. “சாவை நாம் எரிக்கிறோம், அவர்கள் அடக்குகிறார்கள் அல்லது எரிக்கிறார்கள். நம் பறை வேறு, அவர்கள் மணி வேறு. ஆனால் இறந்தவனுடன் ஓர் இரவு விழித்திருப்பது, அவன் வாயில் அரிசியோ நாணயமோ வைப்பது, ஒரு விளக்கு ஏற்றுவது, தெருக்கோடிவரை பின்னால் நடப்பது இவற்றில் மனிதன் வேறுபடுவதில்லை. எல்லாச் சடங்குகளும் ஒரே ஒன்றைச் சொல்கின்றன. நீ தனியாகப் போகவில்லை.”

பந்தலுக்குள் குருமார்களின் மணி மறுபடி ஒலித்தது. நள்ளிரவு தாண்டியிருந்தது. காலையில் இங்கிருந்து ஊர்வலம் புறப்படும்.

“நாளையும் தெருக்கோடிவரை நடப்போம்,” என்றார் கந்தசாமி. “நீயும் வா. வெள்ளைச் சட்டை போடு. கடைசி வரிசையில் நில்.” என்றபடி, எழுந்து நின்றார்.

ஊர்வலம் செல்லும் பாதையில் கிடந்த நாற்காலிகளை ஒதுக்கி அடுக்கத் தொடங்கினார்.

***

***

***

சீனச் சடங்குகள் – ஒரு சிறு விளக்கம்

கதையில் வரும் வழக்கங்கள் சிங்கப்பூரில் பொதுவாகக் காணப்படும் தாவோ–பௌத்தச் சீன இறுதிச் சடங்குகள். ஹொக்கியன், தியோச்சியு, கன்டோனீஸ், ஹக்கா எனக் குழுவுக்குக் குழுவும் குடும்பத்துக்குக் குடும்பமும் குருவுக்குக் குருவும் அவை மாறுபடும்.

ஒற்றைப்படை நாட்கள்: துக்கம் மூன்று, ஐந்து அல்லது ஏழு நாள். இரட்டை எண் மங்கல நிகழ்வுகளுக்கு உரியது. எத்தனை நாளை வேக் என்பதை மதகுருவோ பஞ்சாங்கமோ தீர்மானிக்கலாம்.

கால்மாட்டு விளக்கும் சோறும்: இறந்தவரின் கால்மாட்டில் அணையாத எண்ணெய் விளக்கு எரியும். அருகே சோறு, முட்டை, நிமிர்த்தி நட்ட குச்சிகள் வைப்பார்கள். வழியில் வெளிச்சமும் பசிக்கு உணவும் என்பதாக அர்த்தம்.

பாய் ஜின் : துக்கம் கேட்க வருபவர் வெள்ளை உறையில் தரும் அன்பளிப்புப் பணத்தின் தொகை ஒற்றைப்படையாக இருக்கும்.

பதில் மரியாதை : வந்தவர்களுக்குச் சிவப்பு நூல் கட்டிய இனிப்பும், சிவப்பு உறையில் நாணயமும் தருவார்கள். இனிப்புக் கசப்பைக் குறைக்கும், சிவப்புநூல் தீமையை விலக்கும், நாணயத்தை அன்றே செலவழிக்க வேண்டும். துக்க வீட்டிலிருந்து நேராக வீடு திரும்பாமல் வேறு இடம் சென்று வருவது பலரின் பழக்கம்.

மஹ்ஜோங், சீட்டு : இரவு முழுக்க விழித்திருந்து இறந்தவருக்குத் துணையாக இருப்பதற்காகவும் துக்கக் கேட்க வந்தவர்களை உடன் வைத்திருப்பதற்காகவும் விடியவிடிய விளையாடுவர்.

யுவான்பாவோ : பழங்காலத் தங்கக்கட்டி வடிவில் மடிக்கும் தங்க நிறக் காகிதம். இறந்தவரின் உலகத்துக்குச் செல்வத்தை அனுப்ப எரிக்கப்படும். சிலர் கிதத்தாள் பணத்துடன் காகிதத்தால் செய்யப்பட்ட வீடு, கார், கைப்பேசி போன்ற பிடித்தமானவற்றை எரிப்பார்கள்.

கண்ணாடி மூடல் : துக்க வீட்டில் கண்ணாடிகளைத் துணியால் மூடுவார்கள்.

நரக வாசல் உடைத்தல் , பாலம் கடத்தல்: கடைசி இரவில் மதகுரு நடத்தும் சடங்கு. இறந்தவரின் ஆன்மா துன்பங்களிலிருந்து விடுபட்டு அக்கரை செல்வதாக நம்பிக்கை.

ஊர்வலம்: பெட்டியை ஊர்தியில் ஏற்றி, மகன்கள் புகைப்படத்தையும் வழிகாட்டும் கொடியையும் ஏந்த, குடும்பம் பின்னால் நடப்பது. வழிநெடுக வழிச்செலவாகக் காகிதப் பணம் தூவுவார்கள். சிங்கப்பூரில் தெருக்கோடிவரை நடந்து, பிறகு பேருந்தில் மயானத்துக்குச் செல்வது வழக்கம்.

உடைகளின் நிறம் : வெள்ளை, கறுப்பு, நீலம். மகன்கள், பேரப்பிள்ளைகள் முறைக்கேற்ப சணல், நீலத் துணித்துண்டு போன்ற அடையாளங்களைக் குத்திக்கொள்வார்கள். சிவப்பு நிற ஆடைகள் தவிர்க்கப்படும்.

தௌ ச்சீ : இறந்த ஏழாம் நாள். அன்று இரவு ஆன்மா தன் வீட்டுக்கு ஒருமுறை வந்து செல்லும் என்ற நம்பிக்கை. சில குடும்பங்கள் அன்று இரவு வீட்டில் தங்குவதில்லை.

பம்பளிமாஸ் இலை நீர் : துக்க வீட்டிலிருந்து திரும்பியவர்கள் முகம், கை கழுவும் நீர். தீமையைக் கழுவுவதாக நம்பிக்கை.

Previous Post

ஈமத்தீ

Next Post

எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

இன்பா

இன்பா

கவிஞர், எழுத்தாளர் மற்றும் 'திணைகள்' இணைய இதழின் ஆசிரியர். சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.

Next Post
interview-issue-2

எவிடென்ஸ் கதிர் - சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

கருத்தைப் பதிவிடுங்கள் Cancel reply

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. அவசியமான புலங்கள் * எனக் குறிக்கப்பட்டுள்ளன.

Archives

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 8, 2026
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 8, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

Koor Seevuthal

கூர் சீவுதல்

Pillai Kaniyamudhe 4

பிள்ளைக்கனியமுதே… – 4

November 1, 2026
Ingirunthu Thodangugiren

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

November 1, 2026
interview-issue-2

எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

November 1, 2026
Paav

பாவ்

November 1, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • ஆங்கில படைப்புகள் (3)
  • இதழ்கள் (48)
  • படைப்புகள் (44)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

Pillai Kaniyamudhe 4

பிள்ளைக்கனியமுதே… – 4

November 1, 2026
Ingirunthu Thodangugiren

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

November 1, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Product successfully added to the cart!
No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு