1. நகரும் வயல்கள்
விளை நிலங்கள் சாலைகளாய்
மாறும் காலத்தில்
விதைக்கத் தலைப்படுகிறோம்…
எங்கு விதைப்பது என்பதறியாது
சாலையின் மத்தியில் உள்ள மண் பிரதேசத்தில்
நட்டு வைத்த செவ்வரளி
மற்றும் வெண்ணரளிச் செடிகள்
சிறிது வளர்ந்துள்ளன அந்த சாலையின் பிற நீட்சிகளுடனேயே…
ஆக நாம் நிலம் தேடி
அலையும் காலத்தில்
சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கென
கையகப்படுத்தியுள்ள நிலத்தின்
மையத்தில் நீரின் ஊற்றுள்ளதென
பட்சி அறிவிக்க
அதற்கான எந்திரங்களுடன் சென்று
சேரும் சமயத்தில்…
அங்கு ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த
ஆழ்துளைக் கிணறு ஒன்றின்
முகத்துவாரத்தில் கிடத்தப்பட்டிருந்தது
அடுத்த சந்ததியின்
கீற்றாய் ஆன ஒரு சிறு குழந்தை…
2. தொலைந்து போன செல்லிடப்பேசியும் செல்லிடப்பேசியிடம் தொலைந்து போன நானும்
எல்லாம் மிக நேர்த்தியாகச் செய்யப்பட்டு விட்டது.
ஒட்டடைகளின் தொகுப்பில்
உயிர்த்திருந்த ஒரு கழிப்பறையில்
யோசித்த விசயங்கள்
பூஞ்சையாகிவிட்டன.
கழிப்பறையில் இருந்த பூஞ்சைகள்
படுக்கையறைக்குள்
நுழைந்து கொண்டன.
இப்போது நான் பூஞ்சைகளற்ற
ஒரு வீட்டின் வரவேற்பறையில்
அமர்ந்திருக்கிறேன்… கைகளில் ஏதுமற்ற
எனது மூச்சு எளிதாக வருகிறது…செல்கிறது.
இருந்தாலும் ஒன்றுதான்
இல்லாமல் போனாலும் ஒன்றுதான் – பலருக்கு
வெளியில் சொல்லவொண்ணா திருப்தி!
பரமசிவன் கழுத்திலுள்ள ஒருவர் பகிர்ந்து கொண்டார்…
எங்களைப் போல பாதிக்கப்பட்ட ஒருவர்
எப்போது அழைத்தாலும் எடுக்காத இவனுக்கு
எதற்கடா செல்பேசி என்று பழிதீர்க்க விருக்குமோ…?
தொலைந்து விட்ட செல்லிடப் பேசியை எடுத்து
தொலைந்து போன ஒருவன்
பேசினால்…
என்ன செய்வது என்பது குறித்த பதிவுகள்:
இது நல்லதென்று செல்லிடப்பேசியை
துண்டித்து விடுதல்..
அல்லது நான்தான்
உண்மையான உரிமையாளர் என்று சொல்வது…
இரண்டில் ஏதோ ஒன்று எனக்கும்
அது தவிர்த்த மற்றொன்று உங்களுக்கும்
நன்மை பயக்கும்.
3. பற்றியெரிக்கும் கவிதை
இந்த ‘டிஷ்யு’ பேப்பரில்
எழுதப்படும் என் கவிதை
துடைதெறியத்தக்கது…
உங்களால் !
மூடுண்ட முலைகளின்
ஒரு கோட்டுச் சித்திரமாய்
தோழின் வழவழப்பையூட்டும்
ஒரு சிறுபத்திரிக்கையின் அட்டை!
அதன் முன்னிருந்து நிரடும்
காம்புகள் விளங்கும்
கவிதைகளென!
ஏக்கத்தின் சிறு சாட்டை நுனி
பற்றியெரிக்கும்
பல நூற்றாண்டு காமம்.
நுரைத்துத் தள்ளும் சோடாவினூடே
குமிழ்களாய் வெடித்துச் சிதறும்
என் சுய மோகம்.
நான் சொல்லாத என் வார்த்தைகளின்
எட்டுத் திசைகளின்றும்
எதிரொலிக்கும்…
நான் ஏற்கனவே சொல்லியவை
சொல்லக் கூடாத வார்த்தைகளென்று.
4. உருமாற்றம் (அ) சிதைவின் வரலாறு
எனக்கான வாழ்க்கையிது
உனக்கென்று வாய்த்ததொன்று
என்னை மூர்ச்சையிக்க
எனதை அருவருக்க
கரப்பானாய் மாறச் சபி.
பறந்து திரிவேன் சிறகடித்து
கக்கூசெங்கும்…
கழிவறைகள் கவிதையறைகள்
மலம் தள்ளிய நீ
வெருளுவாய்
உன் மலமீதேகி
நான் வருடுவது
உன் வாழ்வெனும் குதத்தை…
நீ ஊற்றிய
சரித்திரத்தின் நீரின் ஊடே
மலத்தின் கசடு பற்றி
மெதுவாய் தலை நிமிர்ந்து
துவாரத்தின் வாயிலில்
எனது மீசை துளாவிய போது
உனது கண்களின் மிரட்சி
எனக்கான ஹேஸ்யம்.
அறையெங்கும் தெளித்த விந்தும்
கருப்பந்தும் உணவாகியது
உனது மலச்சிக்கலின் போது
நீ மீண்டும் கூறுகின்றாய்
உலகம் கவிதையிலானது
என்று கழிப்பறையிலிருந்து
என் இடது முட்கால்
நீ காரித் துப்பிய சளியைச்
சுரண்டியபடி சொல்கிறது
உலகம் கழிப்பறையிலானது.











