சமீபத்தியவை
பிள்ளைக்கனியமுதே… – 4 இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும் எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ
பிள்ளைக்கனியமுதே… – 4 இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும் எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 2

கடிதங்களில் கரைந்த காலங்கள்

அர்ஷா By அர்ஷா
6 hours ago
A A
0
Kadithangalil Karaintha Kalangal - Arsha

ஒரு காலத்தில் ஒருவரை நினைத்த கணமே அவருக்குக் கடிதம் எழுதத் தொடங்கிவிடுவோம். எழுதத் தொடங்கியதும் மனதிற்குள் உறைந்திருந்த சொற்களின் வரிசை கலைந்துபோகும். சொல்லக்கூடாதெனப் பூட்டி வைத்தவை தாள்களின் இடையில் வழிமறித்து நிற்கும். ஒரு கடிதத்தை எழுதி முடிப்பதற்குள் மனம் நூறு முறை உருமாறியிருக்கும். எழுதியதை மடித்து உறைக்குள் வைத்து, முகவரியைக் குறித்து, அஞ்சல் பெட்டிக்குள் நழுவவிட்ட பிறகும் அந்தக் கடிதம் மனத்தின் ஆழத்தில் தொடர்ந்து எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும். பதில் வந்து சேரும்வரை அந்தரங்க உரையாடல் முடிவடைவதே இல்லை.

கடிதங்களின் உலகில் காத்திருப்பிற்கும் ஓர் அர்த்தமிருந்தது. இன்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு அடுத்த கணமே மனிதர்கள் நகரத் தொடங்கிவிடுகிறார்கள். அன்றோ, ஒரு கடிதத்தை அனுப்பிவிட்டுப் பதிலுக்காகக் காத்திருப்பதே ஒரு வாழ்வாக இருந்தது. அந்தக் காத்திருப்பில் ஏக்கமும் தவிப்பும் எதிர்பார்ப்பும் கலந்திருந்தன. என்றோ ஒரு நாள் பதில் வந்து சேரும்போது, அதை எழுதியவரை நேரில் தொட்டுவிட்டதைப் போன்ற பேரானந்தம் உடலெங்கும் படரும்.

கடிதங்கள் தனிப்பட்ட மனிதர்களின் நினைவுப் பெட்டிகள் மட்டுமல்ல; அவை ஒரு காலத்தின் மௌன சாட்சியங்கள். அரசர்களின் ஆணையோலைகள், விடுதலைப் போராட்ட வீரர்களின் கடிதங்கள், தலைவர்களின் தத்துவப் பரிமாற்றங்கள், எழுத்தாளர்களின் விவாதங்கள் எனப் பல தாள்கள் அந்தந்தக் காலத்தின் சிந்தனைகளையும் முரண்பாடுகளையும் உறவுகளின் நுண்மைகளையும் சுமந்து நிற்கின்றன. அதிகாரபூர்வமான வரலாற்றில் இடம்பெறாத சாமானிய மனிதர்களின் அக உலகையும் சமூகத்தின் கண்ணுக்குத் தெரியாத மாற்றங்களையும் கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன. ஒரு மனிதன் இன்னொருவனுக்கு எழுதிய கடிதம், பல தசாப்தங்களுக்குப் பிறகு வாசிக்கப்படும்போது, அவன் வாழ்ந்த காலத்தின் சாட்சியமாகிவிடுகிறது.

என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, கடிதங்கள் ஒருபோதும் வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான தாள்களாக இருந்ததில்லை என்பது புரிகிறது. அவை உறவுகளின் அறைகளுக்குள் திறந்து வைக்கப்பட்டிருந்த சிறிய சன்னல்கள்.

பள்ளிப் பருவத்தில் நட்புக்குள் பிறக்கும் கோபங்கள் மிகப்பெரிய புயல்கள். சண்டை போட்டுக்கொண்ட தோழிகளால் பேசாமல் இருக்க முடியாது என்பதுதான் அதைவிடப் பெரிய வேதனை. அப்போது எங்களுக்குள் கடிதங்களே மௌனத் தூதர்களாக உருவெடுத்தன. “உன்னுடன் நான் சண்டை போடுவதற்குக் காரணம் இவள்தான்” என்று அடம்பிடித்துத் தொடங்கும் கடிதம், கடைசியில் “உன்னிடம் பேசாமல் என் நாள் நகர மறுக்கிறது” என்றுதான் முடியும். யார் மீது கோபம், யார் மீது அன்பு என்பதெல்லாம் ஒரே தாளுக்குள் கரைந்துபோகும். கோபப்பட்டதற்கான காரணத்தைவிட, பேசாமல் இருக்க முடியாது என்ற உண்மைதான் இறுதியில் எஞ்சியிருக்கும். அந்த வயதில் உதடுகளால் சொல்ல முடியாததை ஒரு துண்டுக் காகிதம் அப்பட்டமாகச் சொல்லிவிடும். அடுத்த நாள் பள்ளி வளாகத்தில் சந்திக்கும்போது முகத்தில் அரும்பும் ஒரு துளிப் புன்னகையே போதுமானதாக இருந்தது.

பருவமடைந்து வீட்டின் அறைக்குள் பூட்டப்பட்டிருந்த அந்தப் பதினாறு நாட்களும் தனிமையின் சிறைவாசம். வகுப்பறையில் என்ன நடந்திருக்கும், ஆசிரியர் என்ன பாடம் நடத்தியிருப்பார், என்ன வீட்டுப்பாடம் கொடுத்திருப்பார் என்று என் தோழிகள் எழுதிய கடிதங்கள் தினமும் வந்து சேரும். பள்ளிக்குச் செல்ல முடியாத அந்தத் தனிமை நாட்களில், அந்தக் கடிதங்களே என்னை வகுப்பறையின் காற்றுடன் பிணைத்து வைத்திருந்தன. நான் இல்லாத வெளியில் நடந்தவற்றை அவர்கள் எனக்காகச் சொற்களாக மாற்றி அனுப்பினார்கள். அந்தக் கடிதங்கள் பாடங்களைப் பற்றிய தகவல்கள் மட்டுமல்ல; என் உலகம் என்னை விட்டு விலகவில்லை என்பதற்கான உறுதிப்பாடாகவும் இருந்தன.

அக்கா திருமணமாகி வேறு வீட்டுக்குச் சென்றுவிட்ட பிறகு, அவளைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போதெல்லாம் என் மனம் அவளுடனேயே தங்கிவிடும். பிரிவின் துயரத்தைத் தொலைபேசியின் சில நிமிடங்களில் கொட்டிவிட முடியாது. வீடு வந்து சேர்ந்ததும் அவளுக்குக் கடிதம் எழுத உட்காருவேன். மாமா வீட்டிற்குச் சென்று வந்த பிறகும் அப்படித்தான். மாமாவுக்கு மூன்று ஆண் பிள்ளைகள். அவர்களிடம் நேரடியாகக் கடிதம் எழுத முடியாத அந்தப் பருவத்தில், மாமாவுக்கும் அத்தைக்கும் எழுதுவேன். ஒருவரைச் சந்தித்துப் பிரிந்த பிறகும் அவர்களுடன் மனதால் உரையாடிக்கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசைதான் அந்தக் கடிதங்களை எழுத வைத்தது. சந்திப்புகள் முடிந்தாலும் உறவுகளின் இழை அறுந்துவிடக் கூடாது என்பதற்கான வழியாகக் கடிதங்கள் இருந்தன.

எங்கள் வீட்டிலிருந்து தபால் அலுவலகம் சுமார் இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. ஒரு கடிதத்தை அஞ்சலில் சேர்ப்பதற்கும் அதன் பதில் வந்து சேர்வதற்கும் இடையில் நீண்ட காலம் இருந்தது. அந்த இடைவெளியை நாங்கள் சலிப்பாகப் பார்க்கவில்லை; உறவின் ஒரு பகுதியாகவே வாழ்ந்தோம். தந்தி வந்த காலமும் நினைவில் ஆடுகிறது. சில ஒற்றைச் சொற்களில் அடக்கி வைக்கப்படும் செய்தி அது. ஆனால் அந்தச் சொற்களின் பின்னால் எத்தனை பதற்றங்கள், எத்தனை படபடப்புகள்! வார்த்தைகள் சுருங்கியிருந்தாலும் அவை சுமந்து வந்த உணர்வின் கனம் குறைந்ததில்லை.

திருமணமாகி வீட்டைவிட்டு வெளியேறியபோது, நண்பர்களும் பள்ளித் தோழிகளும் எழுதிய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் என்னிடம் குவிந்திருந்தன. அவற்றை வெறும் பழைய காகிதங்களாக என்னால் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு கடிதத்திலும் என் வாழ்வின் ஒரு காலம் உறைந்திருந்தது; என்னை நினைத்து யாரோ ஒருவரின் வாழ்விலிருந்து ஒதுக்கப்பட்ட நேரம் பதிந்திருந்தது. வீட்டில் வெள்ளையடிக்கும்போதும் பொங்கல் பண்டிகை நாட்களில் சுத்தம் செய்யும்போதும் அம்மாவும் வீட்டிலிருந்தவர்களும் அவற்றைப் பத்திரமாக எடுத்து வைப்பார்கள். அவற்றைத் தூக்கியெறிவதைவிட, அவற்றுள் உறைந்திருக்கும் நினைவுகளைப் பாதுகாப்பதே எங்களுக்கு இயல்பாக இருந்தது.

ஒரு கடிதத்தின் மதிப்பு அதில் எழுதப்பட்ட செய்தியில் மட்டும் இல்லை; அதை எழுதிய மனிதனுடனும் அந்தக் காலத்துடனும் நமக்குள்ள பிணைப்பிலும்தான் இருக்கிறது. அதனால்தான் பழைய கடிதங்களைத் தேவையற்ற காகிதங்கள் என்று ஒதுக்கிவிட மனம் ஒப்புவதில்லை.

காதல் கடிதங்கள் நாம் எதிர்பார்த்தவர்களிடமிருந்துதான் வரவேண்டும் என்ற நியதியில்லை. எதிர்பாராத முகங்களிலிருந்தும் அவை நம்மைத் தேடி வந்தடைந்திருக்கின்றன. கையில் ஒரு கடிதம் கிடைத்துவிட்டால் போதும்; அதைப் பிரித்து வாசிப்பதற்கான ஒரு துளித் தனிமையைத் தேடுவதிலேயே பாதி நாள் கரைந்துபோய்விடும். உள்ளே என்ன இருக்கிறது என்ற தவிப்பு ஒருபுறம்; நம் ரகசியம் வீட்டினருக்குத் தெரிந்துவிடுமோ என்ற நடுக்கம் மறுபுறம். இரண்டு மூன்று நாட்களுக்கு அந்தக் காகிதத்தை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு ஊருக்குள் அலைந்திருக்கிறேன். சில கடிதங்களை ஒரு வரிகூட வாசிக்காமல், யாரோ காட்டிய பயத்தில் அப்படியே கிழித்தெறிந்த இரவுகளும் உண்டு. அந்தக் காகிதங்களுக்குள் என்ன இருந்தது என்பது இன்றுவரை எனக்கே தெரியாத புதிர்தான். காதலில் விழுவதற்கு முன்பே, காதலை மறைத்து வைப்பதற்கான தந்திரங்களையும் பதற்றங்களையும் நாம் கற்றுக்கொண்டுவிடுகிறோம்.

ஒருமுறை குடும்பத்தோடு ஆறு நாட்கள் கந்த சஷ்டி விரதத்தில் இருந்தபோது, திடீரென ஒரு கடிதம் கைக்கு வந்து சேர்ந்தது. அந்த ஆறு நாட்களும் அதைத் திறப்பதற்கான ஒரு கணம்கூட வாய்க்கவில்லை. இறுதியில், ஊர் திரும்பும் பேருந்தின் கடைசி இருக்கையில் தனித்து அமர்ந்தபோதுதான் கடிதத்தைத் திறந்தேன். அடர்ந்த மையில் அழகான கையெழுத்து; கனமான வார்த்தைகள். வாசிக்கத் தொடங்கிய கணத்தில், என் முன் இருக்கையில் சாய்ந்திருந்த அம்மா சட்டெனத் திரும்பிப் பார்த்தார். அவ்வளவுதான்; நெஞ்சு படபடக்க, அந்தக் கடிதத்தை மடித்து மூடி, சுருட்டி எறிந்துவிட்டேன்.

காதல் கடிதங்களைப் புத்தகங்களின் இடுக்குகளில் ஒளித்து வைப்பதுதான் எங்களுக்குத் தெரிந்த பாதுகாப்பு. ஆனால் எந்தப் புத்தகத்தில் அந்த ரகசியத்தை வைத்தோம் என்பது அடுத்த நாளே நினைவிலிருந்து தப்பிவிடும். வீட்டின் அத்தனை புத்தகங்களையும் புரட்டித் தேடுவோம்; கடிதம் மட்டும் அகப்படாது. அது ஏதோ ஒரு மூலையில் தொலைந்துவிட்டதெனப் புலம்பிக்கொண்டிருப்போம். நம் ரகசியத்தின் வாசனையைத் துப்பறிந்து கண்டுபிடித்த அக்காவோ அம்மாவோ அதை எப்போதோ எடுத்துப் படித்துவிட்டு வேறெங்காவது பத்திரப்படுத்தியிருப்பார்கள்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, “ஆமா, இட்லி ஊத்தத் தெரியாது; ஆனா லவ் லெட்டரை ஒழிக்க மட்டும் நல்லாத் தெரியும்டி!” என்று அக்கா எள்ளி நகையாடியபோதுதான் அந்தத் திருடன் யாரென்று தெரிந்தது. அந்தக் கடிதத்தில் என்னதான் எழுதியிருந்தான் அவன்? என்னை நினைத்துக் கவிதை வடித்திருந்தானா, இல்லை காதலைச் சொல்லச் சொற்கள் கிடைக்காமல் தடுமாறியிருந்தானா? எதையும் அறியேன். ஆனால் அந்தத் தனிப்பட்ட ரகசியம் நான்கு ஆண்டுகள் கழித்து வீட்டில் அம்பலப்பட்டதை நினைத்தால் இப்போதும் சிரிப்புத்தான் வருகிறது.

கடிதத்தின் உறையைப் பிரிக்கும்போதே சில சமயம் வாடிப்போன மல்லிகைப்பூக்களும் ரோஜா இதழ்களும் உதிர்ந்து விழும். அவை தரையில் சிதறிவிட்டால், யாருடைய கண்ணிலும் படாமல் எப்படிப் பொறுக்குவது என்ற பயம் தொற்றிக்கொள்ளும். காதலன் ஆசையாய் அனுப்பிய பூக்கள்; அவற்றைப் பெற்றவளோ வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைக்கப் பதறிக்கொண்டிருப்பாள். காதலின் நறுமணத்தை நுகர்வதைவிட, அந்த ரகசியம் வீட்டில் அம்பலமாகாமல் காப்பதுதான் அப்போது முக்கியமாக இருந்தது.

காதல் மொழிகளிலும் விநோதங்களுக்குப் பஞ்சமில்லை. சிலர் தங்கள் பெயரின் முதல் எழுத்தையும் காதலியின் பெயரின் முதல் எழுத்தையும் சொந்த ரத்தத்தால் கீறி, இரண்டுக்கும் நடுவே ஒரு கோடு போட்டு அனுப்புவார்கள். காதலைச் சொல்ல ஒருவன் ரத்தம் வரைக்கும் சென்றிருக்கிறான் என்றால், அந்த வெறியை என்னவென்று சொல்வது! ஒரு கடிதத்தில் எத்தனை பக்கங்கள் இருக்க வேண்டும் என்பதில்கூட ஒரு கணக்கு இருந்தது. “நான் நாலு பக்கம் எழுதினா, நீ ஒரே ஒரு பக்கத்துல பதில் முடிச்சிடுவியா?” என்று முகம் சுழித்துக் கோபித்துக்கொண்ட கடிதங்களும் உண்டு. நான்கு பக்கங்கள் எழுதியவனுக்கு ஒரு பக்கப் பதில் என்பது தன்மீதான அன்பு குறைந்துவிட்டதற்கான அறிகுறியாகத் தோன்றியிருக்கலாம். ஒரு பக்கத்தில் அடங்காத எதிர்பார்ப்புதான் அந்தக் கோபத்தின் பின்னால் இருந்தது.

அதிகாலை மூன்று மணிக்கு விழித்தெழுந்து எழுதப்பட்ட கடிதங்கள், விடிவதற்குள் அடுத்தவர் கையில் வாசிக்கப்பட்டுப் பதிலையும் பெற்றிருக்கின்றன. உலகமே தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நிசப்தத்தில், யாரோ ஒருவரின் காகித வார்த்தைகளுக்காக மனம் மட்டும் விழித்துத் தவித்திருக்கும். ஒரு வரி போதுமா, இன்னும் கொஞ்சம் நீட்டி எழுதலாமா என்று மனம் ஊசலாடும். சொல்ல நினைத்ததை அப்படியே சொல்ல முடியாமலும், சொல்லாமல் விட்டதை மற்றவர் புரிந்துகொள்வார் என்று நம்பியும் எழுதப்பட்டவைதான் அந்தக் கடிதங்கள்.

இன்று அந்தக் கடிதங்களின் வார்த்தைகள் எதுவும் என் நினைவில் எஞ்சியிருக்கவில்லை. சிலவற்றுக்குப் பதில் எழுதியிருக்கிறேன்; சிலவற்றின் முன் மௌனமாக நின்றிருக்கிறேன். சில கடிதங்கள் வாசிக்கப்படாமலேயே தீயோடு கலந்தன. ஆனால் அந்தத் தாள்களோடு பின்னிப் பிணைந்திருந்த தவிப்பும் நெகிழ்ச்சியும் ஏக்கமும் இன்றும் எனக்குள் உறைந்திருக்கின்றன. அன்றைக்கு ஒரு கடிதத்தை மறைத்து வைக்க நாம் பட்ட அவஸ்தைகளை நினைத்தால் இப்போது உதடுகள் புன்னகைக்கின்றன. அந்தப் புன்னகைக்குப் பின்னால், யாரிடமும் சொல்ல முடியாமல் மனதின் அந்தரங்க அறைக்குள் பூட்டி வைத்த இளமையின் நினைவுகள் இன்னும் வாசம் வீசுகின்றன.

சிலருடைய கடிதங்கள் வாழ்நாள் முழுவதும் தொடரும் உறவாக மாறியிருக்கலாம்; சில கடிதங்கள் பதிலின்றிப் புதைந்துபோயிருக்கலாம். இன்றைக்கு அவற்றை எழுதியவர்கள் எந்தத் திசையில் இருக்கிறார்கள் என்றுகூட எனக்குத் தெரியாது. வரிகளை மறந்துவிட்டேன்; எழுதிய கைகளையும் காலத்தின் சுவட்டில் தொலைத்துவிட்டேன். ஆனாலும், என்றோ ஒரு மதிய வேளையில் அல்லது தனித்த இரவில் யாரோ ஒருவர் எனக்காக ஒரு துண்டுக் காகிதத்தின் முன் அமர்ந்து தன் நெஞ்சின் ரகசியத்தைச் சொற்களாக்கியிருக்கிறார் என்ற நினைவை மட்டும் என்னால் எப்படிக் கடந்துபோக முடியும்? அந்தக் கடிதத்தை எழுத அவர் எடுத்த நேரமும், அதை வாசிக்க நான் தேடிய தனிமையும், யாராவது பார்த்துவிடுவார்களோ என்று நான் பட்ட நடுக்கமும் அந்த நாட்களை இன்றும் உயிரோடு வைத்திருக்கின்றன.

காதல் கடிதங்கள் எல்லாமே அழகிய முடிவைச் சந்தித்திருக்க வேண்டிய அவசியமில்லை. சில கடிதங்கள் பதிலின்றி மௌனித்திருக்கலாம்; சில காகிதங்கள் யாருடைய கண்ணிலும் படும் முன்பே கிழிக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும், அந்தக் கணத்தில் யாரோ ஒருவரின் இதயத்தில் நான் முக்கியமானவளாக இருந்திருக்கிறேன் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. பல ஆண்டுகள் கடந்த பின்னும் அந்தப் பழைய கடிதங்களின் நினைவுகள் என்னுள் அரும்பும்போது முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை வந்து அமர்கிறது. அதன் நிழலில், இனி மீட்டெடுக்க முடியாத இளமையும் விலகிப்போன காலமும் அமைதியாக அமர்ந்திருக்கின்றன.

இன்று கடிதங்களின் இடத்தை வாட்ஸ்அப் திரைகளும் உடனடிச் செய்திகளும் ஆக்கிரமித்திருக்கின்றன. அங்கேயும் அன்பு இருக்கிறது; கோபங்கள் கொந்தளிக்கின்றன; சண்டைகளும் சமாதானங்களும் நிகழ்கின்றன. யாராவது பதில் அனுப்பத் தாமதித்தால் அங்கும் காத்திருப்பின் வதை தொடர்கிறது. பதில் வந்த கணத்தில் முகம் மலர்கிறது. நம் காலமும் தன் உணர்வுகளை ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. எனவே, கடிதங்கள் வாழ்ந்த காலம்தான் தூய்மையான அன்பின் பொற்காலம் என்று நான் சொல்லப்போவதில்லை. மனிதர்களின் அடிப்படை உணர்வுகள் மாறவில்லை; அவற்றை வெளிப்படுத்தும் கருவிகள்தான் மாறியிருக்கின்றன.

ஆனால், இந்த வேகமான மாற்றத்தில் காத்திருப்பதற்கான அவகாசமும் தவிப்பின் ஆழமும் சுருங்கிப்போய்விட்டனவோ என்றுதான் தோன்றுகிறது. ஒரு கடிதத்தை எழுத உட்காரும்போது ஒவ்வொரு சொல்லையும் யோசித்துத் தேர்ந்தெடுக்க நேரமிருந்தது. எழுதியதை மீண்டும் வாசித்துத் திருத்தவும், சொல்ல நினைத்ததைச் சற்றே மறைமுகமாக வெளிப்படுத்தவும் முடிந்தது. இன்றைய டிஜிட்டல் உலகில் சொல்ல நினைப்பதற்கும் சொல்லி முடிப்பதற்கும் இடையிலான இடைவெளி குறைந்திருக்கிறது. உரையாடல்களை ஒரே கிளிக்கில் அழித்துவிடவும் முடிகிறது; சில செய்திகளைச் சிறிது நேரத்திற்குப் பிறகு மறைந்துபோகும்படியும் அமைக்க முடிகிறது. அதற்குப் பின்னால் அவரவர்களுக்கான நியாயங்களும் பயங்களும் இருக்கலாம். டிஜிட்டல் உரையாடல்களும் நினைவுகளாகப் பாதுகாக்கப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. இருந்தாலும், ஒரு கடிதத்தைத் திறந்து வாசிக்கும்போது அதன் காகிதத்தோடும் கையெழுத்தோடும் நமக்கு உருவாகும் உறவு தனித்துவமானது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, மஞ்சள் பூத்த பழைய கடிதத்தைப் பிரித்துப் படிக்கும்போது எழுத்துக்கள் மட்டும் நம்மோடு பேசுவதில்லை. அதை எழுதியவரின் அன்றைய முகம், அவரது வயதின் அறியாமை, நாம் பகிர்ந்துகொண்ட தனிமையான நாட்கள், மறந்துவிட்டதாக நினைத்த சம்பவங்கள் என எல்லாம் நம்மைச் சுற்றி நிழலாக வந்து நிற்கின்றன. சில நேரங்களில் அந்தக் கடிதத்தை எழுதியவர் இன்று இந்த உலகில் இல்லாமல்கூட இருக்கலாம். அப்போது அந்த மெல்லிய காகிதம் வெறும் நினைவாக நிற்பதில்லை; இந்த உலகத்தைக் கடந்துசென்ற ஒருவரை மீண்டும் ஒருமுறை தொட்டுப் பார்ப்பதற்கான ஒரே சாத்தியமாக மாறுகிறது.

ஒரு  பத்தாண்டுகளுக்குள் தகவல் தொடர்பு உலகம் கற்பனைக்கும் எட்டாத வேகத்தில் மாறியிருக்கிறது. கடிதம், தொலைபேசி, குறுஞ்செய்தி, சமூக வலைத்தளங்கள் என ஒவ்வொரு புதிய வருகையும் மனிதர்கள் ஒருவரையொருவர் அணுகும் முறையை மாற்றிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இந்த மாற்றங்களுக்கிடையில் மாறாமல் எஞ்சியிருப்பது, தன்னை நினைக்கும் ஒருவருக்காகக் காத்திருக்கும் மனித மனத்தின் ஏக்கம்தான்.

Previous Post

கீதிர் கவிதைகள்

Next Post

சூரிய காலடி பட்டத்திரியும் – யட்சியும்

அர்ஷா

அர்ஷா

அர்ஷா, ‘புக் வைப்’ (Book Vibe) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் பதிப்பாளர். “இலங்கை மலையக இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வியல், பொருளாதாரம், மொழி (1970–2025): ஓர் இனவரைவியல் ஆய்வு” என்ற தலைப்பில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். எழுத்தாளர் பவா செல்லதுரையின் உரைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். ‘இன்னும் ஆறு நாட்கள்’ ‘அதிகாரத்தின் களிமண் பொம்மைகள்’ உள்ளிட்ட படைப்புகளின் ஆசிரியர். இலக்கியச் செயல்பாடுகள், நூல் வெளியீடு மற்றும் குழந்தைகளுக்கான வாசிப்பு முன்னெடுப்புகளில் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.

Next Post
Suriyakaladi Pattathiriyum Yatchiyum

சூரிய காலடி பட்டத்திரியும் - யட்சியும்

கருத்தைப் பதிவிடுங்கள் Cancel reply

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. அவசியமான புலங்கள் * எனக் குறிக்கப்பட்டுள்ளன.

Archives

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 8, 2026
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 8, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

Koor Seevuthal

கூர் சீவுதல்

Pillai Kaniyamudhe 4

பிள்ளைக்கனியமுதே… – 4

November 1, 2026
Ingirunthu Thodangugiren

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

November 1, 2026
interview-issue-2

எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

November 1, 2026
Paav

பாவ்

November 1, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • ஆங்கில படைப்புகள் (3)
  • இதழ்கள் (48)
  • படைப்புகள் (44)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

Pillai Kaniyamudhe 4

பிள்ளைக்கனியமுதே… – 4

November 1, 2026
Ingirunthu Thodangugiren

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

November 1, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Product successfully added to the cart!
No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு