சமீபத்தியவை
பிள்ளைக்கனியமுதே… – 4 இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும் எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ
பிள்ளைக்கனியமுதே… – 4 இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும் எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 2

புறங்கழுத்து அடியும் பூக்கும் பாலையும்

றியாஸ் குரானா By றியாஸ் குரானா
7 hours ago
A A
0
Purangaluthu Adiyum Pookkum Paalaiyum

கடந்த இருபது ஆண்டுகளாக நான் எழுதிவரும் கட்டுரைகளால் சாதிக்க முடியாத ஒன்றை, நண்பர் தர்மு பிரசாத்தின் ஒரேயொரு எதிர்வினைக் கட்டுரை சாதித்துவிட்டது. ஈழத்து இலக்கியச் சூழல் ஒரு மாபெரும் அறிவார்ந்த சரணாகதியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்க நான் எனது “போருக்குப் பின்” (களம் புதிது இணைய இதழில்) கட்டுரையில் மூவாயிரம் சொற்களில் பிரயத்தனப்பட்டேன். ஆனால் தர்மு பிரசாத்தோ, தனது “பாலையில் பூப்பவை” கட்டுரையில், ‘ஆமாம், எங்கள் புறங்கழுத்தில் அடித்து உட்கார வைக்க இங்கே ஒரு எஜமானன் இல்லையே, நாங்கள் என்ன செய்வோம்?’ என்று ஒரே வரியில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து, எனது ஆய்வின் சுமையைப் பாதியாகக் குறைத்துவிட்டார்.

ஒரு விமர்சனக் கட்டுரைக்கு எதிராக வாதாட வந்துவிட்டு, எதிராளியின் மைய வாதமே நூறு சதவீதம் உண்மை என்று தன் சொந்தக் கைப்படவே சான்றளிக்கும் இத்தகைய தாராள மனப்பான்மையை நாம் நன்றியோடுதான் அணுக வேண்டியிருக்கிறது. அடிப்படையில், ஈழத்துச் சமூகத்தின் கூட்டு நனவிலியில் உறைந்துபோயிருக்கும் அதிகாரப் படிநிலைகள் மற்றும் காலனிய மனநிலை குறித்த எனது சமூகவியல் திறனாய்வுக்கு அவர் எழுதியுள்ள எதிர்வினையானது, கருத்தியல் போதாமையாலும் தத்துவார்த்த வறுமையாலும் பீடிக்கப்பட்ட ஒருவரின் பதற்றமான தற்காப்பு உளவியலாகவே என் முன் விரிந்து நிற்கிறது.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது. புதிய சிந்தனைகளும் அதிகாரத்தை உடைக்கும் மாற்று அணுகுமுறைகளும் ஒரு சமூகத்திற்குள் நுழையும்போது, மரபான இலக்கியத் தூய்மைவாதிகளும் மேட்டிமைவாத அமைப்புகளும் காட்டும் முதல் எதிர்வினை அறிவின் மீதான பயமாகத்தான் வெளிப்படும். எனது கட்டுரையை “மாய மான் கட்டுரை” என்றும், கலைச்சொற்களைத் தூவி நான் வித்தை காட்டுவதாகவும் தர்மு பிரசாத் குற்றம் சாட்டுகிறார். உலகளாவிய விவாதங்களில் பயன்படுத்தப்படும் அறிதல் கருவிகளை வெறும் ‘பாவனைகள்’ என்று சுருக்கிச் சிறுமைப்படுத்தும் இவரது உத்தி, ஆழமான சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முடியாத கையாலாகாத்தனமேயன்றி வேறில்லை. “அதிகாரம், பெருங்கதையாடல், காலனியம், கூட்டு நனவிலி, விளிம்பு” ஆகிய பதங்களை நான் என் சட்டையில் வைத்திருக்கும் “சிறிய மடக்கு கத்தி” போலவும், அதனைக் கொண்டு முதுகு சொறிவதாகவும் அவர் நையாண்டி செய்கிறார்.

ஆமாம், ஒரு நவீன அறுவை சிகிச்சை அறைக்குள் தற்செயலாக நுழையும் கற்கால மனிதனுக்கு, அங்கே இருக்கும் துல்லியமான அறுவை சிகிச்சைக் கத்திகளைப் பார்த்தால் முதுகு சொறியும் கருவியாகத்தான் தோன்றும். அதற்காக மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை நிறுத்திவிட்டு முதுகு சொறிய முடியாது அல்லவா? சமூகத்தின் அதிகார நுண் கட்டமைப்புகளை அறுத்து ஆராய்வதற்கு ஒரு விமர்சகனுக்குத் தேவையான அறிதல் கருவிகள்தான் இந்தக் கலைச்சொற்கள். உலகச் சிந்தனை மரபை உலுக்கியெடுத்த இந்தச் சொற்கள் கிழக்கு இலங்கையில் எனக்கு மட்டுமே பத்தியமானவையல்ல. உலகெங்கிலும் உள்ள சிந்தனையாளர்களுக்குப் பத்தியமானவை. பரந்த வாசிப்பு இல்லாத தர்மு பிரசாத்தின் கண்களுக்கு இது வெறும் “எடைமிகுந்த கலைச்சொல் கலவைகளாகத்” தெரிவதில் எந்த ஆச்சரியமுமில்லை. புதிய சிந்தனைகளை எதிர்கொள்ளத் திராணியற்ற தூய்மைவாதம், எப்போதுமே தத்துவத்தைப் பார்த்துத் தன்னைத் தானே கேலி செய்துகொள்ளும்.

அதுமட்டுமன்றி, எனது கட்டுரையின் தர்க்க வீச்சை எதிர்கொள்ள முடியாத தர்மு பிரசாத், “இந்த ஆய்வுக் கற்பனையின் ஒரு சிறு வீதத்தையாவது கவிதைக்கோ, புனைவுக்கோ அவரால் மடைமாற்ற முடிந்திருந்தால், ஈழத்தின் அடுத்த தலைமுறை பொருட்படுத்தும் படைப்பாளியாவதற்கான அத்தனை தகுதியுமுள்ள கற்பனைவீச்சு” என்று ஒரு இலவச ஆலோசனையையும் வழங்குகிறார். அதிகாரத்தின் கோர முகத்தைத் தத்துவார்த்தமாக அம்பலப்படுத்தினால், அதை ‘ஆய்வுக் கற்பனை’ என்று கூறிப் புனைவுக்குள் துரத்திவிடப் பார்க்கும் மிகப் பழைய தந்திரம் இது. “நீங்கள் ஏன் அதிகார அரசியலைப் பேசுகிறீர்கள்? போய் அழகாகக் கதை, கவிதை எழுதுங்கள்” என்று அதிகார மையங்கள் காலம் காலமாகச் சொல்லும் அதே தணிக்கை முறைதான் இங்கும் வெளிப்படுகிறது.

பின்நவீனத்துவம் குறித்துப் பேசும் அவர், “யார் பேசுகிறார்கள்? யாருடைய சார்பாகப் பேசுகிறார்கள்? யாரை விளிம்பாக வரையறுக்கிறார்கள்?” என்ற கேள்விகளையே நான் பேசுவதாகக் கூறி, நானே விளிம்பை வரையறுத்து உண்மையையும் பொய்யையும் தீர்மானிப்பதாகச் சாடுகிறார். உண்மையையும் பொய்யையும் வரையறுக்கும் அதிகாரம் எவரிடமும் இல்லை என்பதையும், ஒற்றைப் பெருங்கதையாடல்களை நிராகரித்து விளிம்புநிலைக் குரல்களை முதன்மைப்படுத்துவதையுமே எனது கட்டுரை நிறுவுகிறது. ஆனால் தர்மு பிரசாத், நான் “எதிர்ப்பதாகக் கூறும் அதிகாரத்தின் இன்னொரு வடிவத்தைத் தானே ஏற்றுக்கொள்கிறார்” என்று குற்றம் சாட்டுகிறார். அதிகாரத்தை விமர்சிப்பவன் அதிகாரியாகிவிடுகிறான் என்ற இந்தத் தர்க்கம் முற்றிலும் அபத்தமானது.

தன்னைத் தற்காத்துக்கொள்வதற்காக என்னை “முகநூல் அறிவுஜீவி” என்றும் “சாய்வுநாற்காலிப் புரட்சியாளர்” என்றும் முத்திரை குத்தித் தாக்குதல் செய்கிறார். முற்போக்காக, பெண்ணியராக, இடதுசாரிகளாகக் காட்டிக் கொள்பவர்களுக்கு மற்றவர்களை வசைபாடக் கூடிய அதிகாரம் கிடைத்துவிடுகிறது என்று அவர் புலம்புகிறார். மரபான இலக்கியத் தூய்மைவாதிகள் தங்களின் மேட்டிமைத்தனமான அழகியல் சிதைக்கப்படுவதை எப்போதும் விரும்புவதில்லை என்பதால், விளிம்புநிலை அரசியலைப் பேசுபவர்களைப் பார்த்து “இவர்கள் முத்திரை குத்துகிறார்கள்” என்று புலம்புவதும், வாதத்தை எதிர்கொள்ள முடியாதபோது தனிப்பட்ட இருப்பைத் தாக்குவதும் ஆதிக்கவாதிகளின் நிரந்தரமான இறுதி ஆயுதமாகும்.

இதன் தொடர்ச்சியாக, ஈழத்துச் சமூகத்தின் அடிமை மனநிலை எப்படித் தொண்ணூறுகளின் எதேச்சதிகார அமைப்புகளுக்குள் ஒரு விசுவாசத் தொண்டன் மனநிலையாக உருமாறியது என்பதை நான் விளக்கியிருந்தேன். அதற்கு அவர், “புலிகளிடம் வெளிப்பட்டது இராணுவம் கோரும் ஒழுங்கு… அதற்கும் சமூகத்தின் அடிமை மனநிலைக்குமான வேறுபாடே தெரியவில்லை” என்கிறார். ஒரு சிவில் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட சர்வாதிகாரத்தை, வெறும் ‘இராணுவ ஒழுங்கு’ என்று அவர் மிகவும் சாதாரணமாக நியாயப்படுத்துகிறார். ஒரு படைவீரனுக்குத் தேவைப்படுவது இராணுவ ஒழுங்கு. ஆனால், ஒட்டுமொத்தப் பொதுமக்களின் மாற்றுச் சிந்தனைகளையும் ஜனநாயக உரிமைகளையும் துப்பாக்கி முனையில் மௌனமாக்கி, அவர்களைக் கேள்விகேட்காத தலையாட்டி பொம்மைகளாக மாற்றுவது ‘ஒழுங்கு’ அல்ல, அது நிறுவனமயப்படுத்தப்பட்ட அடிமைத்தனம். உயிர் வாழ்வதற்கான ஆகக் குறைந்தபட்ச நிபந்தனையாக ‘மௌனம்’ என்பது சமூகத்தின் மீது திணிக்கப்பட்டு, அந்த மௌனத்தையே ஒரு தார்மீக அறமாகச் சமூகம் தனக்குத்தானே நியாயப்படுத்திக் கொண்டதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். ஆனால் தர்மு பிரசாத் அதை ‘இராணுவக் கீழ்ப்படிதல்’ என்று பாதுகாக்க முனைகிறார். அதிகார அமைப்புகளுக்குக் கீழே வாழும் ஒரு சமூகம், தனது அடிமைத்தனத்தையே ‘ஒழுங்கு’ என்று நம்பத் தொடங்குவதுதான் ஆகப்பெரிய உளவியல் கோளாறு.

இந்த அதிகாரப் படிநிலையின் வரலாற்று வேர்களை ஆராயும்போது, காலனிய காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு அடிமைச் சேவகம் செய்து சலுகைகள் பெற்றுத் தமக்குக் கீழிருந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களை நசுக்கிய மேட்டுக்குடியினரின் இரட்டை நிலையான விசுவாச அரசியலே, தலைமுறை தலைமுறையாகக் கலாச்சார மேலாதிக்கத்தின் வழியே சமூகத்தின் கூட்டு நனவிலியில் உறைந்துபோனது. “காலனிய அடிமை இயல்பு எப்படி இயக்கங்களின் காலத்தில் ஒட்டுமொத்த சமூகத்தின் இயல்பாக மாறியது?” என்று தர்மு பிரசாத் கேட்பது, அதிகாரம் என்பது ஒரு பண்பாட்டுச் செயல்பாடு என்பதை அறியாத அறியாமையாகும். ஒடுக்குமுறையாளர்களின் முகங்கள் மாறலாமே தவிர, அதிகாரத்திடம் சரணடையும் அந்தச் ‘சேவக உளவியல்’ மாறவே இல்லை என்பதை நான் வரலாற்றுப்பூர்வமாக நிறுவியதை எதிர்கொள்ளும் திராணியற்றுத்தான் அவர் இதனைப் பெருங்கதையாடல் என்று நிராகரிக்கிறார்.

இதே தர்க்கத்தின் நீட்சியாகத்தான், வன்முறை அமைப்பின் அதிகாரிகளுக்குத் தொண்டூழியம் செய்வதை அறிவார்ந்த செயலாகப் பாவிக்கும் மனநிலைக்குக் கருணாகரனை ஒரு இலக்கியக் குறியீடாக நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கு தர்மு பிரசாத், “கருணாகரன்… சனநாயகத்தின் கடைசி எல்லைவரை சகிப்புத் தன்மையுடன் பயணிக்கக் கூடியவர்” என்று பதிலளிக்கிறார். கொலைக்களத்தில் ரத்தம் சிந்தி உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும்போது, ஒரு சர்வாதிகார அமைப்பின் இலக்கியக் குரலாக மௌனமாகத் தொண்டூழியம் செய்வதற்குப் பெயர் ‘சனநாயகச் சகிப்புத்தன்மை’ அல்ல. அது ‘எதேச்சதிகாரச் சமரசம்’ மற்றும் ‘அடிமை உடந்தை’. ‘தீமையின் சாதாரணத்துவம்’ இதுதான்.

மேலும், இதை நியாயப்படுத்த “படுகளத்திலிருந்து தப்பி, உயிருடன் பிழைத்திருத்தல் குற்றமல்ல” என்று தர்மு பிரசாத் வாதாடுவது, குற்றவாளிகளைக் காப்பாற்றச் சாதாரண மக்களின் தியாகங்களைப் பயன்படுத்தும் தந்திரமாகும். நான் சாதாரண மக்கள் உயிர் பிழைத்ததைக் குற்றமென்று கூறவில்லை. எதேச்சதிகார அமைப்பின் பண்பாட்டுப் பிரிவில் பணியாற்றியவர்கள், எந்தவொரு சுயவிமர்சனமும் இன்றி அடுத்த அதிகாரத்திடம் சரணடைந்த அதிகார உடந்தையைத்தான் விமர்சித்தேன். ‘உயிர் பிழைத்தல்’ வேறு, அதிகார எந்திரத்தின் ‘உதிரிப்பாகமாகச் செயல்படுதல்’ வேறு. அதுமட்டுமன்றி, முஸ்லிம்கள் இலங்கை அரசுடன் அதிகாரத்தில் பங்குபோட்டுக் கொண்டதை ஒரு கையறுநிலையாகச் சுட்டிக்காட்டி, இறுதிப்போரின் பின்னர் கருணாகரன் அரசுடன் சேர்ந்தியங்கியதும் கையறுநிலைதான் என்று சமாதானம் கூறுகிறார். ஒருபக்கம் ஆயுதக் குழுக்களாலும் மறுபக்கம் அரசாலும் நசுக்கப்பட்ட விளிம்புநிலை முஸ்லிம் சமூகத்தின் இருத்தலியல் தற்காப்பு உத்தியையும், ஒட்டுமொத்தப் பேரழிவிற்குக் காரணமாக இருந்த ஒரு அமைப்பின் பண்பாட்டுப் பிரிவில் பணியாற்றியவர்களின் சரணாகதியையும் சமதட்டில் வைத்துப் பார்க்கும் அவரது அரசியல் குருட்டுத்தனம் மன்னிக்க முடியாதது.

2009-க்குப் பின்னரான ஈழத்து இலக்கியச் சூழல் சந்தித்த மாபெரும் தத்துவார்த்த வீழ்ச்சியை நான் வரையறுக்கும்போது, ஒற்றை அதிகார அமைப்பு சிதைந்த மறுகணமே, தளபதிகளின் காலடிகளில் துப்பாக்கிகளை வைத்துவிட்டு மண்டியிட்ட அதே உடல்மொழி, இன்று தமிழக இலக்கிய ஆசான்களின் காலடிகளில் பேனாக்களை வைத்துவிட்டு மண்டியிடும் அவலமாக மடைமாற்றம் செய்யப்பட்டுவிட்டதைப் ‘பண்பாட்டுத் தற்கொலை’ என்று விமர்சித்திருந்தேன். இதற்குப் பதிலளிக்கையில், இதனை மூவாயிரம் சொற்களில் உருட்டிப் புரட்டிய புகைமூட்டம் என்று தர்மு பிரசாத் கேலி செய்தாலும், கட்டுரையின் பிற்பகுதியில் அவரே அறியாமல் தன் சமூகத்தின் அடிமை உளவியலை ஒரு ஒப்புதல் வாக்குமூலமாக  வெளிப்படுத்துகிறார்.

அவர் எழுதுகிறார் “நாம் தலைமுறை ஆசானாகக் கொள்ளக் கூடிய ஒரு அறிவுசார் ஆளுமை கூட நம்மிடம் இல்லை. அதாவது உடைந்து காலில் பணிந்தமர்ந்து விடக் கூடியதாக நம் சிந்தனைக் கூட்டை, புறங்கழுத்து அடியைக் கொடுக்கக் கூடிய ஒரு ஆகிருதியும் நம்மிடம் இல்லை… அப்படி ஒருவரையாவது சுட்டிக் காட்ட முடியுமா?”. இலக்கிய வாசிப்பு என்பது ஏதோ மசாஜ் பார்லருக்குப் போவது போலவும், அங்கே ‘புறங்கழுத்தில் அடி’ கொடுப்பதற்குத் தகுதியான ஆள் ஈழத்தில் இல்லாததால், விமானம் ஏறித் தமிழகத்திற்குப் போய் அடி வாங்கிக்கொள்கிறோம் என்றும் ஒரு விமர்சகர் இவ்வளவு வெள்ளந்தியாக வாக்குமூலம் கொடுப்பதை உலக இலக்கிய வரலாற்றிலேயே இப்போதுதான் பார்க்கிறோம்.

நான் எந்த அடிமை உளவியலை அம்பலப்படுத்தினேனோ, அதை அவர் தனது சொந்த வார்த்தைகளில் அப்படியே ஒப்புக்கொண்டிருக்கிறார்! இது வெறும் ஆசானுக்கான தேடலல்ல. இது எதேச்சதிகாரத்திற்காக ஒரு சமூகம் தவிக்கும் தவிப்பு. அதாவது ‘பாசிசத்திற்கான ஏக்கம்’ ‘மக்கள் ஏன் தங்களின் சொந்த அடிமைத்தனத்தையே தங்களின் விடுதலையாக எண்ணிப் போராடுகிறார்கள்?’ என்ற புகழ்பெற்ற தத்துவார்த்தக் கேள்வியை நாம் இங்கு முன்வைக்க வேண்டியுள்ளது. ஒரு சுதந்திரமான இலக்கியச் சூழல் என்பது உடைந்து காலில் பணிந்தமரும் ஆளுமைகளை உருவாக்குவதல்ல. அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதால்தான் அறிவுத்தளம் விரிவடையும். ஆனால், இவர்களுக்குப் புறங்கழுத்து அடியைக் கொடுக்கக் கூடிய ஒரு சர்வாதிகார எஜமானன் தேவைப்படுகிறார்.

மேலும், போர் மற்றும் புலம்பெயர்வு என்கிற முற்றிலும் புதிய திணைகளை உருவாக்கி ஈழத்து இலக்கியம் உலகப் பரப்பில் நிலைநிறுத்திய தன்னாட்சி அதிகாரத்தை, மீண்டும் தமிழக இலக்கியப் பீடங்களிடம் அடகுவைத்துவிட்டார்கள் என்ற எனது குற்றச்சாட்டுக்கு அவர் அளிக்கும் விளக்கம் இன்னும் விசித்திரமானது. “ஈழம் இந்தியப்பெரும் பண்பாட்டின் நீட்சியாகத்தான் இருந்திருக்கிறது… மதலை தன் தொட்டில் வாசனையை நினைவு கூர்வது போல” என்கிறார். ஈழத்து இலக்கியத்தை ஒரு சிறு ‘மதலை’ என்றும் தமிழகத்தைத் ‘தொட்டில்’ என்றும் தர்மு பிரசாத் உருவகப்படுத்துவதை, ஒரு அப்பட்டமான ‘குழந்தைமயமாக்கல்’ என்ற பின்காலனிய அரசியலாகவே நாம் விவாதிக்க வேண்டும்.

ஒரு குழந்தை வளர்ந்து சுயமாக நிற்கக் கற்றுக்கொள்ள வேண்டும். காலம் முழுவதும் தொட்டிலிலேயே படுத்திருக்க நினைத்தால் அது வளர்ச்சியல்ல, அது ஒருவிதமான முதிர்ச்சியின்மை. அளப்பரிய தியாகங்கள் மற்றும் புலம்பெயர்வு வலிகளினூடாகத் தன்னைத் தன்னாட்சி கொண்ட முதிர்ந்த இலக்கிய மையமாக வளர்த்தெடுத்துக்கொண்ட ஈழத்து இலக்கியத்தை, மீண்டும் ஒரு சிறு ‘மதலை’ ஆக்கித் தொட்டிலுக்குள் தள்ளப் பார்ப்பது ஈழத்து இலக்கியத்தின் மீதான ஒரு பண்பாட்டு வன்முறை. இந்தச் சரணாகதியை நியாயப்படுத்த, “முதல் குரங்கு தமிழ் குரங்காக இருந்த காலத்திலிருந்தே வரும் தொடர்பு அது” என்றும் அவர் கூறுகிறார். 2009-க்குப் பிறகு ஏன் தமிழக இலக்கியப் பீடங்களிடம் சரணடைகிறீர்கள் என்று ஒரு சமகால அரசியல் கேள்வியைக் கேட்டால், மனிதர் நேராகக் கற்காலத்திற்கே காலப் பயணம் செய்து, பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டையே தமிழ்த் தேசியமயமாக்கி, ‘முதல் குரங்கே தமிழ்க் குரங்குதான்’ என்று கண்டறிந்து சொல்கிறார். இலக்கிய விமர்சனத்தை விலங்கியல் ஆராய்ச்சியாக மாற்றிய பெருமை இவரையே சாரும்.

