சமீபத்தியவை
பிள்ளைக்கனியமுதே… – 4 இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும் எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ
பிள்ளைக்கனியமுதே… – 4 இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும் எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 2

ஒத்தைக்காதன்

ராஜேஷ் வைரபாண்டியன் By ராஜேஷ் வைரபாண்டியன்
2 hours ago
A A
0
Othaikkathan

1
நடுச்சாமம் தாண்டியிருந்தது. மாயாண்டி கதவைத் திறந்தபோது ஒத்தைக்காதன் ஏற்கனவே வாசலில் நின்றுகொண்டிருந்தது. சுவர் ஆணியிலிருந்து கண்ணிச் சுருளை எடுக்கும் சத்தம் ஒன்றே அதற்குப் போதும். எங்கே படுத்துக் கிடந்தாலும் எழுந்து வந்துவிடும்.
இடது காது மட்டும் விறைத்து நின்றது. வலது பக்கம் வெறும் தழும்புதான். நாலு வருடத்துக்கு முன்னால், ஆடி மாசக் காற்றடிக்கும் ஒரு சாயங்காலம், தேரி ஓரத்துப் பனங்கூட்டத்தில் மாயாண்டி அதைக் கண்டெடுத்தான். கைக்குள் அடங்கும் குட்டி. காது இருந்த இடத்தில் சதை பிய்ந்து தொங்கியது. ஏதோ பெருநாய் கவ்விப் போட்டுவிட்டுப் போயிருந்தது. செத்துவிடும் என்றுதான் நினைத்தான். ஆனாலும் துண்டில் சுற்றி வீட்டுக்குக் கொண்டுவந்தான். ராசாத்தி “இன்னொரு வாய்க்கு எங்க போறது?” என்று முணுமுணுத்தாள். அது சாகவில்லை. மஞ்சளும் வேப்பெண்ணெயும் பூசியதால் காயம் ஆறியது. அது எப்போதும் தலையைக் கொஞ்சம் சாய்த்தே கேட்கும். உலகத்தின் பாதிச் சத்தத்தைத் தனியாகத் தேடிப் பிடிக்கிறதுபோல.
“ஏல முத்து”
திண்ணையில் போர்வைக்குள் சுருண்டிருந்த பையன் உடனே எழுந்தான். அவன் தூங்கவில்லை என்பது அந்த வேகத்திலேயே தெரிந்தது. உள்ளே ராசாத்தி புரண்டு படுத்தாள். ஒன்றும் சொல்லவில்லை. சொல்ல வேண்டியதைச் சாயங்காலமே சொல்லியிருந்தாள்.
“பிள்ளைய என்னத்துக்கு அங்கன கூட்டிட்டுப் போறீய? படிக்கிற பய. அவனுக்கு எதுக்கு இந்தக் கண்ணியும் கயிறும்?”
மாயாண்டி பதில் சொல்லவில்லை. பதில் இருந்தால்தானே சொல்வதற்கு. ஏன் இன்றைக்கு, ஏன் இந்த வருஷம் என்று அவனுக்கே தெரியவில்லை. பையனுக்குப் பதினாலு வயது நடக்கிறது என்பது மட்டும் தெரிந்தது. அது ஏதோ கணக்குப்போல அவன் மனதில் நின்றது.
வாசல்படியைத் தாண்டும்போது உள்ளிருந்து ராசாத்தியின் குரல் வந்தது, தூக்கக்கலக்கமாக, ஆனால் தெளிவாக. “பிள்ளைக்குத் துண்டு எடுத்துக்கொடும். தேரிக் குளிரு நெஞ்சுல எறங்கும்.” மாயாண்டி திரும்பி வந்து கொடியிலிருந்து துண்டொன்றை உருவி முத்துவின் தோளில் போட்டான். அவள் வேண்டாம் என்று சொன்னதை அவளே தோற்றுப்போய் ஒப்புக்கொண்ட வார்த்தை அது. இருவருக்கும் அது புரிந்தது.
குதிரைமொழி ரோட்டைக் கடந்து, பனங்கூட்டத்தைத் தாண்டியதும் தேரி தொடங்கியது. பகலெல்லாம் நெருப்பாகக் கிடந்த மணல் இப்போது குளிர்ந்து கால்விரல் இடுக்குகளுக்குள் புகுந்துகொண்டது. நிலவு இல்லை. நட்சத்திர வெளிச்சத்தில் மணற்குன்றுகள் உறங்கும் மாடுகளின் முதுகுகள் போலத் தெரிந்தன.தூரத்தில் கற்குவேல் அய்யனார் கோயில் பக்கம் நாயொன்று ஊளையிட்டது. ஒத்தைக்காதன் நின்று, தலையைச் சாய்த்து, பிறகு அலட்சியமாக நடந்தது.
முத்து டார்ச்சை அழுத்தினான்.
“அணைச்சுருல.”
“இருட்டா இருக்குப்பா.”
“இருட்டுதான்ல வேணும். முயலுக்குக் கண்ணு பெருசு. நம்ம வெளிச்சம் அதுக்கு ஊருக்கே கேக்குற சத்தம் மாதிரி.”
வெளிச்சம் அணைந்தது. சில நொடிகளில் இருட்டு மெல்லக் கரைந்து, குன்றுகளின் விளிம்புகளும் கருவேல முட்புதர்களும் நிழல்களாகத் தெரியத் தொடங்கின.
“காத்துக்கு எதுக்கால நடக்கணும். நம்ம வாட அதுக்கு முன்னால போயிரக்கூடாது.” மாயாண்டி குனிந்து கைப்பிடி மணலை அள்ளி விரல்களுக்கிடையே வழியவிட்டான். மணல் லேசாக மேற்கே சாய்ந்து விழுந்தது. “பாத்துக்க. கடக்காத்து. நாம இப்படிப் போவோம்.”
முத்து அப்பாவைப் பார்த்தான். ஊரில் இந்த மனிதன் வேறு மாதிரி இருப்பான். பனைமரத்தில் ஏறுவான், இறங்குவான். குத்தகைக்காரர் வீட்டு வாசலில் துண்டைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு நிற்பான். கணக்கில் ஏமாந்து வந்தாலும் வாய் திறக்க மாட்டான். டீக்கடையில் யாராவது சத்தமாகப் பேசினால் எழுந்து போய்விடுவான். இங்கே அவன் முதுகு நேராக இருந்தது. குரல் தாழ்ந்திருந்தது,தேரியைத் தன் வீட்டு வளவைப் போலப் பேசினான். ஒவ்வொரு குன்றுக்கும் ஒவ்வொரு புதருக்கும் அவனிடம் பெயர் இருந்தது போலிருந்தது.
“முயலு சத்தம் போடாதுல்லா” என்றான் மாயாண்டி, தனக்குத்தானே சொல்லிக்கொள்வது போல. “மனுசந்தான் போடுவான்.”
முத்து தன் காலடிகளைக் கவனிக்கத் தொடங்கினான். அப்பாவின் கால்கள் மணலில் புதைவதே இல்லை போலத் தெரிந்தது. அவன் கால்களோ ஒவ்வொரு அடிக்கும் சரசரப்பைக் கிளப்பின. அவன் அப்பாவின் தடத்திலேயே கால் வைத்து நடக்க முயன்றான்.

2
இரண்டு கருவேலப் புதர்களுக்கு நடுவே, மணலில் ஒரு மெல்லிய தடம் ஓடியது. மாயாண்டி மண்டியிட்டு உள்ளங்கையால் தடவினான்.
“நேத்து ராத்திரி போயிருக்கு. ரெண்டு. ஒண்ணு பெருசு.”
“எப்படிப்பா தெரியும்?”
அவன் பதில் சொல்லாமல் பையனின் கையைப் பிடித்துத் தடத்தின் மேல் வைத்தான். “தடவிப் பாரு. முன்னங்கால் சின்னது, பின்னங்கால் நீளம். பெருசு ஆழமா அமுங்கியிருக்கு, பாத்தியா?” முத்து தடவினான். அவனுக்கு மணல் மட்டுமே தெரிந்தது. ஆனால் தெரிவதாகத் தலையாட்டினான்.
“முயலு நேரா ஓடாதுப்பு,” என்றான் மாயாண்டி, கண்ணி முளையை மணலில் அடித்தபடி. “வெட்டி வெட்டி ஓடும். நாய் எந்தப் பக்கம் வருதோ அதுக்கு எதுக்கால திரும்பும். ஆனா எவ்வளவு ஓடுனாலும் தன் தடத்துக்கே திரும்பி வரும். அதான் அதுக்குச் சாவு. பழகுன வழிதான் அதுக்கு எமன்.”
முத்து அந்த வேட்டை விதியை கவனமாக கேட்டுக்கொண்டான்.மாயாண்டி அதைச் சொல்லி முடித்தபோது, தான் வேறு எதையோ பற்றிப் பேசிவிட்டதுபோல சற்றுநேரம் கை நின்றது.
மாயாண்டி கண்ணியை விரித்தான். நூல் வளையம், சின்ன முளைக்குச்சி, மணலுக்கு மேலே ஒரு சாண் உயரம். விரல்கள் வேலை செய்தபோது முகம் வேறெங்கோ இருந்தது. இப்படி மூன்று கண்ணிகள். பிறகு, சற்றுத் தள்ளி குன்றொன்றின் பள்ளத்துக்குள் இருவரும் படுத்துக்கொண்டார்கள். ஒத்தைக்காதன் முன்னங்கால்களில் தாடையைப் பதித்துப் படுத்தது. அதன் ஒற்றைக் காது மட்டும் தனி உயிரி போல அங்குமிங்கும் திரும்பிக்கொண்டிருந்தது.
குளிர் மணலிலிருந்து எழுந்து முதுகுக்குள் ஏறியது. மேலே நட்சத்திரங்கள் அசையாமல் இருந்தன. பனையோலைகள் எங்கோ உரசிச் சலசலத்தன. முத்து ஏதோ கேட்க வாயெடுத்தான்.
“சத்தங்காட்டாத.” மாயாண்டி கிசுகிசுத்தான். “தேரிக்கு காது இருக்கு. இங்கன பேசுற ஒவ்வொரு வார்த்தையையும் அது வச்சுக்கிடும்.”
சிறிது நேரம் கழித்து முத்து மெதுவாகக் கேட்டான் “யாரு சொன்னா?”
“எங்கப்பா.”
முத்துவுக்குத் தாத்தாவைத் தெரியாது. வீட்டில் அவருடைய போட்டோகூட இல்லை. பள்ளிக்கூடத்தில் ஒருநாள் சண்டையின்போது ஒருத்தன் “உங்க தாத்தா கொலகாரன்லா, தேரிக்குள்ள ஓடிப்போனவன்” என்று சொன்னான். அன்று வீட்டுக்கு வந்து அம்மாவிடம் கேட்டான். அவள் அவன் வாயை அடைத்துவிட்டு, அப்பா காதில் விழுந்துவிடக்கூடாது என்பதுபோல வாசல் பக்கம் பார்த்தாள். அதிலிருந்து அந்தப் பெயர் வீட்டுக்குள் மூடிக்கிடக்கும் அறைபோல ஆகிவிட்டது.
இப்போது அந்த அறையின் கதவு லேசாகத் திறந்தது போலிருந்தது. முத்து அதற்குள் எட்டிப்பார்க்கத் துணியவில்லை.
மாயாண்டி மல்லாந்து படுத்திருந்தான். நட்சத்திரங்களைப் பார்க்கவில்லை. அவற்றுக்கு அப்பால் இருந்த ஏதோ ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் மூக்கில் பதநீர் வாடையும் பீடிப்புகையும் வந்தது. அப்பாவின் வாடை. முப்பத்தாறு வருடங்களாக அது அவனை விட்டுப் போகவில்லை. சில நாட்களில் பனையின் உச்சியில், பாளையைச் சீவிக்கொண்டிருக்கும்போது, அந்த வாடை திடீரென்று பக்கத்தில் வந்து நிற்கும். அவன் கீழே பார்ப்பான். யாரும் இருக்க மாட்டார்கள்.
பங்குனி உத்திரத்துக்குக் கற்குவேல் அய்யனார் கோயிலில் கொடை நடக்கும்போது ஊரே தேரிக்குள் இறங்கும். கிடா வெட்டு, பொங்கல், சாமியாடிகளின் அலறல் என ஊர் பரபரவென்றிருக்கும். சிறுவனாக இருந்தபோது அந்தக் கூட்டத்துக்குள் ஒவ்வொரு முகத்தையும் தேடுவான். தாடி வளர்ந்த முகம், சுருங்கிய முகம், இலங்கையிலிருந்து திரும்பி வந்த முகம். பிறகு தேடுவதை நிறுத்தினான். இப்போது கொடைக்குப் போனால் சாமியை மட்டும் கும்பிட்டுவிட்டுத் திரும்பிவிடுவான். கூட்டத்தைப் பார்ப்பதில்லை.


3
ஒத்தைக்காதன் எழுந்தது.
சத்தம் போடாமல் நின்றது. உடம்பு மட்டும் வில்லைப் போல இறுகியது. அதன் காது ஒரே திசையில் உறைந்து நின்றது. மாயாண்டி கையை உயர்த்தினான், நில் என்று. ஆனால் நாய் அதைப் பார்க்கவில்லை. அல்லது பார்த்தும் மதிக்கவில்லை. மறுநொடி அது மணலில் பாய்ந்திருந்தது.
கருவேலப் புதரிலிருந்து சாம்பல் நிழல் தெறித்தது. அது கண்ணிப் பக்கம் போகவில்லை. கண்ணியைத் தெரிந்துகொண்டதுபோல ஒதுங்கி, குன்றின் சரிவில் ஏறியது.
“எழவு…”
மாயாண்டி எழுவதற்குள் முத்து ஓடிக்கொண்டிருந்தான். யாரும் சொல்லவில்லை. அவன் கால்களே அவனைக் கொண்டுபோயின. மணல் கணுக்கால்வரை புதைத்தது. ஒவ்வொரு அடியும் இரண்டு அடிக்கான மூச்சை வாங்கியது. கருவேல முள் கணுக்காலைக் கீறியது. அவன் அதை உணரவில்லை. பின்னால் அப்பாவின் குரல் ஏதோ கத்தியது. அதுவும் அவன் காதில் விழவில்லை. உடம்புக்குள் இதுவரை இல்லாத ஒன்று எழுந்திருந்தது. இனம்புரியாத கொதிப்பு அல்லது களிப்பு. அதற்கு அவனிடம் பெயர் இல்லை, தேவையும் இல்லை. முன்னால் நாயின் இரைப்பு, அதற்கு முன்னால் அந்தச் சாம்பல் நிழல். அது வளைந்து, திரும்பி, சட்டென்று பையனை நோக்கியே திரும்பியது. நாய்க்கும் பையனுக்கும் நடுவே மாட்டிக்கொண்டது.
முத்து குப்புற விழுந்தான். வாய்க்குள் மணல் புகுந்தது. நெஞ்சுக்கு அடியில் ஏதோ துடித்தது.
மெல்ல எழுந்து உட்கார்ந்தான். கைகளுக்குள் முயல். இவ்வளவு லேசா என்று ஆச்சரியப்பட்டான். அதன் பின்னங்கால்கள் ஒருமுறை உதைத்தன, பிறகு நின்றன. அதன் கண் நட்சத்திர வெளிச்சத்தில் கருங்கல் போல மின்னியது. அதன் இதயம் அவன் உள்ளங்கையில் அடித்தது. வேகமாக, மிக வேகமாக. அவன் நெஞ்சுக்குள் தன் இதயமும் அதே வேகத்தில் அடித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தான். எது எதனுடையது என்று பிரிக்க முடியவில்லை.
தூரத்தில் ஆந்தையொன்று திடீரென அலறியது. பிறகு தேரி முழுக்க மறுபடியும் அந்த அடர்ந்த அமைதி. அந்த அமைதிக்குள் இரண்டு இதயங்கள் மட்டும் அடித்துக்கொண்டிருந்தன. ஒன்று பெரியது, ஒன்று சின்னது. அவன் ஓடிவந்த மூச்சு மெல்ல அடங்கியது. முயலின் மூச்சு அடங்கவில்லை.
ஒத்தைக்காதன் வந்து, மூச்சிரைத்தபடி, அவன் முன்னால் உட்கார்ந்தது. அதற்கு மேல் நெருங்கவில்லை. அடுத்தது தன் வேலை இல்லை என்று அதற்குத் தெரிந்திருந்தது.


4
மாயாண்டி வந்து நின்றான். மூச்சு இரைக்கவில்லை. மகனையும் அவன் கையில் இருந்ததையும் கொஞ்ச நேரம் பார்த்தான்.
“இப்ப கழுத்தத் திருவு. பின்னங்கால இடது கையில பிடிச்சுக்கிட்டு, தலைய வலது கைல பிடிச்சிக்க. ஒரே திருவு. ரெண்டாந்தரம் திருவுனா அது பாவம்.”
முத்து அசையவில்லை.
“என்னல?”
“சூடா இருக்குப்பா.”
ஏதோ ஒன்று மாயாண்டியின் வயிற்றுக்குள்ளிருந்து எழுந்து தொண்டையில் வந்து நின்றது. முதலில் அது கோபம் என்று அவன் நினைத்தான். சூடான, சுளீரென்ற கோபம். கூறுகெட்ட பய. ஆம்பளப் பிள்ளையா இது. ஆனால் அதற்கு அடியில், மணலுக்கடியில் ஈரம் போல, வேறொன்று இருந்தது. அதற்கு அவனிடம் பெயர் இல்லை. பையனின் கை இன்னும் சூட்டைத் தெரிந்துகொள்கிறது. சூட்டைச் சூடு என்று சொல்கிறது. அவன் கை அதை எப்போது மறந்தது?
“சூடா இல்லாம ஊட்டி கணக்கா குளிராவால்ல இருக்கும்?” என்றான். “எல்லா உசுரும் சூடுதான்லே. நீயும் சூடு, நானும் சூடு. இதுவும் சூடு. அதுக்காக திருவாம நிப்பியாக்கும்?”
முத்து தலையைக் குனிந்து முயலைப் பார்த்தான். பிறகு, அப்பாவின் முகத்தைப் பார்க்காமல், மிக மெதுவாகக் கேட்டான்.
“வீட்டுக்குக் கொண்டுபோய் வளக்கலாமாப்பா? ஒத்தைக்காதனக் கொண்டுவந்தீங்கள்லா.”
ஒத்தைக்காதன் தன் பெயர் கேட்டதும் வாலை மெல்ல மணலில் அடித்தது. சட்டென்று மாயாண்டிக்கு அந்த ஆடி மாத சாயங்காலம் நினைவுக்கு வந்தது. ரத்தம் வழியும் குட்டியைக் கையில் எடுத்தபோது, அதைக் கல்லில் அடித்துக் கொன்றுவிடுவதுதான் கருணை என்று முதலில் நினைத்தான். கல்லைக் கூட எடுத்திருந்தான். பிறகு ஏன் கீழே போட்டான் என்று அவனுக்கு இன்றுவரை தெரியாது. ஒரு கையில் கல், மறு கையில் குட்டி. எந்தக் கை ஜெயித்தது என்று அன்று அவன் முடிவு செய்யவில்லை. கைதான் முடிவு செய்தது.
“நாயும் முயலும் ஒண்ணால?” என்றான். குரல் கரகரத்தது. “நாய் நம்ம கூட வேட்டைக்கு வரும். முயலு வேட்டை.”
அவன் வலது கை தானாகவே உயர்ந்தது. ஆனால் அந்தக் கை பாதி வழியில் நின்றது. அது அவன் கை அல்ல என்பதுபோல அதை வெறித்துப் பார்த்தான். நட்சத்திர வெளிச்சத்தில் அது இன்னொருவனின் கைபோலத் தெரிந்தது. பெரிய கணுக்கள், பனையேறிக் காய்ச்சுப்போன உள்ளங்கை, நகக்கண்ணில் கருப்பு.


5
அவனுக்கும் அன்று பதினாலு வயது.
இதே தேரி. இதே மாதிரி ஓர் இருட்டு. அன்றைக்கு நாய் இல்லை. அப்பா சுப்பையா கண்ணியிலேயே பிடித்திருந்தார். முயலை அவன் கையில் கொடுத்தார். அவனும் அசையாமல் நின்றிருந்தான், இப்போது முத்து நிற்பதுபோலவே.
அப்பா ஒன்றும் சொல்லவில்லை. அதுதான் அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. அடிக்கவில்லை, திட்டவில்லை. பின்னால் வந்து நின்று, தன் பெரிய கரடுமுரடான கைகளை அவன் கைகளின் மேல் வைத்தார். அவன் விரல்களைச் சரியான இடத்தில் பொருத்தினார். பிறகு திருகினார்.
அந்தச் சின்னச் சத்தம். தன் கைக்குள்ளும்,அப்பாவின் கைக்குள்ளும் நடுவே எங்கோ ஓர் இடத்தில் கேட்டது.
அப்போது அவன் மூக்கில் வினோதமான வாடை அடித்தது. பதநீர் அல்ல, பீடி அல்ல. இரும்பு மாதிரி, துருப்பிடித்த தகரம் மாதிரி. முயல் ரத்தம் என்று அப்போது நினைத்தான். ஆனால் முயல் ரத்தம் சிந்தவே இல்லை. கழுத்தைத் திருகினால் ரத்தம் வராது. அது அவனுக்குப் பிறகுதான் தெரிந்தது.
அப்பா ரொம்ப நேரம் மணலில் உட்கார்ந்து பீடி குடித்தார். பீடி நெருப்பு இருட்டில் ஏறி இறங்கியது. அவர் கை நடுங்கியதா என்று அவனுக்கு இப்போதும் உறுதியாகத் தெரியவில்லை. பிறகு சொன்னார்.
“நாளைக்கு அம்மாகிட்ட சொல்லு, நான் தேரிக்குள்ள போயிருக்கேன்னு.”
“நானும் வாரேன்.”
“நீ வீட்டுக்குப் போல. இனி அது உன் வீடு. உங்கம்மாவ நீதான் பாத்துக்கிடணும்.”
அவர் எழுந்து அவன் தலையில் மெதுவாகக் கை வைத்தார். அந்தக் கையில் அதே வாடை இருந்தது.
அவர் இருட்டுக்குள் நடந்துபோனார். திரும்பிப் பார்க்கவில்லை.
அவன் அங்கேயே நின்றான், செத்த முயலைக் கையில் பிடித்தபடி. பிறகு வீட்டுக்கு நடந்தான். வழி முழுக்க அந்த முயல் கையில் ஆறிக்கொண்டே வந்தது. வீட்டை அடைந்தபோது அது முழுக்கக் குளிர்ந்து, இறுகியிருந்தது. அவன் அதைத் திண்ணையில் வைத்துவிட்டுப் படுத்தான். அம்மாவிடம் அன்றைக்கு எதுவும் சொல்லவில்லை. மறுநாள் காலையில் சொன்னான், அப்பா சொன்ன வார்த்தைகளை அப்படியே. ஒரு வார்த்தையும் கூட்டாமல், குறைக்காமல். அவள் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கைகளைப் பார்த்தாள்.
மறுநாள் மதியம் போலீஸ் ஜீப் வந்தது. குத்தகைக்காரர் வேலுச்சாமியை அவர் களத்துமேட்டில், பதனிப் பானைகளுக்கு நடுவே, முந்தின சாயங்காலம் யாரோ வெட்டிப் போட்டிருந்தார்கள். மூன்று வருஷமாகக் குத்தகைப் பணம் பாக்கி என்று அவர் அப்பாவைப் பஞ்சாயத்தில் வைத்து அவமானப்படுத்தியிருந்தார். அது ஊருக்கே தெரியும். அப்பா கிடைக்கவே இல்லை. தேரி அவரை முழுங்கிவிட்டது என்றார்கள் சிலர். மணப்பாடிலிருந்து தோணியேறி இலங்கைக்குப் போய்விட்டார் என்றார்கள் சிலர். அம்மா சாகும்வரை எதுவும் சொல்லவில்லை.
ஒவ்வொரு ராத்திரியும் கஞ்சிப் பானையில் ஓர் ஆளுக்கு அதிகமாக உலை வைத்தாள். காலையில் மிஞ்சியதை ஆட்டுக்கு ஊற்றினாள். ஒரு வருஷம், இரண்டு வருஷம். பிறகு எப்போது அதை நிறுத்தினாள் என்று மாயாண்டி கவனிக்கவில்லை.
அவன் கவனித்தது வேறொன்று. அந்த முதல் மாதத்தில் அவன் தனியாகப் பலமுறை தேரிக்குள் போனான். வேட்டைக்கு அல்ல. அப்பா கடைசியாக நடந்துபோன திசையில், குன்றுகளுக்குள், கருவேலப் புதர்களுக்குள். ஒருநாள் சிறு பள்ளத்தில் பாதி மணலில் புதைந்த பீடித் துண்டுகளைக் கண்டான். நாலைந்து. ஒன்றன்பின் ஒன்றாக, ஒரே ஆள் ரொம்ப நேரம் உட்கார்ந்து யோசித்ததுபோல. அவற்றை அவன் யாரிடமும் காட்டவில்லை. கையில் அள்ளி, திரும்ப மணலிலேயே புதைத்துவிட்டு வந்தான். தேரி வைத்துக்கொள்ளட்டும் என்று.
முப்பத்தாறு வருடங்களாக மாயாண்டி கேள்வியொன்றைத் தனக்குள்ளேயே புதைத்து வைத்திருந்தான். அதை எப்போதும் வார்த்தையாக்கியதில்லை. அன்றிரவு தன் கைகளின்மேல் இருந்த அந்தக் கைகள், முயலின் கழுத்தைத் திருவுவதற்கு முன்பே, அதே சாயங்காலம், வேறொன்றைச் செய்திருந்தனவா? அந்த இரும்பு வாடை யாருடையது? தன் கையில் அந்தக் கைகளை வைத்து, தன் கையால் ஒன்றைச் செய்யவைத்து, பிறகு அவர் போனது எதற்காக? தன் கையில் எதையோ விட்டுவிட்டுப் போவதற்கா?
தெரிந்துகொள்ள அவன் விரும்பியதில்லை. ஆனால் தெரியாமலும் இருக்க முடிந்ததில்லை. அதனால் அதைத் தன் கைகளுக்குள்ளேயே வைத்திருந்தான். பனையேறும்போதும், பாளை சீவும்போதும், ராசாத்தியைத் தொடும்போதும், முத்துவைக் குழந்தையாகத் தூக்கியபோதும் அது அங்கேதான் இருந்தது.


6
மாயாண்டி உயர்த்திய கையைத் தாழ்த்தி மகனை நோக்கி நீட்டினான்.
“குடுல இங்க. நான் பாத்துக்கிடுதேன்.”
அப்போது அவன் மனதில் ஏதோ ஒன்று தளர்ந்தது. இந்தப் பையன் இதைச் செய்ய வேண்டாம். இது தன்னோடு முடியட்டும். அப்பாவின் கைகள் தன் கைகளோடு நின்றுவிடட்டும். ராசாத்தி சொன்னது சரிதான். படிக்கிற பய.
ஆனால் முத்து முயலைக் கொடுக்கவில்லை.
அப்பா சொன்னபடியே பின்னங்கால்களை இடது கையில் பிடித்தான். தலையை வலது கையில். இமைப்பொழுது அவன் கண்கள் மூடின. பிறகு ஒரே திருவு.
அந்தச் சின்னச் சத்தம் பரந்த தேரியில் விரல் சொடுக்குபோல ஒலித்தது. முயலின் பின்னங்கால் ஒருமுறை உதைத்தது, பிறகு நின்றது.
முத்துவின் கை நடுங்கவில்லை.
அவன் முயலை அப்பாவை நோக்கி நீட்டினான். அவன் முகத்தில் பயம் இல்லை, அழுகை இல்லை. மெல்லிததொரு பெருமை இருந்தது. அப்பா ஏதாவது சொல்லுவாரா என்று எதிர்பார்க்கும் ஆவலான காத்திருப்பு.
ஒரு நிமிடத்துக்கு முன்னால் வளர்க்கலாமா என்று கேட்ட அதே பையன்தான். அந்த நிமிடத்துக்குள் என்ன நடந்தது என்று மாயாண்டிக்குத் தெரியவில்லை. அப்பா தன் கையை வாங்க நீட்டியது பையனுக்கு அவமானமாக இருந்ததா? தன்னால் முடியாது என்று அப்பா நினைத்துவிட்டார் என்று பட்டதா? அல்லது அதைவிட எளிமையான, அதைவிடப் பயங்கரமான ஒன்றா? சிறிது தயங்கினால் போதும், அடுத்த கணம் கை தானாகவே கற்றுக்கொண்டுவிடும் என்பதா?
ஒத்தைக்காதனின் ஒற்றைக் காது அந்தச் சத்தத்தை நோக்கித் திரும்பியது. பிறகு மெல்ல விலகியது.
மாயாண்டி முயலை வாங்கினான். அது இன்னும் சூடாக இருந்தது. “நல்லது” என்று சொல்ல வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் அப்பா அன்று சொல்லாமல் விட்ட வார்த்தை அது. அவனாலும் அதைச் சொல்ல முடியவில்லை. தொண்டைக்குள் மணல் அடைத்ததுபோல இருந்தது.
முயலின் உடலைத் தடவினான். அடிவயிறு மிருதுவாக இருந்தது. கழுத்துப் பகுதி துணிபோலத் தளர்ந்து தொங்கியது. கச்சிதமான திருவு. எந்த எலும்பும் தேவையில்லாமல் உடையவில்லை. அவனே செய்திருந்தாலும் இப்படி இருந்திருக்காது.
கிழக்கே, உடன்குடிப் பனங்காடுகளுக்கு மேலே, வானம் வெளிறத் தொடங்கியிருந்தது. முதல் வெளிச்சம் தேரியின் மேல் விழுந்தபோது செம்மண் குன்றுகள் ஒவ்வொன்றாகச் சிவந்தன. உள்ளிருந்து ஏதோ கசிந்து மேலே பரவுவதுபோல தோன்றியது.
“யப்பா.” முத்து எழுந்து நின்று கால்சட்டையிலிருந்து மணலைத் தட்டினான். “அந்தப் பக்கக் கண்ணி ரெண்டையும் பாப்போமா? இன்னும் ஒண்ணு கெடக்கும்லா? பெருசு போயிருக்குன்னு சொன்னீங்கள்லா.”
அவன் குரலில் ஆர்வம் இருந்தது. ஒருவித பசி. இரவு முழுக்கக் குளிரில் நடுங்கிய பையனின் குரல் அல்ல அது. வேறு யாரோ அவன் தொண்டைக்குள் உட்கார்ந்து பேசுவதுபோல இருந்தது.
மாயாண்டி மகனின் கைகளைப் பார்த்தான். பதினாலு வயதுக் கைகள். விரல்கள் இன்னும் மெலிசாக இருந்தன. நகக்கண்களில் கறுப்பு இன்னும் ஏறவில்லை. ஆனால் அவை அசையும் விதத்தில், மணலைத் தட்டும் அந்த லாவகத்தில், அவன் வேறொரு கையைப் பார்த்தான். அதற்கும் முந்தைய இன்னொரு கையையும்.
அந்தக் கைகளை ராசாத்தி நாளைக் காலையில் பார்ப்பாள். பார்த்ததுமே அவளுக்குத் தெரிந்துவிடும். அவள் எதுவும் சொல்ல மாட்டாள். அவன் அம்மாவைப் போலவே. கஞ்சிப் பானையை இறக்கி வைத்துவிட்டு, வாசல் பக்கம் பார்ப்பாள். அவ்வளவுதான். இந்த வீட்டில் பெண்கள் எல்லாவற்றையும் அப்படித்தான் தெரிந்துகொள்கிறார்கள். வாசல் பக்கம் ஒற்றைப் பார்வையில்.
மகனின் கேள்விக்கு மாயாண்டி பதில் சொல்லவில்லை. முயலைத் தோளில் போட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிராக, அந்தப் பக்கக் கண்ணிகளை நோக்கி நடந்தான். முத்து பின்னால் வந்தான். இப்போது அவன் அப்பாவின் தடத்தில் கால் வைக்கவில்லை. தன் தடத்தில் நடந்தான்.
ஒத்தைக்காதன் இருவருக்கும் முன்னால் ஓடியது. குன்றின் உச்சியில் சட்டென்று நின்று, திரும்பி, அவர்களைப் பார்த்தது. விடியல் வெளிச்சத்தில் அதன் தலை தெளிவாகத் தெரிந்தது. ஒரு பக்கம் விறைத்து நிற்கும் ஒற்றைக் காது. மறுபக்கம் மயிர் முளைக்காத பழைய தழும்பு.
அது தலையைச் சாய்த்தது. காது அவர்களை நோக்கித் திரும்பியது. முத்துவின் வேக நடை, மாயாண்டியின் அமைதி, தோளில் தொங்கும் முயலிடம் இனி இல்லாத இதயத்துடிப்பு. எல்லாவற்றையும் அது கேட்டுக்கொண்டது.
தழும்புப் பக்கம் மட்டும் எதுவும் கேட்கவில்லை. அந்தப் பக்கம் நிரந்தர அமைதி. உலகத்தின் அந்தப் பாதி அதற்கு என்றைக்குமே கேட்கப்போவதில்லை.
மாயாண்டி அந்தத் தழும்பைப் பார்த்தான். முப்பத்தாறு வருடமாகத் தானும் அப்படித்தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்று அவனுக்குத் தோன்றியது. ஒற்றைப் பக்கமாக மட்டும். மறுபக்கம் கேட்காததுபோல. இனி அவன் மகனும் அப்படித்தான் கேட்கப்போகிறான்.
ஒத்தைக்காதன் மறுபடியும் திரும்பி ஓடியது. அதன் ஒற்றைக் காது முன்னால் விறைத்து நின்றது. காலடியில் செம்மணல் சரசரத்தது. அதற்கு அந்தச் சத்தம் போதுமானதாக இருந்தது.


-முற்றும்-

Previous Post

இலக்கியத்தின் மையப் பொருளாகும் நவீனகாலப் பூசல்கள்

Next Post

ஆண்வாரிசு

ராஜேஷ் வைரபாண்டியன்

ராஜேஷ் வைரபாண்டியன்

ராஜேஷ் வைரபாண்டியன் தமிழ் எழுத்தாளர் . கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய வடிவங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். 2018 வரை நிலாரசிகன் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதி அறிமுகமானவர், பின்னர் சிறுகதை, குறுநாவல், நாவல் எனத் தன் எழுத்தை விரித்துக்கொண்டார். வெயில் தின்ற மழை உள்ளிட்ட நான்கு கவிதைத் தொகுப்புகள், ஜூலி, யட்சி, அறல் உள்ளிட்ட மூன்று சிறுகதைத் தொகுப்புகள், வேங்கை வேட்டை உள்ளிட்ட இரண்டு குறுநாவல்கள், தேரி, வேட்டை நிலம் ஆகிய இரண்டு நாவல்கள் இவரது நூல்கள். உயிர்மை சுஜாதா விருது, பிரமிள் கவிதை விருது, ஸீரோ டிகிரி இலக்கிய விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். உதிரிகள் சிற்றிதழின் ஆசிரியர்.

Next Post
Aan Varisu

ஆண்வாரிசு

கருத்தைப் பதிவிடுங்கள் Cancel reply

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. அவசியமான புலங்கள் * எனக் குறிக்கப்பட்டுள்ளன.

Archives

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 8, 2026
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 8, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

Koor Seevuthal

கூர் சீவுதல்

Pillai Kaniyamudhe 4

பிள்ளைக்கனியமுதே… – 4

November 1, 2026
Ingirunthu Thodangugiren

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

November 1, 2026
interview-issue-2

எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

November 1, 2026
Paav

பாவ்

November 1, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • ஆங்கில படைப்புகள் (3)
  • இதழ்கள் (48)
  • படைப்புகள் (44)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

Pillai Kaniyamudhe 4

பிள்ளைக்கனியமுதே… – 4

November 1, 2026
Ingirunthu Thodangugiren

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

November 1, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Product successfully added to the cart!
No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு