1. கருணையென்பது
அருகருகே துயின்றெழுந்து
ஒன்றையொன்று அணைத்துக்கொள்ளும்
நான்கு கனவுகளுக்கு
வெவ்வேறு இலக்குகள்
படுக்கையில் அவ்வப்போது
சிறுநீர் கழித்துவிடும்
மிதமான ஒரு கனவுக்கு
உலகமென்பது சூடாகிப் பின் குளிர்ந்துவிட்ட
ஒரு இனிப்புருண்டை
அதைக் கடைவாயிலிட்டு நன்றாகக் கடிக்க வேண்டும்
நண்பர்களுடன் பகிர வேண்டும்
அவ்வளவுதான்
சதா குழப்பத்தில் இருக்கும்
இன்னொரு கனவு
அதீத முழக்கங்களும் விசாரணைகளும்
குடும்ப அமைதிக்குக் கேடென நினைக்கிறது
தான் வரைந்த வட்டத்திற்குள்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவுதான்
இப்போதுதான் மலர்ந்த
பிஞ்சுக்கனவுக்கு
ராவெல்லாம் அழுகை நாளெல்லாம் உறக்கம்
படுக்கையெல்லாம் பால்வாசம்
அவ்வளவுதான்
தன் பொறுப்புணர்ந்து
எல்லோருக்கும் கனியும் ஒரு கனவு
வலியின் வாயில் துணியைப் பொத்தியிருக்கிறது
இப்படியான சந்தர்ப்பங்களில்
கருணையென்பது
அளவான சர்க்கரையில்
இதமான ஒரு தேநீர்
அவ்வளவுதான்.
2. என் இனிய நோய்க்கிருமியே
அக்கினியின் சிறுதுண்டை விழுங்கியிருக்கிறேன்
என் அனுமதியில்லாமல்
உடலெங்கும் பரவுகிறது வெம்மை
நெற்றியைப் புறங்கையால் தொட்டுப் பார்க்கிறது
அக்கறையின் கரம்
கனிவுடன் ஆலோசனை சொன்னவர்கள்
மருத்துவரும் செவிலியர்களும் அன்பானவர்களும்
இவ்வளவு கனிவில் நனைந்து எத்தனை நாளாயிற்று
நீர் உறிஞ்சிய பஞ்சு போலாகிறேன்
களைப்பு நீங்கி உறங்கியெழ எந்தச் சாக்கும் தேவையில்லை
இந்தாவெனக் கையளிக்கிறாய்
ஒரு சுவையான கனியை
ஒரு முழுமையான நாளை
எனக்கேயெனக்கான இந்நாள்
ஒரு பொக்கிஷம்
ஓய்வற்ற உயிர்களுக்கு ஓய்வு தரவே
ஒவ்வொருவருளும் வளர்கிறாய் அவ்வப்போது
என் இனிய நோய்க்கிருமியே
உன் அருகாமையை விரும்புகிறேன்
நீயே உன் கைகளால் என்னைக் கொல்லாத வரைக்கும்
நானும் உன்னைக் கொன்றழிக்க மாட்டேன்
இது சத்தியம்.











