கல்பட்டா நாராயணன் (பிறப்பு 1952)
கேரளாவிலுள்ள வயநாடு மாவட்டத்தில் கல்லூரியில் மலையாளம் பேராசிரியராகப் பணி புரிந்தார். கட்டுரையாளர், கவிஞர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்டவர். கேரள சாகித்ய அகாதமி அவார்டு, பத்ம ப்ரபா விருது தொடங்கி ஏராளமான விருதுகளைப் பெற்றவர். 6 கவிதைத் தொகுப்புகள், 3 நாவல்கள், 12 கட்டுரைத் தொகுப்புகள் பிரசுரித்துள்ளார். கேரளத்திலுள்ள கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டியில் வசிக்கிறார். இரண்டு மகன்களுக்குத் தந்தை.
சூர்ப்பனகை
நான் சூர்ப்பனகை
ராவணன் சகோதரி
பெயரைக் கேட்ட நொடியில்
உங்கள் மனதில் தெரிகிறது –
மேனிதாகமுற்ற கண்களும்
நகங்களும் கோரைப் பற்களும்
பூமியே அதிரும் நடையும்
காட்டினை வகிர்ந்து வெளிவரும் உருவமும்.
அதிலெனக்கு எந்தக் குறையுமில்லை .
நாங்கள் காமரூபிணிகள்.
தொலை தூரங்கள் என்னைப் பறவையாக்கும்
உச்சிக்கிளைகளிலுள்ள கனிகள்
என்னை வானரமாக்கும்
தாவரத்தளிர்கள் என்னை மானாக்கும்
தண்ணீர் என்னை மீனாக்கும்
ஆசைகளின் உருவகம் நான்.
பயமேதுமில்லை,
எந்த ஒளிவு மறைவுமில்லை.
சொல்லும் பொருளும் வெவ்வேறல்ல
வாழ்க்கையின் ஜாலங்கள் தொலைந்து விடவில்லை
கலவியின் உச்சம் நெருங்குகையில்
தேவ, அரக்க, வானர, மானிட பேதமின்றி
எந்த பெண்ணுக்கும், என் தன்மையேதான்.
என் ஸர்ப்பவீரியம்.
சிலர் சீறுவர்
சிலர் கடிப்பர்
சிலர் மூங்கில் உடைவது போல அழுதிடுவர்.
சிலர் படுத்த நிலையிலேயே மலைகளையும் கொறித்திடுவர்.
அவர்கள் ஆசைப்பட்ட மலைச் சாரலில்
நான் என்றும் சுதந்திரமாய் நடந்தேன்.
எனக்கு எட்டாததாக எதுவுமேயிருந்ததில்லை.
இந்த ராவண சகோதரிக்கு
வாழ்க்கையே திருவிழா மயம்.
“ராமோ ரமயதாம் ச்ரேஷ்ட !” (கூடிக்குலவ உகந்தவன் ராமனே)
என்று ஆதிக் கவிஞன் சொன்னது உண்மையேயென
அவனைக் கண்டதும் எனக்கும் தோன்றியது.
ஆனால் ராமனுக்கோ வாழ்க்கையின் மீது பயம்,
அவன் என்னைத் தன் தம்பியிடம் ஒப்படைத்தான்.
அவனுக்கோ அதைவிட அதிக பயம்.
கோழைகள் எதிரிகளை விட மோசமானவர்கள்.
அவர்கள் என்னை வன்கொடுமை செய்து களித்தனர்.
கோழைத்தனமும் கொடூரமும் இரண்டல்லவென
நான் தெரிந்து கொண்டேன்,
காமம் முழுமை பெறாததால்
உள்ளூர நொறுங்கிக் கதறிய
புள் இணையைப் புரிந்து கொண்ட கவிஞன்
என்னைப் புரிந்துகொள்ளத்
தவறியதுதான் வியப்பு .
ஒருவேளை புரிந்து கொண்ட மகரிஷியின் சாபம்தானோ
ராமன் பிற்பாடு அனுபவித்ததனைத்தும் ?
சாதனைகளெல்லாம் தோல்விகளாயின !
சீதை காமமுடையவளல்ல எனப் புரிந்து கொண்ட ராவணன்
அவளுக்கு ஓராண்டு சாவகாசம்
கொடுக்கிறான் –
‘நீ காமரூபிணியாகும் வரை
உன்னை நான் தீண்டமாட்டேன்.’
சீதை என் சகோதரனின் அருகாமையில்
பாதுகாப்பாயிருக்கிறாள்.
ராமனின் அருகாமையில் நானோ ?
காமரூபிணியானதால் இன்னும் சற்று
ஏற்கக்கூடியவளாகவும்
பலவீனமானவளும் கருணைக்குப் பாத்திரமானவளும்
பாதுகாப்புத் தேவையானவளும் ஆன
அவளின் மூக்கும் மார்பும் அறுத்தது
ராமனின் நீதி.
உணவுப் பிச்சை கேட்டவளை விட,
அபயத்துக்குரியவளல்லவா காம பிச்சைக் கேட்பவள் ?
அவளை ஏளனம் செய்யலாமோ ?
அவளைப் புண் படுத்தலாமோ ?
நிபந்தனைகளற்ற ஆனந்தத்தை
நீங்களும் பயப்படுகிறீர்கள்.
மானுடர் அனைவரும் திருப்தியற்றவர்கள்.
எனக்கு சீதை மீது பொறாமையில்லை .
பரிதாபம் மட்டுமே .
சேற்றில் பிறந்து
எதிர் காலத்தில் எப்படியெல்லாம்
ஆகப் போகிறோமெனத் தெரியாத
கணவனின் நிழலாகப்
பின் தொடர்ந்து தலை குனிந்து நடந்தாள்.
இளமை காலத்தில்
கல்லிலும் முள்ளிலும் நடந்தலைந்தாள்.
மைத்துனன் கூடத் தன்னை
மோகம் கொள்கிறானென ஏங்கும் விதம்
குறுகிப்போன உலகில் வாழ்ந்தாள்.
கருவுற்றபோது அனாதையானாள்.
கணவன் ஆளும் ராஜ்ஜியம்
தன்னை மட்டும் நிராகரித்து
கொண்டாட்டங்களோடு முன்னேறுவதைப் பார்த்து
காட்டில் காலத்தைக் கழித்தாள்.
மனித குலப் பெண்கள் அர்த்தமற்ற
காத்திருத்தலின் உரிமையாளர்கள்
சீதையோ வாழ்ந்ததைவிட அதிகமாகக் காத்திருந்தாள்.
உங்களுக்கு தெரியுமா
ராவண-ராம யுத்தம் நடந்தது
இந்த சூர்ப்பனகைக்காகவே .
சீதையைக் கடத்திச் சென்றதும்
ஒரு போர்த்தந்திரமே,
ஒரு கால்தடம் உறுதிப்படுத்துதல் எனலாம்.
எனக்காக என் வம்சமே
அழிந்து போகும் வரை போரிட்டு
கடைசி ஆள்வரை
எனக்காக ரத்தம் சிந்தினர்.
யாருமே என்னைப் பழி சொல்லவில்லை
ஆசைப்படுதல் ஒரு குற்றச் செயலல்லவே.
டைனோசர்கள் அழிந்து போகவில்லை
உருவான ஒன்று
இல்லாமல் போவது கிடையாது
உருமாறத்தான் செய்யும்
நோய்களைப் போல.
டைனோசர்களும்
இல்லதாகி விடவில்லை
காலத்துக்கு ஏற்றவாறு
நவீனப்படுத்தப்பட்டிருக்கின்றன.
பெரியதாக மாறி
சிரியவற்றினை
வழித்து விழுங்குவது அதுதான்.
பெரும்பான்மையாக மாறி
சிறுபான்மையினரைத் துரத்திக்
கொடுமைப்படுத்துவதும் அதுதான்.
அது மட்டும்
பிழைத்துக் கொண்டால் போதும்
என்று எண்ணுவதிலும் அதுவே உள்ளது .
அதன் நீதி மட்டுமே நீதி ‘
என்று எண்ணுவதிலுள்ள
நீதியும் அதுவே தான்.
இடமில்லாதவைகளின் இடம்
இந்த அளவு சுருங்கிப் போனது
அதற்குரிய இடம்
அந்த அளவு பெருகிவிட்டதால் தான்.
அது மால் ஆக மாறி
பட்டாப் பகலில் வெளியே கிளம்பிச் சென்று
சில்லரை வியாபார மையங்களை
மென்று தின்பதை நீர் காணவில்லையா ?
அது ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாறி
‘ரிவர் வியூ’ இருக்கையில் அமர்ந்து
ஒரு ‘லார்ஜ்’ ஆர்டர் செய்து
தொட்டுக்கொள்ள
டீக்கடைகளைக்
கொரித்துக் கொண்டிருப்பதை நீர் காணவில்லையா ?
சின்னத் தேவைகளை
வெளியே துரத்தி விட்டு
பெரிய தேவைகளை
உள்ளே அழைத்து உபசரிப்பது
உங்களுக்கு தெரியவில்லையா ?
அதன் கோரப் பசிக்கு
சின்னத் தேவைகளைப் புரிந்து கொள்ள முடியுமா ?
முன்னால் சென்று நிற்பதற்குள்
திறக்கின்ற கண்ணாடிக்கதவுகள்
அது தன் இரையைப் பார்த்துவிட்ட வாய்தான்.
பின்னால் நடந்து வருபவர்களின் கண்ணில்
அது படாமல் போகலாம்.
அப்படி அல்லாதவர்கள்
அதைத் தவிர வேறு ஒன்றையும் காண்பதே இல்லை.
புத்தர் கேட்கிறார்
நீ விழுந்தபோது
கைத்தாங்கலாகப் பிடித்த அந்நியன்
என்னைப் பற்றிய உன் சந்தேகங்களைத்
தீர்த்துவிடவில்லையா ?
தொடக்கம் முதல் இறுதி வரை
யாருமே தொடக்கம் முதல் இறுதிவரை
ஒரே நபராக இருப்பதில்லை
ஒற்றைக்கண்ணன்
உன்னிப்பாகக் குறிபார்க்கையில்
ஒற்றைக் கண்ணனல்ல .
குருடன்
செவிகொடுக்கையில்
குருடனல்ல
திருடன்
தன் சொந்த வீட்டில்
திருடனல்ல.
விஷம்
துப்பிவிடப் பயந்து
நான் விழுங்கியது
விஷமாகத்தான் இருந்தது.











