சமீபத்தியவை
பிள்ளைக்கனியமுதே… – 4 இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும் எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ
பிள்ளைக்கனியமுதே… – 4 இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும் எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 2

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

பவா. செல்லத்துரை By பவா. செல்லத்துரை
2 hours ago
A A
0
Ingirunthu Thodangugiren

நேற்று இரவு மலேசியாவில் என் பொருட்டு ஒரு இலக்கியக் கூடுகை நிகழ்ந்தது. 50-க்கும் சற்று கூடுதலான வாசகர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் வாசகர்கள் மட்டுமல்ல; அவர்களில் பலர் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள்.

என் உரைக்குப் பின் நிகழ்ந்த கலந்துரையாடலில், மலேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பெருமாள் கேட்டார்.

“லட்சுமி சரவணகுமார் என்ற எழுத்தாளர் தன்னோடு ஒரு காபி குடிக்கப் பத்தாயிரம் ரூபாய் கேட்கிறாரே, இதைப் பற்றிச் சக எழுத்தாளராக உங்கள் கருத்து என்ன?”

“நான் மனப்பூர்வமாக அதை ஆராதிக்கிறேன்.”

20 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியை ஒரு சமூகம் கண்டுகொள்ளாதது, புறந்தள்ளுவது, அங்கீகரிக்க மறுப்பது என்று இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். எங்கிருந்து அக்கசப்பு தொடங்குகிறது?

“என்னோடு உட்கார்ந்து ஒரு காபி குடிக்கப் பத்தாயிரம் ரூபாய் கொடு!”

இதுவரை லட்சுமி சரவணகுமார் பல தேநீர்க் கடைகளில் உட்கார்ந்து சக நண்பர்களோடும் வாசகர்களோடும் சகப் படைப்பாளிகளோடும் பெஞ்சில் அமர்ந்து தேநீர் குடித்தவர்தான். இனியும் அப்படித்தான் இருக்கும். ஆனால், இது பெரும் கசப்பிலிருந்து எழுந்த, தன்னைப் புறக்கணிக்கப்படுவதாக உணரும் ஒரு கலைமனத்தின் வெளிப்பாடுதான். நாம் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

என் பதிலைக் கேட்ட கூட்டம் பெரும் மௌனம் காத்தது.

தமிழ்ச் சமூகம் சில படைப்பாளிகளைக் கண்டுகொள்ளாமல் கைவிட்டிருக்கலாம். மகாகவி பாரதி, புதுமைப்பித்தன், பிரபஞ்சன் எனத் தெரிந்த, தெரியாத பெயர்கள் இதில் அடங்கும்.

 ஆனால், ஒவ்வொரு காலத்திலேயும் தமிழ்ச் சமூகம் படைப்பாளிகளிடமிருந்து தான் பெற்றுக்கொண்டமைக்காக எதையாவது அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது. முற்றிலுமாகக் கைவிட்டுவிடவில்லை. நாம் அதில் பிரபஞ்சனிடமிருந்து தொடங்கலாம்.

“எனக்கு இரண்டு வேளைச் சாப்பாட்டை உத்தரவாதப்படுத்து, சமூகமே!” என்ற அவரின் உள்ளூர ஒலித்த குரல் எங்களுக்குக் கேட்டது. பத்து லட்ச ரூபாய் தரத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தமிழ்ச் சமூகம் பன்னிரண்டு லட்சம் ரூபாயை அவருக்காக அளித்தது. நிகழ்வுக்கு வந்திருந்த அப்போதைய புதுவை முதல்வர் நாராயணசாமி, தன் பங்கிற்கு ஒரு வருடம் கழித்து பத்து லட்ச ரூபாய் தந்தார்.

இதெல்லாம் அவருடைய எழுத்துக்கும், அவர் பேசியதற்கும், அவருடைய இலக்கியச் செயல்பாடுகளுக்கும் முன் ஒன்றுமே இல்லை. ஒரு மூன்றாம் தர ரியல் எஸ்டேட் காரன் ஒரு பாட்டிலில் இதைவிட அதிகமாகச் சம்பாதிக்கிறான். ஒரு தந்திரமான வியாபாரி இதைவிடப் பத்து மடங்கு தன் ஒரே ஒரு வியாபாரத்தின் மூலம் பொருளீட்டுகிறான். ஆனால், இவர்களைப் பற்றியெல்லாம் இந்தச் சகப் படைப்பாளிகளுக்குக் கவலை இல்லை. இவர்களை விமர்சித்து இதுவரை ஒரு வரியைக்கூட இவர்கள் எழுதியதில்லை. லட்சுமி சரவணகுமார் எப்படி அப்படிக் கேட்கலாம் என்று மட்டும் பொங்குகிறார்கள். நாளை இது அவர்களுக்குக் கிடைக்கும்போது, அதை நியாயப்படுத்துவதற்கான சொற்களையும் செயல்களையும் அகராதியில் தேடிக்கொண்டிருப்பார்கள்.

என் சொந்த வாழ்வில், சமூகத்திற்கு ஒரு சிறு துளியைச் சிந்தியதற்குப் பெரும் அன்பைப் பெற்றவன் நான். ஒரு பெருங்கதையாடலின் நிறைவில், முற்றிலும் உணர்வுவயப்பட்ட ஒரு வாசகர் என்னை அரங்குக்கு வெளியே அழைத்துச் சென்று, தன் பையிலிருந்து ஐந்நூறு ரூபாய் நோட்டுக் கட்டை எடுத்து என்னிடம் கொடுத்துக் கையில் திணித்தார்.

“இது எதுக்கு, சார்?”

“இது உங்க குரலுக்கு, சார். உங்கள் உழைப்பிற்கு, உங்கள் படைப்பாக்கத்திற்கு!”

“அதெல்லாம் எனக்கு நிறைவாய் இருக்கிறது. இது வேண்டாமே!”

மறுத்தல் எப்போதும் பேரன்பின் முன்பு மண்டியிட்டுவிடும். அன்றும் அதுதான் நடந்தது.

அடுத்த நாள் நான் என் தொழிற்சங்கத் தோழரிடம் இதைப் பற்றிச் சொன்னேன். அவர் சொன்னார்:

“என்னவானாலும் அப்பணத்தை நீங்கள் வாங்கியிருக்கக் கூடாது.”

நான் சொன்னேன்:

“வாங்கினால் எனக்கு எந்தக் குற்றவுணர்வும் இல்லை. அதை நான் என் சொந்தச் செலவுக்குக்கூட எடுத்துக்கொள்ளப் போவதில்லை.”

(இது, தன்னை நியாயப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்திக்கொள்ளும் தந்திரச் சொல்.)

ஆனால், அவரின் பேரன்பின் வெளிப்பாட்டை என்னால் நிராகரிக்க முடியவில்லை. பெருங்கதையாடல்கள் முடிந்து, சில அன்பின் முத்தங்களை ஏற்றுக்கொள்வதைப் போலவே இப்படத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவ்வளவுதான், தோழர்!

அவர் தொலைபேசியின் அந்தப் பக்கத்திலிருந்து மௌனம் காத்தார்.

பணத்தை நான் என்ன செய்தேன் என்பதைச் சொல்வது, கூடுதல் யோக்கியனாக என்னைக் காட்டிக்கொள்ள நான் எடுக்கும் முயற்சியாகிவிடும். அது எனக்குத் தரப்பட்ட பணம். அதை வைத்து நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இரவுகள் கண்விழித்து உரையாடல்களை முடித்த அடுத்த நாள் காலையில், நானும் கருணாவும் ஏதாவது ஒரு ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து காலை உணவைச் சாப்பிடுவோம். பெரும்பாலும் எங்கள் பில்லை முந்தைய இரவு நிகழ்ச்சியைப் பார்த்த யாரோ ஒருவரோ அல்லது அந்த ரெஸ்டாரண்ட் உரிமையாளரோ ஏற்றுக்கொள்வார்கள். நாங்கள் அதை புன்னகையுடன் ஏற்றுக்கொள்வோம். எங்கள் உழைப்பிற்குச் சமூகம் தரும் அங்கீகாரம் என்று உள்ளூரப் பெருமைப்பட்டுக்கொள்வோம்.

என் நினைவில் ததும்பும் சிலவற்றை மட்டும்தான் இப்போது பகிர்ந்துகொள்ள முடியும். மீதி நினைவுகளின் கீழே படிந்திருக்கிறது. அவை மேலெழும்பாமலேயே போகலாம். அல்லது வாழ்வின் ஏதோ ஒரு நேரத்தில், ஒரு பெரும் குழுமத்தில் அவையும் மேலெழுந்து வரக்கூடும். வராமல் போகட்டும்.

அன்று ஜெயகாந்தனின் இரவுச் சபையில் இருந்தேன். வழக்கத்திற்கு மாறாக அவர் கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி தொங்கியது. வியப்புடன் கேட்டேன்:

“புதுசா செயின் எல்லாம் போட்டிருக்கீங்க?”

அவர் அதே புன்னகையோடு எதிரில் இருப்பவரைக் கைகாட்டினார்.

“போன வாரம் மலேசியா ஏர்போர்ட்டில் வைத்து பீர் முகமதுதான் போட்டிருந்த இந்தச் செயினைக் கழற்றி என் கழுத்தில் போட்டார், பவா!”

இப்போது பீர் முகமதுவின் முகத்தில் எங்கள் இருவரின் புன்னகையும் இடம் மாறியிருந்தது.

அவ்வளவுதான். பெறுதலும் வழங்குதலும்.

 ஒரு வருடம் இருக்கலாம். இல்லை, இந்த வருட ஜனவரி. நானும் என் ஓட்டுநர் ரமேஷும் ஒரு சாலையோரக் கடையில் உட்கார்ந்து பூரிக்கிழங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். லுங்கி கட்டி, அழுக்குச் சட்டை போட்டு நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை யாரோ ஒருவர் கவனித்துக்கொண்டிருந்தார். அவரை நானும் கவனித்துக்கொண்டிருந்தேன். அவர் அவசர அவசரமாகக் கல்லாவுக்குப் போய், நாங்கள் சாப்பிட்டதற்கான தொகையைத் தந்தார். அதிகபட்சமாக 60 ரூபாய் இருக்கலாம்.

நான் அவரிடம் பெயர் கேட்டேன்.

“தவசி.”

ஏன் என்று கண்களால் கேட்டேன்.

“உங்கள் வாசகன். அதுகூடத் தப்பு, சார். உங்கள் கதைகளைக் கேட்பவன். அதன் மூலம் நீண்ட தூரப் பயணங்களுக்குப் பாட்டில்களுக்குப் பதில் புத்தகங்களைக் கொண்டுபோகும் ஒரு பயணி. குஜராத் போகிறேன். தூத்துக்குடியிலிருந்து லோடு ஏற்றி வந்திருக்கிறேன். என்றாவது ஒருநாள் உங்களைப் பார்த்துவிட முடியுமா என்று ஏங்கியிருக்கிறேன். இன்று இது நிகழ்ந்தது.”

தவசியின் கைகள் என் கைகளில் புதைந்திருந்தன.

அவரிடம் போய், “ஏன் நாங்கள் சாப்பிட்டதற்கு நீ பணம் தர வேண்டும்?” என்று என்னால் கேட்டுவிட முடியுமா? அப்படிக் கேட்டால், என்னிடமிருந்து யாரும் எதுவும் கேட்டுவிடாதீர்கள் என்று நீங்கள் உங்களைத் தற்காத்துக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

இலங்கையின் இரண்டாவது பயணத்தின்போது, என் வாசகர்கள் ஒரு நட்சத்திர விடுதியில் வைத்து எங்களுக்குப் பெரும் விருந்து ஒன்றை அளித்தார்கள். என்னோடு நான்கைந்து பேர் வந்திருந்தார்கள். அந்த மங்கலான இருட்டில், நாங்கள் கேட்காமலேயே ஒரு பரிசாக ஒரு பாட்டில் விஸ்கியை என் முன் ஐஸ் கட்டிகளோடு வைத்தார்.

நான் அவரைக் கண்களால் ஏறெடுத்துப் பார்த்தேன். அந்தச் சர்வர் நீண்ட தூரத்தில் இருந்த ஒரு குடும்பத்தைக் கைகாட்டினார். அங்கிருந்து ஒருவர் தன் கட்டைவிரலை மட்டும் உயர்த்திக் காட்டி, “குடி! நான்தான் ஆர்டர் செய்தேன்” என்று தன் கட்டைவிரலால் பேசினார்.

நான் குடித்தேன்.

அவர்கள் எழுந்து வந்து என்னைத் தழுவிக்கொண்டார்கள்.

“சொந்த நாடு சிலோன். இப்போது இருப்பது நார்வே. உங்களைப் பார்த்ததும் குடும்பத்தோடு பரவசமானோம். எங்கள் அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.”

ஒரு விஸ்கிதான் முடிந்தது.

நான் அப்போது இலங்கையின் அந்த நட்சத்திர விடுதியிலிருந்து, இப்போது பெயர் தெரியாத அந்த நார்வே வாசகரையும், பூரிக்கிழங்கு வாங்கித் தந்த தவசியையும் சேர்த்து, இரண்டு பேரையும் அழைத்துக்கொண்டேன்.

இதெல்லாம் நிகழும். தானே நிகழும். ஆனால், இது சாத்தியமா? சொல்லுங்கள்.

பத்து வருடம் இருக்கும். என் வாசகர் ஒருவர் தான் அடையாறில் வாங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் கிரகப்பிரவேசத்திற்கு எங்களைத் தன் குடும்பத்தோடு அழைத்தார்.

இந்த மாதிரியான நிகழ்வுகளை மெல்லத் தவிர்த்துவிடும் என்னால், அவருடைய அழைப்பை மறுதலிக்க முடியாமல் கிளம்பிப் போனேன். விழா முடிந்து, அந்த மாடியில் மூன்றாவது தளத்திற்கு எங்களை அழைத்துப்போனார். இன்னொரு அப்பார்ட்மெண்ட். அதன் கதவைத் திறந்தார். ஒரு படுக்கையறை கொண்ட அழகான வீடு.

“இது உங்களுக்காக, பவா! என் குடும்பத்தோடு பேசி இதையும் வாங்கியிருக்கிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இப்போதே ரிஜிஸ்ட்ரேஷன் வைத்துக்கொள்ளலாம்.”

நான் கதிகலங்கிப்போனேன். பிடிவாதமாக மறுத்தேன். அவர் சொன்ன எந்த வார்த்தையும் எனக்குள் போய்ப் பொருந்தவில்லை.

கொஞ்ச நாட்கள் அதில்தான் கணையாழி அலுவலகம் இயங்கியது. இன்னும் கொஞ்ச நாட்கள் சென்னையை நோக்கி வரும் படைப்பாளிகளுக்கு அது தங்குமிடமானது. இப்போது அந்த அப்பார்ட்மெண்ட் யாரிடம் இருக்கிறது, என்னவாக இருக்கிறது என்று எனக்கு எதுவும் தெரியாது.

எல்லா வழங்குதல்களையும் ஏற்றுக்கொள்ள முடியுமா?

ஒரு பாட்டில் பூரிக்கிழங்கையும், ஒரு பெக் விஸ்கியையும் பரிசாகப் பெறும் அவனால், அடையாறில் ஒரு அப்பார்ட்மெண்ட்டைப் புறக்கணிக்க முடியும். பெசன்ட் நகரில் ஒரு வீடு வாங்கி, லட்சுமி சரவணகுமாரிடம், “எப்போது ரிஜிஸ்ட்ரேஷன் வைத்துக்கொள்ளலாம், எழுத்தாளரே?” என்று கேட்கும் ஒரு வாசகன் நிச்சயமாக வரக்கூடும்.

பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிரபஞ்சனுக்கும் தமிழில் கிடைக்காத இந்த வெகுமதிகள் லட்சுமி சரவணகுமாருக்குக் கிடைக்கும். கிடைக்க வேண்டும். அதுதான் நாம் நினைத்துக் கனவுகள் கண்ட காலம். அது தமிழ்ச் சமூகத்தில் இப்போது நிகழத் தொடங்கியுள்ளது.

அன்புள்ள லட்சுமி சரவணகுமார், ‘கானகன்’ எழுதிய அந்தக் கைகளில் பரிமாறப்படும் காபியை அருந்த நான் தயாராக இருக்கிறேன். பத்தாயிரம் ரூபாய் போதுமா, நண்பா?

Previous Post

எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

Next Post

பிள்ளைக்கனியமுதே… – 4

பவா. செல்லத்துரை

பவா. செல்லத்துரை

பவா செல்லதுரை நவீனத் தமிழ் இலக்கிய உலகில் கதைசொல்லியாகவும், எழுத்தாளராகவும், பதிப்பாளராகவும், சமூகச் செயல்பாட்டாளராகவும் பரவலாக அறியப்படுபவர். திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர், தமிழ் இலக்கியத்தையும் உலக இலக்கியத்தையும் மக்கள் மயமாக்குவதில் மிக முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளார். எழுத்து மற்றும் கதைசொல்லல் மட்டுமன்றி, பேரன்பு, ஜெய் பீம், விடுதலை உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களிலும் முக்கியக் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Next Post
Pillai Kaniyamudhe 4

பிள்ளைக்கனியமுதே… - 4

கருத்தைப் பதிவிடுங்கள் Cancel reply

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. அவசியமான புலங்கள் * எனக் குறிக்கப்பட்டுள்ளன.

Archives

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 8, 2026
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 8, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

Koor Seevuthal

கூர் சீவுதல்

Pillai Kaniyamudhe 4

பிள்ளைக்கனியமுதே… – 4

November 1, 2026
Ingirunthu Thodangugiren

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

November 1, 2026
interview-issue-2

எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

November 1, 2026
Paav

பாவ்

November 1, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • ஆங்கில படைப்புகள் (3)
  • இதழ்கள் (48)
  • படைப்புகள் (44)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

Pillai Kaniyamudhe 4

பிள்ளைக்கனியமுதே… – 4

November 1, 2026
Ingirunthu Thodangugiren

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

November 1, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Product successfully added to the cart!
No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு