1. எப்படி எழுத ஆரம்பித்தீர்கள்?
எதற்காக/ஏன் எழுதுகிறீர்கள்?
பள்ளி காலத்தில் வீட்டிற்கு வரும் அத்தனை இதழ்களையும் வாசிக்கும் பழக்கம் உண்டு. மிகப்பெரிய அளவில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத கிராமத்தில் நூலகங்கள் சென்று புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பதும் வழக்கமாக இருந்தது.
அம்மாவும், அப்பாவும் அதிகமாக வாசிப்பவர்கள். அவர்களிடம் இருந்து இந்தப் பழக்கம் எனக்கும் வரத்தொடங்கியது. பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது புனைப்பெயரில் எழுதி ஒரு கதை வாரமலரில் வெளிவந்திருந்தது. அதுதான் அச்சில் முதல் எழுத்து. பின்னர் வீட்டிற்குப் பயந்து எழுதுவதை நிறுத்தி விட்டேன். கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் சூழலில் மீண்டும் வாசிப்பு தொற்றிக்கொண்டது. ஜெயகாந்தன் எழுதி வெளிவந்த சிலநேரங்களில் சில மனிதர்கள் வாசித்த பிறகு மீண்டும் எழுதும் உந்துதல் வந்து சிறிது காலம் எழுதினேன் . கல்லூரி முடிந்து அப்படியே அதனைவிட்டு நகர்ந்து வெகுதூரம் வாழ்க்கை இழுத்து வந்துவிட்டது. மீண்டும் முதல் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் போஸ்ட் பிரக்னன்ஸி தூக்கமின்மை துரத்த நிறைய கவிதைகள் எழுதத் தொடங்கினேன். பின்னர் கதைகள், கட்டுரைகள் என்று தொடர்ச்சியாக எழுதி எழுதி பயிற்சி பெறுகிறேன்.
நான் எழுதும் போது மிகவும் நிம்மதியாக, சந்தோஷமாக, வாழ்வு முழுவதும் கடந்து வந்த இத்தனை நாட்களின் பாரத்தை இறக்கி வைக்கும் உணர்வு தோன்றுவதால்,
காமத்துக்கு ஈடான இல்லை இல்லை அதற்கு மேலான கிளர்ச்சியை உடலும் மனமும் ஒருசேர உணரும் இன்பத்தால் எழுதுகிறேன்.
2. இதுவரை எழுதியதில், மனநிறைவு கொடுத்தப் படைப்பு?
என்னுடைய நிறைய கவிதைகள் உண்டு. கதைகளும் அப்படித்தான்.
என்னுடைய யாறு சிறுகதைத் தொகுப்பின் பெரும்பாலான
அல்லது அனைத்துக்கதைகளும் மிகுந்த நிறைவோடு கொண்டு வரப்பட்டவை.
3. யாரையாவது முன்னோடியாக வரித்துக்கொண்டிருக்கிறீர்களா?
ஜேகேவின் எழுத்துக்கள் மிகவும் பிடித்துத்தான் எழுதத் தோன்றியது என்றாலும் பரவலாக எல்லோருடைய எழுத்துக்களையும் வாசிக்கும் வழக்கம் உண்டு. குறிப்பிட்ட ஒரு முன்னோடி என்று யாரும் இல்லை.
4. இப்போது படித்துக் கொண்டிருப்பது? படைப்பில் இருப்பது?
பெருமாள் முருகன் எழுதிய கூளமாதாரி, கண்மணி குணசேகரன் எழுதிய அஞ்சலை.
ஒரு நாவல் முடிந்திருக்கிறது.
5. இலக்கு?
இந்தச் சமூகத்தின் புரிந்து கொள்ள முடியாத பக்கங்கள், மனிதர்களின் வாழ்க்கையில் க்ரே ஷேட் உணர்வுகள், ஆழ்மன அடுக்குகளின் அபத்தங்கள், எதை எழுதக்கூடாது என்று வைத்திருக்கிறார்களோ அதை உடைத்துப் பார்ப்பது என எழுத்தில் இந்தப் பகுதிகளோடு தொடர்ந்து இயங்கவேண்டும்.