அதேபோல, அதிகார மையங்களை ஆசான்களாக ஏற்பது அடிமைத்தனமல்ல என்று வாதிடும் அவர், மார்க்ஸ்-ஹெகல், பிராய்ட்-லக்கான் போன்ற அறிவுசார் உறவுகளை இதற்கு உதாரணமாக இழுக்கிறார். கார்ல் மார்க்ஸோ அல்லது லக்கானோ தங்களுக்கு முன்னிருந்த ஆசான்களின் காலடியில் அமர்ந்து முன்னுரைக்காகக் காத்திருக்கவில்லை. அவர்களின் சிந்தனைகளை உடைத்து விமர்சித்து, புதிய அறிவார்ந்த தளங்களை உருவாக்கி அவர்களைத் தாண்டிச் சென்றார்கள். ஆனால், ஈழத்து இளைஞர்கள் செய்வது ஒரு மாபெரும் பிம்பத்தை ஆராதிப்பதும், அவர் உதிர்ப்பதையெல்லாம் அமுதமாகப் பாவிப்பதும், அதிகார நிழலில் தங்களைப் பாதுகாப்பாக ஒளித்துவைத்துக் கொள்வதும்தான். குரு-சிஷ்ய மரபின் புனித முகமூடிக்குள் நிகழும் இந்தச் சரணாகதி அடிப்படையில் ‘விசுவாசத்தின் பண்டமாக்கலாகும்’. அதாவது, ‘விசுவாசம்’ என்ற மூலதனத்தைக் கொடுத்து, ‘அங்கீகாரம்’ என்ற அதிகார லாபத்தை ஈட்டும் ஒரு வணிகமாகவே இது இன்று சுருங்கிவிட்டது.

இதைவிடக் குரூரமான அற வீழ்ச்சியை தர்மு பிரசாத் தனது கட்டுரையிலேயே வெளிப்படுத்துகிறார். கருணாகரன் புலம்பெயர்ந்தவர்களிடம் பணம் வாங்குவதை நியாயப்படுத்தும் அவர், புலம்பெயர்ந்தவர்களை “கை காசை வைத்து என்ன செய்வதெனத் தெரியாது திகைத்து நிற்கும் அபலைகள்” என்றும், “குக் வித் கோமாளிகளுக்கு, மூன்றாம் தரப் பாடகர்களுக்கு, மதுரை முத்துவிற்கு, சீமானுக்கு என விழலுக்கு இறைப்பவர்களிடம் தாராளமாகவே சுரண்டிக் கொள்ளலாம். அந்தப் ‘பணக்கார பிள்ளைகளிடம்’ சுரண்ட ஒருபோதும் தயங்க வேண்டியதில்லை” என்றும் எழுதுகிறார். ஈழத்துத் தீவிர இலக்கியத்தின் இன்றைய நேரடிப் போட்டியாளர்கள் உலகப் பெரும் எழுத்தாளர்களல்ல. மதுரை முத்துவும், குக் வித் கோமாளிகளும்தான்! அவர்களுக்குப் போகும் பணத்தை நாமும் கொஞ்சம் சுரண்டினால் என்ன தவறு என்று கேட்கும் இந்தப் ‘பண்பாட்டு ராபின் ஹுட்’ தத்துவம், ஈழத்து மைய நீரோட்ட இலக்கியம் எப்படி ஒரு ‘கலாச்சாரக் கூலிப்படை’ மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதற்கான நிர்வாணமான சாட்சியம். இலக்கியம் என்ற பெயரில் அறவுணர்வே இல்லாமல் மூலதனத்தைச் ‘சுரண்டுவதை’ ஒரு தார்மீக உரிமையாகப் பகிரங்கப்படுத்தும் இவரது வாதம், பண்பாட்டுத் தளத்தின் ஒட்டுமொத்த அற வீழ்ச்சியைக் காட்டுகிறது.

இறுதியாக, என் மீது அவர் வைக்கும் தாக்குதல்களையும் அதன் பின்னாலுள்ள அரசியலையும் ஆராய்வோம். “கடந்த 25 வருடங்களாக அவர் அடைந்த அடைவு என்ன? … நினைவில் நிற்கக் கூடியதான ஒரு வரி… அவரால் எழுதியெடுக்க முடிந்திருக்கிறதா? … அச்சடித்த தாள் நிறைக்குக் கூட பெறுமதியில்லாத எழுத்துக்கள்” என்று அவர் கேட்கிறார். இலக்கியம் என்றால் என்னவென்று தர்மு பிரசாத் நினைத்துக்கொண்டிருக்கிறார் தெரியுமா? வணிகத் திரைப்படங்களில் கதாநாயகன் தொடையைத் தட்டிக்கொண்டு பேசும் ‘பஞ்ச்’ வசனங்களைப் போல, மேடையில் நின்று கைதட்டல் வாங்கும் ஒற்றை வரி தத்துவங்களை உதிர்ப்பதுதான் இலக்கியம் என்று அவர் மிகவும் வெள்ளந்தியாக நம்புகிறார் போலும்! அதனால்தான், இருபத்தைந்து வருட தத்துவார்த்த உழைப்பில் “நினைவில் நிற்கக் கூடிய ஒரு வரி” எங்கே என்றுத் தேடுகிறார்.

வாசகர்கள் தங்கள் முகநூல் நிலைத்தகவல்களில் போட்டுக்கொள்வதற்கும், ஆட்டோக்களின் பின்னால் எழுதி ஒட்டுவதற்கும் ஏற்றவாறு ‘பஞ்ச்’ டயலாக்குகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையல்ல மாற்று இலக்கியம். அதிகார மையங்களை மகிழ்விக்கும், கைதட்டல் வாங்கும் செவ்வியல் வரிகளை எழுதுவதுதான் இலக்கியம் என்ற அவரது இந்த அபத்தமான நம்பிக்கையை, ‘அழகியல் பாசிசம்’ என்றே நாம் வரையறுக்கலாம். பெருங்கதையாடல்களைப் படைப்பதும், பணக்காரப் புலம்பெயர்ந்தோரின் நிதியுதவியுடன் பத்துப் புத்தகங்களை அச்சிடுவதும் மையவாத இலக்கியத்தின் அளவுகோல்கள். மாற்று இலக்கியத்தின் அளவுகோல் அதிகார மையங்களை உடைப்பது.

இலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டு நெருக்கடி குறித்து நான் எதுவுமே சொல்லவில்லை என்று தர்மு பிரசாத் அப்பட்டமான ஒரு பொய்யைக் கூறுகிறார். எனது கட்டுரையில், ஒருபுறம் பேரினவாத அரசு, மறுபுறம் இயக்க எதேச்சதிகாரம், இன்னொருபுறம் வறண்ட தவ்ஹீத் மத அடிப்படைவாதம் என இந்த முப்பரிமாண அதிகார ஒடுக்குமுறைக்குள் சிக்கிய கிழக்கு மாகாண விளிம்புநிலை முஸ்லிம் இளைஞர்கள், எந்தவொரு எஜமானனுமற்ற அநாதை நிலையில் தங்களின் இருத்தலியலை நிலைநிறுத்தப் பின்நவீனத்துவ மாற்றுச் சிந்தனைகளைக் கையில் எடுத்துத் தன்னாட்சியோடு கலகக் குரலாக நின்ற வரலாற்றை மிகத் தெளிவாக எழுதியுள்ளேன். இவ்வளவு ஆழமான வரலாற்றுப் பதிவை கண்முன்னே வைத்துக்கொண்டு, பண்பாட்டு நெருக்கடி குறித்து ஏதும் சொல்ல முடிந்திருக்கிறதா என்று கேட்பதும், அவர்களின் அரசியலையும் மொழியையும் நிராகரித்து ‘அச்சடித்த தாள் நிறைக்குக் கூட பெறுமதியில்லை’ என்று தர்மு கூறுவதும், ஒரு ஆதிக்கவாதி விளிம்புநிலை அறிதல்முறையின் மீது நிகழ்த்தும் அப்பட்டமான ‘அறிதல்முறை வன்முறைதான்’. எந்தவொரு ஒற்றை எஜமானனும் இல்லாத அந்த விளிம்புநிலைக் குழுவினர், புறங்கழுத்து அடிக்கு ஏங்காமல், மையமற்ற அறுகம்புல் வேரோட்டத்தைப் போலத் தங்களின் தன்னாட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டார்கள் என்ற வரலாற்று உண்மையை நான் தோலுரித்ததால்தான், அவர் இவ்வளவு வன்மத்தைக் கக்குகிறார்.

அவரது கட்டுரையின் முடிவுரையில், “இது பாலை பூக்கும் காலம்… தகித்திருந்த பாலையின் விதைகளின் மேல் அறிவின் சாரல் பொழிகிறது. நிச்சயம் அது தமிழகத்திலிருந்துதான்… கடந்த காலங்களில் அய்யன் வள்ளுவனிடமிருந்து உரிமையுடன் அள்ளி இடையில் கட்டிக் கொண்டதுபோல, இப்போதும் அள்ளியெடுக்க ஒரு நொடியும் தயங்க வேண்டியதில்லை. கடும்பாலையின் விதைகள் நிலத்தை அறைந்து திறக்கட்டும்” என்று கூறுகிறார். சுருக்கமாகச் சொல்வதானால், இது பாலைவனம் பூக்கும் காலமல்ல. அடிமைகள் தங்கள் எஜமானர்களின் அங்கீகாரத்திற்காக வாய் பிளந்து நிற்கும் காலம்! ஈழத்து இலக்கியம் தனது சுயம்புவான அதிகாரத்தை ஈட்டி, உலகத் தமிழ் இலக்கியத்தின் ஒரு மாபெரும் மாற்று மையமாகக் கிளர்ந்தெழுந்த வரலாற்றை ‘குருதியுண்ட கடும்பாலை’ என்று கொச்சைப்படுத்தும் அவரது மேட்டிமைவாதக் கண்கள், தமிழக அதிகார மையங்கள் வீசியெறியும் பிரசுர வாய்ப்புகளையும், முன்னுரைகளையும், அங்கீகாரங்களையும் ‘அறிவின் சாரல்’ என்று கற்பனை செய்துகொள்கின்றன.

ஒரு மாபெரும் உளவியல் வெற்றிடத்திற்குள் விழுந்த சமூகத்திற்கு, சுயமாகச் சிந்திப்பது ஒரு பெருஞ்சுமையாக மாறியதால், புதிய எஜமானர்களிடம் தஞ்சம் புகுவதை நான் பண்பாட்டுத் தற்கொலை என்றேன். ஆனால் அவர், அந்தத் தற்கொலையையே ஒரு பெருமிதமான திருவிழாவாகக் கொண்டாடுகிறார். பாலைவனத்தில் சாரல் பொழிகிறது என்றால், அங்கே பூப்பது மண்ணுக்குரிய மலர்களல்ல. அதிகாரத்தின் காலடியில் நிபந்தனையற்று மண்டியிடும் ஒட்டுண்ணிக் களைகளே. அய்யன் வள்ளுவனிடமிருந்து உரிமையுடன் அள்ளி இடையில் கட்டிக்கொண்டதை, இன்று அதிகாரப் பீடங்களிடம் பேனாக்களை வைத்துவிட்டு மண்டியிடும் அவலத்தோடு ஒப்பிடும் இவரது அறியாமையைக் கண்டு, இலக்கியத் தூய்மைவாதமே தற்கொலை செய்துகொள்ளும்.

ஈழத்து இலக்கியச் சூழலில் பல்லாண்டுகளாகப் பயிற்றுவிக்கப்பட்டு உறங்கிக் கிடக்கும் அடிமைத்தனமான தொண்டன் மனநிலைக்கு எதிரான ஒரு அறிவார்ந்த அறுவை சிகிச்சையே எனது கட்டுரை. அந்த அறுவை சிகிச்சையின்போது வெட்டி எறியப்பட்ட அதிகார விசுவாசத்தின் புண்களிலிருந்து வடியும் சீழ்தான் தர்மு பிரசாத்தின் இந்த எதிர்வினைக் கட்டுரை. அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதால்தான் அறிவுத்தளம் விரிவடையும். ஆனால் தர்மு பிரசாத் போன்றவர்கள், உடைந்து காலில் பணிந்தமர்ந்து விடக் கூடியதாக ஒரு ஆகிருதியைத் தேடி அலைகிறார்கள். நான் முன்வைக்கும் விளிம்புநிலை மற்றும் மாற்று இலக்கிய அரசியல், இப்படிப்பட்ட ஆசான்களையும், குரு-சிஷ்ய மரபின் போலிப் புனிதங்களையும் வேரோடு சாய்க்கும் வல்லமை படைத்தது. எனது எழுத்துக்களை அவர் சிறுமைப்படுத்த முற்பட்டாலும், நான் முன்வைக்கும் உண்மைகள் அவர்கள் கட்டி வைத்திருக்கும் போலிப் பெருமிதங்களின் கோட்டையைத் தகர்ப்பதற்குப் போதுமானவை. அதிகாரத்தின் நிழலில் இளைப்பாறுவதையே சுகமாகக் கருதும் இந்த அடிமை நனவிலியினருக்கு, சுயாதீனமான அரசியலும், கலகக் குரலும் புரியாத புதிராக இருப்பதில் ஆச்சரியமில்லை.

Previous Post

இலக்கியப் பிரதிகள் என்ன செய்கின்றன?

Next Post

கீதிர் கவிதைகள்

றியாஸ் குரானா

றியாஸ் குரானா

இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள அக்கரைப்பற்றைச் சேர்ந்த இலக்கிய செயற்பாடாளர். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்து இலக்கியச் செயல்பாட்டில் இயங்கி வருபவர். கவிதை மற்றும் இலக்கிய விமர்சனங்களை தொடர்ந்து எழுதி வருகிறார். ‘நான் கவிஞனில்லை. கவிதை சொல்லி’ என தன்னை அழைத்துக் கொள்பவர். பின்நவீனத்துவத்துவக் கருத்தியலை தனது எழுத்தியக்கத்தின் இயங்குதளமாக முன்வைப்பவர்.

Next Post
Keethir Kavithaigal

கீதிர் கவிதைகள்

கருத்தைப் பதிவிடுங்கள் Cancel reply

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. அவசியமான புலங்கள் * எனக் குறிக்கப்பட்டுள்ளன.

Archives

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 8, 2026
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 8, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

Koor Seevuthal

கூர் சீவுதல்

Pillai Kaniyamudhe 4

பிள்ளைக்கனியமுதே… – 4

November 1, 2026
Ingirunthu Thodangugiren

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

November 1, 2026
interview-issue-2

எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

November 1, 2026
Paav

பாவ்

November 1, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • ஆங்கில படைப்புகள் (3)
  • இதழ்கள் (48)
  • படைப்புகள் (44)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

Pillai Kaniyamudhe 4

பிள்ளைக்கனியமுதே… – 4

November 1, 2026
Ingirunthu Thodangugiren

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

November 1, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Product successfully added to the cart!
No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு