நான் சமகாலப் பெண்
நான் ஒரு சமகாலப் பெண்
நானோ ஆதரவற்றவள் அல்ல
நானோ கைவிடப்பட்டவள் அல்ல
நானோ பலவீனமானவள் அல்ல.
நான் என் காலில் நிற்கிறேன்
நான் சுதந்திரமான வாழ்க்கை வாழ்கிறேன்.
நான் ஒரு சமகாலப் பெண்
நான் என் சொந்த மரபுகளை உருவாக்குகிறேன்
நான் என்னால் சுயமாக உருவாக்கப்பட்ட
சடங்கு சம்பிரதாயங்களை நம்புகிறேன்
எனது மதச் செயல்பாடுகளுக்கு நானே விதிகளை உருவாக்குகிறேன்
நான் என் பாவங்களையும் புண்ணியங்களையும் முழு நேர்மையுடன் கண்காணிக்கிறேன்
நான் எனது சொந்த சமூகத்தை உருவாக்குகிறேன்
நான் ஒரு சமகால பெண்.
நான் சதியும் இல்லை, தெய்வமும் அல்ல
இன்றைய யுகத்தின் நான் ஒரு சாதாரண பெண்
எனது விதியின் கோடுகளை நானே வரைகிறேன்.
எனது இரு கைகளிலும் மரியாதை மற்றும் கண்ணியத்தை ஏந்திக்கொண்டு முன்னேறுகிறேன்.
எனது கடமைகளையும் விழுமியங்களையும் கர்வத்தோடு பின்பற்றுகிறேன்
நான் ஒரு சமகாலப் பெண்
என் கணவர் என் கடவுள் அல்ல
ஆம் என் கடவுள் அல்ல
ஆனால் அவர் எனது வாழ்க்கைத் துணைவர், எனது நண்பர் மற்றும் எனது பயணத் தோழன்
மிகுந்த சுயமரியாதையுடனும் சுய மதிப்புடணும்
என் வாழ்வில் எல்லா ஏற்ற தாழ்வுகளையும் கடந்து வருகிறேன்.
நான் ஒரு சமகாலப் பெண்.
எனது லட்சுமண ரேகையை சுயமாக வரைகிறேன்.
என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாக்கிறேன்.
எனக்கு நானே என்மீது கர்வம் கொள்கிறேன்
நான் ஒரு சமகாலப் பெண்.
ஹிந்தியில் : பானுமதி நாகதான்
தமிழில் : வசந்ததீபன்
*
பானுமதி நாகதான், மொரிஷியஸைச் சேர்ந்த பிரபல இந்தி எழுத்தாளர், கவிஞர் மற்றும் கதைசொல்லி ஆவார்.
பிறப்பு: ஜூலை 12, 1933 (மொரிஷியஸில்).
இறப்பு: 18 நவம்பர் 2013.
மொரிஷியஸின் சமூக சீர்திருத்தங்கள், கலாச்சார மற்றும் அரசியல் வாழ்க்கையின் யதார்த்தங்களுக்கு அவர் தனது படைப்புகளில் முக்கியத்துவம் கொடுத்தார்.
அவரது முதல் இந்திப் படைப்பு ” காயத்தின் அடையாளம் “. அமைச்சர் (1981), தாதார் (1993) மற்றும் ஆங்கிலக் கதைத் தொகுப்பு Dawn (2007) ஆகியன இவரது முக்கிய படைப்புகளாகும்.
பெண்களின் தைரியம், சுயமரியாதை மற்றும் சமூகத்தில் உள்ள முரண்பாடுகள் அவரது கதைகள் மற்றும் கவிதைகளில் வலுவான குரலாக இருந்தது.
விருதுகள்:
4வது உலக ஹிந்தி இலக்கிய விருது (1993), எம்.ஜி.ஐ. ஹிந்தி சம்மான் (2003), சர் கேர் ஜகத்சிங் விருது (2006), கத்ரா-பார்ன் முனிசிபாலிட்டியின் ‘கௌரவ குடிமகன்’ விருது (2007), ஸ்ரீஜன் சம்மான் (2010), உலக ஹிந்தி மொழி விருது (உலக ஹிந்தி செயலகத்தின் மூலம்) (2013) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.











