1. பிரார்த்தனைகளின் சுவடு
தடமழிந்த பாதையொன்றில்
சொற்களை வீசிவிட்டு
நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
நீங்கள் கடந்துபோன இரவுகளில்
மௌனம்
சுடர்விளக்கைப் போல
எரிந்துகொண்டே இருக்கிறது.
ஆழத்தில்
ஒரு சிறிய வெளிச்சம்
இன்னமும் துடித்துக்கொண்டிருக்கிறது.
வார்த்தைகள் ஓய்ந்த இடத்தில்
நான் விட்டுச்சென்ற பிரார்த்தனைகள்
உங்களுக்குத் தெரியாமல் போயிருக்கலாம்.
என்னை நீங்கள் மறந்திருக்கலாம்
நினைவிலிருந்தும்
ஒளியின் கீற்றை மறைத்திருக்கலாம்.
துளிர்க்காத பட்டமரத்தின்
வேரில் நீர் தேங்கியிருக்கலாம்.
நினைந்துருகச்
சிலர் இருக்கிறார்கள்,
பலர் பிறக்கவும்
கருவுற்றிருக்கிறார்கள்.
2. நிலை
சொற்களால் ஒரு சுவரை உயர்த்துகிறீர்கள்.
கைவிட்டுப்போகும் ஒவ்வொரு கணத்திற்கும் பின்னால்
ஒரு மிகப்பெரிய தந்திரம் ஒளிந்திருக்கிறது.
அதை நியாயப்படுத்தித் தீர்ப்பதற்கு வார்த்தைகளை அடுக்குகிறீர்கள்.
தேநீர்க் கோப்பைகளின் விளிம்பிலும்,
உதிரும் சிகரெட் சாம்பலிலும்,
அறையின் இருண்ட மூலைகளிலும் நிரம்பிக்கொண்டே இருக்கின்றன
உங்கள் தன்னிலை விளக்கங்கள்.
ஒரு துரோகம் நடந்து முடிந்த பிறகும்
அந்தக் கத்தியின் பிசுபிசுப்பு மாறுவதில்லை.
இரத்தம் உறைந்த அதன் கூரைக் கழுவ
நீங்கள் அவசர அவசரமாகச் சிந்தும் கண்ணீர்,
அது நீர்த்துப்போன ஒரு தற்காலிகச் செயல்.
துடைக்கப்பட்ட கத்தி பளபளக்கலாம்
ஆனால் அதன் அலகு இன்னமும்
அந்த வெட்டை நினைவில் வைத்திருக்கிறது.
அதற்கு மேல் அந்தக் கண்ணீருக்கு ஒரு பொருளுமில்லை,
ஒரு கவனமுமில்லை.
நகரத்தின் வீதிகள் எப்போதும் போலக் காலியாகத்தான் இருக்கின்றன.
மஞ்சள் விளக்குகளின் அடியில்
நிழல்கள் ஒன்றையொன்று
வெட்டிக்கொண்டு கடக்கின்றன.
இப்போது எல்லாமே தெளிவாகிவிட்டது.
விளக்கங்களை மூடி வையுங்கள்.
உங்கள் கம்பளங்களைச் சுருட்டிக்கொள்ளுங்கள்.
இதற்கு மேல் பேசுவதற்கும்
பரிமாறிக்கொள்வதற்கும்
எந்தப் புதிரும் மிஞ்சவில்லை.
வெளிச்சம் அவிந்த இச்சந்தடியில்
இதற்கு மேல் என்ன இருக்கிறது?
இந்த வெறுமையை அப்படியே விட்டுவிட்டு,
அமைதியாகப் போய்விடுங்கள்.
யாரும் பார்க்காத ஒரு தெருமுனையில்
தனக்கான தையல்களைத் தானே பிரித்துக்கொண்டிருக்கிறது
என் நிழல்.
3. புதிய மசோதாவின் மீது விவாதங்கள்
முட்டையிட்டுக் குஞ்சுகள்
பொரித்தாலும்
றெக்கைகள் இல்லையெனக்
கவலையாக இருக்கிறது
முதலைகளுக்கு
கடவுள் வஞ்சித்து
விட்டதாகக் கலங்கின்றன.
தாகத்தோடு தேடி வருவதைக்
காத்திருந்து
தின்ன வேண்டியிருக்கிறது
எனவும்
சலிக்கின்றன.
கருணையோடு
தரப்படும் சில சலுகைகளுக்கு
அவைகளும்
விண்ணப்பங்களை நீட்டுகின்றன.
தரைக்கு வரலாம்,
போகலாம்,
தண்ணீர்தான் வாழ்வு என்கின்றன.
முதலைகளுக்கு
றெக்கைகளைத் தந்தால்
என்னாகும் என்பதைச் சபை
விவாதிக்கிறது.
ஒவ்வொரு குளிர்காலக் கூட்டத்தொடரின்
விவாதங்களைத்
தொலைக்காட்சியில்
உஷ்ணத்தோடு கவனிக்கின்றன
காட்டின் விலங்குகள்.
உணவு இடைவேளைக்குப் பின்
தரப்பட்ட 10 நிமிடங்களில் சுருக்கமாக,
“முதலைகளுக்கு றெக்கைகள் தந்தால்
எங்களுக்கும் றெக்கைகள் வேண்டும்”
என்கிறது ஒரு மான்.
வெகுநேரமாகக் காத்திருந்த
விலங்குகள் கைதட்டுகின்றன.
அவைகள் கைதட்டுவதற்காக மட்டும்
உள்ளே சென்றவை.
உறங்கிக் கொண்டிருந்த ஒன்றிரண்டு
விலங்குகளை விழிக்கச் செய்துவிட்டது
அவர்களின் கரவொலி.
எல்லோருக்கும் ஒரு குளோஸ்-அப்
போடுகிறது சபையின் ஒளிப்பதிவு.
4. உயிர்களை வளர்ப்பவர்கள்
வழிபாட்டுக்காகவோ
அன்பின் ஆறுதலுக்காகவோ
அவர்கள் உயிர்களை வளர்ப்பவர்கள்.
நட்பின் பெயராலும்
போலிச் சமத்துவப் பிம்பத்தாலும்
தங்கள் மனதின் கருமையை
அவர்கள் நியாயப்படுத்திக் கொள்ளவே அவ்வாறு நடந்துகொண்டார்கள்.
தனிமையின் வெறுமையை நிரப்பவும்
தங்கள் தவறுகளிலிருந்து நழுவிக்கொள்ளவும்
அவர்களுக்கு உயிர்கள் தேவைப்பட்டன.
நல்லவர்களைப் போல முகமூடி அணிந்து
காரியங்களைச் சாதித்தபடி
வளர்த்த உயிர்களையெல்லாம்
தங்கள் வன்மத்தின் வடிகாலாகவும்
குற்றங்களை மறைக்கும் கேடயமாகவும்
பயன்படுத்திக் கொண்டார்கள்.
தக்க சமயத்தில் காட்டிக் கொடுக்கவும்
மற்றவர்களை மிரட்டவும்
பயன்படுத்தப்பட்ட அந்த உயிர்கள்
கடைசியில் அனுப்பப்பட்டது என்னவோ பலிபீடங்களுக்கு.
இன்னும் தீரவில்லை அவர்களின் பசி,
இப்போதும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
வளர்ப்பதற்குப் புதிய உயிர்களை.
நீங்கள் அருகில் போனால்
உங்களையும் கருணையோடு வளர்க்கக் காத்திருக்கிறார்கள்.
5.
இளவெயிலில் மழைக்குப் பின்
தெருவோரக் குழியில்
முழு வானமும் தலைகீழாய் மிதக்கிறது.
ஒரு சிறிய எறும்பு
அந்த வானத்தைக் கடக்கக் கரை தேடுகிறது.
நாம் விட்டுச் சென்ற காலடிச் சுவடுகளும்
அந்த மழைநீரில் கரையவே காத்திருக்கின்றன.
ஜன்னலின் திரைச்சீலையைத் திறந்து,
அடுக்ககத்தின் உயரத்திலிருந்து
இந்த நகரத்தைப் பார்க்கிறாள் ஒரு சிறுமி.
ஒரு நாள் தொடங்கப்போகிறது.
6.
நீரூற்ற வேண்டி எவரையும் தேடிப்போவதில்லை
மற்றபடி கிளைகளையோ
கனிகளையோ பூக்களையோ அபகரித்து
கொண்டு போனாலும்
பின்தொடரப் போவதில்லை
பின்தொடர முடியாதவற்றுக்குப் பின்னேயும்
சிலர் நெருப்பு வைக்கவும் விரைந்து
வருகிறார்கள்.
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
கூடுகளைச் சுமந்து
நெடுங்காலம் ஒரே இடத்தில்
விரிந்து இருக்கின்றன அவை
7.
நாள்தோறும் மின்னி மறைகின்ற ஆச்சரியங்கள்
அடுத்த கணம்
ஒரு நொடியின்
நிகழ்வுகள்.
ஒரு லௌகிகன் தீவிரமாக
கவிப்பித்தின் பாதைவழி
ஓடித் திரிவது
அருளோடு
நோக்குவது
பூரண கவியாக
வான் பார்ப்பது
யாவும் ஆச்சரியங்கள்
ஆச்சரியங்களின் உலகு











